கர்நாடகத்தில் அடுத்த மாதம் நடைபெற வுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை மன திற்கொண்டு பிஜேபி வழக்கம்போல தனது வகுப்புவாத சரக்கைக் கையிலெடுத்துக் கொண்டு, முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மைசூர் மண்ணில் கால்பதிக்க விடாமல் 30 ஆண்டு கள் தடுத்து நிறுத்திய மாபெரும் வீரர்களை மக்கள் மனதிலிருந்து அகற்றி இருட்டடிப்பு செய்திடும் இழிவான செயலிலும் பிஜேபி ஈடுபட்டு வருகிறது. 18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தென் இந்தியாவில் தங்களுடைய பேரரசை விரிவு படுத்துவதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக மைசூர் அரசும் அதன் மாமன்னர்களான ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் இருந்து வந்தனர். மைசூ ரைக்கைப்பற்றுவதற்காக அடுத்தடுத்து நடந்த போர்களில் மூன்று முறை ஆங்கிலேயர்கள் தோல்வி யையே தழுவினர். பிரிட்டிஷாருக்கும் மைசூர் படை களுக்குமிடையே நான்காவதாக நடந்த சண்டை யில்தான் திப்புவைத் தோற்கடித்து அவர்கள் வெற்றி பெற முடிந்தது. அப்போது ஆங்கிலேயர்களுக்கு ஆத ரவாகப் போரிடுவதற்குத் தங்கள் படைகளையும் அனுப்பி துணையாக நின்றவர்கள் ஹைதராபாத் நிஜாமும், மராட்டிய பேஷ்வாக்களும் ஆவர்.
பிஜேபியின் சூழ்ச்சித் திட்டம்
ஆனால் பிஜேபி இப்போது திப்பு சுல்தான் மீது ஒரு நிகழ்காலப் போரைத் துவக்கியுள்ளது. திப்பு சுல்தான் மீது சேற்றைவாரி இறைத்து மாசுபடுத்துவது, அதன் மூலம் இஸ்லாமியர்கள் மீது ஒரு தாக்குதலைத் தொடுப்பது என்பது இன்றைய பிஜேபியின் சூழ்ச்சி நிறைந்த செயல் திட்டமாக உள்ளது. காரணம் - கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்! ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த திப்பு சுல்தானை இறுதியில் வீழ்த்திய பிரிட்டிஷாரை நேரடியாகப் புகழ்ந்து கொண்டாட இயலாது என்பதால், இரு கவுடா சமூக வீரர்களைக் கற்பனையாக உற்பத்தி செய்து உருவகப்படுத்தி வருகின்றனர். திப்பு சுல்தான் பிரிட்டீஷாரால் போர்க்களத்தில் கொல்லப்பட வில்லை; திப்புவைக் கொன்றது இரண்டு கவுடாக்கள் என மிகப்பெரிய பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர். திப்பு சுல்தானை கவுடா வீரர்களுடன் தொடர்புபடுத்தும் எத்தகைய சம்பவமும் எந்தவொரு வரலாற்றுப் புத்தகத்திலும் இடம் பெறவில்லை. ஆங்கிலேயர்கள் நடத்திய நான்காவது மைசூர் போர் பற்றிய ஆவணங்களிலும் இது போன்ற குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் பிஜேபி-யின் சமூக வலைதள அடியாட்களுக்கு போராளிகளுக்கு இவை பற்றி யெல்லாம் எந்தக் கவலையும், கூச்சமும் துளியும் இல்லை. கர்நாடகாவில் தேர்தல் நடக்கிற போது - அதிலும் தங்களுடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாக மாறியுள்ள போது - உண்மையைப் பற்றியும், உண்மையான சரித்திரத்தைப் பற்றியும் கவலைப் பட்டுக் கொண்டா இருக்க முடியும்?
