articles

img

திக்கெட்டும் பரவட்டும் தீக்கதிர் - ஆர்.பத்ரி

ஜூலை 1 - 10  சந்தா சேர்ப்பு இயக்கம்

தீக்கதிர் சிறப்பு சந்தா சேர்ப்பு இயக்கம்  வருகிற ஜூலை 1 முதல் 10 வரை  மாநிலம் முழுவதும் விரிவான முறையில் நடை பெற உள்ளது. “ஊடக உலகில் உண்மையின் பேரொளி” எனும் முழக்கத்தோடு வெளிவரு கிறது தீக்கதிர் நாளிதழ். செய்தி ஊடக உலகம் பெருமளவு வணிகமயமாக்கப்பட்டுள்ள இச்சூழ லில் அறத்தோடும், உழைப்பாளி மக்களின் அரசியலையும் பேசும் தீக்கதிரை நாம் பரவலாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  முதலாளித்துவ சமூகத்தில் அனைத்தும் பண்டமாக மாறும் என்று துல்லியமாக குறிப்பிட்டார் மாமேதை மார்க்ஸ். நவீன தாராள மய யுகத்தில் இன்று செய்திகள் பண்டமாக மாற்றப்பட்டுள்ளன. லாபமீட்டும் துறைகளில் செய்தி நிறுவனங்கள் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. நிகழ்வுகளை செய்திகளாக அளித்த நிலைமை தலைகீழாக மாறி, ஆளும் வர்க்கத்தின் விருப்பங்களும் தேவைகளும் முலாம் பூசப்பட்டு செய்திகளாக நம்மை வந்த டைகின்றன. நம் தலைகளில் டன்டன்னாக கொட்டப்படும் நவீனமயக் குப்பைகளில் உண்மை எது என கண்டறிவதே மிகுந்த சவாலானதாக மாறியுள்ளது.

செய்தியும் அரசியலும்

குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பதே உண்மையான செய்தியாகும். அத்தகைய செய்திகளின் மூலமே மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ளவும், ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பவும், தங்களுக்கான கோரிக்கையினை முன் வைக்கவும் முடியும். ஆனால் ஆளும் வர்க்கம் – அரசு – கார்ப்பரேட்டு களின் விருப்பங்கள், உண்மைகளுக்கு திரை யிடுகின்றன.  செல்வாக்குள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், பெரும் நிறுவனங்களும் செய்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை களாக மாறியுள்ளதால் பின்வரும் விளைவுகள் உருவாகியுள்ளன.  w    பரபரப்பான உத்திகள் மூலம் உண்மையான உணர்வுகள் மழுங்கடிக்கப்படுவதையும், (Sensation Replaced Sense) வெற்றுக் கூச்சல்களே செய்திகளின் இடத்தை பிடித்திருப்பதையும் (Noise has Replaced News) காண முடிகிறது. w    உண்மையான பிரச்சனைகளை (Real Issues) திசைதிருப்பி பிரச்சனையல்லாத பிரச்சனைகளை (Non Issues) பெரிதாக்கும் போக்கு வளர்கிறது. தமிழகம் மற்றும் கேர ளத்தில் கடுமையான வெள்ளத்தில் மக்கள் தத்தளித்த போது பிரியங்கா சோப்ராவின் திருமணத்தை பிரதான செய்தியாக்கவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களில் நானோ சிப் பொறுத்தப்பட்டுள்ளதால் கருப்பு  பணத்தை ஒழித்து விடுவதற்கான நடவடிக்கை இது எனும் கதையாடலை கட்டவிழ்த்து விட்டு  மக்கள் கோபத்தை கட்டுப்படுத்தவும் அவர் களால் முடிந்தது.   w    நவீன ஊடக உலகில் பெய்டு நியூஸ் (Paid News)  என பணம் கொடுத்து, தாங்கள் விரும்பு வதை அப்படியே எழுத வைக்கும் போக்கும் அதிகரித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரதான நாளிதழ்கள் துவக்கி வைத்த இத்தகைய போக்கிற்கு இன்றை க்கு உலக நாளிதழ்கள் துவங்கி உள்ளூர் நாளிதழ்கள் வரை இரையாகியுள்ளன. சமீபத்திய தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் அதற்கு சிறந்த உதாரணமாக உள்ளன.  w    பரப்பப்படும் போலியான தகவல்களின் (Mis-Information) உண்மைத் தன்மையை பரிசோ தித்துப் பார்ப்பதற்காகவே பல தளங்களும் (Fact Check) அதிகரித்துள்ளதை காணும் போது, எவ்வாறு செய்தித் தளங்களை முதலாளித்துவம் சீரழித்துள்ளது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

