articles

img

திமுக அளித்துள்ள அதிமுக அரசு மீதான ஊழல் பட்டியலில் இருப்பது என்ன?

தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கடந்த நான்கு ஆண்டு காலத்தில் “கிடைத்தவரை லாபம்” என்கிற நிலையில் கொள்ளையடித்து வாரிச்சுருட்டிக்கொண்டு வருகிறது. இதற்கு எந்தத் துறையும்விதிவிலக்கு அல்ல. அனைத்து துறைகளிலும் ஊழல்,லஞ்சம் ‘மடை திறந்த வெள்ளமாய்’ பெருக்கெடுத்துப்பாய்கிறது. 

மவுனம்...
 கடந்த மாதம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட8 அமைச்சர்கள் மீதான 97 பக்கங்களைக் கொண்ட ‘ஊழல்’ புகாரை கொடுத்தார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுமாறும் கேட்டுக்கொண்டார். ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சி தரப்பில் புகார் அளித்து ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ‘ஆளுநர் அலுவலகம் மவுனம் காப்பது ஏன்’ என்பது ஒருபுறம் இருக்க, அந்த ஊழல் பட்டியலில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

‘நாங்களும் விவசாயிதான்’!
 விவசாயி என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்த சொத்து மதிப்பையும் முதலமைச்சரான பிறகு மலைபோல் உயர்ந்துள்ள உண்மையான சொத்துக் கணக்கை வெளியிடுவாரா என்றால் நிச்சயம் அது முடியாது. ஏனென்றால்  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் என்ற முறையிலும், முதலமைச்சராகவும் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் .உதாரணத்திற்கு, நெடுஞ்சாலைத் துறையின் டெண்டர்களை வழங்கும் முழு அதிகாரமும் முதல்வருக்கே உண்டு என்பதால் மகன் மிதுன், மாமனார் பி.சுப்பிரமணியம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களான சந்திரகாந்த், ராமலிங்கம், பி.நாகராஜன், சேகர் ரெட்டி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பினாமிகள் பெயரில் ராமலிங்கம்அண்ட் கம்பெனி, எஸ்.பி.கே.அண்ட் எக்ஸ்பிரஸ் கம்பெனிபிரைவேட் லிமிடெட், பாலாஜி டோல்வேஸ் மதுரை பிரைவேட்லிமிடெட் என பல்வேறு பெயர்களில் நிறுவனங்களை துவக்கி உள்ளனர்.

ஒட்டன்சத்திரம்-தர்மபுரம் சாலை திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடி. பின்னர்  1,515 கோடி ரூபாயாக அதிகரிப்பட்டது. நெல்லை-செங்கோட்டை- கொல்லம் சாலையின் திட்ட மதிப்பீடு ரூ.407 கோடி. கூடுதலாக ரூ.179 கோடி ரொக்க நிதி. அதிகரிக்கப்பட்ட மதிப்பு ரூ.900 கோடியாகும். மதுரை நான்கு வழி வெளிவட்டச் சாலை திட்ட மதிப்பீடு 200 கோடி பின்னர் கூடுதலாக ஒதுக்கியது 18.5 கோடி ரூபாய்.காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை ஆறு வழிச்சாலைக்கு ரூ.200 கோடி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் பராமரித்தல் ரூபாய் 200 கோடிக்கான டெண்டர் அனைத்தும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரைக்கும் தனது உறவினர்கள், நண்பர்கள் நிறுவனங்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6  டெண்டர்களை கொடுத்தது சட்ட விரோதமான செயலாகும்.தான் ஒரு பொது ஊழியர் என்பதையும் மறந்து அவரதுதுறை டெண்டர்களை சம்பந்தி எடுத்ததில் தவறு என்ன? என்றும் ஆன் லைன் டெண்டரில் எனது உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படி தெரியும் என்றும் ‘முழுப்பூசணியை சோற்றில் மறைக்க’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர்.கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாகப் பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

அடிமாட்டுவிலை
எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த காலகட்டத்திலும், முதலமைச்சரான பிறகும் அவரது மகன் மிதுன், மாமனார் பி.சுப்பிரமணியம், நண்பர்கள் உறவினர்கள் பலரது பெயரிலும்  கணக்கில் வராத வருமானத்திலிருந்து 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலத்தை 18 லட்சத்திற்கும், 20 கோடி மதிப்புள்ள ஒரு சொத்தை 3 கோடியே 40 லட்சத்திற்கும், 2 கோடியே 50 லட்சம் சந்தை மதிப்புடைய நிலத்தை 21 லட்சத்திற்கும் தனது அதிகார பலத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஊழல் பணத்தில் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்திருப்பது அதிகார போதையில் கண்களுக்குத் தெரியவில்லை போலும்.

