பரிபூரண சுதந்திரம் முன்மொழிந்தது கம்யூனிஸ்டுகளே! 1921இல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் அ.இ.மாநாட்டில், மௌலானா ஹஜ்ரத் மொகானி என்ற காங்கிரஸ் இடதுசாரித் தலைவர் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையால் தயாரித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. அந்த அறிக்கை பரிபூரண சுதந்திரத்தை வலியுறுத்தியது. அந்த அறிக்கையில் தோழர் எம்.என்.ராய் மற்றும் அபானி முகர்ஜி இருவரும் கையெழுத்திட்டிருந்தனர். அந்த அறிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது கண்டு பிரிட்டிஷார் மிகுந்த அதிர்ச்சியுற்றனர். எச்சரிக்கையாயினர். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 1922இல் கயாவில் நடந்த அ.இ.காங்கிரஸ் மாநாட்டிலும் அதே பரிபூரண சுதந்திரக் கோரிக்கையை சென்னைத் தோழர் ம.சிங்காரவேலர் வலியுறுத்தினார். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு, பங்கேற்பு பற்றிய ஆதாரப்பூர்வமான சாட்சி யங்கள் இவை. யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள்! எனவே, நூற்றாண்டுகள் கால ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து இந்தியா அரசியல் விடுதலை பெறுவதை நாடெங்கிலும் கொண்டாட வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. அதன்படி மதுரையில் நடைபெறும் சுதந்திர விழாவில் தோழர் பி.ராமமூர்த்தி பங்கேற்க வேண்டும். மதுரை தமுக்கம் மைதானத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடு. தோழர் ராமமூர்த்தி வந்தார் பக்கத்துப் பள்ளி மாணவச் சிறுவன் நானும் விழாவை வேடிக்கைப் பார்க்கச் சென்றிருந்தேன். தமுக்கத்தின் கிழக்குக் கடைசியில் யூனியன் ஜாக் கொடி. மேற்கில் பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் வைத்தியநாத அய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன், காமராஜர் முதலானவர்கள் வீற்றிருந்தனர். அரசு விழா அது. அன்றைய ஜில்லாக் கலெக்டர் ராமகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு காரில் வந்து இறங்கினார். சில தோழர்கள் அவரை மேடைக்கு அழைத்து வந்தனர். தோழர் ராமமூர்த்தி வருகிறார் என்ற செய்தி பரவியதும் ஒரே பரபரப்பு! தோழர் ராமமூர்த்தி சாய்ந்து சாய்ந்து நடந்து வருவதைக் கண்ட காங்கிரஸ்காரர்கள் நொண்டி ராமமூர்த்தி ஒழிக என்று கோஷம் போட ஆர்ப்பரித்தனர். அவ்வளவுதான்! விசில்கள் பறந்தன. சீட்டி ஒலி கேட்டதும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தோழர்கள் சிம்மம் போல் சிலிர்த்து ராமமூர்த்தியை நோக்கி ஓடிவந்து அவரை அரவணைத்து அழைத்துச் சென்றனர். தோழர்களின் ஆவேச அணிவகுப்பை கண்ட காங்கிரஸ்காரர்கள் ஓடி ஒளிந்து ஒதுங்கிக் கொண்டனர். தோழர் ராமமூர்த்தியை காரில் ஏற்றி அனுப்பும்போது அவர்கள் எழுப்பிய ‘செங்கொடிக்கு ஜே’ கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் 15 வயது சிறுவனான என் மனதில் பசுமரத்தாணி போல ஆழமாகப் பதிந்துவிட்டது. யார் அந்த மாரி, மணவாளன்? தோழர் ராமமூர்த்தியின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்று அதை வெற்றிகரமாக நிறைவேற்றிய தோழர்கள் மாரி, மணவாளன் முதலான தோழர்கள் என்று பின்னர் தெரிய வந்தபோது கம்யூனிஸ்டுகளின் கம்பீரமும் செய்நேர்த்தியும் என்னை வெகுவாகவே ஈர்த்தது! இரண்டாண்டுகள் கடந்தன.