பீரங்கித் தொழில்நுட்பம்
ஆனால் பிஜேபி எவ்வளவுதான் அவதூறு களைத் தூவி மூடி மறைக்க முயன்றாலும், அவற்றை யெல்லாம் புறந்தள்ளி வெளிப்படும் வரலாற்று நிகழ்வு கள், உண்மைகளின் சாட்சியமாய் ஒளிவீசிக் கொண்டி ருக்கின்றன. ஹைதர் அலியும், அவரது புதல்வர் திப்பு சுல்தானும் மூன்று தசாப்தங்களாக, அதாவது 30 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்கள் மைசூருக்குள் நுழைய முடியாதபடி தடுத்து நிறுத்தி வந்தார்கள் என்பது மட்டுமன்றி, அச்சமயத்தில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தங்கள் படைபலத்தில் மிக வும் லாவகமான முறையில் பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் ஆழமான முறையில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் ஆகும். பொதுவாக போருக்கான இராணுவ தளவாடங்களில், பீரங்கி வடிவமைப்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, ராக்கெட்டுகளின் முக்கியத்துவம் படிப்படியாக சரியத் தொடங்கியது. பீரங்கிகளோடு ஒப்பிடுகையில் ராக்கெட்டுகள் வலிமை குறைந்ததாகவும், போதுமான துல்லிய அளவு இல்லாததாகவும் கருதப்பட்டன. இத்தகைய பின்னணி யில் தான் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ராக்கெட் தொழில்நுட்பத்திலும், பயன்பாட்டிலும் பெரும் முன்னேற்றங்களை எட்டி, நடைமுறைப்படுத்தினர். அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய ராக்கெட்டு களின் உறைகள், அட்டைப் பலகை அல்லது மரத்தி னால் செய்யப்பட்டன. ஆனால் மைசூர் ராக்கெட்டு கள் இரும்பு உறைகளைக் கொண்டிருந்தன. இதன் மூலம் அதிக அளவில் வெடிமருந்தைத் தேக்கி வைப்ப தும், தாக்குதல் தொடுப்பதற்கான நிலப்பரப்பை விரிவு படுத்துவதும் சாத்தியமாயிற்று. மேலும் எதிரிப் படை களை எளிதில் தாக்கி காயப்படுத்தும் வகையில், ராக்கெட்டின் முனைகளில் மூங்கில் கழிகளும், வாளும் செருகப்பட்டிருந்தன.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் தலைமையின் கீழ் மைசூர் படைப் பிரிவுகளில் ராக்கெட்டுகளின் பங்குகணிசமானதாக இருந்தது. பிற பகுதிகளை மிக எளிதாகக் கைப்பற்றி தன் வச மாக்கிக் கொண்ட ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ்படை யானது, மைசூரின் அதிநவீன ராக்கெட் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பெரிதும் திணறியது. இத்தகைய ஆக்ரோஷமான ஆயுத மழையை வேறு எந்தப் பகுதியிலும் அவர்கள் சந்தித்ததில்லை. பிரிட்டிஷ் படையினரின் வலிமை வாய்ந்த தாக்குதலை முறியடிக்கும் வண்ணம் மைசூர் மேற்கொண்ட ராக்கெட் தடுப்பணைகளால், பிரிட்டன் படைகள் நிலைகுலைந்து சிதறி ஓடும் சூழல் ஏற்பட்டது. இதன் விளைவாகவே மைசூர் ராஜ்யத்துடன் தான் நடத்திய போரில் அடுத்தடுத்து மூன்று முறை பிரிட்டீஷ் படை தோல்வியுற்றுத் திரும்பியது. நான்காவதாக சீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில் தான் நிஜாம் மற்றும் பேஷ்வாக்களின் துணையோடு பிரிட்டன் திப்பு வை வீழ்த்த முடிந்தது.
