ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப் பின் 4 வது அகில இந்திய மாநாடு நாமக்கல்லில் செப்டம்பர் 19 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 21 (இன்று) பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொள் ளும் பேரணியும் பொதுக்கூட்டமும் நாமக்கல் நகரில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மலை வாழ் மக்கள், ஆண்டாண்டு காலமாக பெருந்தனக் காரர்கள், கந்து வட்டிக்காரர்கள், வனத்துறை அதி காரிகள் உள்ளிட்டவர்களிடம் சிக்கித் தவியாய் தவித்து வந்தனர். அன்று கொல்லிமலைக்கு பேருந்து போக்குவரத்து வசதி கிடையாது. காடுகள் வழியாகத்தான் செல்ல வேண்டும். மண்ணெண் ணெய், உப்பு, புளி, மிளகாய், துணிகள் வாங்க அந்த மக்கள் வாரம் ஒரு முறை மலைக்கு கீழே உள்ள கிராமங்களில் கூடும் வாரச் சந்தைக்குத் தான் வரவேண்டும். வனத்துறையினர் மலைவாழ் மக்கள் சாகுபடி செய்யும் நிலங்களை அழிப்பார்கள்; அங்கே செடி நடுவார்கள், ஆடு மாடுகளை காட்டுக்குள் மேய்ப்பதாக கூறி பட்டியில் அடைப்பார்கள்; மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அலைக்கழித்து சித்ரவதை செய்வார்கள்.
கந்து வட்டிக்காரர்களோ வெற்றுத்தாளில் ரேகை வாங்கிக் கொண்டு தொகையை அவர்கள் இஷ்டம் போல் பூர்த்தி செய்து, வட்டி வசூலித்துக் கொண்டே இருப்பார்கள். விவசாய வேலைக்கு, திரு மணத்திற்கு பணம் வாங்குவதற்காக மலைவாழ் மக்கள் இந்த கந்துவட்டிக்காரர்களிடம் சரணடைய வேண்டும். அந்த மக்கள் விளைவிக்கும் வாழை, எலுமிச்சை, நார்த்தங்காய், கொய்யா, அன்னாசி, காபி, ஏலக்காய், கொத்தமல்லி மற்றும் மொச்சை போன்றவற்றை கந்து வட்டிக்காரர் களுக்கு மிகக் குறைந்த விலையில் கொடுத்து கடனை அடைக்க வேண்டும். இந்த கந்து வட்டிக்காரர்களையும் மீறி மலைவாழ் மக்கள் முள்ளுகுறிச்சி, சேந்தமங்க லம், காளப்பநாயக்கன்பட்டி, பழையபாளையம் போன்ற ஊர்களில் நடக்கும் சந்தைகளில் தங்கள் விளைபொருட்களை விற்க முயன்றால் கந்து வட்டிக்காரர்களின் அடியாட்கள் அவர்களைத் தாக்கி பொருட்களைப் பறித்துச் செல்வார்கள். மேலும் கந்து வட்டிக்காரர்கள் மலைக்குச் சென்று பத்து பதினைந்து நாட்கள் தங்கி காப்பி, ஏலம், கொத்தமல்லி, மொச்சை போன்றவற்றை மிரட்டி வசூலிப்பார்கள். அவர்கள் அங்கே தங்கி இருக்கும் நாட்களில் அவர்களுக்கு தினமும் கோழி இறைச்சி யுடன் உணவு அளிக்க வேண்டும். மலைவாழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கு வார்கள். இதுதான் அன்றைய கொல்லிமலை நிலைமை.
முதன் முதலில் பிரச்சனை எழுப்பிய கம்யூனிஸ்டுகள்
இந்தப் பின்னணியில் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது அதில் கொல்லிமலை உள்ளிட்ட நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.வி. ராமசாமிக்கு ஆதரவு திரட்ட கொல்லிமலைக்குச் சென்ற பழைய பாளையம் ராஜா, இளங்கோ, சுப்பு போன்ற கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் கொல்லிமலை மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை கண்டும், கேட்டும் வந்தனர். தேர்தலில் கே.வி.ராம சாமி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக செயல்படத் துவங்கிய பின் கொல்லிமலை மலை வாழ் மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன் வைத்தார். 1954 ஆம் ஆண்டு கொல்லிமலையில் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டு கொல்லிமலைக்கு பாதை வசதி வேண்டும்; கொல்லி மலையிலேயே வாரச் சந்தைகள் அமைக்கப்பட வேண்டும்; கந்துவட்டிக் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்; வனத்துறையினர்களின் அத்துமீறிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வெற்றி கண்டார்கள். தற்போது சோளக்காடு, தெம்பலம், மணப்பாறை, ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வாரச் சந்தை கள் செயல்பட்டு வருகின்றன. கந்து வட்டிக்காரர் களுக்கு எதிரான தீரம்மிகுந்த போராட்டங்களை நேருக்கு நேர் நின்று நடத்தி அவர்களின் அட்டூழி யங்களை அடக்கினார்கள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் மலைவாழ் மக்கள்.