1949 நவம்பர் 19 அதிகாலை. என்றும் போல அன்று விடியவில்லை. அக்காலத்தில் மதுரை நரிமேட்டிற்கும் பீபி குளத்திற்கும் இடையே வயற்காடுகள் அதிகம். ஒன்பது பனை கிரவுண்டு எனப்பட்ட ஒரு வயலில் சிறுவர்கள் பந்து விளையாடுவது வழக்கம். அன்று நானும் வழக்கம்போல் பந்து விளையாடச் சென்றேன். அன்று பந்து விளையாட்டு இல்லை. ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக பீபிகுளம் நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது கம்யூனிஸ்ட் தலைவர்கள் இரண்டு பேரை போலீஸ் சுட்டுக் கொன்றுவிட்டது. அதை பார்ப்பதற்காகவே போகிறார்கள் என்றனர். நானும் ஓடினேன். ஆயிரக்கணக்கானவர்கள் பீபிகுளம் கண்மாய் கரை மேட்டில் கீழ் நோக்கி பார்த்தவாறு நின்றிருந்தனர். மாரி, மணவாளன் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணங்களாக கிடந்தனர். எல்லோருடைய வாய்களிலும் சிறுசிறு முணுமுணுப்பு. மயான மௌனம். மறுநாள் காலை எஸ்.பி.ஆதித்தனை ஆசிரியராகக் கொண்ட தந்தி நாளிதழில் (இன்று தினத்தந்தி) முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் “கம்யூனிஸ்ட் செம்பிடாரிகள் சுட்டுக் கொலை” என்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மதுரையையே குலுக்கி எடுத்தது. காவல்துறையால் வீழ்த்தப்பட்ட அந்த மகத்தான கம்யூனிஸ்ட் தியாகிகளின் வரலாற்றை முழுமையாக பின்னர் தெரிந்துகொண்டேன். அது ஒரு கம்பீரமான, வீரமிக்க வரலாறு. மணவாளன் என்ற கலைஞன் தேவர்பிரான் பிள்ளை - தேவரம்மாள் என்ற மதுரையில் வாழ்ந்த தம்பதிக்குப் பிறந்தவர்தான் மணவாளன். இவருடைய தந்தை, சித்தப்பா, மாமா ஆகியோர் தேச பக்தர்கள். இந்த பின்புலம்தான் மணவாளனைப் பொது வாழ்க்கைக்குத் திருப்பியது. உயர்நிலைப்பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டு தனியாக இந்தி மொழியைக் கற்று, இந்தி ஆசிரியராகப் பணி யாற்றினார். மாணவர்களுக்கு இந்திப் பாடம் நடத்துகின்ற போதும், வெள்ளையர் கொடுமை பற்றியும், தேச விடுதலை பற்றியும் மணவாளன் சொல்லிக் கொடுத்தார். இதை அறிந்த வெள்ளையர் அரசு மணவாளன் மீது வழக்குத் தொடுத்தது, காலப் போக்கில் மணவாளன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
தமிழ், இந்தி, சௌராஷ்டிரா, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த மணவாளன், இயக்கப் பிரசுரங்களை விற்பது, கட்சிக்காக நிதி வசூலிப்பது, பஞ்ச நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்களில் தாம் எழுதிய பாடல்களைப் பாடுவது என பன்முனைப் பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டார். இந்தப் பின்புலம்தான் அவரை கட்சியின் மதுரை நகரக்குழு உறுப்பினராக்கியது. ‘புதுமைக் கலா மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி, வங்க எழுத்தாளர் ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய எழுதிய ஒரு நாடகத்தை `சிறைக் காவலன் தீபம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்து மணவாளன் அரங்கேற்றினார், இயக்கச் செயல்களில் கொள்கை மறவனாக வளர்ந்த மணவாளன், மகத்தான கலைஞனாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மணவாளனின் இயக்கப் பணிகள் அவருக்கு கட்சியின் மதுரை நகரச் செயலாளர் பொறுப்பைத் தேடித்தந்தது. மணவாளன் எழுதிய “விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே!” என்ற பாடலை அந்தக் காலத்தில் முணுமுணுக்காத தோழர்களே இல்லை. மாவீரன் மாரி சிறு வயதிலேயே தாயை இழந்த மாரி, ஒரு முஸ்லிம் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின் ஒற்றை மாட்டுவண்டி ஓட்டுகின்ற பணி கிடைத்தது. இதன்பின் பாலகிருஷ்ணா வீவிங் மில், ஹார்வி மில், கோதண்டராம் மில் ஆகியவற்றில் மாரி பணியாற்றினார். இங்குதான் தொழிலாளி வர்க்கச் சிந்தனை மாரிக்கு அரும்பியது. இந்தச் சிந்தனை அவரை கம்யூனிஸ்டாக்கியது. சமத்துவ வாலிபர் சங்கத்தில் பறந்து கொண்டிருந்த செங்கொடியை காங்கிரஸ் ரவுடிகள் அறுக்க முயன்ற போதும், நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த தோழர் பி.ராமமூர்த்தியை நாயுடு சங்க ரவுடிகள் கொலை செய்ய முயன்றபோதும், கம்யூனிஸ்ட்டுக் கட்சி அலுவலகத்தை காங்கிரஸ்காரர்கள் தகர்க்க வந்தபோதும் அந்த ரவுடிக் கும்பலை விரட்டியடித்த சிறப்பு மாரிக்கு உண்டு. இதன் பொருட்டு அவர் பதினெட்டு மாதங்கள் சிறையில் வாழ நேர்ந்தது. மதுரை தெப்பக்குளம் அருகே ஒருநாள் தில்லைவனம், பி.கருப்பையா ஆகியோருடன் மாரியும் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு போலீஸ் லாரி விரைந்து வந்து அவர்களை மடக்கியது.