டீக் கடை பிதாமகன்
முறைகேடாக சொத்துக்கள் சேர்த்ததில் முதலமைச்சருக்கு அடுத்த நிலையில் பதவியில் மட்டுமல்ல, நிதித்துறையையும் கவனித்துவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இரண்டாவது இடம். பொதுப்பணித்துறை, நிதித்துறைகளை கவனித்து வரும் ஓ. பன்னீர்செல்வத்தின்  மனைவி விஜயலட்சுமி, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு ஆகியோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்து விஜயானந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், வாணி ஃபேப்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட், எக்ஸ்லைன்ட் மரைன் லைன் பிரைவேட் லிமிடெட், வில்ஓன்ட் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்,ரிமார்ட் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என புதிதுபுதிதாக பல்வேறு நிறுவனங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

குவியல் குவியலாக...
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா, மலேசியா என வெளிநாடுகளிலும் கம்பெனிகளை வாங்கி நிர்வகித்து வருகின்றனர். அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களைவிட இயக்குநர்களான ஓபிஎஸ் மகன்கள் மாதம் ஒன்றுக்கு மூன்று மடங்காக ரூ.9 லட்சம் சம்பளம் பெற்றுள்ளனர்.ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிகளான ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவரது வணிக ரீதியிலான கூட்டாளி ஆர்.சுப்புராஜ்அவரது மனைவி உமா மகேஸ்வரி பெயரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததிலும் சொத்துக்கள் குவியல் குவியலாக குவிந்துள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் அவரது கூட்டாளிகளும் சட்டவிரோதமாக, ஊழல் செயல்பாடுகள் மூலம் கொள்ளையடித்த பணத்தை பரிவர்த்தனை செய்துகொள்வதற்காகவே இத்தகைய கம்பெனிகள் இயங்குவதாகக் கூறப்படுகின்றன.வெளிநாட்டு நிறுவனமான காக்னிசன்ட் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமானங்களுக்கு மின் இணைப்பு,  சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு சென்னை அருகே சிறுசேரியில் 8,40,000 டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது. இந்த துறைக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளவும்!

தனது மாவட்டத்துக்குட்பட்ட போடிநாயக்கனூரில் ஏலக்காய் சந்தையை பினாமிகள் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் 150 ஏக்கர் மாந்தோப்பு, தேனி போஜராஜன் மில் நிலம் ஆகியவற்றை சந்தை விலைக்கும் குறைவாக தனது பினாமிகள் பெயரில் வாங்கி இருக்கிறார்.இந்த சொத்துக்கணக்குக்கும் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவியின் வருமானத்திற்கும் எந்த வகையிலும்பொருந்தவில்லை. இதற்கு ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்துக்கு அவர் சமர்ப்பித்த கணக்குகளே சாட்சி.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்த  ஓபிஎஸ் குடும்பம், குவித்து வைத்திருக்கும் சொத்துக்களை பார்க்கும்போது நமக்கே தலை சுற்றுகிறது. இது எப்படி வந்தது? எப்படிச் சேர்ந்தது? என்பது அவர்களுக்கு மட்டுமே‘வெளிச்சம்’ என்று ஒரு வரியில் ஒதுக்கிவிட முடியாது.

தனிக்காட்டு ராஜா!
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்றார் மகாத்மா. அத்தகைய கிராமத்து மக்களின் உயிர் நாடியான உள்ளாட்சித் துறைக்கு வெந்நீரை ஊற்றி வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துறை அதிகாரிகள் துணையுடன் கொள்ளையடிக்கவே தொழிற்சாலைகள் துவங்கியுள்ளார்.தனது கொள்ளைகளுக்கு உறவினர்கள், நண்பர்கள்மற்றும் பினாமிகள் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் கேசிபி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட், செந்தில் அண்ட் கோ, ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், கன்ஸ்ட்ரோமல் கூட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்விக்டா மெடிடெக் லிமிடெட், வர்தன் இன்ஃபிராஸ்ட்ரெக்சர், கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லக்ஷ்மி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்.உள்ளாட்சித்துறை பணிகள் அனைத்தும் மேற்கண்ட நிறுவனங்களுக்கு உள்ளாட்சித்துறை பணிகளில் பெரும்பாலானவை வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளில் பழைய தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டன.

இருட்டில் ஊர்..வெளிச்சத்தில் வீடு..
“ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் ” என்று  எம்ஜிஆர் பாடியதைப் போலவே இவ்ஊழல் நடந்துள்ளது. ஃபிட்டிங்குகளுடன் கூடிய 20 வாட் எல்இடி பல்பு ஒன்றின் விலை வெளிமார்க்கெட்டில் 450 ரூபாயாக இருந்த நிலையில் 2015-16 ஆம் நிதியாண்டில்  ஒரு பல்பு  3,737 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதே பல்பை அடுத்த நிதியாண்டில் 4,120 ரூபாய்க்கு  கொள்முதல் செய்து உள்ளனர். சுமார் 3,287 முதல் 3, 670 ரூபாய்வரையிலும் பல்பு ஒன்றுக்கு கூடுதலாக விலை கொடுத்துள்ளனர்.

