articles

img

இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பிரிவினர்க்கும் எதிரானது... தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் இணையவழி கருத்தரங்கில் எச்சரிக்கை

இந்திய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய பொது மக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் காஷ்மீரின் தற்போதைய நிலை? அதற்கான தீர்வுகள், ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு மக்களை ஏய்ப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு நடவடிக்கை என்பதை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் அமைதியாக இருந்த லட்சத்தீவில் ஒன்றிய அரசின் அக்கிரமமான நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுக்க சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து வரும் தாக்குதல்களை எதிர்க்கும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் ஞாயிறன்று ஜூலை 4-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 8 மணி வரை இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நல குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை ஏற்றார். பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளில் ஒருவரும் மக்கள் செயற்பாட்டாளருமான அக்பர் அலி, மிக இளம் வயதில் இந்திய ஆட்சிப் பணியாளர்களாகியும் (ஐஏஎஸ்) இந்திய அரசுடனான கொள்கையில் முரண்பாடு ஏற்பட்டு அந்தப் பதவியை துச்சமென தூக்கி எறிந்து விட்டு, மக்கள் சேவையே தங்களுக்கு முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டு வரும் கண்ணன் கோபிநாதன், சசிகாந்த் செந்தில், பேராயர் தேவசகாயம் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை மிக ஆழமாகவும், எளிமையாகவும், விரிவாகவும், தொடர்ந்து செல்லவேண்டிய பாதையை மிக உறுதியுடனும் எடுத்து வைத்தனர்.

முன்னாள் நீதிபதி அக்பர் அலி\

பிறப்பின் அடிப்படையில் 26.1.1950 வரைஅதாவது, 26 ஜனவரிக்கு பின்பு இந்தியாவில்பிறந்தவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்களாக இருந்தனர். மூதாதையர்கள் யார்? எந்த நாட்டைச்சார்ந்தவர்கள்? எங்கிருந்து வந்தவர்கள்? எந்த மதத்தைசார்ந்தவர்கள்? என்ற கவலை இல்லை என்று அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.அதன் பிறகு, 1969 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தஒவ்வொருவரும் கட்டாயம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு திருத்தத்தை மீண்டும் கொண்டுவந்தனர்.  பிறகு 87 -ல் தாய் அல்லது தந்தை ஒருவர் இந்தியராக இருந்தால் போதும் அவர்களும் இந்திய குடிமகன் என்றும் திரும்பவும் திருத்தப்பட்டது. அதுவரைக்கும் நாட்டில் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.

வன்மம்...

2003ஆம் ஆண்டில், வாஜ்பாய் பிரதமராக வந்தபோதுதான் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அவர் செய்த திருத்தத்தில் பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளிலிருந்து  சட்டத்துக்குப் புறம்பாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் என்ற புதிய பிரிவை கொண்டு வந்தார்.குறிப்பாக பங்களாதேசில் இருந்து எல்லை தாண்டி அசாம் மாநிலத்துக்குள் வந்தவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்று அசாமில் மாணவர்கள் தீவிரமாக போராடிக் கொண்டு இருந்த நேரம் அது. அவர்களை கணக்கெடுத்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என அறிவித்து மேல் நடவடிக்கை எடுக்க இந்த புதிய சட்டம் வழி செய்தது.அப்போது ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது . அதில், 3 கோடியே 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று அடையாளப்படுத்தினர்‌. அதில் 19 லட்சம் பேர் மட்டுமேவெளிநாட்டினர். பிற மதங்களை சார்ந்தவர். மற்ற அனைவரும் இந்துக்களே.

இந்த பின்னணியில்தான் இன்றைய ஆட்சியாளர்கள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற சட்டப்பிரிவை மேலும் விரிவுபடுத்தி எல்லோரும் சட்டவிரோதக் குடியேறியவர்கள் என்பதை மாற்றி, இந்த பிரிவுக்குள் முஸ்லிம் மக்கள் அல்லாதவர்கள் சேர மாட்டார்கள் என்று திருத்தம் கொண்டு வந்து முஸ்லிம்களை மட்டுமே பிரித்து அடையாளம் காண வழி செய்தது. மற்ற மதங்களை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் விதிவிலக்கு கொண்டு வந்தனர்.இஸ்லாமியர்களை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பாகுபாடுஇங்கேதான் தொடங்கியது.  இதுதான் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் தற்போதைய இந்திய குடியுரிமை சட்டம் (சிஏஏ) என்பதை அம்பலப்படுத்தினார்.நாட்டின் எல்லையில் உள்ள மக்கள் தொகையை ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. அதில் தவறு ஏதும் இல்லை. சாதாரணமாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பின் போது இந்திய ‘சிட்டிசன்’ என்பதற்கு ஆதாரமாக நம்மிடம் இருந்து வருவது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அதன் பிறகு ஆதார் ,பான் கார்டு. அதாவது அடிப்படை விவரங்கள் மட்டுமே குறிப்பிடுவதாக இருந்தது.

