articles

img

மகளிர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது அநீதி

மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சோனியா காந்தி மசோதா மீதான விவாதத்தைத் துவங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், நன்றி தெரிவிப்பதற்கும் இது பொருத்தமான தருணமாகும் உள்ளாட்சி  அமைப்புக்களில் பெண்கள் பங்கேற்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தவர் எனது கணவர் ராஜீவ் காந்தி. ஆனால் அது 7 வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றியது. இதன் விளைவாக நாடு முழுவதும் 15 லட்சம் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள் இருக்கின்றனர். ராஜீவ் காந்தியின் கனவில் பாதிதான் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலமாக அது முழுமையாக நிறைவேறும். எனினும் இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தாமதம் செய்வது இந்திய பெண்களுக்கு இழைக்கப்படும் மோசமான அநீதியாகும். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.

33 சதவிகிதத்திற்கு குறைவாகவா பெண்கள் உள்ளனர்?

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசுவது அவமானம் என திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டார். இந்த அரசாங்கம் பசுக்களைப் பாதுகாக்க விரும்பியபோது, ​​பசுக்களின் கணக்கெடுப்புக்குக் காத்திருக்கவில்லை, ஆனால், பசுக் கூடங்களைக் கட்டத்  தொடங்கி விட்டது. ஆனால், 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு கணக்கெடுப்பு வேண்டும் என்கிறது. 33 சதவிகிதத்திற்கு குறைவாகவா பெண்கள் இருக்கின்றனர்? எதற்காக கணக்கெடுப்பு?உண்மையில் மகளிர் இடஒதுக்கீடு மறுசீரமைப்பு மசோதா என்று இந்த மசோதாவின் பெயரை மாற்ற வேண்டும். ஏனெனில், இது இப்போதைக்கு மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக இல்லை. நீண்டகாலம் எடுக்கும் தொடர் நடவடிக்கையாக இது இருக்கிறது என்றும் மொய்த்ரா சாடினார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?

இந்த மசோதாவை கொண்டு வருவதன் பின்னணியில் அரசாங்கத்தின் நோக்கம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அல்ல, மாறாக, இது 2024 தேர்தலுக்கான தந்திரம் என்று ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் குறிப்பிட்டார். மேலும், “உண்மையிலேயே இவர்களுக்கு நல்ல எண்ணம் இருந்திருந்தால், 2021-ஆம் ஆண்டே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியிருப்பார்கள். ஆனால், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி செய்வதில் பாஜக அரசுக்கு நம்பிக்கை இல்லை” என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களுக்கு இரட்டை ஒடுக்குமுறை

மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், “மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவில், முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. முஸ்லிம்  பெண்கள் மக்கள் தொகையில் 7 சதவிகிதம். ஆனால் மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவம் 0.7 சதவிகிதம்.  முஸ்லிம் பெண்கள், பாலினம் மற்றும் மதம் என இரட்டை பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். இந்து பெரும்பான்மை தேசியவாதத்தின் எழுச்சி மற்றும் பாஜக-வின் இந்து வாக்கு வங்கியின் உருவாக்கம் ஆகியவற்றால், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டது, (உள்ஒதுக்கீடு வழங்காவிட்டால்) இது மேலும் குறையும்” என்றார். 

மகளிர் மசோதா தாக்கலில் இவ்வளவு ரகசியம் எதற்கு?

“மக்களவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்கள் எப்போது கிடைக்கும் என்பதற்கு இறுதி தேதி எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில், இந்த சிறப்பு அமர்வில், இவ்வளவு ரகசியமாக - அவசரமாக இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கும் என்ன அவசரம்? ஒன்பதரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்” என்று சிரோமணி அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் கேள்வி எழுப்பினார்.

தொகுதி மறுவரையறைக்கு காலக்கெடு என்ன?

இதுபோன்ற ஒரு மசோதா நாடாளுமன்றத்திற்கு வருவது இது ஐந்தாவது முறை என்ற பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. நாகேஸ்வர ராவ், வரும் தேர்தலிலேயே இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  அல்லது எப்போது தொகுதி வரையறை முடிக்கப்பட்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்ற காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்றார்.

