articles

img

பிரிட்டிஷ் சட்ட நிறுவனங்களின் சந்தை ஆகிறதா இந்தியா? - பி.தட்சிணாமூர்த்தி

கடந்த டிசம்பரில் 146 நாடாளுமன்ற   உறுப்பினர் களை அராஜகமாக வெளியேற்றி இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம்  இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று  குற்றவியல் சட்டங்களை மாற்றி அவசர அவசரமாக  பாரதிய நியாய சன்ஹிதா  பாரதிய நாக்ரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாட்சிய ஆதினியம்  என  மாற்றி புதிய சட்டங்களை நிறைவேற்றியது. 1.7.2024 முதல் அமுலுக்கு வந்த  இச்சட்டங்களை எதிர்த்து  இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர். அதே சமயத்தில்  பிரிட்டிஷ்  வழக்கறிஞர்கள் மற்றும்  பிரிட்டிஷ் சட்ட நிறுவனங்களுக்கான  சட்ட  சந்தையை  உருவாக்கும்  வேலையும்  நடைபெற்று வருகிறது. லா சொசைட்டி இங்கிலாந்து வேல்ஸ் பார் கவுன்சில் ஆகியவற்றுடன்  27.6.2024 அன்று  லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய பார்  கவுன்சில்  இந்த அறிவிப்பை வெளியிட்டது.  அன்று  லண்டன் சான்செரி லேனில் உள்ள இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்ட சங்கத்தின்  வளாகத்தில்  நடை பெற்ற  கூட்டத்தில்  இங்கிலாந்து லா கவுன்சில் இந்திய பார் கவுன்சில், இங்கிலாந்து, வேல்ஸ் பார்  கவுன்சிலும் கலந்து கொண்டன. பிரிட்டன் மற்றும் இந்தியாவுடனான  சட்டப் பரிமாற்றங்கள்,

இடை நிலைச் சட்ட நடைமுறைகள்  மற்றும் நட்புரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான  5.6.2023 தேதிய கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இக்கூட்டம் நடைபெற்றது.  இந்திய பார்  கவுன்சிலின்  தலைவர் மனன் குமார் மிஸ்ரா  மற்றும் உறுப்பினர்கள்  இங்கிலாந்து  லா சொசைட்டி, இங்கி லாந்து மற்றும் வேல்ஸ் பார் கவுன்சில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வெற்றிகரமான மற்றும் பயனுள்ள  இருதரப்பு பேச்சுவார்த்தை  அமர்வுகள்  நடைபெற்றன  என்று லா சொசைட்டி  தலைவர் நிக் எம்மர்சன் கூறினார்.  அவர் மேலும், “இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான  சட்ட வியல் அதிகார வரம்பாகும் (Jurisdiction;  எங்களது  பகிரப்பட்ட நலன்களை மேலும் உறுதிப்படுத்த இந்திய பார் கவுன்சிலை  வரவேற்பது  மகிழ்ச்சி அளிக்கிறது; நாங்கள் அனைவரும் ஆங்கில மற்றும் வேல்ஸ் மற்றும் இந்திய வழக்கறிஞர்களுக்கு இடை யிலான நட்புறவின் பிணைப்பை வலுப்படுத்தவும், எங்களுக்கு  இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் எங்கள்  நோக்கங்களை  பகிர்ந்து கொள்கிறோம்; இங்கிலாந்து வழக்கறிஞர்கள் மற்றும் இங்கிலாந்து சட்ட நிறுவனங்கள் இந்திய சட்டத்துறையில் நுழைவதை நிர்வகிக்கும் வகையில்  திருத்தப்பட்ட விதிமுறைகளை ஜூலை மாத இறு திக்குள் அமல்படுத்துவோம் என்று இந்திய பார்  கவுன்சில் உறுதி செய்துள்ளது” என்று நிக்  கூறினார்.  லா சொசைட்டியின் சர்வதேச தலைவரான மைக்கேல் லாரன்ஸ்  பேசும்போது,  இனி வெளி நாட்டு நிறுவனங்களுக்காக பணிபுரியும் இந்திய வழக்கறிஞர்கள் மீது குறைவான கட்டுப்பாடுகள் அல்லது கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று  கூறினார்.  மேலும் அவர் சர்வதேச சட்ட நிறுவனங் களில் சேருவதற்கான வாய்ப்புகள் மற்றும்  அவர்கள் என்ன வேலை செய்ய முடியும் என்பதைப் பொறுத்த வரை பார்கவுன்சிலே முடிவு செய்யலாம் என்றார்.

