articles

img

செவ்வந்திப் பூக்களில் செய்த குரல் - எஸ்.வி.வேணுகோபாலன்

1970களின் தொடக்கமாக இருந் திருக்கும். காஞ்சிபுரத்தில்  இசைக் கச்சேரி, ஏ. வி. ரமணன் மியூசியானோ!  மேடையில் கிடார் வாசிப்பவரை, அடித்துத் தூள் கிளப்பிப் படீர் என்று முழங்கிய டிரம்ஸ் வாசிப்ப வரை, தபேலாவில் விரல்களால் விளையாடிக் கொண்டிருந்த கலைஞரை....தமிழ் இந்தி பாடல்கள் (அப்போது பிரபலமாக இருந்த ஷோலே படத்தின் மெஹபூபா மெஹபூபா பாடலை ரமணன் இசைத்தார்) என்று நேரம் போவது தெரியாமல் இருக்கையில் அமர முடியா மல் எழுந்து குதித்து ஆட்டம் போட்டுக் கேட்ட  நாள் அது.   உமா ரமணன் வந்து பாடியிருந்தார் அந்த மேடையில்.

ஏ. வி. ரமணன் இசைக்குழுவில் பாடிக் கொண்டிருந்தவர் திரையிசையிலும் ஒலிக்க ஆரம் பித்தார். அருமையான பாடல்கள் விளைந்தன அவர் குரலில். 

நிழல்கள் படத்தின் அந்தப் பாடல்,  வீணைக்கும் புல்லாங்குழலுக்குமான சிணுங்கல் உரையாடலின் மெல்லோசையில் புறப்பட்டு வேகவேக வயலின் திறப்பில் பூங்கதவின் தாழ் திறக்கவைக்கும் கணத்தில் கேட்ட மாத்திரத்தில் எங்கோ கொண்டு நிறுத்தியது.  தீபன் சக்கரவர்த்தியின் மென் காதல் மீது ஆவேசக் காதலாகப் படரும் ஓர் அனுபவமாக ஒலித்தது உமா ரமணன் அவர்களது தனித்துவ இசைக்குரல்.  அந்தப் பாடலின் சுவாரசியத்தைக் கூட்டுவது போல் ஏக்கத்தைப் பேசும் ஒற்றை வயலினும், ஆற்றுப் படுத்தும் புல்லாங்குழலும் சரணங்களுக்கு இடையே மேள தாள மங்கல இசைக்கருவிகள் முழக்கமுமாக இளையராஜா அமைத்திருப்பார். நீரோட்டம் என்று முதல் சரணத்தை உமா ரமணன் எடுக்கும் விதமே, துடுப்பின் விசையோடு ஓர் உல்லாசப் படகு புறப்படும் பயண உணர்வைக் கிளர்த்தும். மிருதங்க இசைக்கருவியின் சுகத்தைக் கூட்டும் உமாவின் குரலும், தீபன் சக்கரவர்த்தியின் உச்சரிப்பின் மெல்லதிர்வும் மொத்தப் பாடலும் ஒரு காதல் கிறக்க கீதமாக அரும்பும்.

உமா ரமணன் குரலினிமையின் வெவ்வேறு  சாத்தியங்களின் வரிசை போல் அமைந்தி ருக்கிறது அவருக்காக வாய்த்த பாடல்கள். பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் (தூறல் நின்னு போச்சு), கே .ஜே. யேசுதாஸ் அவர்க ளோடான இசை கொண்டாட்டம். கோரஸ் இசை யிலிருந்து செலுத்தி இருப்பார் பாடலை இளையராஜா.  யேசுதாஸ் பஞ்சு போல் ஒத்திக் கொடுக்கும் சொற்களை இன்னும் பக்குவமாக உள்ளங்கையில் வாங்கி மென்மையாக்கிக் கொடுப்பார் உமா.  பல்லவியில்  சரணத்தில் இசைக்காற்றின் வேகம் மேலெழுந்துவர, யேசுதாஸ் கொடுக்கும் விசையின் வேக கதிக்கு ஏற்ப உமா எடுக்கும் அடுத்த வரிகளில் பாடல் மேல் தளத்தில் ஒலித்து மீண்டும் பல்லவியின் மென் தளத்திற்கு உலவக் கீழிறங்கி வந்துவிடு கிறது. 

கைதியின் டயரி படத்தின் பொன் மானே கோபம் ஏனோ பாடல், ஊடலின் உச்சத்தில் இருக்கும் நாயகியின் தன்னுணர்வின் கம்பீரக் குரல். ஒவ்வொரு சொல்லையும் உமாவின் இசைக்குரல் ரசித்துக் கேட்க வைக்கும்.   பன்னீர் புஷ்பங்களில், ஆனந்த ராகம் கேட்கும் காலம்,  உமாவின் குரலுக்கேற்பவே அமைந்த அற்புத மான மற்றுமொரு பாடல். இளமைத் துள்ளலின் இன்ப ஓட்டத்தை வயலின்கள் எடுத்துக் கொடுக்க, அப்படியா கதை...என்று புல்லாங்குழல் தனது பங்கிற்கு இசை நீரூற்ற, உச்சக் குரலில் பல்லவியை எடுப்பார் உமா. பல்லவியை மட்டுமா, சரணங்களையும் அவ்வண்ணமே அமைத்திருப்பார் ராஜா. ஹம்மிங் உள்பட புரவிகளில் பறக்கும் காதல் குரல் அது. 

