மதுரை, மே 19- மதுரை தமுக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் வழங்கும் விழா வியாழனன்று நடைபெற்றது. அதற்கு முதல் நாள் இரவு, இவ்விழாவிற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், வந்துள்ள உபகரணங்கள் பற்றி ஆய்வு செய்துவிட்டு, பின் அரங்கத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு மாற்றுத்திறனாளியும் யூ-டியூபருமான ஒரு பெண், ‘இவ்வளவு பெரிய ஏற்பாடு எங்களை திக்குமுக்காடச் செய்கிறது’ என்று நெகிழ்ந்து ஒரு பொன்னாடையை எடுத்து சு. வெங்கடேசன் எம்.பி.க்கு வாஞ்சையோடு அணிவித்து தன் அன்பை பகிர்ந்தார் . இந்தியாவிலேயே, அநேகமாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி தவிர, வேறெங்கும் இத்தனை பிரம்மாண்டமாக, பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்புடன் செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெறவில்லை. இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான ஏற்பாட்டை உங்கள் கட்சியைத் தவிர (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என, அரங்கத்தில் வைத்திருந்த பொருட்களை பார்த்துவிட்டுச் சென்ற பலர்,நெகிழ்ச்சியுடன் கூறியது, அதைப் பிரதிபலித்தது. செயற்கை உறுப்புகளையும் உபகரணங்களையும் இலவசமாகப் பெற வந்திருந்த மாற்றுத்திறனாளிகளின் கண்களில்தான் எத்தனை ஒளி! அவர்களது பெற்றோர் கண்களில்தான் எத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்பு! பல்லாயிரம் ரூபாய் பெறுமான செயற்கை கைகள், கால்கள், காதொலிக்கருவிகள்,மூன்று சக்கர வாகனங்கள்... வாங்க முடியாமல், நகர முடியாமல் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வடிவில் ஒரு ஆனந்தம் பூக்கும் என்று நிச்சயம் நினைத்திருக்கமாட்டார்கள்.
மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்தவர் சரண்யா-கருப்புசாமி தம்பதியினர். இவர்களது மகன் ஜெகப்பிரகாஷ் (13). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. மதுரை கோவில்பாப்பாகுடியில் உள்ள பெத்சான் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சு.வெங்கடேசன் முன்முயற்சியால் 2022 செப்டம்பரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் மனு அளித்தார். அந்த அடிப்படையில் ரூ.7,000 மதிப்பிலான கற்பித்தல் உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் முத்துகுமரேஸ்வரி (23). இவர் காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. இவர் மதுரை டிவிஎஸ் பள்ளியில் நடைபெற்ற முகாமில் காதொலிக்கருவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். முகாமில் தனக்கான காதொலிக்கருவியைப் பெற்றுச் சென்றார். முத்துகுமரேஸ்வரியை அழைத்து வந்திருந்த அவரது சகோதரியின் கணவர் கூறுகையில், இந்தக் கருவியின் விலை குறைந்தது ரூ.20 ஆயிரம் இருக்கும். முத்துகுமரேஸ்வரி பேஷன் டிசைனிங் படிப்பில் டிப்ளமோ பெற்றுள்ளார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில் தான் காதொலிக்கருவிக்கு விண்ணப்பித்தோம் என்று கண்களில் நீர் துளிர்க்கப் பேசினார்.
மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். வீடியோ எடிட்டராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு இவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் காலை இழந்துள்ளார். தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முகாமில் மனுச் செய்திருந்தார். அவருக்கு அலிம்கோ நிறுவனம் தயாரித்த செயற்கை கால் வழங்கப்பட்டது. மதுரை கிழக்கு ஒன்றியம் வீரபாண்டியைச் சேர்ந்தவர் தவமணி (39). இவர் ஏழு வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற முகாமில் மனு அளித்திருந்தார். தற்போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர வாகனத்தைப் பெற்றுச் சென்றார். மதுரை கடச்சனேந்தல் அருகிலுள்ள யா.புதுப்பட்டியில் “சயின்ஸ் சிறப்புப் பள்ளியில்” படித்து வருபவர் எஸ்.சந்தோஷ். மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி. இவரது தாயார் மகாலெட்சுமி இதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சந்தோஷ் தந்தை வி.சமயஜோதி மின்பணியாளராகப் பணியாற்றுகிறார். சயின்ஸ் சிறப்புப் பள்ளியில் 65 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே மதுரையில் நடைபெற்ற முகாமில் மனுச் செய்துள்ளனர். இவர்களில் 30 பேருக்கு பல்வேறு வகையான உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது குறித்து பள்ளியின் முதல்வர் விசாலாட்சி கூறுகையில், எஞ்சியுள்ள அனைவருக்கும் விரைவில் கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்தார்.“மதுரை நாடாளுமன்ற உறுப்பினரைப் பற்றி சொல்வதற்கு நல்ல விஷயங்கள் ஏராளம் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த முகாம்” என்றார் அவர் .