இந்திய பார்  கவுன்சிலின் புதிய விதிகள்

இந்திய சட்டவியல்  சந்தையை  தாராளமயமாக்கு வதற்கான நடவடிக்கைகள்  பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு  குறிப்பாக கடந்த ஆண்டு மார்ச் 2023  முதல்    முடுக்கி விடப்பட்டன. .  இந்தியாவில் வெளி நாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான இந்திய பார் கவுன்சில் விதிகள் 2022  அறிவிக்கப் பட்டது; இதைத் தொடர்ந்து  19.3.2023  தேதியிட்ட ஒரு செய்திக்குறிப்பு  இந்திய  பார் பார் கவுன்சி லால்  வெளியிடப்பட்டது, வெளிநாட்டு சட்ட நிறு வனங்கள் தங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர் களுக்கு  வெளிநாட்டு சட்டங்கள் குறித்து ஆலோச னை வழங்க மட்டுமே இந்தியாவில் அலுவலகங் களை அமைக்க அனுமதிக்கப்படும் என்று கூறியது. இருப்பினும், இந்திய சட்ட நிறுவனங்களின் சங்கம் (Society Of Indian Law Firms - SILF)  மேற்கண்ட முடிவு இந்திய வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வழிவகுக்கும்  என்பதை உள்ளடக்கிய  சில ஆட்சேபனைகளை எழுப்பியதால், அவ்விதி கள் செயல்படுத்தப்படவில்லை. மேலும் இங்கி லாந்து மற்றும் வேல்ஸின் சட்ட சங்கம் மற்றும் பார் கவுன்சில் ஆகியவை  இதில் கூடுதல் தெளிவை  எதிர்பார்த்தன.  இந்த விதிகளை எதிர்த்தும் தில்லி உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது 9.2.2024  அன்று  தில்லி உயர்நீதிமன்றம்,  இந்திய பார் கவுன்சில்) மற்றும் சட்ட அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி யது.  இதன் பின்னணியிலும் 27.6.2024 அன்று நடை பெற்ற  லண்டன்  கூட்டத்தில், திருத்தப்பட்ட விதி முறைகள் தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டன. அப்போது இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, 2023 விதிகள் ஏன் இன்னும்  செயல்படுத்தப்படவில்லை என்பதை விளக்கிய தோடு, இந்திய சட்ட சந்தையை இங்கிலாந்துக்கு திறக்க  நாங்கள்  திறந்த மனதுடன் வந்துள்ளோம்  என்றார்.  பிரிட்டிஷ் இது ஒருபுறம் இருக்க சென்ற ஆண்டு  23 & 24.9.2023  இரு தினங்கள்  தில்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள்  மாநாடு - 2023-ஐ   காமன்வெல்த் லாயர்ஸ் அசோசியேசன்,  இங்கி லாந்து - வேல்ஸ் லா சொசைட்டி, இங்கிலாந்து -வேல்ஸ் பார் கவுன்சில் ஆகிய மூன்று பிரிட்டிஷ் அமைப்புகளோடு இணைந்து இந்திய பார் கவுன்சில் நடத்தியது. இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன்  குமார் மிஸ்ரா இந்து சமய நூல்களில் ஒன்றான மகா உபநிடத்தில் குறிப்பிடப்படும் ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது  ‘ஒரே  உலகம் - ஒரே  குடும்பம் ஒரே எதிர்காலம்’ என்ற  நரேந்திர மோடியின்  கவர்ச்சி  சமஸ்கிருத வசனத்தைக் குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றிருந்தார்.   ‘நீதி வழங்கும்  அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டின் முதல் நாள் 23.9.2023 அன்று  மாநாட்டை  பிரதமர் நரேந்திர மோடி  துவக்கி வைத்து ஆபத்துகள் உலகளாவியதாக இருக்கும்போது, ​​அவற்றைச் சமாளிப்பதற்கான வழி களும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்று  வழக்கம்போல் பஞ்ச் டயலாக்  பேசினார்.  உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதி அரசர் டி.ஒய். சந்திரசூட், பிரிட்டன்  சட்ட அமைச்சர்  கே.சி. அலெக்ஸ் சாக்  உள்ளிட்டோர் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்திய சட்டவியல் -  நீதித்துறை யாருக்காக?