பிரான்ஸ் நேசக்கரம்
அப்போது அமெரிக்காவில் மிகவும் தீவிரமான முறையில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அமெரிக்க சுதந்திரப் போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட விடுதலைப் படை யினருக்கு பிரான்ஸ் ஆயுதங்கள் வழங்கி பேருதவி புரிந்து வந்தது. இந்தியாவில் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரச்சமர் புரிந்துவந்த திப்பு சுல்தானுக்கும் பிரான்ஸ் நேசக்கரம் நீட்டி வந்தது. இந்தியாவில் தனது காலனியாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக பிரிட்டன் நடத்தி வந்த போர்கள் குறித்து அமெரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஆங்கிலே யர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்று வந்த நெடிய யுத்தத்தின் ஒரு பகுதியே. இதன் முடிவில்அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. இந்தியாவோ தன் சுதந்திரத்தை இழந்து, பிரிட்டனின் முழுமையான காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது. அமெரிக்கத் தலைவர்கள் மைசூர் ராஜ்யத்தைத் தங்களுடைய மதிப்புவாய்ந்த கூட்டாளியாகவே கருதி னார்கள். அதன்காரணமாகவே, 1812-இல் டெலவயர் விரிகுடாவை பிரிட்டனிடமிருந்து மீட்பதற்காக நடை பெற்ற கடல் போரில், அமெரிக்காவின் ஒரு போர்க்கப்ப லுக்கு ‘ஹைதர் ஆலி (Hyder Ally) ‘ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிரிட்டன், அத்தருணத்தில் ஒரே நேரத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் போர் நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தது.
இந்தியாவில் மைசூரைக் கைப்பற்றுவது, அமெ ரிக்காவில் விடுதலைப்படையின் புரட்சியை ஒடுக்கு வது என்று ஒருசேர தான் எதிர்கொண்ட நிலைமை யில், அமெரிக்காவில் தனது ஆளுகையின் கீழிருந்த 13 காலனியப் பகுதிகளிலிருந்து வெளியேறி, அமெ ரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரம் அடைவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரிட்டனுக்கு உரு வானது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமெனில், காலனியாதிக்கத்தில் எதை வைத்துக்கொள்வது, எதை விட்டு விடுவது என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டத்தில், மைசூரைத் தன்வயப்படுத்துவதே பிரிட்டிஷ் பேரரசின் நலன்களுக்குப் பெரிதும் பலனளிக்கும் என்று அது கருதியது. மேற்கூறிய இந்த விவரணைகளோடு, ஆங்கிலேயர்களுக்கும் மைசூர் ராஜ்யத்திற்குமிடையே நடைபெற்ற போர், அதன் சரித்திர முக்கியத்துவம் மற்றும் பின்விளைவுகள் ஆகியன குறித்த முழுமையான விவாதங்களை வர லாற்று ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றங்க ளுக்கு ஒப்படைத்துவிட்டு, இந்தப் போரில் ராக்கெட்டு களின் பயன்பாடு பற்றியும், அதன் சிறப்புக்கூறுகள் பற்றியும் ஒரு சில அம்சங்களை இங்கே குறிப்பிடு வது அவசியம். இன்றைய தினம் ராக்கெட் தொழில் நுட்பத்தின் மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியின் பயனாகவே, வீரர்கள் விண்வெளியில் பயணிப்பதும், சந்திரனிலும், செவ்வாயிலும் காணக்கிடைப்பது என்ன என்று ஆய்வு மேற்கொள்வதும் வசப்பட்டுள்ளது.
