articles

img

விடுதலையும் பெண்களும் - பிருந்தா காரத்

“இந்த மாபெரும் அலுவலகத்தின் மீது பறக்கவிடப்படும் தேசியக் கொடி பெண்களுக்கு பரிசாக அமைய வேண்டும் என்பது பொருத்தமான முடிவு. நாட்டின் சுதந்திரத்திற்காக நாம் போராடினோம், துன்பங்களை அனுபவித்தோம், பல தியாகங்களை செய்தோம். இனி, சிறந்த இந்தியாவை உருவாக்க பெண்கள் அயராது பாடுபடுவார்கள்”.  - இது 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் அரசியல் நிர்ணய சபையில் முதல் முறையாக தேசியக் கொடியை குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்திடம் ஒப்படைத்த ஹன்சா மேத்தாவின் வார்த்தைகள். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியலமைப்பு சபையில் உள்ள 15 பெண்களில் ஒருவராகவும் இருந்தார், மேலும், ‘பெண்கள் தாங்கள் பெற்ற சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பெரிய குறிக்கோளுக்காக தொடர்ந்து போராடுவார்கள்’ என்றார். முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு, பெண்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கப் பெண்கள், அப்போது ஹன்சா மேத்தா விவரித்த அதே சவால்களை எதிர்கொள்கிறார்கள். பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றுவது சவாலானது. இந்தியப் பெண்கள் இன்று அடைந்து வரும் முன்னேற்றத்தில் சுதந்திரப் போராட்டமும், அரசியலமைப்புச் சட்டமும் பெரும் பங்காற்றியுள்ளன. இருப்பினும், இன்னும் பல தடைகள் உள்ளன.

மதச்சார்பற்ற மதிப்பீடுகள் மீதான தாக்குதல்

பெண்களின் வாழ்க்கையை தீர்மானிப்பது மதம் அல்ல, அரசமைப்புச் சாசனத்தால் என்கிற உணர்வே சுதந்திரப் போராட்டம் பெண்களுக்கு அளித்த மிகப்பெரிய பலம். சமய நூல்கள் சமூகத்தில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகத் தாழ்த்தினாலும், பாலினம் மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கு சமத்துவத்தை அரசமைப்பு உறுதி செய்கிறது. பாகிஸ்தானைப் போல் மதச்சார்பு நாடாக இல்லாததாலும், மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் தான், பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்களை கொண்டு வர முடிந்தது. இருப்பினும், வி.டி. சாவர்க்கர் தலைமையிலான ஒரு பிரிவினர் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருப்பதைப் போல இந்தியாவையும் இந்துத்துவா நாடாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டனர். அவர்களின் வாதம் உண்மையாகி இருந்தால், அரசமைப்பால் அல்ல, மநுநீதியால் பெண்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்படும். பிறப்பின் அடிப்படையில் மக்களைப் பிரித்து, சாதி அமைப்பை இந்து மதத்தின் சாரமாகக் கருதும் ஆண் ஆதிக்க அமைப்பின் உச்சக்கட்டத்தில் நிற்கும் அந்தப் புத்தகத்தில் பெண்கள் மற்றும் தலித்துகளின் இடம் நமக்குத் தெரியும். அன்று மநுநீதியை ஆதரித்த ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை அமைப்பினர் சமூகத்தின் முக்கிய நீரோட்டத்திற்கு வெளியே ஒரு சிறு பிரிவாக இருந்திருந்தனர். ஆனால், அவர்கள் இன்று இந்தியாவை ஆளுகிறார்கள். எனவே, அரசமைப்பு சாசனம் உறுதி செய்த சம நீதி மற்றும் மதச்சார்பின்மை அடிப்படையில் பெண்களின் அனைத்து உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டன என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். இன்று அரசில் அங்கம் வகிப்பவர்கள் திருமணம், பாலுறவு பற்றி முடிவெடுக்கும் தனிநபரின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களையும் குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கின்றனர். இந்திய மதிப்புகளுக்கு எதிரானது என்ற பெயரில் இத்தகைய நகர்வுகள் உள்ளன. ஆணவக் கொலைகள், திருமண வன்கொடுமைகள் போன்றவற்றுக்கு எதிராக சட்டம் இயற்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஒன்றிய அரசு விரும்பாததும் பெண் விடுதலைக்கு சவாலாக உள்ளது.