இந்திய நீதித்துறை  நீண்ட  வரலாற்றுப்  பின்புலம் கொண்டதும்  உலகில் மிகப்பெரிய;  அதே சமயத்தில் பலவீனமான  கட்டமைப்பு கொண்டதுமாகும். உலகில் ஒவ்வொரு நாட்டின் நீதித்துறைக்கும்  அந்நாட்டு மக்களின் சமூக, பொரு ளாதார, வாழ்வியல்  சூழ்நிலைக்கு ஏற்ற தனித்தன்மையும்  மாண்புகளும்  உண்டு.  இந்திய நீதித்துறைக்கென்றும்  அவ்வாறே உள்ளது. இந்திய  மக்களின் பெரும்பகுதியினர்  கடும் சமூக, பொரு ளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில்  உயிர் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்கள்தான் இந்திய நீதித்துறையின்  பெரும்பகுதி சட்ட நுகர்வோர் ஆவர்.  இப்படிப்பட்ட  பெரும்பகுதி மக்களுக்கான  நீதித்துறையும்; நீதித்துறையின்  பிரிக்க முடியாத  அங்கமாக விளங்கும்  இந்திய வழக்குரைஞர்களின் கவனம்- பணிகள்- சேவைகள்- வாய்ப்புகள்- அக்கறை- ஈடுபாடு  வேறு ஒரு திசையில் திருப்பப் படுமோ  என்பதும்,  உள்நாட்டு வழக்குரைஞர்களின் கண்ணியமான வாய்ப்புகள் பாதிக்கப்படுமோ என்பதும், அன்னிய சட்ட நிறுவனங்களின் எதிர்கால  அதிகார எல்லை எவை. அவைகளால் எழும்  நெறிமுறை பிரச்சனைகள் (Ethical Issues and  Risks) மற்றும் அபாயங்களை எவை என்பது பற்றியும்  ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது.  27.6.2024 லண்டன் கூட்டத்தின் முடிவில்  லண்டன் லா சொசைட்டி தலைவர் நிக் எம்மர்சன்  கூறி யிருந்ததை நாம் கவனிக்க வேண்டும்; அவர் “இரு நாடுகளும் இந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க  இங்கிலாந்து - இந்தியா தாராள வர்த்தக ஒப்பந்தத்தை சந்திக்கின்றன. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. எங்களுடைய நெருங்கிய உறவு கள் எப்பொழுதும் இருந்ததைப் போலவே இப்போதும் முக்கியமானவை. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார மாக மாறியுள்ளது.  2028 ஆம் ஆண்டில் மூன்றா வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த போக்கு தொடர்வதில் ஒரு முக்கிய பகுதி வலுவான சட்டத் துறையை உறுதி செய்வதாகும் என தங்களுக்கான  கார்ப்பரேட் சட்டவியல் சந்தையை எமர்சன்  வலியுறுத்தினார்.  இந்திய பார் கவுன்சில் தலைவர் மிஸ்ரா, தனது முடிவுரையில் “சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (Free Trade Agreement) படி எங்கள் அரசாங்கத்தின் உணர்வை நாங்கள் மதிக்கிறோம், மேலும் எங்கள் விதிகளில் உங்களுக்கு (இங்கிலாந்து) பொருந்தும் மற்றும் எங்கள் சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஏற்ற வகையில் தேவையான திருத்தங்களை ஜூலை இறுதிக்குள் செய்வோம். உங்கள் ஒத்துழைப்புடன், விதிமுறைகள் செயல்படுத்தப்படும்” என்று வாக்குறுதி அளித்தார். இந்திய  நீதித்துறையில் சர்வதேச  சட்ட நிறு வனங்களுக்கான ஒரு  நுழைவு வாசல்  சர்வதேச  கார்ப்பரேட் பொருளாதார நலன்களுக்கான    வேட்கையுடன் திறக்கப்படும்  நிலை  உருவாகி வருவதையும் அதன் துவக்கம்தான்  புதிய குற்றவியல் சட்டங்கள் என  லண்டன்  சந்திப்பு  உணர்த்தி யுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இங்கேயும் இந்துத்வா

விரிவடைந்தும் ஆழமாகிக் கொண்டேயும் செல்லும் சர்வதேச பொருளாதார தொழில் உறவு களுக்கு மத்தியில் பொருத்தமான சட்டவியல் மற்றும் நீதித்துறையை பலப்படுத்த  வேண்டும்  என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால் அதைப்  புறக்கணித்து இந்துத்துவ சித்தாந்தம் மற்றும் கார்ப்ப ரேட் நலனுக்கான  தீவிர வலதுசாரி நோக்கத்துடன் மட்டுமே மோடி அரசு சிந்திக்கிறது. இபிகோ, இ.த.ச., சாட்சியச்சட்டம், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் என்றால் பெரும்பகுதி தமிழ்  மக்களுக்கும் அந்தந்த தேசிய இன மக்களின் மொழிகளிலும் இலகுவாக புரிந்து கொள்ளப்பட்ட சட்டங்களை, வாயில் நுழையாத புரிந்துகொள்ள முடியாத மூன்று  குற்றவியல் சட்டங்கள் இதற்கு சரியான உதாரணங் களாக உள்ளன.  