‘ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ...’ (அரங்கேற்ற வேளை) பாடல் முற்றிலும் வேறான இசை அனுபவம். மயில் தோகையெடுத்து எழுதும் இசையோவியம் அது. யேசுதாஸ், உமா இருவரின் அபாரமான குரலினி மையின் தேனூற்று அது. சரணங்களில் போட்டி போட்டுக் கொண்டு இழைத்திருப்பார்கள் இரு வரும்! அருவியின் சாரல் மேலே பூத் தூவிக் கொண்டே இருக்கும் பாடல் கேட்போர் உள்ளங் களில்!  நிறைவு செய்யுமுன் உமா ரமணன்  ‘ஆகாய வெண்ணிலாவே’  என்று பல்லவியை எடுக்கும் அந்த இரண்டு சொற்களில் மட்டுமே தோய்ந்து தோய்ந்து இன்புற்றுக் கொண்டிருக்க முடியும்  எனில், பாடல் முழுவதும் பரிமாறும் இன்பத் திற்கு ஈடு இணை ஏது!

‘நீ பாதி நான் பாதி கண்ணே’ (கேளடி கண் மணி) பாடல் மற்றுமொரு யேசுதாஸ் - உமா ரமணன் இணை குரல்களில் ராஜாவின் இசை யில் மின்னும் பாடல். உள்ளபடியே, இருவரும் சம அளவில் வழங்கிய இனிமை தான் அந்தப் பாடல். ‘வானப் பறவை வாழ நினைத்தால்..’ என்றெடுக்கும் முதல் சரணம் கையில் வந்து தவழும் பறவை எனில், அடுத்த வரிகளில் அதன் சிறகடிப்பையும் உணர வைத்திருப்பார் உமா ரமணன். இரவுகளுக்கு இனிமை சேர்க்கும் பாடலிது. 

அவர் தனித்துப் பாடி இருந்த ‘மஞ்சள் வெயில் மாலை இட்ட பூவே’  (நண்டு). ராஜா வோடு சேர்ந்து இசைத்த செவ்வரளி தோட்டத் திலே (பகவதிபுரம் ரயில்வே கேட்), எஸ்பி  பாலசுப்பிரமணியன் அவர்களோடு இசைத்த பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு (கும்பக்கரை தங்கையா), ஜேசுதாஸ் அவர்களோடு இணைந்து கண்மணி நீ வரக் காத்திருந்தேன் (தென்றலே என்னைத் தோடு), ...என்று மெல்லிசையாக எண்ணற்ற ரசிகர்கள் உள்ளங்களில் ரீங்கரிக்கும் நிறைய பாடல்கள் இசைத்தவர் உமா ரமணன். 

அவருக்கே மிகவும் பிடித்த பாடலென, தி இந்து சிறப்பு செய்தியாளர் ப.கோலப்பன் குறிப்பிடுவது, கிருஷ்ண கான வரிசையில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விசுவநாதன் இசையமைப்பில் கண்ணதாசனின் ‘கண்ண னுக்கு ராதை நெஞ்சம் சிம்மாசனம், காதல் மன்னனுக்குப் பொழுதெல்லாம் பிருந்தாவனம்; எனும் பாடல். அத்தனை மென்குரலில் அபாரமாக இசைத்திருப்பார் அந்தப் பாடலை. 

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, உள்ள படியே ஒரு காதல் சிற்பம். தீபன் சக்கர வர்த்தியோடு இணைந்து பாடி இருப்பார் உமா. தேரில் சென்று கொண்டே செதுக்கும் காதல் சிற்பம். ஒரு நந்தவனத்தின் வட்டப்பாதை ஒன்றில் ஒயிலாகப் பவனி வரும் தேரிலிருந்தபடி செதுக்கும் சிற்பம் தான் அந்தப் பாடல் என்று தோன்றும். இசைக்கருவிகள் போலவே இந்த இணை குரல்களும், குரல்கள் போலவே இழைக்கும் இசைக்கருவிகளுமாக நிகழும் மாயா ஜாலத்தில் நிலவொளியில் ஒரு நந்த வனத்தில் வட்டப்பாதையில் சிங்காரமாக நகர்ந்து  போய்க் கொண்டிருக்கும் தேரில் மின்னும் காதல் சிற்பமாகவே தோன்றும் பாடல். 

எத்தனையோ காதல் உள்ளங்களுக்காகவே ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டது அதிர்ச்சி செய்தி தான்.  ஆனால், இசைக் காற்றில் கலந்திருக்கும் மூச்சுக் காற்று ஓய்வெடுக்க முடியாது. மறைத்துக் கொள்ள முடியாத வருத்தத்தை ஆற்றுப் படுத்தும் மெல்லிய செய்தி இது தான்.

- எஸ்.வி.வேணுகோபாலன்

;