எங்கள் ஆசான் நல்லவர்
ஏற்ற அறிவில் வல்லவர்!
எங்கும் ஒழுக்கம் காணுவார்
எங்கள் ஒழுக்கம் பேணுவார்!
வாழும் நெறியைச் சொல்லுவார்
வாழ்க்கை அதனை வெல்லுவார்
வாழ்வில் தாழ்வில் தாங்குவார்
வையம் தன்னில் ஓங்குவார்!
கலைகள் பலப்பல கற்றவர்
காட்சியில் எங்களுக் குயர்ந்தவர்!
விலையாய் வெற்றி தருபவர்
விருந்தாய் ஏற்றே மகிழ்பவர்!
அறிவியல் அறிவை ஊட்டுவார்
அறியா நோயை ஓட்டுவார்!
செறிவுடன் வரலாறு காட்டுவார்
சேர்த்தே தமிழ்ச்சுவை ஊட்டுவார்!
பெண்ணைக் கண்ணாய்ப் போற்றுவார்
பெண்கள் கல்வியை ஏற்றுவார்!
கண்ணாய்க் கற்பதைப் போற்றுவார்
கலந்தே ஒழுக்கம் ஏற்றுவார்!
சாதி மதத்தைக் காணார்
சாக்கடை புத்தியைப் பேணார்!
தீதில் மாணவர் காண்பார்
தினமும் நலம்சேர் மாண்பார் !
அறிவுக் கண்ணைத் திறப்பார்
ஆற்றல் பலவும் நிறைப்பார்!
செறிந்த பண்பின் உருவம்
சிறந்த எங்கள் தெய்வம்!