articles

img

மின்வாரிய செயல்பாடும்... தணிக்கைத் துறை அறிக்கையும்...

சுதந்திரத்திற்கு  பின்பு 1950-51 -ஆம் ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தமிழகத்தில் 156 மெகாவாட்டாக இருந்தது. ஆனால் கடந்த 64 ஆண்டுகளில் 5 ஆண்டுதிட்டங்கள் மூலம் 1990ஆம் ஆண்டுவரை நிதி ஒதுக்கீடு செய்து நிர்மாணம் செய்யப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்து வந்தன.நவீன தாராளமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட 1990ஆம் ஆண்டுக்கு பின்பு அதிக அளவில் மின் உற்பத்தியில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை. மின்சாரத்துறையில் தனியாரை ஈடுபடுத்துகின்ற மின்சார சட்டம் 2003 அமலான பின்பு பெருமுதலாளிகள் மின் உற்பத்தியில் ஈடுபடத் துவங்கினார்கள். 

அதிமுக ஆட்சியின் ‘சாதனை’ என்ன?
தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு அதிக அக்கறை காட்டியது.2011- 12-ஆம் ஆண்டுகளிலிருந்து மின்சாரத்தை ரூ.19,325 கோடிக்கு வாங்கிய மின்வாரியம், மின் வாரியத்திற்கு சொந்தமான உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தாமலும் ஆமை வேகத்தில் மின் உற்பத்தி திட்டங்கள் நடந்த காரணத்தினாலும் 2019-20ஆம்ஆண்டுகளில் ரூ.44,182 கோடிக்கு மின்சாரத்தை வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையே இதற்கு காரணம். மின்வாரிய நிர்வாகச் சீர்கேட்டால் ரூ.13176 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்கிறதுதணிக்கைத்துறை.சொந்த மின் உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தைகொள்முதல் செய்ததன் விளைவாக இன்றைக்கு தமிழக மின்வாரியம் நிதிச் சுமையில் சிக்கி ரூ.1.51 லட்சம் கோடி கடனில் தள்ளியது தான் அதிமுகஅரசின் சாதனை.

அதிக விலைக்கு மின் கொள்முதல்
தனியாரிடத்தில் மின்சாரத்தை வாங்குவதற்கு நீண்டகால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம், நடுத்தரகால ஒப்பந்தம் என மூன்று வகைகளில் ஒப்பந்தம் செய்கிறார்கள். இதில் நீண்ட கால கொள்முதல் (LTOA) ஒப்பந்தம் மூலம் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்குவதற்கு பதிலாக 15 ஆண்டுகளுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய; அதாவது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7 முதல்ரூ.12 வரை கொள்முதல் செய்துள்ளனர்.நடுத்தர கால ஒப்பந்தம் (MTOA) மூன்றாண்டுகளிலிருந்து 5 ஆண்டுகள் வரை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.5.50 வரை மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளனர்.அடுத்து குறுகிய கால ஒப்பந்தம் (STOA) என்பது அவசரத் தேவையை யொட்டி மின்சாரத்தை விற்பனையாளர்களிடம் ரூ.5.50 என்ற அதிகபட்ச விலையில் வாங்கியுள்ளனர். சந்தையில் மின்சார விற்பனையாளர்கள் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வழங்க இருந்தும் அதிகவிலைக்கு கொள்முதல் செய்ததன் விளைவு கூடுதல் செலவாக கடும் நிதிச்சுமையில் தள்ளப்பட்டுநெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தனியாரிடம் அதிக விலைக்கு...
ஜி.எம்.ஆர்.பவர் கார்ப்பரேசனிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்த காலம் 2014-ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் டந்த கம்பெனி 2013 டிசம்பரில் மேலும் ஓராண்டுக்கு மின்சாரத்தை விநியோகிக்க விண்ணப் பித்தது. மின்சார வாரிய நிர்வாகம் 12.2.2014 அன்று மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இந்த கம்பெனியிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு முறையீடு செய்தது. ஆனால் பிப்ரவரி 2014-ல் மின்சார வாரியம் தாக்கல் செய்த மனுவை பிப்பரவரி 2015-ல் 
ஒழுங்குமுறை ஆணையம் இந்த அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டாம் என ஓராண்டு கழித்து கூறியது. ஆனால் இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் 737.40 மெகாவாட் மின்சாரத்தை ரூ.824.77 கோடிக்கு சராசரியாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.74 என்ற வகையில் கொள்முதல் செய்துவிட்டது மின்வாரியம். அப்பொழுது சந்தையில் ஒரு யூனிட்மின்சாரம் ரூ.3.39 முதல் ரூ. 5.42 வரை மின்சாரத்தை விற்பனை செய்யஇதர கம்பெனிகள் தயாராக இருந்தும் அதிக விலைக்கு வாங்கியதன் மூலம் ரூ.424.42 கோடி இழப்பு ஏற்பட்டது. இது ஒரு நவீன ஊழல். தனியார் கம்பெனி ஆதாயம்அடைய மக்களின் வரிப்பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.

அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் வாங்க மறுப்பா?
வள்ளூரில் தேசிய அனல் மின் நிலையமும் (NTPCL) தேசிய அனல் மின் உற்பத்தி கழகமும்,தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்த 1500மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் ஒரு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.10 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ரூ.2500 கோடியை 12 சதவீத வட்டியில் கடன் வாங்கி முதலீடுசெய்து விட்டு, அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை வாங்காமல் இருப்பது மின்வாரியத்திற்கு இழப்பை உருவாக்கியது.அதே போன்று நடுத்தர கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மின் கொள்முதல் செய்ய நேஷனல் எனர்ஜி டிரேடிங் அண்டு சர்வீசஸ் என்ற கம்பெனியிடம் 100 மெகா வாட்டிற்கு ஒரு யூனிட் மின்சார விலை ரூ.4.88க்கும், ஜிண்டால் பவர் கம்பெனியிடம் 200 மெகாவாட் மின்சாரம் யூனிட் ரூ.4.92க்கும் அதானி எண்டர் பிரைசஸ் நிறுவனத்திடம் 200 மெகாவாட் மின்சாரம், ஒரு யூனிட் ரூ.4.99 வரையிலும் வாங்க ஒப்பந்தம் காணப்பட்டது. ஆனால் ஜிண்டால், அதானி நிறுவனங்கள் மின்வாரி யத்திற்கு 2013 மே வரை மின்சாரத்தை வழங்க வில்லை. இதனால் மின் தேவையையொட்டி 1 யூனிட் மின்சாரம் ரூ.5.50 பைசாவிற்கு இதர விற்பனையாளர்களிடம் வாங்கியதன் மூலம் ரூ.1055 கோடி நிதி இழப்பு ஏற்பட்டது.

ஊழியர்களின் சம்பளம்நிதி நெருக்கடிக்கு காரணமா?
ஆனால் ஊழியர்களுடைய சம்பளம் ஊதிய உயர்வு போன்றவற்றாலும் நிதிச்சுமை ஏற்பட்டது என தெரிவிப்பது பொருத்தமல்ல! 2010 - 11ஆம் ஆண்டில் வாரியத்தின் வருமானம் ரூ.22101.07கோடி. இதில் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் என்ற வகையில் ரூ.3707.03 கோடி செலவு செய்தது. 16.77 சதவீதம் மட்டுமே . அதேபோல 1019-20 ஆம் ஆண்டில் வாரியத்தின் வருவாய் ரூ.66745.89 கோடி. இதில் ஊழியர் சம்பளம்மற்றும் ஓய்வூதியம் செலவு செய்த தொகை 9.307.94 கோடி. அதாவது 13.94 சதவீதம் மட்டுமே.அதேவேளையில் வாங்கிய கடனுக்காக வட்டியாக செலுத்திய தொகை கடந்த 2010 - 11 ஆண்டில் ரூ. 3591.15 கோடியில் ஆரம்பித்து 2019-20 ஆம் ஆண்டுகளில் ரூ.8674.78 கோடியாக உயர்ந்திருக்கிறது.

ஆனால் 42,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில் களப்பிரிவில் 23,000 காலிப்பணியிடங்கள் இருந்தும் கடந்த 2010-11 ஆம் ஆண்டுகளில் 2,03,704 மின் மாற்றிகளில் 10,756 மின்மாற்றிகள் பழுதடைந்தன. அதாவது 8.22 சதவீதம். ஆனால் 2019-20-ல் 3,27,163 மின்மாற்றிகளில் பழுதானது 11,524. அதாவது 3.52சதவீதம் மட்டுமே. ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியால் தான் இந்த சாதனையை அடையமுடிந்தது.கடந்த 2009-10ஆம் ஆண்டில் மின் நுகர்வோர்களின் எண்ணிக்கை 2,03,87,599 ஆகும். ஆனால் 2019-20 ஆண்டுகளில் 3,07,54,018 கோடியென உயர்ந்துள்ளது. பதவி உயர்வு கிடைத்தும் பலனை அனுபவிக்க முடியாதகணக்கீட்டு பிரிவு, களப்பிரிவு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியால் தான் இந்தச் சாதனை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கிடையில் கஜா, வர்தா, சென்னை வெள்ளம், ஒக்கி, நிவர் போன்ற புயல்கள் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகம் முழுவதும் மின்தடை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்தடையை நீக்கி, மின் விநியோகத்தை சீரமைத்து குறுகிய நாட்களில் இந்தப்பணியை செய்து அரசுக்கு பெருமை சேர்த்தவர்கள் மின் ஊழியர்களே.எனவே, மின்கொள்முதலிலும், மின் உற்பத்திதிட்டங்களிலும் நடைபெற்ற முறைகேடு களினால் ஏற்பட்ட இழப்புகளுடன் ஊழியர்கள் நலன்சம்பளம், பென்சன் போன்றவற்றை பொருத்து வது சரியல்ல.அரசின் பொதுத்துறையான மின்துறையில் இழப்பு ஏற்படுத்துவதும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதும் பெருமுதலாளிகள் மின் கொள்முதலில் லாபம் அடையச் செய்வதும்ஒரு வகையில் நவீன ஊழலே!தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம்,மக்கள் வாங்கும் விலையில் மின்சாரம் என்ற கோஷத்தோடு மின்துறையை பொதுத்துறை யாக பாதுகாக்க தற்போதைய தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர் : எஸ்.ராஜேந்திரன்,பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

;