50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சங்கீதா ஆசாத் பேசுகையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழு மனதுடன் ஆதரவைத் தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கு மரியாதை கொடுத்ததாக அவர் கூறினார். மாநிலத்திலும் மத்தியிலும் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வேண்டும் என்று  வலியுறுத்திய அவர், பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் பெண்களோடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார்.

பெண் - பழங்குடி குடியரசுத் தலைவர் எங்கே?

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் எம்.பி., விஜய் குமார் ஹன்ஸ்டாக் பேசுகையில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கு, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு  அழைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். பெண்களுக்கு மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்குவது பற்றி நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் இல்லாதது, ‘குடியரசுத் தலைவர் பதவிக்கான அவமானம்’ என்று விமர்சித்தார்.

அமலாக்கத்தை தள்ளிவைக்க வேண்டிய தேவை என்ன?

தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.பி. ஹஸ்னைன் மசூதி பேசுகையில், “பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதே (மோடி) அரசின் நோக்கம் என்றால், அதை ஏன் தள்ளி வைக்க வேண்டும்? 2024 முதலே இடஒதுக்கீடு வழங்கலாமே..” என்று குறிப்பிட்டார். 33 சதவிகித இடஒதுக்கீடு பாலின நீதியின் ஒரு கூறு என்றால், சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு மற்றொரு கூறு. அதை ஏன் மறுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. ரஞ்சீத் ரஞ்சன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது, “பெண்கள் உரிமையைத்தான் கோரு கிறார்களே தவிர, பரிதாபத்தை அல்ல- ‘நாரி சக்தி வந்தன் அதினி யம்’ என்று மசோதாவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், யாரும் பெண்களுக்கு தலைவணங்க வேண்டியதில்லை. உரிமைகளையும் வா ய்ப்புகளையும் சமமாக பகிர்ந்துகொண்டால் போதும்” என்று குறிப்பிட்டார்.

மசோதாவின் ஆன்மா நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்

சிவசேனா (யுபிடி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், “இது ஒரு வரலாற்று தருணம். அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மக்களவை யின் ஒப்புதல் பெற்றது. இதற்காக ஒன்றிய அரசு பெற்றுள்ள ஆதரவைப் பார்க்கும்போது, மசோதாவின் ஆன்மா நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்” என்றார்.

மோடி அரசின் 2 நிபந்தனைகளும் சிக்கலானவை

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப. சிதம்பரம் பேசுகையில், கட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை. ஏனெனில் 2 தடைகள் உள்ளன. ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு. மற்றொன்று தொகுதி மறுவரையறை. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கான கோரிக்கை வரும். அது சரி செய்யப்பட வேண்டும். தொகுதி மறுவரையறையோ இன்னும்  சிக்கலானது, ஏனென்றால் மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்களை ஒதுக்கத்  தொடங்கினால் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை அமல்படுத்திய தென் மாநிலங்களுக்கு அது ‘தண்டனையாக’  அமையும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு நாம் நீண்டதூரம் செல்ல வேண்டும்” என்றார்.

கேரட்டை தொங்கவிட்டு ஏமாற்றும் பாஜக-வின் தந்திரம்

“காங்கிரஸ் ஆதரிப்பதால், இது (மகளிர் இடஒதுக்கீடு மசோதா) ஒருமனதாக (மாநிலங்களவையில்) நிறைவேற்றப்படும். (இருப்பினும்), இந்த மசோதாவை (உடனடியாக) நடைமுறைப்படுத்த முடியாததால், பெண்களுக்கு (வாய்க்கு எட்டாதவாறு குதிரையின் முன்  கேரட்டைத் தொங்கவிட்டு ஏமாற்றுவதைப் போல) கேரட்டைத் தொங்க விடுகிறது” என்று காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா கூறினார்.

ஓபிசி மகளிர்க்கான இடஒதுக்கீட்டை இணைக்க வேண்டும்

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது” என ராஷ்ட்ரிய ஜனதாதளம் எம்.பி. மனோஜ் ஜா குறிப்பிட்டார். மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மகளிர்க்கான உள்ஒதுக்கீட்டை இணைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஓபிசி, சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு தாருங்கள்

மகளிர்க்கு 33 சதவிகித இடங்களை வழங்குவதில் பாஜக அரசு  தீவிரமாக இருந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கும், முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கி அமல்படுத்துங்கள் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஜெயா பச்சன் வலியுறுத்தினார்.

