articles

img

தொழில்துறை நெருக்கடியை சந்தித்ததே பாஜகவின் ஆட்சியில்தான் - கிருத்திகா கோவிந்தராஜூலு

தொழில்துறை பிரச்சனை இன்று, நேற்று இருக்கும் பிரச்சனை இல்லை. அது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. அதனை எதிர்கொண்டே, தொழிலை நடத்தி வருகிறோம். ஆனால், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியில் பெரும் நெருக்கடியை தொழில்துறை சந்தித்து வருகிறது என்பதே உண்மை என குறுசிறு தொழில்கூட்டமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரும், தொழில்முனைவோருமான கிருத்திகா கோவிந்தராஜூலு அவரது ஆதங்கத்தை, ஆவேசத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். தனியார் யூடியூப் வலைத்தளத்தில் வெளிவந்திருக்கும் இவரது பேட்டி, தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டி வாசகர்களின் பார்வைக்காக… 

அண்ணாமலை தொழில்துறையினர் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். தொழில்துறை பிரச்சனை இன்று நேற்று அல்ல. எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. ஆனால், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக என்ன செய்திருக்கிறது என்பதே என் கேள்வி. தேர்தல் காலத்தில் மட்டும் அனைத்து மந்திரிகளும் வருகிறார்கள். கடந்த காலங்களில் எங்களின் எல்லா பிரச்சனைகளையும் இவர்களிடம் சொல்லியிருக்கிறோம். இவர்கள் ஒருபோதும் எங்களின் பிரச்சனை குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. ஒரு எம்பி வெற்றி பெற்று அங்கு போய்தான் இப்பிரச்சனையை பேச வேண்டும் என்பது இல்லை. ஆட்சி பாஜகவினருடையது. அவர்கள் நினைத்திருந்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்திருக்க முடியும். கோவைக்கு வாரி வழங்கியிருக்க முடியும். ஆனால் எதுவுமே பண்ணவில்லை என்பதுதான் நிஜம்.

காது கொடுத்து  கேட்கக் கூட தயாரில்லை...

தொழில்துறையினர் தொடர்ந்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். ஆனால் எங்களின் எந்த கோரிக்கையையும் பாஜக கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, எங்களது கோரிக்கை என்ன என்பதை காது கொடுத்துக்கூட கேட்க பாஜக தயாரில்லை என்பதே உண்மை. அண்ணாமலையிடமே எத்தனை முறை தொழில்துறையினர் நாங்கள் கோரிக்கையை கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் இவர் என்ன செய்திருக்கிறார். குறைந்தபட்சம் ஏதாவது மத்திய மந்திரிகளை சந்தித்து பேசியிருக்கிறாரா. அல்லது அழுத்தம் கொடுத்திருக்கிறாரா என்றால் ஏதுவுமே இல்லை. மனுக்களை பெற்றதைத் தவிர. 

ஜிஎஸ்டி தாக்குதல்

ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என அண்ணாமலை கேட்கிறார். இவர்கள் (பாஜக) மீது எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். சிறிய அளவில் தொழில் நடத்துகிற எங்கள் மீது ஜிஎஸ்டி வரியை விதித்து பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நாங்கள் ஜிஎஸ்டி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அது அவசர கோலத்தில் எந்தவித முன் தயாரிப்பும் இன்றி பெரும் குழப்பத்துடனே நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றுவரையில் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பெரும் நெருக்கடியைத்தான் நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் தொழில்துறை இன்றுவரையில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்கிறது.  சிறிய அளவில் தொழில் நடத்துபவர்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி போதும் என்று சொன்னோம். அவர்கள் கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு இணையான ஜிஎஸ்டி வரியை போட்டு குறுசிறு தொழில்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டோம். அவர் முறைப்படுத்தித்தருகிறோம் என உறுதியளித்தார். அது இன்றுவரையில் நிறைவேறவில்லை. அப்படி என்றால் இவர்கள் மீது தொழில்துறையினருக்கு எப்படி நம்பிக்கை வரும்? 

மேக் இன் இன்டியா,  மேட் இன் இன்டியாவால்  ஒரு பயனும் இல்லை

கோவையில் கடந்த ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக தொழில்துறை தடம் பதித்துள்ளது. கோவையின் அடையாளமாகவே தொழில்துறை மாறியுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மோட்டார், பம்ப், கம்ப்ரசர் உள்ளிட்டவை நாடு முழுவதும் சப்ளையாகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான வரி பங்களிப்பை கோவைதான் கொடுக்கிறது. பாஜகதான் இந்த தொழில்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. 2014ல் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள், அப்போது அவர்கள் மேக் இன் இண்டியா, மேட் இன் இண்டியா என்றார்கள். ஆனால், மேக் இன் இண்டியாவோ, மேட் இன் இண்டியாவே நமது தொழில்துறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேக் இன் இன்டியாவால் இந்தியாவிற்கு எதாவது வருவாய் கூடி உள்ளதா என்றால், ஒன்றுமே இல்லை.  பாஜகவினர் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால்தான் இந்த தொழில்துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.  இவர்கள் (பாஜக) சொல்கிற மேக் இன் இண்டியா, மேட் இன் இண்டியா எதுவுமே யாருக்கும் இங்கு பயனளிக்கவில்லை. இராணுவ உதிரி பாகங்கள் உற்பத்தி மையம் என்று சொன்னார்கள், அது இங்கு யாருக்கும் பயனளிக்கவில்லை. ஒரு வேளை அது கார்ப்ரேட்டுகளுக்குத்தான் பயனளித்திருக்குமோ என்னவோ. எங்களால் ராணுவ உதிரி பாகங்கள் செய்வதற்கான அனுமதியைக்கூட பெற முடியாது என்பதே எதார்த்த உண்மை.  இதுவரையில், கோவையில், எந்த பொதுத்துறை நிறுவனங்களும் வரவே இல்லை. நாம் நம்முடைய சொந்த காலில் நின்றுதான் முன்னேறியிருக்கிறோம். தொழில்துறையில் பெரும் வளர்ச்சியடைந்த இம்மாவட்டத்திற்கு பாஜக பத்தாண்டுகளில் எந்த பொதுத்துறையை இங்கு கொண்டு வந்தது. 