நவீனமயமும் கலாச்சாரத் தொழிற்சாலைகளும்

நவீனமயம், ஐசிஇ(ICE) எனும் புதியதொரு  யுகத்திற்கு நம்மை அழைத்து வந்திருக்கிறது. செய்திகள் (Information), தகவல் தொடர்பு (Communication), மற்றும் கலாச்சார நிறுவனங்கள் (Entertainment Corpora tions) ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து பிரம்மாண்டமான கலாச்சாரத் தொழிற்சாலை யாக வளர்ந்து நிற்கிறது. எவையெல்லாம் பகி ரப்பட வேண்டிய செய்திகள், அவை எத்தகைய தன்மையில் சொல்லப்பட வேண்டும் என்பதை யெல்லாம்  இத்தகைய புதிய கலாச்சாரத் தொழிற்சாலைகளே தீர்மானிக்கின்றன.  ஆளும் வர்க்கத்தின் கருத்தியலே ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தியலாக அமையும் எனும் கூற்றுக்கிணங்க மிக நுட்பமாக இவை சமூகத்தில் வினையாற்றுகின்றன. இத்தகைய கலாச்சாரத் தொழிற்சாலைகள் ஆளும் வர்க்கத்தின் இசைவிற்கேற்ப அரசுகளால் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணை அரிக்கும் நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன. சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் அரசால் கட்டுப்படுத்தப்படு கின்றன. அரசு விரும்புவதை மட்டுமே எழுதவும்,  ஒலி/ஒளிபரப்பவும் ஊடகங்கள் நிர்ப்பந்தப் படுத்தப்படுகின்றன. அதற்கென புதிய விதி களையும் மோடி அரசு உருவாக்கியுள்ளது. சுதந்திர ஊடகத்திற்கான நாடுகளின் வரிசை யில் மிகவும் பின் தங்கிய நிலையில் இந்தியா இருக்கிறது என்பதன் மூலமே இந்தியாவின் ஊடக ஜனநாயகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் பிரதானமாக விற்பனை யாகும் இந்தி மொழி நாளிதழ்களில் 41 % முதல் 60 % வரை அரசுக்கு ஆதரவான செய்திகளே இடம் பெறுவதாக செய்தி வெளியாகி யுள்ளது. பரவலான வாசகர்களை கொண்ட  இத்தகைய நாளிதழ்களை அரசு விளம்பரங் களை அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முயல்கி றது. பின்விளைவுகளை (Consequences) உரு வாக்கும் செய்திகள் இடம் பெறாத வகையில் பார்த்துக் கொள்ளுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.  நவீன தாராளமயத்திற்கான சமூக ஒப்புதலை உற்பத்தி செய்வதும், அவற்றால் உரு வாகும் கூர்மையான ஏற்றத்தாழ்வுகளை மக்களிடமிருந்து மறைப்பதும், இத்தகைய எதிர் விளைவுகளுக்கெதிராக போராட முடியாது எனும் பொதுப்புத்தியை (Commensense) உரு வாக்குவதுமே இத்தகைய கலாச்சாரத் தொழிற்சாலைகளின் பிரதானப் பணியாக உள்ளது. எனவே புரட்சிகர உணர்வை ஏற்படுத்தும் புதிய மாற்று ஊடகங்கள் நமக்கு அவசியமானதாகும்.

