articles

img

லெனினும் சாவர்க்கரும்! - சுப.வீரபாண்டியன்

அண்மையில் சாவர்க்கரின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கூட்டம் ஒன்றில், தமிழ்நாடு பாஜகவின் தலைவர்களில் ஒருவரான பேரா சிரியர் இராம. சீனிவாசன், அதிர்ச்சி தரத்தக்க வரலாற்று திரிபுகள் சிலவற்றைத் தந்துள் ளார். எதிர்க் கொள்கையுடைய இயக்கத் தில் இருப்பவர் என்றாலும், அவருடைய உரைகளையும் சில நேரங்களில் நான் மதித்துக் கேட்டிருக்கிறேன். அந்த மதிப்பை யும் நம்பிக்கையையும் முற்றிலுமாகக் குலைத்து விடும் வகையில், அந்தக் கூட்டத் தில் அவர் பேசியுள்ளார்!  எனவே அது குறித்துச் சில செய்திகளை உடனடியாகப் பதிவிட வேண்டும் என்று கருதினேன்.  அந்த உரையில், அவர்  லெனின், பெரி யார், பாரதியார் ஆகியோர் குறித்துச் சில  செய்திகளை வெளியிட்டுள்ளார். மூன்று செய்திகளுமே வரலாற்றுப் பிழையானவை. அவை ஒரு புறம் இருக்க, லெனின் குறித்து அவர் பேசியுள்ள செய்தி மிகப்பெரிய வரா ற்று திரிபாக உள்ளது!    அவர் உரையின் சாரம் இதுதான் - “ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றுக் கொண்டி ருந்த நேரத்தில், லெனின் தலைமறைவாக லண்டனில்  இருந்தபோது, அப்போது அங்கு இருந்த சாவர்க்கர், தான்  தங்கி இருந்த இந்தியா ஹவுஸ் என்னும் இடத்தில் லெனினைத் தங்க வைத்துச் சில மாதங்கள் அவரைக் காப்பாற்றினார். லெனின் கொள் கைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என் றாலும், அவரைக் காப்பாற்றியவர் சாவர்க்கர் தான். எனவே இன்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடும் லெனின் தலை மறைவுக் காலத்தில் அவரைக் காப்பாற்றிக் கொடுத்த வர் சாவர்க்கர். இருவரும் பிறகு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்”.

இந்த உரைக்கு எந்தச் சான்றையும் சீனிவாசன் தன் பேச்சில் எடுத்துக்காட்ட வில்லை. அவர்கள் எந்த ஆண்டு சந்தித்த னர் என்பது போன்ற தகவலும் இல்லை. இதற்கான முதல் ஆதாரம் (first hand information)  எங்கே இருக்கிறது என்பதை யும் அவர் கூறவில்லை.  போகிற போக்கில், பேசிவிட்டுப் போனதோடு சரி!   அரசியல் மேடைகள் என்றால், ஒருவரை ஒருவர் வசைபாடிக் கொள்வதுதான் என் னும் மனநிலை மக்களிடம் உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம். அப்படியில்லை. அறி வார்ந்த விவாதங்களைக் கொண்டவையா கவே அரசியல் மேடைகளும், எழுத்துகளும் இருக்க வேண்டும் என்ற நோக்கில், இங்கே சில சான்றுகளை நான் தர விரும்புகிறேன்!    சாவர்க்கர் லண்டனில் இருந்தது, 1906 ஆம் ஆண்டு முதல் 1909 ஆம் ஆண்டு வரை யில்! பிறகு சோவியத் புரட்சி நடக்கும்போது சாவர்க்கர் அந்தமான் சிறையில்இருந்தார்.  எனவே சாவர்க்கரும், லெனினும் லண்டனில் சந்தித்து இருந்தால், அது இந்தக் காலகட்டத் திற்குள்தான் இருந்தாக வேண்டும்!  சாவர்க்கர் லண்டனில் இந்தியா ஹவுஸில் தங்கி இருந்தார் என்பதும், மேற் கண்ட 3 ஆண்டுகளில் இரண்டு முறை லெனின் லண்டனுக்குச் சென்றுள்ளார் என்பதும் உண்மை. ஆனால் அந்த இரண்டு முறையும் லெனின் எதற்காகச் சென்றார், எங்கே தங்கி இருந்தார் என்பன போன்ற குறிப்புகள் லெனின் வரலாற்றில் மிகத் தெளிவாக இடம்பெற்றிருக்கின்றன. 