திப்புவின் ராக்கெட்டுகள்
புயல்,மழை, வெயில், வறட்சி என்று வானிலையின் அத்தனை கூறுகளையும் அறுதியிட்டுக் கணித்து அறிவிப்பது முதல் நமது வீட்டுத்தொலைக்காட்சிக்கு நேரலை வசதி கிட்டுவது வரை அனைத்தையும் சாத்தியமாக்கியுள்ளது. மறுபுறம், யுத்தகளத்தில் பவனிவரும் பல்வேறு ஆயுதங்கள், பேரழிவை உண்டாக்கும் படைக்கலன்கள், அணுகுண்டுகள் என்று இன்னொருவிதமான வளர்ச்சியும் இணைந்தே வருகிறது. கெடுவாய்ப்பாக, அறிவியலும் தொழில் நுட்பமும் நிகழ்த்திவரும் முன்னேற்றமும் அளப்பரிய சாதனைகளும், போர்களுடனும், பன்னாட்டு வர்த்த கத்துடனும் பின்னிப்பிணைந்தே இருக்கிறது. ராக்கெட் தொழில்நுட்பமும் இதற்கு விலக்கல்ல. ஆக, திப்பு சுல்தானின் ராக்கெட்டுகள் உலகிற்கு விடுத்த செய்தி என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த புகழ்மிக்க விண்வெளி விஞ்ஞானியும், பத்மவிபூஷண் விருது பெற்றவருமான ரோதம் நரசிம்மா,இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த விரிவான ஆய்வறிக்கை ஒன்றை 1985-இல் வெளியிட்டார். “மைசூரும் பிரிட்டனும் பயன்படுத்திய ராக்கெட்டுகள் 1750 முதல் 1850 வரை” என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை, மைசூரில் திப்பு சுல்தான் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகளின் வடிவமைப்பு மற்றும் செயல் திறனை வரலாற்றுப் பூர்வமாக ஆய்ந்தும்,
அதன் படிப்படியான வளர்ச்சியை விவரித்தும், போரின் முடிவில் பிரிட்டிஷ் கைகளுக்குச் சென்று விட்ட அந்த ராக்கெட்டுகளின் பயன்பாட்டை எடுத்து ரைத்தும், முழுமையான ஒரு கருத்துப்பேழையாக இடம் பெற்றுள்ளது. சீரங்கப்பட்டினம் போரில் வெற்றியடைந்த பிறகு பிரிட்டிஷ் பேரரசு இலண்டன் மாநகரின் தென் கிழக்குப் பகுதியில், பிரிட்டனின் ராயல் ஆர்செனல் எனப்படும் அரசின் ஆயுதத் தொழி லகம் அமைந்துள்ள உல்விச் நகருக்கு, ஏராளமான ராக்கெட்டுகளை எடுத்து வந்தது. அங்கு, தற்போது “பின்னோக்குப் பொறியியல் (reverse engineering)” என்று அழைக்கப்படும் பகுப்பாய்வு முறைக்கு அந்த ராக்கெட்டுகள் உட்படுத்தப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அச்சமயம் பிரிட்டிஷ் படையின் ராக்கெட்டுகள் மேலாண்மைப் பிரிவுக்குப் பொறுப்பாளராக இருந்த வில்லியம் காங்க்ரீவ், “சீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் எதிரிப் படைகளால் வானிலிருந்து வீசப்படும் குண்டுமழை உள்பட வேறு எந்த ஆயுதத்தைக் காட்டிலும், பிரிட்டிஷ் படை அதிக சேதாரத்தைச் சந்தித்தது மைசூரின் நவீன நுட்பங்கள் பொதிந்த ராக்கெட்டுகளால் தான்” என்று கூறியுள்ளார். மைசூர் ராக்கெட்டுகள், கிட்டத்தட்ட அதே போன்ற வடிவிலுள்ள ஐரோப்பிய ராக்கெட்டுகளைக் காட்டி லும் கூடுதலான வலிமையுடையதாகவும், செயல்திறன் மிக்க தாகவும் இருப்பது எவ்வாறு என்பதை ஆழமாக ஆய்ந்தும், அதன் நீட்சியாக பிரிட்டிஷ் படைக்கு மிகவும் வலிமை வாய்ந்த அதிநவீன ராக்கெட்டுகளை வாங்க வேண்டியதுமான அதிமுக்கியப் பணிகள் காங்க்ரீவ் வசம் ஒப்படைக்கப்பட்டன.