கோச் தொழிற்சாலை  எங்கே போச்சு?

ரயில்வே கோச் தொழிற்சாலை அறிவித்து அதனை உத்தரபிரதேசத்திற்குத்தான் கொண்டு சென்றார்கள். இங்கு கொடுக்கவில்லையே. அவர்களின் எண்ணம் எல்லாமே வடக்கு வாழட்டும் தெற்கு தேயட்டும் என்பதுதான். பாஜகவினர் அனைத்தையும் வடமாநிலங்களுக்குத்தான் செய்வார்கள். தென்னிந்தியாவிற்கு எதுவும் செய்யமாட்டார்கள். ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவிகிதமாக குறையுங்கள் என்றோம். அதனை செய்யவில்லை என்பது மட்டுமல்ல நான் நடத்துகிற இத்தொழிலுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளார்கள். தொழிற்துறையின் அத்தியாவசியத் தேவையை உணராமல் 28 சதவிகித வரியை இவர்கள் விதிப்பார்கள் என்றால், இவர்கள் நம்மையெல்லாம் எங்கே கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இப்போது இவர்கள் அதைச்செய்கிறோம், இதைச்செய்கிறோம் என்று சொல்பவர்கள் ஏன் கடந்த பத்தாண்டுகளாக செய்யவில்லை என்கிற சிந்தனைதான் அனைவருக்கும் வரவேண்டும். இந்த பத்தாண்டுகளில், ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்திருக்கலாம், அதற்கென ஒரு குழு அமைத்து ஒவ்வொரு தொழிலும் எந்த மாதிரியன உற்பத்தியை மேற்கொள்கிறது. அவர்களுக்கு எந்த வகையில் வரி விதிக்கலாம் என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியிருக்கலாம். இதனை எதுவுமே இவர்கள் செய்யவில்லை. ஜவுளித்துறை சார்ந்த பிரச்சனைகள் குறித்தெல்லாம் இவர்கள் கவனமே செலுத்தவில்லை. பங்களாதேஷ் போன்ற சிறிய நாடுகள் எல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது. நாம் பின்தங்கியுள்ளோம் என்பதெல்லாம் வேதனை. மூலப்பொருட்களின் விலை 80 சதவிகிதம்வரையில் உயர்ந்தபோது நாங்கள் எல்லாம் தெருவில் இறங்கிப் போராடிய போது, இப்போது வாய்ப்பு கொடுங்கள் என்கிற அண்ணாமலை அன்று எங்கு சென்று இருந்தார்? 

விருப்பம் இல்லாதவர் ஏன் போட்டியிட வேண்டும்?

கரூரை சேர்ந்தவர் இங்கு போட்டியிடுவது நமக்கு பலனளிக்குமா என்றால், அது நிச்சயம் பலனளிக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதி நம்மூரை சேர்ந்தவர் என்றால், அது உணர்வுப் பூர்வமான ஒட்டுதல் இருக்கும். இவர்கள் வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் என சமூக வலைத்தளங்களில் தங்களைத்தாங்களே பெரிய ஆள் போன்று கட்டமைத்துக்கொண்டு இருப்பது, எந்த வகையிலும் மக்களின் உணர்வோடு கலக்காது என்பதே உண்மை. எங்களின் நியாயமான கோரிக்கையை எடுத்துப்பேசி, அவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றாலும் புரிந்து கொள்கிற தன்மையில் பேசி அதனை நிறைவேற்றுகிற எம்பி.,தான் இங்குதேவை. அப்படி எதுவும் பாஜகவினர் செய்யவில்லை. இவர்களின் அரசியல் வாழ்க்கைக்கு எங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது. எனக்கு இங்கு போட்டியிட விருப்பமில்லை, மோடி சொன்னதால் போட்டியிடுகிறேன் என அண்ணாமலை சொல்கிறார். விருப்பம் இல்லாதவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று என்ன பயன் கிடைக்கப் போகிறது? எந்த நம்பிக்கையில் இவர்களை நாங்கள் ஆதரிப்பது. அதற்கு போட்டியிடாமலேயே இருந்திருக்கலாமே, அவநம்பிக்கையைத்தான் இவர்களின் பேச்சு ஏற்படுத்துகிறது.
 

;