இவர்கள் தவிர 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் 30-க்கும் மேற்பட்ட அவர்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் பேசியபோது, “அவர்கள் அனைவரும் தவறாமல் கூறிய வார்த்தை, “ எம்.பி.யால் எங்களுக்கு இது கிடைத்தது; ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவருடைய பாராட்டத்தக்க பணிகளில் இதுவும் ஒன்று” என்றனர். இந்த முகாமில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மூலம் விண்ணப்பித்தவர்கள், பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் மூலம் விண்ணப்பித்தவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் விண்ணப்பித்தவர்களும் மகிழ்ச்சியோடு தங்களது உதவி உபகரணங்களைப் பெற்றுச் சென்றனர். உதவி உபகரணங்களைப் பெறுவதற்காக ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். மதிய உணவுக்கான நேரம் நெருங்கிய நிலையில் பசியோடிருந்த மாற்றுத்திறனாளிக்கு உணவு ஊட்டிய தாயிடம் பேசியபோது, “பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். எனக்குப் பசிக்கிறது என்றான் எனது மகன். இன்றல்ல, எப்போதும் உணவு ஊட்டுவது நான் தான். இன்றைக்கு எனது உறவுகளோடு, நண்பர்களோடு சேர்ந்து பசியாறுகிறோம். உபகரணம் மட்டுமல்ல; உணவும் வழங்கியிருக்கிறார்கள்” என்றார். முகாமில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தொடங்கி தூய்மைப்பணியாளர்கள் வரை அனைவரது பணியும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. மாற்றுத்திறனாளிகளை மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைத்து வருவதில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாவட்டத் தலைவர் பி.வீரமணி, செயலாளர் அ.பாலமுருகன், பொருளாளர் மாரியப்பன், புறநகர் மாவட்டத் தலைவர் தவமணி, பொருளாளர் சின்னக்கருப்பன் ஆகியோர் திறம்படப் பணியாற்றினர்.
பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் “சு.வெங்கடேசன் எம்.பி. முயற்சியில்” என வாசகம் பொறிக்கப்பட்ட சட்டைகளை அணிந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தனர். குறிப்பாக விழா வளாகத்தில் எம்.பி., அலுவலகம் சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அலுவலகப் பொறுப்பாளர்கள் த.ராமமூர்த்தி, ஜெரோம்ஜெயக்குமார் ஆகியோரின் பணியை பலரும் பாராட்டிச் சென்றனர். ஒட்டுமொத்தத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியது போல், “மாற்றும் மதுரை” என்ற முழக்கமும் ; மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் கூறியது போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதல்ல... உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறோம் என்ற வார்த்தையும் ; என்றும் மதுரை எதிலும் முதலிடமாகத் திகழும் என்ற பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தியின் வார்த்தைகளும் மதுரை மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதை இந்த முகாம் நிரூபித்துள்ளது என்றால், அது மிகையல்ல!
மதுரை நம்பர் 1
மதுரை மாவட்டம் முழுவதும் நடத்தியுள்ள மாற்றுத்திறனாளிகள் முகாம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் தொகுதியில் நல்ல வரவேற்பிருந்தது. தற்போது முகாம் மூலம் 2,500-க்கும் அதிகமானோர் பலன் பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்களிடம் நயமாகப் பேசி, கவர்வதோடு மக்களுக்கான உதவிகளையும் பெற்றுத்தந்துள்ளார். அந்த அடிப்படையில் ஒன்றிய அரசின் மூலம் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்துள்ளார். தமிழகத்தில் எப்போதும் மதுரை நம்பர் 1-ஆகத் திகழும்.
அமைச்சர் பெ.மூர்த்தி பேசியதில் இருந்து...
15 சதவீத மாற்றுத்திறனாளிகள்
மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் பேசியதில் இருந்து... “இது போன்றதொரு நிகழ்வு வேறெங்கும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.2022 செப்டம்பரில் நடைபெற்ற முகாம்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 50 சதவீதம் பேருக்கு அன்றைய தினமே உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஆனால் மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அனைவரும் பதிவு செய்து அரசின் உதவிகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை பெற்றுத் தரவேண்டியது அரசின் கடமை. மாவட்ட நிர்வாகத்தின் கடமை. உதவி என்று சொல்வதை விட அவர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்கிறோம் என்பதே சரி. மதுரை மாவட்டம் அனைத்து வகையிலும் முன்னணி மாவட்டமாகத் திகழ ஒத்துழைக்க வேண்டும்”.
முதுகெலும்பாக சு.வெங்கடேசன்
அலிம்கோ நிறுவனத்தின் பெங்களூரு மண்டல நிர்வாகத் தலைவர் ஏ.பி.அசோக்குமார் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளைப் பெற்றுத்தருவதில் மதுரை மக்களவை உறுப்பினர் முதுகெலும்பாக செயல்பட்டார் என்றால் அது மிகையல்ல” என்றார்.