மாற்று ஊடகங்களை வலுப்படுத்துவோம்

முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பிற்கு மாற்றாக புதியதொரு சோஷலிச சமூக அமைப்பை உருவாக்கிய மகத்தான சோவியத் புரட்சியில் பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்து  மாமேதை லெனினும், ஸ்டாலினும் கூறுவதை நாம் நினைவில் கொள்வது, மாற்று ஊடகங் களின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவ தாக அமையும்.  “எங்கிருந்து துவங்குவது”?  மற்றும் “என்ன செய்ய வேண்டும்”? ஆகிய கட்டுரைகளின் வாயிலாக லெனின் பின்வரும் கருத்தை அழுத்த மாக முன்வைக்கிறார்.  “இந்த தருணத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார – கிளர்ச்சிப் பணிகளை ஒரு பொருத்தமான புரட்சிகர பத்திரிகையின்றி நிறைவேற்றிட முடியாது”. மேலும் அவர் சொல்கிறார். “உள்ளூர் அமைப்பு களும், முகவர்களும், நிருபர்களும் கொண்ட தொரு வலுவான கட்டமைப்பை உருவாக்கி அத னைச் சுற்றி அமைப்பு ரீதியாக பலம் வாய்ந்த தொரு கட்சியைக் கட்ட முடியும். ஏனெனில்  நமது பத்திரிகை ஒரு கூட்டுப் பிரச்சாரகன் மட்டு மல்லாது, கூட்டுக் கிளர்ச்சியாளனாகவும், கூட்டு  அமைப்பாளனாகவும் இருக்கும்.”  முதலில் துவக்கப்பட்ட இஸ்க்ரா (தீப்பொறி) ஜார் அரசால் தடை செய்யப்படுகிறது. அதன் பிறகு பிராவ்தா (உண்மை), ஜ-பிராவ்தா (உண்மைக்காக), புட்-பிராவ்தி (உண்மை வழி), ட்ரூடோவ்யா பிராவ்தா (தொழிலாளர் உண்மை) என தடைகளில் இருந்து தப்பிக்க பல  புதிய பெயர்களில் பத்திரிகைகளை துவக்கிய லெனினது முயற்சிகள், ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு பத்திரிகை எனும் கருத்தாயுதம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. “பிராவ்தா” பத்திரிகை துவங்கப்பட்ட போது நாடு முழுவதும் உள்ள  தொழிலாளர் அமைப்புகள் தங்கள் ஊதியத்தி லிருந்து கோபெக்குகள் – ரூபிள்களை திரட்டி      (ரஷ்ய நாணயங்கள்) அப்பத்திரிகையை பாது காத்தார்கள்.  தொழிலாளர்களால் அமைக்கப் பட்ட உள்ளூர் சோவியத்துக்களின் போராட்டங் களுக்கான உத்வேகத்தை புரட்சிகர பத்திரிகை கள் அளித்தன. 1917இல் நடைபெற்ற சோவியத் புரட்சியென்பது 1912இல் துவக்கப்பட்ட பிராவ்தா பத்திரிகை இல்லாமல் சாத்தியமாகியிருக்காது என்று பெருமிதத்தோடு ஸ்டாலின் சொல்லும் அளவிற்கு பத்திரிகையின் பங்கென்பது புரட்சிகர இயக்கத்தில் மிக முக்கியமானதாகும்.   1899ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கப்பட்ட இஸ்க்ரா இதழில் பத்திரிகையின் பெயருக்கு கீழே இவ்வாறு அச்சிடப்பட்டிருந்தது. “ஒரு சிறு பொறி பெருந்தீயைத் தூண்டும்.” ஆம். சமூக மாற்றமெனும் பெரும் போரில் பெருந்தீயைத் தூண்டும் பொறியாக நமது நாளேட்டை தமிழ்நாடெங்கும் கொண்டு செல்வோம். திக்கெட்டும் பரவட்டும் நமது தீக்கதிர்!
 

;