இந்தச் சூழலில் நாட்டு வெடி குண்டை மாரி வீசினார். இதைக் கண்டு போலீசார் திகைத்து விட்டனர். அதைப் பயன்படுத்தி தோழர்களுடன் மாரியும் தப்பிச் சென்றார். மாரியின் இதுபோன்ற தீரச் செயல்களைக் கண்டு எதிரி வர்க்கமும் காவல்துறையும் கதி கலங்கியது! தமிழ், உருது, சௌராஷ்டிரா ஆகிய மூன்று மொழிகளில் பேசவும் எழுதவும் கற்றிருந்த மாரி, இயக்கப் பணிகளில் அஞ்சாநெஞ்சனாக ஆர்ப்பரித்தார். கம்யூனிஸ்ட்டு கட்சியைத் தடை செய்த காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்ட்டுகளை நரவேட்டையாடிய காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்ட்டுகள் வாழும் பகுதிகளில் நடக்கின்ற சமூகக் கேடான செயல்களிலும் கம்யூனிஸ்ட்டுகளை சம்பந்தப்படுத்தி மக்களிடத்தில் அசிங்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. 1949ல் மதுரை நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளையில் மணவாளனையும் 19 தோழர்களையும் இணைத்து போலீசார் வழக்குத் தொடுத்தனர். இதன் பொருட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தோழர்களை காவல்துறை தேடி வந்தது. 1949 நவம்பர் 19 இரவு.. மதுரை நரிமேட்டில் ஒரு வீட்டில் மணவாளன் தலைமறைவாக இருந்தார். இயக்கப் பணிகளைப் பற்றிப் பேசுவதற்காகவும், போஸ்டர் ஒட்டுவதற்காகவும், மாரி, தில்லைவனம், பி.கருப்பையா, கோவிந்தன், முத்துப்பிள்ளை, முத்தையா ஆகியோரும் அந்த வீட்டில் கூடினர். வேலைப் பிரிவினை முடிந்ததும் மணவாளன், ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே!’ என்ற பாடலை மெல்லிய குரலில் பாட, அங்கிருந்த அனைத்துத் தோழர்களும் அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வேளையில் 500 போலீசார் அந்த வீட்டைச்சூழ்ந்தனர். துப்பாக்கிக் கட்டையால் கதவைத் தட்டினர்.
கதவு திறக்கப்பட்டதும் போலீசார் உள்ளே புகுந்தனர். அனைவர் கைகளையும் துண்டுகளால் பின்னுக்கு இழுத்துக் கட்டி, துப்பாக்கிக் கட்டை களால் அடித்தனர். போலீசுக்கு இந்த இடத்தை காட்டிக் கொடுத்த துரோகி, மணவாளனை அடையாளம் காட்ட, சிஐடி இன்ஸ்பெக்டர் அனந்தராமன், துப்பாக்கியால் மணவாளன் நெஞ்சின் இடதுபுறத்தைக் குறிவைத்துச் சுட, மணவாளன் `இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழங்கியபடியே மண்ணில் சரிந்தார். அடுத்ததாக மாரியைத் துரோகி அடையாளம் காட்ட, சப் - இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் மாரியின் நெஞ்சில் குறிவைத்துச் சுட அவரும் `இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று முழங்கியபடியே உயிர் விடுத்தார். இந்த நிகழ்வு நடந்த போது மாரிக்குத் திருமணமே ஆகவில்லை. மணவாளனுக்கு வயது 27 தான். மாரியையும் மணவாளனையும் தனித்தனி மனிதர்களாக எண்ணிப் பார்க்க விரும்பாமல் காவல் நாய்கள் ஒரே நேரத்தில் ஒரே வடிவத்தில் இருவரையும் கொலை செய்தனர். அதனால்தான் `மாரி மணவாளன்’ என்று இருவரும் இணைத்தே உச்சரிக்கப்படுகின்றனர்.