தற்போது கொண்டு வந்திருக்கும் என்பிஆர் சட்டத்தில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமிய சிறுபான்மை சிட்டிசன்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். அது உண்மையா? என்றால் அது உண்மையில்லை.ஒரு இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்கும் பொறுப்பு அல்லது சுமை இந்தியாவில் ஏற்கனவே குடியிருக்கும் இஸ்லாமிய மக்கள் மீது இந்த அரசால் சுமத்தப்பட்டது. அதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர்களே திரட்டி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.ஏனென்றால்? பேரன் பேத்திகளிலிருந்து துவங்கும் இந்த கணக்கெடுப்பில் எந்த நாட்டைச் சார்ந்தவர் ? எந்த ஊரில், எப்போது பிறந்தவர். வம்சாவளி யார் ? அவர்களது மூதாதையர்கள் இந்தியர்கள்தான்.குறிப்பாக,1950 க்கு முன்பு இந்தியாவில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க அனைத்து சான்றுகளையும் ஒப்படைக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு இடத்தில் நிரூபிக்கத்தவறினாலும் அவரது இந்திய குடியுரிமை ரத்து செய்யப்படும் என்கிறது தற்போதைய மோடி அரசு வெளியிட்ட என்பிஆர் படிவம்.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல...

இந்த பாதிப்பு இந்திய நாட்டில் வசிக்கும் 12 விழுக்காடு இஸ்லாமியச் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல. பிறமதங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் அடித்தள மக்கள், ஏழைகள், வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தானது.
இதுகுறித்து அன்றைய தமிழக முதல்வரை சந்தித்துமுறையிட்டோம். ஒன்றிய அரசின் இந்த புதிய நிபந்தனைகளுடனான அணுகுமுறையை பல மாநில அரசுகள் எதிர்த்துஉள்ளன, நிராகரித்து உள்ளன, தமிழக அரசும் தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றோம்.இந்த நிபந்தனை, இஸ்லாமிய மக்களை மட்டுமே பாதிக்கும் என்று நினைத்தால் தவறு, அனைத்து மக்களையும் பாதிக்கும் என்று விளக்கினோம். முதல்வர் ஒத்துக்கொண்டார். இன்றைய தமிழக முதல்வர் அன்று எதிர்க்கட்சிதலைவராக இருந்தார், அவரையும் சந்தித்து இந்த புதிய சட்டங்களை பற்றி பேசினோம், புரிந்து கொண்டு இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினார்.

உண்மையில் சமூகத்தில் மிக உயர்ந்த மட்டங்களில் இருப்பவர்களும் பொருளாதார நிலையில் வசதியானவர்களும் செல்வாக்கு மிக்கவர்கள். அவர்களால் அரசின் இந்த நிபந்தனைகளில் இருந்து தப்பிக்க முடியும், அல்லதுசமாளிக்கவும் முடியும். எனில் இதனால் பாதிப்புக்கு ஆளாவது யார்? செல்வாக்கு அற்ற, பொருளாதார வசதி ஏதும் அற்ற அனைத்து நடுத்தர, அடித்தட்டு மக்களும்தான் மத வேறுபாடு இன்றி இதனால் பாதிக்கப்படுவார்கள்.