அதேபோல் 90 வாட் எல்இடி பல்புகள் ஃபிட்டிங்குகளுடன் ரூபாய் 1500 க்கு கிடைக்கும் பொழுது 2017-18 ஆம் நிதியாண்டில் அதன் விலையை ரூ.14,919 ஆக மாநில அளவிலான குழு நிர்ணயித்துள்ளது.மாநில அரசின் நிதியிலிருந்து 811 கோடி ரூபாயும், கிராம ஊராட்சி நிதிகளின் நிதியிலிருந்து ரூ. 69 கோடி என மொத்தம் ரூ.880 கோடி கிராம ஊராட்சிகளில் செலவு செய்து தனது வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி தனது உறவுகள், நண்பர்கள் பெயரில் உள்ள பினாமி கம்பெனிகள் மூலம் ரூ.880 கோடி அரசுப் பணத்தை வாரிசுருட்டியிருக்கிறார்.

கவரால் சுவர்..
மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மருத்துவர் ஒருவரே அமைச்சராக இருக்கிறார். அரசு அதிகாரிகளின் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றிய செய்தி வெளியானது.அமைச்சரின் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் திருவேங்கைவாசல் கிராமத்தில்சுப்பையா பெயரில் ஒப்பந்தம் எடுக்கப்பட்ட கல்குவாரியில் அனுமதிக்கப்பட்டது 2,95,642 கன மீட்டர். ஆனால்,கொடுத்த அளவைக் காட்டிலும் அதிகமாக 22,56,226கன மீட்டர் அதாவது 25,51,868 கன மீட்டருக்கு கல்வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உண்ணும் வீட்டுக்கே துரோகம்..
தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராமங்களில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கேபிள் அமைக்கும் (அதிவேக அகண்ட அலைவரிசை வலையமைப்பு) பணிக்குஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த பணிக்கான ஒப்பந்தம் அரசின் ‘டான்பிநெட்’ நிறுவனத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த துறையின் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், முதலமைச்சரும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்ப ஒப்பந்தங்களை மாற்றி வழங்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.இவர்களின் விருப்பங்களுக்கு அடி பணிய மறுத்த அந்த பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ரவிச்சந்திரன்  ஆகியோர் அப்பணியில் அமர்த்தப்பட்டு ஒப்பந்தம் விடும் பணி தள்ளிப்போடப்பட்டு தெலுங்கானா ஃபைர் க்ரிட் கார்ப்பரேஷன் ‘பாரத்நெட்’ நிறுவனத்திற்கு வழங்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  1950 கோடி ரூபாய்  ஊழல் செய்திருக்கிறார். 

தொட்டாலே ஷாக்...
மின்சாரத்துறை அமைச்சரான பி.தங்கமணி தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக உயர் அதிகாரிகள் துணையுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டு 950.26 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்.கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் வாங்கிய அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் முறைகேடாக பணம் சம்பாதித்துள்ளார்.

எல்லாமே மாயம்!
மீன்பிடித் தொழில் செய்து வரும் இந்திய மீனவர்கள் சில நேரங்களில் இலங்கை கடற்பகுதிக்குள் வழிதவறிச் சென்றுவிடுகிறார்கள். அந்த சந்தர்ப்பங்களில் நாகை, ராமநாதபுரம்,தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.இந்த மீனவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் “எல்லையை தாண்டுகிறீர்கள்”என்பதை எச்சரிக்கை செய்யும் வகையில் ‘உயர் தர நவீன தொழில்நுட்பம்’ கொண்ட திட்டம் ஒன்றை 12 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, “மிக வேக அதிர்வெண் கொண்ட”வாக்கி டாக்கிகள் வழங்க முடிசெய்தது அப்போதைய ஆட்சி.

மீனவ நண்பன்?
ஆனால் ‘மீனவர்களின் நண்பனாக’ நடித்த எம்ஜிஆரின் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும், அதிமுக அரசில்மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற டி.ஜெயக்குமார் வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இவை அனைத்தும் ஊழல் பட்டியலின் ஒட்டுமொத்த சாரம்தான்.எடப்பாடிதான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக அறிவித்ததை இன்னமும் ஏற்றுக்கொள்ளாத பாஜக மேலிட பொறுப்பாளர்களும், மாநிலத் தலைவர்களும் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆளுநரிடம் திமுக கொடுத்திருக்கும் ஊழல் புகார் குறித்து வாய்திறக்காமல் இருப்பதன்நோக்கம் என்ன?

==சி.ஸ்ரீ ராமுலு==

;