காங்க்ரீவ் ராக்கெட்டுகள்
இதைத் தொடர்ந்து மைசூர் ராக்கெட்டுகள் ஏன்/எவ்வாறு உயர்ந்த தரத்தில் உள்ளன என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கும் வண்ணம் மூன்று நூல் களையும், ஒரு சில கட்டுரைகளையும் எழுதி வழங்கி னார் வில்லியம் காங்க்ரீவ். பிரிட்டனில் தயாராகும் ராக்கெட்டுகளின் தரத்தை உயர்த்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் ஆக்கப்பூர்வமான பல ஆலோ சனைகளை அவர் வழங்கினார். அவரது இந்தப் பங்க ளிப்பை அங்கீகரிக்கும் வகையில் பிரிட்டனில் புதிதாக உருவான ராக்கெட்டுகள், “காங்க்ரீவ் ராக்கெட்டுகள்” என்றே அழைக்கப்படலாயின. கடலில், கப்பல் படை தாக்குதல்களில், பீரங்கிகளை விட ராக்கெட்டுகளே பெரிதும் பயன் தரும் என்பதை எடுத்துரைத்த வில்லி யம் காங்க்ரீவ், தரைவழி தாக்குதலிலும், போர்க் களத்தில், ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு விரைவாக இடம்பெயர்வதற்கு ராக்கெட்டு களே சிறந்தது என்பதையும் விளக்கினார். அன்றைய காலச் சூழலில் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்பட்ட ராக்கெட்டுகளைவிட, மைசூரில் தயா ரான ராக்கெட்டுகள் தரம், வலிமை, செயல்திறன் யாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருந்ததாக, அறி வியல் அறிஞர் ரோதம் நரசிம்மாஉறுதிப்படுத்துகிறார்.
பிரிட்டிஷ் படைகள் பிரான்சுக்கு எதிராக, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய இரண்டு இடங்களிலும் காங்க்ரீவ் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளன. நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ போர்க்களத்திலும் காங்க்ரீவ் ராக்கெட்டுகளை டியூக் வெல்லிங்டன் பயன்படுத்தி இருப்பதை, அந்தப் போர் குறித்து வரையப்பட்ட ஓவியங்கள் தெரி விக்கின்றன. அமெரிக்க சுதந்திரப்போரின்போது, 1812-இல் பால்டிமோர் போர்க்களத்திலும் பிரிட்டிஷ் பேரரசு காங்க்ரீவ் ராக்கெட்டுகளை உபயோகப் படுத்தியுள்ளது. இதனால் தான், அமெரிக்காவின் தேசிய கீதத்தில், “செந்நிற ராக்கெட்டுகள் கண்களைக் கூசச் செய்த போதும், குண்டுகளின் ஓசை காற்றைக் கிழித்த போதி லும், நமது கொடி விண்ணிலே உயர்ந்தோங்கிப் பறந்தி டும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இங்கே குறிப்பி டப்படும் ராக்கெட்டுகள் பிரிட்டனின் காங்க்ரீவ் ராக்கெட்டுகளே என்பது யாவரும் அறிந்த ஒன்று. இதைத் தயாரிக்க வேண்டும் என்று பிரிட்டன் முடி வெடுத்ததற்குத் தூண்டுகோலாய் இருந்தது மைசூர் மாவீரன் திப்பு சுல்தான் பயன்படுத்திய அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ராக்கெட்டுகளே.
நிறைவாக, இந்தியாவின் புகழ்பெற்ற ஏவுகணை விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நாசாவின் வாலப் விமான ஏவுதளத்திற்கு வருகை புரிந்தபோது, அங்கு, உலகின் ராக்கெட் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு திப்பு சுல்தான் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்த பதிவு இடம்பெற்றிருப்பதைக் கண்டார். வாலப் ஏவுதள வரவேற்பறையில் உள்ள பிரம்மாண்ட ஓவியத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக திப்பு சுல்தான் புது வகை ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி இருந்தது, அங்கே தத்ரூபமாகக் காட்சியளிக்கிறது. ஆம். உண்மை வரலாற்று நிகழ்வுகள் எப்போ துமே கற்பனைக் கதைகளைவிடவும் மிகவும் சுவா ரஸ்யமானவை. நினைவலைகளில் நீடித்து நிற்பவை.
(நியூஸ் கிளிக் இணைய இதழில் ஏப்ரல் 7,2023-ல் வெளியாகியுள்ள “ Tipu Sultan’s Real History is Better Than the Fake one Being Peddled“ கட்டுரையின் சுருக்கம்)
தமிழ் வடிவம்: கடம்பவன மன்னன்