இந்த இரண்டு பயணங்களில், ஒருமுறை கூட அவர் மாதக்கணக்கில் லண்டனில் தங்க வில்லை. தலைமறைவாகவும் அப்போது இல்லை. தன் வாழ்நாளில் மூன்றாவது முறை யாக லெனின் 1907 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி லண்டனுக்குச் செல்கிறார். ஜூன் ஒன்று வரையில் அங்கு தங்கி இருக்கிறார். அவர்  அப்போது சென்றதற்கான நோக்கம் அங்கு நடைபெற்ற ஐந்தாவது கட்சி மாநாட்டில் (5th Party Congress of RSDLP) கலந்து கொள்வ தற்காகவே! அதுவும் அவர் தனியாகச் செல்ல வில்லை. பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த 366 தோழர்களில் ஒருவராகவே அவரும் அங்கு சென்று இருந்தார்.  இங்கிலாந்து அரசின் அனுமதியோடு தான் அம்மாநாடு அப்போது நடைபெற்றது என்பதால், அவர் தலைமறைவாக இருக்க வேண்டிய தேவையே அன்று எழவில்லை!  நான்காவது முறையாக லெனின் லண்ட னுக்குச் சென்றது 1908 ஆம் ஆண்டு. மே  16ஆம் நாள் அங்கு சென்றவர், ஜூன் 10ஆம் தேதி வரை அங்கே தங்கியிருந்தார்!   இந்த முறை அவர் எங்கே தங்கி  இருந்தார் என்பதை லெனின் குறிப்பிட்டு இருக்கிறார். 21, Tavistock place near regent square என்னும் இடத்தில் வாட கைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கி இருந்த தாகவும், மிகப் பெரும்பான்மையான நேரத் தைப் பிரிட்டிஷ் நூலகத்தில் செலவிட்டதாக வும், அந்த நோக்கத்திற்காகவேதான் அங்கு சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். 

எனவே எந்த ஒரு இடத்திலும் லண்டனில் சாவர்க்கரை லெனின் சந்தித்ததாக எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை! லெனினோ, சோவியத் வெளியிட்டுள்ள அவருடைய வாழ்க்கை வரலாற்று  நூல்களோ இதனை எங்கும் குறிப்பிடவில்லை என்பது மட்டு மின்றி, சாவர்க்கரும் சித்திரகுப்தன் என்னும் பெயரில் தான் எழுதி இருக்கும் தன் வரலாற்று நூலிலும் எந்த இடத்திலும் இப்படிப் பதிவு செய்யவில்லை.   இருப்பினும் இது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், லெனின் வாழ்க்கை வரலாற்றைப் பல நூல்களைப் படித்துத் தொகுத்து எழுதியிருக்கும் பேராசிரி யர் அருணன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி ஒரு செய்தி எந்த இடத்தி லும் இல்லை என்று அவர் கூறினார்!   பிறகு பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களையே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கே இதற்கான சான்று இருக்கி றது என்று கேட்டேன். அவர்களது கட்சியின் மஸ்தூர் யூனியன் தலைவர்களில் ஒருவரான தெங்கிடி எழுதியுள்ள “கம்யூனிச  உரை கல்லில் கம்யூனிசம்” என்னும் சிறு நூலில் இருப்பதாகக் கூறினார். அது எப்படி முதல் ஆதாரம் ஆகும் என்று கேட்டேன். அதற்கு அவரிடம் இருந்து விடை இல்லை.    தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியுள்ள கருத்தும் பிழையான தாக இருக்கிறதே, அதற்காவது சான்று இருக்கிறதா என்று கேட்டேன். அதனைத் தான் நெல்லை கண்ணன் அவர்கள் மேடை யில்  பேசும்போது கேட்டதாகக் கூறினார்.  சரி, இதற்கெல்லாம் விடை சொல்ல நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று நண்பர்கள் சிலர் கேட்கக்கூடும். எந்த விடை யும் சொல்லாமல் இருந்தால், அடுத்த ஆண்டு பாடப் புத்தகத்திலேயே இதனைச்சேர்த்து விடுவார்கள் என்கிற அச்சம்தான் காரணம்!

கட்டுரையாளர் : பொதுச்செயலாளர், 
திராவிட இயக்கத் தமிழர் பேரவை

;