இந்தியாவில் மே தினம் முதன் முதலாகக் கடைப்பிடிக்கப்பட்டது எப்போது என வரலாற்றில் நுழைந்து அலசுகிறார் சிஐடியு தலைவர் மறைந்த தோழர் சுகுமால் சென், “இந்தியத் தொழிலாளி வர்க்கம்: உருவாகி வளர்ந்த வரலாறு 1830 – 1990” எனும் நூலில் சொல்கிறார் “மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த துவக்க கால தலைவர்களில் ஒருவரான தோழர் சிங்காரவேலரின் புரட்சிகர உணர்வுதான் இதற்கு முதல் காரணமாக அமைந்தது.” 1923 மே நாளில் அந்த வரலாற்று நிகழ்வு நடந்தேறியது. இந்த ஆண்டு நூறாண்டு நிறைகிறது. இந்த எழுச்சி நாளில்; சுகுமால் சென் நூலில் இருந்து “இந்தியாவில் மே தினம் முதன்முதலாக கடைப்பிடிக்கப்பட்டது” எனும் தலைப்பில் அமைந்த முழுப் பகுதியையும் இங்கே தருகிறோம்.
1927 நவம்பரில் கான்பூரில் நடைபெற்ற ஏஐடியுசியின் 8ஆவது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட பொதுச் செயலா ளரின் அறிக்கை அந்த ஆண்டில் பம்பாயிலும் [மும்பை யிலும்] நாட்டின் இதர பல இடங்களிலும் மே தினம் கொண்டாடப்பட்டதைக் குறிப்பிட்டது. 1927 ஆம் ஆண்டி லிருந்துதான் திட்டமிட்ட முறையில் இந்தியாவில் மே தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியாவில் மே தினத்தைக் கடைப்பிடிப்பது என்பது மிகவும் தாமதமாகத் தோன்றிய ஓர் அம்சமாகும்.
எட்டு மணி நேர வேலைக்கான இயக்கம்
19 ஆம் நூற்றாண்டின் அறுபதுகளில் துவங்கிய அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் ‘எட்டுமணி நேர வேலைக்கான இயக்கம்’ சிக்காகோ நகரில் 1886 மே 1 ஆம் தேதியன்று தொழிலாளர்களின் வேலை நிறுத் தத்தில் உச்சகட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்த காவல்துறையின் கடும் தாக்குதல்கள் நான்கு தொழி லாளிகளின் உயிர்களைப் பறித்தன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணை என்ற கேலிக்கூத்தின் மூலமாக அமெரிக்கத் தொழி லாளி வர்க்கத்தின் நிரந்தரப் புகழ்பெற்ற தலைவர்க ளான பார்சன்ஸ், ஸ்பைஸ், ஃபிஷர், எங்கெல் ஆகிய நால்வரைத் தூக்குமேடைக்கு அனுப்பியது. சிக்காகோவில் இந்த சம்பவம் நடந்து முடிந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோஷலிச இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பாரீஸ் நகரில் 1889 ஜூலை 14 ஆம் தேதி கூடினர். இக்கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் சிறையை உடைத் தெறிந்த வரலாற்றுச் சம்பவத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை ஒட்டியே நடைபெற்றது.
பாரீஸ் மாநாடு வேண்டுகோள்
சோஷலிஸ்டுகளின் இந்த பாரீஸ் காங்கிரஸ் ‘தொழிலாளிவர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்திற் கான சர்வதேச நாளாக’ 1890 மே முதல் நாளைக் கடைப்பிடிக்க வேண்டுமென உலகத் தொழிலாளர்களை ஒரு தீர்மானத்தின் மூலம் கேட்டுக்கொண்டது. அதையொட்டியே 1890 ஆம் ஆண்டில் ஐரோப்பி யாவில் பல்வேறு நாடுகளில் மேதினம் கடைப்பிடிக் கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உல கத் தொழிலாளர்களால் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினமாக மே தினம் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஏஐடியுசியின் வழிகாட்டுதலுக்கு இணங்க 1927 ஆம் ஆண்டிலிருந்துதான் இந்தியாவில் மே தினம் பம்பாய் [மும்பை], கல்கத்தா [கொல்கத்தா], மதறாஸ் [சென்னை] போன்ற இதர தொழிலாளர் மையங்களில் ஒழுங்க மைந்த வகையில் முதலில் அனுசரிக்கப்பட்டது என்ற போதிலும் 1927ஆம் ஆண்டிற்கு முன்பாகவும் மே தினம் கடைப்பிடிக்கப்பட்ட தனித்தனியான சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன.
1926இல் மும்பையில்...