சசிகாந்த் செந்தில், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

கடந்த பத்தாண்டு காலமாக நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில்ஒன்று மைனாரிட்டியா? மெஜாரிட்டியா? என்பது போராகவே கருதப்படுகிறது. என்னைப் பொருத்தமட்டில், அப்படி அல்ல?கடந்த எழுபது எண்பது ஆண்டுகளுக்கு மேலாகதேசபக்தர்களுக்கும் தேசத்தை விற்க நினைப்பவர்களுக்கும் நடக்கும் மோதலாகும்.அடிமை இந்தியாவில் இருந்து  பிரிட்டிஷாரை வெளியேற்றினால் போதும். சமூகத்தின் கட்டமைப்புகளான ஏற்றத் தாழ்வுகள் அப்படியே இருக்கவேண்டும் என்றது மட்டுமல்ல சமத்துவத்தை விரும்பாமல் நாட்டை ஒரு எல்லை பரப்பாகவும், சொத்தாகவும் பார்த்ததால் விடுதலைப்போராட்டத்தில் இருந்தும் ஒதுங்கிக் கொண்டது ஒரு குழு.

நாட்டில் இருந்து அந்நியர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல, அனைவரும் ‘சமமாக’ வாழவேண்டும்,  வெகுஜன மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். நாடு புதிய தேசமாக விடுதலை பெற வேண்டும் என்பதை இரண்டாவது குழு விரும்பியது.இந்த இரு வேறு கருத்து மோதல்களுக்கு இடையில்தேசம் விடுதலை அடைந்ததும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு ‘சோசலிசம்’ சமதர்மம் ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், பின்புலத்திலிருந்து இயக்கிக் கொண்டு இருந்தவர்கள் இதை விரும்பவில்லை.அதன் விளைவுதான் இந்தியாவை வெறுத்தவர்களிடமே ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது.

நாடு விடுதலைக்கு முன்பிலிருந்து விடுதலைக்குப் பின்பு தேசத்தை நேசித்த அவர்களிடம் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. இந்தியாவை பிடிக்காதவர்கள் தான்இன்றைக்கும் ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் முட்டாள்தனமான நடவடிக்கைகளை தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுதான் அமைதியாக இருந்த லட்சத்தீவு முற்றிலும் முடக்கப்படுகிறது. அமைதியாக வாழ்ந்த மக்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. அந்தமக்களின் உணவில் கை வைக்கிறார்கள். இதற்குக் காரணம் இன்றைய ஆட்சியாளர்கள்(பாஜக) அந்த மாநிலத்தை ஒரு நிலப்பரப்பாகவே பார்ப்பதன் எதிரொலி தான்.

எது ஜனநாயகம்?

“மக்கள்தான் இந்தியா” என்ற புரிதலோடு தான் அன்றைக்கு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கும்பாஜகவினர் அது முக்கியமல்ல. எங்களுக்கு நிலப்பரப்பு தான் முக்கியம் என்று ஒரு கருத்தோட்டத்தை ஆழமாக கொண்டிருப்பதால் அதை மக்கள் மனதில் புகுத்துவதற்கு உணர்வுகளை, உணர்ச்சிகளை தூண்டி இந்து-முஸ்லிம் மைனாரிட்டி, மெஜாரிட்டி என்பதை திரும்பத் திரும்ப பேசி ஜனநாயகத்தில் வாக்கு வங்கி அரசியலை நடத்தி வருகிறார்கள்.சமூக நீதி, சமத்துவத்தை விரும்பாமல், நமது அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல், ஜனநாயகத்தை ஜனநாயகமாகப் பார்க்காமல் வாக்களிப்பது மட்டும் தான் ஜனநாயகம் என்கின்ற நிர்வாக ஆட்சி முறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது மோடி வகையறா.