1979-இல் மகளிர் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்த்தது

சாதிவாரி கணக்கெடுப்பிலிருந்து பாஜக ஏன் விலகி ஓடுகிறது? என்று காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார். “முதல் பெண் பிரதமர், முதல் பெண் குடியரசுத் தலைவர்,  முதல் பெண் மக்களவை சபாநாயகர் மற்றும் முதல் பெண் ஆளுநர் ஆகியோரை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான்” என்று கூறினார்.

10 ஆண்டு தள்ளிப்போகும் சட்டத்திற்கு, இவ்வளவு அவசரம் ஏன்?

“மசோதாவில் கூறப்பட்டு வழிமுறைகளைப் பின்பற்றினால், மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர 10 ஆண்டுகள் ஆகும். அப்படிப்பட்ட ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்காகவா, சிறப்புக்  கூட்டத்தொடர் கூட்டப்பட வேண்டும். ஏன் இவ்வளவு அவசரமாக கடந்து செல்கிறீர்கள்? மகளிர் இடஒதுக்கீட்டு, தொகுதி மறுவரையறை எதற்கு? வாஜ்பாய் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் என்ன தவறு?” என்று ராஷ்ட்ரிய லோக்தளம் எம்.பி. ஜெயந்த் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

உடனடியாக மகளிர்க்கு இடஒதுக்கீடு அளிப்பதில் என்ன சிக்கல்?

“ஒரே இரவில் பணமதிப்பு நீக்கம் செய்தீர்கள்? உடனடியாக அமலுக்கு  வரும் வகையில் நீங்கள் பொதுமுடக்கத்தை அறிவிக்கவில்லை யா? எந்த அறிவிப்பும் இல்லாமல் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வில்லையா? ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டிற்கு மட்டும் ஏன் இவ்வளவு  காலம் (சுமார் 10 ஆண்டுகள்) எடுத்துக் கொள்கிறீர்கள்? இந்த மசோதா வை ஏன் 2024ல் அமல்படுத்த முடியாது?’’ என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. வந்தனா சவான் கேள்வி எழுப்பினார்.

சட்டம் நிறைவேறாவிட்டால் பதவி விலகத் தயாரா?

“பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் ஒரு அறிக்கை யை வெளியிட வேண்டும். அது என்னவெனில், 2024 தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவ்வாறு தேர்தலில் வென்று யார் ஆட்சியில் இருந்தாலும், 2026 வரை மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாவிட்டால்  அவர்கள் ராஜினாமா செய்வ தாக உறுதியளிக்க வேண்டும்” என்று கபில் சிபல் கோரிக்கைவிடுத்தார். மகளிர்க்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதாவை மாற்றியமைக்க வேண்டும்  என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் நசீர் உசேன், நீரஜ் டாங்கி, அமீ யாஜ்னிக்,  ரஞ்சீத் ரஞ்சன், ரஜனி பாட்டீல், பூலோ தேவி நேதம், ராஜ்மணி படேல்,  ஜெபி மாதர், டாக்டர் எல். ஹனுமந்தய்யா ஆகியோர் திருத்தங்களை அளித்தனர். “மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதிதல்ல. நீண்ட காலமாக  இது நிலுவையில் உள்ளது. எங்கள் எதிர்ப்புகள் இன்னும் அப்படியே உள் ளன. இப்போதும் ஓபிசி மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த  பெண் களுக்கு மசோதாவில் எந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட வில்லை” என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. எஸ்.டி. ஹசன் குறிப்பிட்டார்.

9 ஆண்டுகளாக அக்கறை காட்டாதது ஏன்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., எளமரம் கரீம் பேசுகையில், கடந்த 2014, 2019 தோ்தல்களின்போதே, மகளிா்  இடஒதுக்கீடு வாக்குறுதியை பாஜக அளித்தது. ஆனால், ஒன்பது ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளவுதான், மகளிருக்காக இந்த அரசு காட்டிய அக்கறை என்று விமர்சித்தார்.