1926 ஆம் ஆண்டிலும் கூட பம்பாயில் மே தினம் கடைப் பிடிக்கப்பட்டது. இந்த ஆண்டில் என்.எம்.ஜோஷி, என்.எஸ்.மிராஜ்கர், எஸ்.வி.காட்டே போன்ற தொழிலாளர் தலைவர்களின் தலைமையில் அந்த ஆண்டில் நடைபெற்ற மே தின ஆர்ப்பாட்டங்களில் நக ராட்சி ஊழியர்களே பெருந்திரளாகப் பங்கேற்றனர். எனினும் மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டி ருந்த துவக்க கால தலைவர்களில் ஒருவரான தோழர் சிங்காரவேலரின் புரட்சிகர உணர்வுதான் இதற்கு முதல் காரணமாக அமைந்தது. 1923 ஆம் ஆண்டிலேயே சென் னையில் [மதறாஸில்] மே தின ஊர்வலத்தை நடத்துவ தில் அவர் தனிப்பட்ட முன்முயற்சி எடுத்திருந்தார்.
1923இல் சென்னையில் 2 இடங்களில் மேதினம்
சென்னை நகரில் 1923 ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்பட்ட செய்தியை சென்னையில் இருந்து வெளிவந்த ஆங்கில நாளிதழான ‘இந்து’ வெளியிட்டி ருந்தது. அந்நாளிதழின் தகவல்படி சென்னையில் அன்று இரண்டு மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன. [அன்றைய பத்திரிகைச் செய்தி என்பதால் அதில் உள்ளபடி சாதி ஒட்டோடு இங்கு பதிவாகிறது] ஒன்று உயர்நீதி மன்றக் கட்டிடத்துக்கு எதிரே கடற்க ரையில் [அன்று கடற்கரை அதுவரை விரிந்திருந் தது] நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேலு செட்டியார் தலைமை தாங்கினார். மற்றொன்று தோழர் கிருஷ்ணசாமி சர்மாவால் தலைமை தாங்கப்பட்டு திரு வல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற மேதினக் கூட்டமாகும். தொழிலாளர்கள் இக்கூட்டங்களில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர் என்று இந்து நாளிதழ் தெரிவித்தது. மதறாஸ் கடற்கரையில் மே தினக் கூட்டத்தில் சிங்காரவேலு செட்டியாரின் உரையை இந்து நாளிதழ் கீழ்க்கண்ட வார்த்தைகளில் தொகுத்து வழங்கி இருக்கிறது.
புனிதமான நாள்
“இந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கு கையில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்க ளுக்கு மே தினம் என்பது புனிதமானதொரு நாளாகும் என்று எம்.சிங்காரவேலு செட்டியார் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் தங்களது நிலைமைக்கு ஏற்ற வகையில் இந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றும், உலகத்தின் இதர பகுதிகளில் உள்ள தங்களது தோழர்களுடனான ஒரு மைப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நாட்டில் துயரத்தில் ஆழ்ந்துள்ள தொழிலாளர்க ளுக்கு வலுவூட்டும் ஓர் ஆதாரமாக விளங்கவும், ஓர் தொழிலாளர் அலுவலகத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். வரும் ஆண்டில் அது முழுமையாக வளர்ச்சி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித் தார். அது ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர வைப்பதாக விளங்கும் என்றார்.
தொழிலாளர் ஒற்றுமையே நோக்கம்
புதிய கட்சி [விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி] குறித்து மதறாஸ் மெயில் நாளிதழில் வெளிவந்திருந்த மோசமான விமர்சனம் குறித்து குறிப்பிட்ட அவர், உண்மையான தொழிலாளர்கள் மட்டும்தான் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்றும், எனவே அதுபற்றி அவர்கள் அச்சமுறத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இக்கட்சியானது பொதுவானதொரு நோக்கத்திற்காக தொழிலாளர்களின் ஒற்றுமையை அணி திரட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தோற்றத்தின் இயற்கையான செயல்பாட்டின் மூலமாக தொழிலாளர்கள் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதன் மூலம் அதிகாரத்தை கையில் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.” [1.அன்று பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுபிடிகளுக்கு இடையே கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை தொடங்குவதில் உள்ள சிரமத்தினைக் கருத்தில் கொண்டும், மக்களை எளிதில் அணுகும் விதத்திலும் ஒர்க்கர்ஸ் அண்ட் பெசண்ட் பார்ட்டி – விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தொடங்க தோழர் எம்.என்.ராய் சொன்ன ஆலோசனைப் படி சிங்காரவேலரும் தோழர்களும் இணைந்து உருவாக் கியதே விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி. 2. மதறாஸ் மெயில் என்கிற ஆங்கில மாலை நாளேடும், சுதேசமித்திரன் என்கிற தமிழ் நாளேடும் இந்து அலுவலகத்தை அடுத்த கட்டிடத்தில் இருந்து அன்றைக்கு வெளிவந்துகொண்டிருந்தன.]
தொகுப்பு: சு.பொ.அகத்தியலிங்கம்