பெண்களுக்கான நிறுவனம்

காந்திஜி தலைமையிலான காங்கிரஸாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இயக்கமாக இருந்தாலும் சரி, அம்பேத்கர் தலைமையிலான சமூக நீதி இயக்கமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டத்தின் போது பெண்களின் பிரதிநிதித்துவத்தையும், தங்களுக்குச் சொந்தமான சிறப்பு நிறுவனம் என்ற எண்ணத்தை தலைமை பெரிதும் ஆதரித்தது. லட்சக்கணக்கான பெண்கள் துணிச்சலுடன் தடிகளையும் துப்பாக்கிகளையும் நேருக்கு நேராக எதிர்கொண்டனர். மரபுவழி நிலப்பிரபுத்துவ பிணைப்புகளை உடைத்தனர். சிறை சென்றனர். இன்றைய இந்தியச் சமூகத்தில் பல பெண்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், கடந்த காலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கால் பதித்து, உயரங்களைத் தொட்டவர்கள் அதிகம். இருப்பினும், பெண்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்ட மற்றும் கொள்கை மாற்றங்கள், குறிப்பாக ஏழைகளுக்கு பெரும் போராட்டங்கள் மூலமே சாத்தியமாக்கப்பட்டது. அரசாங்கங்கள், சில சமயங்களில் வேண்டா வெறுப்புடன் ஒப்புக்கொள்கின்றன. சில சமயங்களில் முற்றிலும் விரோதமான நிலைப்பாடுகளையும் எடுத்தன. இன்றும் மகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நமது நாடு. 1994இல் பெண் சிசுக்கொலை குற்றமாக்கப்பட்டது. இருப்பினும், ஐநா மக்கள் தொகை நிதியத்தின் 2020 அறிக்கையின்படி, 2011-16 ஆம் ஆண்டில், மகப்பேறுக்கு முற்பட்ட பாலின நிர்ணயம் மூலம் நாட்டில் நான்கு லட்சம் பெண் குழந்தைகள் ‘தவிர்க்கப்பட்டன’. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வரதட்சணை மரணம், ஆசிட் வீச்சுகள் போன்ற பல வழிகளில் பெண்கள், குடும்பத்திலும் சமூகத்திலும் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019இல் 4.12 லட்சமாக உயர்ந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 23.7 சதவீதம் பேர் மட்டுமே தண்டனை பெறுகின்றனர். தலித் மற்றும் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிரான சாதிக் குற்றங்களும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. ஹத்ராஸ் வழக்கு உட்பட வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அளிக்கும் பொது ஆதரவு அத்தகைய குற்றங்களை ஊக்குவிக்கும். சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெண்களுக்கு நாட்டின் முதல் நாடாளுமன்றத்தில் ஐந்து சதவிகித பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைத்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு அது 14 சதவிகிதத்தை எட்டியது. இது உலக சராசரியான 24.6 சதவிகிதமே போதாது என்கிற நிலையிலாகும். பஞ்சாயத்து அளவில் நிலைமை வேறு. யுபிஏ ஆட்சியில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் பெண்கள் கீழ் மட்டத்தில் வெற்றிக் கதைகளை எழுதத் தொடங்கினர். இடதுசாரி ஆட்சியின் போது மேற்கு வங்கத்தில் முதன்முதலில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம், இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் பெண்கள் தலைமையிலான உள்ளாட்சி அமைப்புகள் பல விருதுகளை வென்று நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கின்றன.

புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்கங்கள்

சமூகத்தில் பெண்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை அவர்கள் சம்பாதிக்கும் சக்தியைப் பொறுத்தது. வரலாற்று ரீதியாக, வேலைவாய்ப்பில் பாலின பாகுபாடும் ஒரு முக்கிய காரணியாகும். முந்தைய காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட கார்ப்பரேட் சார்பு புதிய தாராளமயமாக்கல் கொள்கைகளை இன்னும் வலுவாக மோடி அரசு தொடர்கிறது. சமூகத்தில் உருவாகும் அநீதிகள் ஒட்டுமொத்த விளிம்புநிலை சமூகத்தையும் பாதித்தாலும், மிக மோசமான பாதிப்புகளுக்கு ஆளாவது பெண்களே. சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படை சக்திகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் என்றாலும், தலைமைத்துவத்தில் வர்க்க வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன. இந்த வேறுபாடுதான் சுதந்திர இந்தியாவில் நில உடமையாளர்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியது. பொருளாதார சமத்துவம், வேலை வாய்ப்பு உரிமை, சம ஊதியத்திற்கான உரிமை மற்றும் பணிபுரியும் பெண்களின் உரிமைகள் ஆகியவை ஆளும் வர்க்கத்தின் இத்தகைய மேலாதிக்கத்தின் விளைவாக உத்தரவுக் கொள்கைகளுக்குக் கீழே நியாயமற்ற வகைக்கு தள்ளப்பட்டுள்ளன (நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெற முடியாது). அரசியல் நிர்ணய சபையின் ஒரு சில கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமே பொருளாதார உரிமைகளை நியாயமான அடிப்படை உரிமைகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். அப்போது வல்லபாய் படேல் தலைமையிலான துணைக் குழு அதற்கு எதிராக இருந்தது.

புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவாக, இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை மேலும் சரிந்தது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய பாகுபாடாக அது மாறியது. வேலையில்லா திண்டாட்டத்தில் பெண்கள் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண் தொழிலாளர் பங்கேற்பில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் ஒன்றுமாகும். 2019 ஓசிஇடி கணக்கெடுப்பின்படி, நாட்டில் வேலையின்மையில் ஆண்களை விட பெண்கள் 52 சதவிகிதம் முன்னிலையில் உள்ளனர். 2022 ஏப்ரல் நிலவரப்படி, வேலை வாய்ப்புகள் இல்லாததால், கிராமப்புறங்களில் பெண்களின் உழைப்புப் பங்கேற்பு 10 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ஆண்கள் சம்பாதிப்பதில் மூன்றில் ஒரு பங்கையே பெண்கள் சம்பாதிக்கிறார்கள். இன்றைய இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு விருப்பமான கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தீவிர முயற்சிகள் சுதந்திரப் போராட்டத்தின் சாரத்தை குழிதோண்டிப் புதைப்பது மட்டுமின்றி, சுதந்திரத்தையே தகர்க்கும் நிலை உள்ளது. அமைப்பின் ஓட்டைகளை அடைக்கவும், சோசலிசம், சமத்துவம் மற்றும் நீதியை அடையவும் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தின் ஆண்களும் பெண்களும் ஒன்றுபட வேண்டும்.

-தேசாபிமானியிலிருந்து தமிழில்: சி.முருகேசன்
 

;