தேஜகூ ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

மகளிர் மீது அக்கறை இருப்பதுபோல பாஜக தோற்றம் காட்டுகிறது.  ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள 16 மாநிலங் களில் ஒரு பெண் முதல்வரும் இல்லை என்பதை  திரிணாமுல் எம்.பி.  டெரிக் ஓ பிரையன் சுட்டிக்காட்டினார். மதச்சார்பற்ற  ஜனதாதளம் தலைவ ரும் முன்னாள் பிரதமருமான எச்.டி. தேவகவுடா  பேசுகையில், நாட்டின் பிரதமர் மற்றும் கா்நாடக முதல்வா் ஆகிய பதவிகளை வகித்தபோது மகளிர் இடஒதுக்கீட்டுக்காக தான் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டார்.

பொன்னான தருணம் என்ற எண்ணம் ஏமாற்றத்தில் முடிந்தது

“இது ஒரு பொன்னான தருணமாக இருக்கும் என்று நாங்கள் நினைத் தோம், ஏனென்றால் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால், மகளிர்க்கான இடஒதுக்கீடு நடை முறைக்கு வர 10, 15 அல்லது 20 ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஏனெனில் இந்த மசோதா ஏராளமான நிபந்தனைகளைக் கொண்டுள்ளது” என்று திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு கூறினார்.

2031 வரை பெண்களை காத்திருக்க வைப்பது ஏன்?

மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், “மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை உட னடியாக அமல்படுத்த ஒன்றிய அரசுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், 2031-ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசு ஏன் தாமதப்படுத்துகிறது” என்றாா்.

மகளிர் மசோதா முழுமையடையாமல் உள்ளது

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசுகையில்,  “மகளிர் இடஒதுக்கீடு மசோதா என் பார்வையில் முழுமையடையாமல் உள்ளது. இந்த மசோதாவில் ஓபிசி இடஒதுக்கீடு சேர்க்கப்படுவதை நான்  பார்க்க விரும்புகிறேன்” என்றார். இந்த மசோதாவை அமல்படுத்த புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை தேவை என்று கூறுவது எனக்கு விசித்திரமாக உள்ளது. இது இட ஒதுக்கீட்டை ஏழு, எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு தள்ளிப் போடவும், பின்னர் இந்த விஷ யத்தை (எக்கேடு கெட்டும் போகட்டும் என்று) அது செல்லும் வழியில் செய்ய ட்டும் என்றும் தள்ளி விடுகிறது. புதிய நாடாளுமன்றம் ஒரு அழ கான கட்டடம் என்று நான் சொல்ல விரும்புகிறேன். நல்ல மயில்கள், தரையில் நல்ல மயில் இறகுகள், நாற்காலியில் நல்ல மயில் இறகுகள். இது ஒரு நல்ல கட்டடம். ஆனால், இந்த வளாகத்தில் இந்தியக் குடி யரசுத் தலைவரைப் பார்க்க நான் விரும்பினேன். இந்திய குடி யரசுத் தலைவர் ஒரு பெண், அவர்  பழங்குடி சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறார். பழைய நாடாளு மன்ற கட்டடத்திலிருந்து புதிய நாடா ளுமன்றக் கட்டடத்திற்கு மாறும் போது, அவர் இங்கிருந்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சக மனுஷியாக நடத்தினாலே போதும் : கனிமொழி

அனைத்து தரப்பினரும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய மசோதாவில் பாஜக  அரசியல் செய்வது துரதிருஷ்டவச மானது. பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை என்று பெரியார் கூறியிருந் தார். பாஜக-வினரின் செயலை பார்க்கும் போது பெரியார் கூறியதுதான் நினை வுக்கு வருகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி தனது உரை யைத் துவங்கினார்.  தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு என்றெல்லாம் நிபந்தனைகளை விதித்துக் கொண்டி ருந்தால் இந்த மசோதா இப்போதை க்கு நடைமுறைக்கு வர சாத்திய மில்லை. காத்திருப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்த மசோதாவின் பெயர் நாரி ஷக்தி வந்தன் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு (மகளிர்க்கு) சல்யூட் தேவையில்லை. எங்களை பீடத்தில் வைக்க தேவையில்லை. எங்களை யாரும் வழிபட தேவை யில்லை. எங்களை நீங்கள் தாய் என்றும் அழைக்கத் தேவையில்லை.  நாங்கள் உங்களின் தங்கைகளாக வும், மனைவியாகவும் இருக்க விரும்பவில்லை. முதலில் எங்களை பீடத்தில் இருந்து இறக்கி விடுங்கள். பெண்களையும் ஆண்களுக்கு நிகராக நடத்துங்கள் அது போதும் என்றும் கூறினார்.