சீன, ரஷ்ய உதாரணங்கள்

ஆசியாவில் மிகப்பெரும்  பொருளாதார பலம் கொண்ட நாடுகளாக மக்கள் சீனமும்  ரஷ்யாவும் உள்ளன. சீனாவில்  செயல்படும்  சர்வதேச சட்ட நிறுவனங்கள் சீன சட்ட சந்தையில் தங்களை நிறுவு வதற்கும் விரிவுபடுத்துவதற்கும்  இருப்பை  தக்க வைத்துக் கொள்வதற்கும்  கட்டுப்பாடுகள் உள்ளன. உலக வர்த்தக அமைப்பானது, மூன்றாம்  உலக நாடுகள் சட்ட சந்தையை இன்னும் தாராள மயமாக்க வேண்டும்  என  தொடர்ந்து நிர்பந்தித்து வருகின்றது.  ஆனால் சீன பொருளியல் தொழில்துறை அரசியல் நலன்களுக்கு உட்பட்டே  மக்கள் சீனம்  இதற்கான கொள்கைகளை வரையறுக்கிறது. அதே  சமயத்தில்  விரிவான கார்ப்பரேட் சட்டம்,  அறிவு சார் சொத்து, கடல்சார் தகராறுகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் பிரச்சனைகள், நிறுவன வழக்கு கள், பொருளாதார கடன் நிதி மேலாண்மை  ஒப்பந்த சர்ச்சைகள்  போன்ற  துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சீன சட்டநிறுவனங்கள்  அமெரிக்கா  ஜப்பான்  மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில்,  அலுவலகங்களை நிறுவவும், அந்தந்த நாடுகளில்  உள்ள உள்ளூர் வழக்கறிஞர்களை பணியமர்த்தவும், மற்றும் சட்ட  சேவைகளில் ஈடுபடவும் முடியும். வெஸ்லி & ரியான்  பார்ட்னர்ஸ் போன்ற எல்லை தாண்டிய சட்ட சேவைகளில் கவனம் செலுத்தும் சீனாவில் உள்ள வழக்கறிஞர்களின் குழுவை இதற்கு உதாரணமாக  குறிப்பிடலாம்.  அமெரிக்கா மற்றும் அதன்  நேட்டோ கூட்டாளி கள்  ரஷ்யா மீது சுமத்திய பொருளாதார தடைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் பாதுகாப்பதற்காக அந்நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டவியல் சர்வதேச சந்தையில் போராடி வருவதையும் நாம் ஆய்விற்கு எடுத்துக்  கொள்ளலாம். உலகில் மூன்றாவது பெரிய பொரு ளாதார  நாடாக மாறப் போவதாக கூறிக் கொள்ளும்  பாஜகவினரும் அவர்களது சட்டவியல் அதிகப் பிரசங்கிகளும் ஆசியாவின் இந்த இரு நாடுகள்  என்ன செய்து வருகிறார்கள் என்று பார்க்கலாமே!

இனி என்ன செய்யலாம்?

இந்திய பார் கவுன்சில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில பார் கவுன்சில் களுடன் கலந்தாலோசித்து, சட்டக் கல்வியை மேம் படுத்துதல் மற்றும் தரநிலைகளை வகுத்தலுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இனி வருங்காலங்களில்  இந்திய சட்டக் கல்வியின் பாடத்திட்டங்களும்கூட  சர்வதேச  சட்ட நிறுவன சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப  படிப்படியாக மாற்றப்படும் நிலையும் உருவாகி வருகிறது. மாநில பார் கவுன்சில்கள் ( State Bar Councils) அனைத்து இந்திய வழக்கறிஞர் சங்கங்கள் (Bar Associations) இந்திய சட்டக் வல்லுநர்கள் (Indian  Legal Scholars), இதர அக்கறைகொண்ட பொதுநல அமைப்புகளை கொண்ட தேசிய மாநாட்டின் மூலம் வெளிப்படையாக இதுபற்றி விவாதங்களில் ஈடுபடவேண்டும். ஆய்வு செய்து அவைகளிலிருந்து  இந்திய நாட்டிற்கான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். கட்டுப்பாடற்ற சர்வதேச சட்ட சந்தையை அனுமதிக்கும் தற்கொலைப் பாதையை விட்டு விலகவேண்டும்.