முதல் கூலி உயர்வுப் போராட்டம்
இதே காலத்தில் கொல்லிமலையில் கம்யூ னிஸ்டுகள் தலைமையில் முதல் கூலி உயர்வுப் போராட்டம் நடைபெற்றது; மழையிலிருந்து சந்தன மரங்களை வெட்டி தரைக்கு கொண்டு வர வேண்டும்; அதற்கு மரம் வெட்ட ஒரு ஊருக்கு 25 ரூபாய் தான் கூலியாக கொடுப்பார்கள்; வெட்டிய மரத்தை தலைச் சுமையாக தரைப் பகுதிக்கு கொண்டு வருபவருக்கு 50 பைசா தான் கூலி யாக தரப்படும். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மகத்தான தலைவர் பி.எஸ்.கந்தசாமியின் தலை மையில், கூலி உயர்வு கோரி முதன்முறையாக மக்கள் கொல்லிமலையில் திரட்டப்பட்டனர். சுமார் 7 மாத காலம் மரம் வெட்டப்படவில்லை. வனத்துறை யினரின் மிரட்டல் சாகசங்கள் எதுவும் எடுபட வில்லை. இறுதியில் வனத்துறையினர் பணிந்த னர். 25 ரூபாய்க்கு பதிலாக மரம் வெட்ட ஊருக்கு 300 ரூபாய் தரவும் தலைச் சுமை கூலியாக 50 பைசாவிற்கு பதில் 2 ரூபாய் 50 பைசா தரவும் வனத்துறை அதிகாரிகள் சம்மதித்தனர்.
நிலங்களைக் காத்த கம்யூனிஸ்ட்டுகள்
மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களில் வனத்துறையினர் பயிர்களை அழித்து மரக்கன்று களை நடுவதை எதிர்த்துப் போராடி பல்லாயிரக் கணக்கான மக்களின் விவசாய நிலங்களை பாது காத்துக் கொடுத்தார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அத்த கைய போராட்டங்களில் வனத்துறை போட்ட எண்ணற்ற பொய் வழக்குகள், சிறைக் கொடு மைகள், தாக்குதல்களை நெஞ்சுரத்தோடு எதிர்த்து வெற்றி கண்டார்கள். இத்தகைய போராட்டங்களில் செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் டி.கே. தம்பி, பி.எஸ்.கந்தசாமி, எஸ்.டி.துரைசாமி, கே.எஸ். சீரங்கன், எஸ். சின்னமுத்து, எஸ்.வி. சால முத்து, வி.கே.ராஜு, வி.கே.வெள்ளைச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கி கொல்லி மலையின் வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டார்கள். கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய தலைவராக எஸ்.டி துரைசாமி மற்றும் வாழவந்தி நாடு ஊராட்சி மன்ற தலைவர்களாக டி.கே. தம்பி, வி.கே.ராஜு உள்ளிட்டவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். தமிழகத்தில் மலைவாழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் 1992 ஆம் ஆண்டு, போராட்ட வரலாறு படைத்த கொல்லிமலையில் துவக்கப்பட்டு தமிழக மலைவாழ் மக்களின் பாது காவலனாக செயல்பட்டு எண்ணற்ற போராட்ட வரலாறுகளை படைத்து வருகிறது. இத்தகைய உத்வேகத்தோடு, செப்டம்பர் 21 (இன்று) மோடி அரசின் ஆதிவாசி மக்களுக்கு எதிரான கொடும் சட்டங்களை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்திடும் நாமக்கல் பேரணிக்கு கொல்லிமலை செங்கொடி இயக்க போராளிகளின் வாரிசுகள் நாங்கள் வரவேற்கிறோம்.