கண்ணன் கோபிநாதன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

இந்து-முஸ்லிம் என்கிற இரட்டை துருவ நிலைப்பாட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் மதவாத அமைப்புகளும் சவுக்கடி கொடுத்ததுஇந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம்.நாட்டு மக்கள் சம உரிமையுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இத்தகைய சூழ்நிலையில்தான் காஷ்மீர் மாநிலத்தின் அமைதி சீர்குலைக்கப்பட்டது. அந்த மாநிலத்தைஇரண்டாக உடைத்து மக்களின் அனைத்து வகையான சுதந்திரத்தையும் பறித்தனர். மாநிலத்தின் முதலமைச்சர்கள் துவங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களையும் கைதிகளாக மாற்றினர். மிகப்பெரிய தேசத் துரோகிகளாக சித்தரித்தனர். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. மாதங்கள் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் மக்களையும் வாட்டி வதைத்தனர்.சமூக நீதி மறுக்கப்பட்டது. அரசியலமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. அந்த மாநில மக்களின் அடிப்படையான உரிமைகளைக் கூட வழங்கவில்லை. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. நீதிமன்றமும் வாய்மூடி மவுனியானது.திரும்பிப் பார்க்கும் திசை எங்கும் ராணுவமே ஆட்சியைநடத்தியது. கேள்வி கேட்கவே கூடாது என்று காட்டுமிராண்டித் தனமாக செயல்பட்டது.எப்போது அமைதி திரும்பும்? சகஜ வாழ்க்கையை தொடர முடியுமா? என்றெல்லாம் பெரும் ஏக்கத்துடன் காஷ்மீர் மக்கள் ஏங்கி நின்றனர். மாநிலத்தைப் பிரித்தபோது கூறிய காரணம் உண்மைக்குப் புறம்பானது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.அந்த மாநிலத்தில் இன்னமும் தீவிரவாதம் குறைந்தபாடில்லை. வன்முறை நின்றபாடில்லை. எந்த வகையிலும் மாநிலம் வளர்ச்சி பெறவில்லை. அதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

அடிநாதம்...

நாட்டின் பிரஜைகளுக்கு எதிரான நிலைபாடுகளை அரசாங்கமும் நிர்வாகமும் எடுக்கும்போது அதை முற்றிலும் நிராகரித்து எதிர்வினையாற்ற முன்வர வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் என்றும் தோற்பதில்லை. இதை விடுதலைக்கு முன்பும் பார்த்திருக்கிறோம்.உப்புச் சத்யாகிரகப் போராட்டம் நடத்திய பிறகும்  வரியைதிரும்பப் பெறவில்லை பிரிட்டிஷ் அரசு. இருந்தாலும் அந்தப் போராட்டத்தின் எழுச்சி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டது. நாடு விடுதலை பெறுவதற்கு தண்டி யாத்திரை ஒரு முக்கிய பங்கு வகித்தது.நாம் இன்றைக்கு நடத்தக்கூடிய போராட்டங்கள் உடனடியாக மாற்றங்களை கொண்டு வருகிறதா? அல்லது விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என்பது முக்கியம் இல்லை. நாம் எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அந்த கொள்கைக்காக உறுதியுடன் களத்தில்நிற்க வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் தேசிய குடிமக்கள் மற்றும் தேசிய பொதுமக்கள் பதிவேடு எதிரான போராட்டத்திலும் காஷ்மீர் மற்றும்லட்சத்தீவு பிரச்சனைகளும் அரசுக்கு எதிராக எதிர்வினை ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பேராயர் தேவசகாயம்

ஆசியாவில் பல நாடுகள் ஜனநாயகத்தை இழந்துராணுவ ஆட்சியின் கீழ் சென்று கொண்டிருந்தநிலையில், சோசலிச நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டுமதச்சார்பின்மை அடிப்படையில் சமயசார்பற்றஆட்சியை நடத்தும் ஒரே நாடு இந்தியா என்பதில் பெருமிதம் கொண்டிருந்தோம்.பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மதச்சார்பின்மை அழிக்கப்படுவது ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்து கொண்டு வருகிறது அதன் உச்சபட்சமாக. சோசலிச நெறிமுறை வேண்டாவெறுப்பாக பார்க்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் கூவிக் கூவி விற்கப்படுகிறது நாடே ஏலம் விடப்படுகிறது.வெறுப்பு அரசியலை விதைத்து அதில் ஆதாயம் தேடும் ஆர். எஸ். எஸ் அமைப்புகளால் நமது அரசியலமைப்புச் சட்டம் கூறிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அனைவரும் சமம் என்கிற தத்துவம் சுரண்டப்படுகிறது. இத்தகைய போக்குகள் நமக்கு உலகம் முழுவதும் பெருத்த அவமானத்தை, இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

வழிகாட்டியாக, விதிவிலக்காக!

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில தலைவர் எஸ்.நூர்முகமது, கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம். ராமகிருஷ்ணனும் உரை நிகழ்த்தினர். மதச்சார்பின்மையை பாதுகாக்க, சமூக நீதியை நிலை நாட்ட, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ வழிகாட்டுவதற்கு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு எப்போதும் வழிகாட்டியாக விதிவிலக்காக திகழ்ந்து கொண்டு இருக்கும் என்றும் எம்.ராமகிருஷ்ணன் கூறினார்.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு
 

;