articles

உலகை அச்சுறுத்தும் அறிகுறிகள்! - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு ஜூன் 9 அன்று நடைபெற்ற தேர்தல்களில் அதி தீவிர வலதுசாரிக் கட்சிகள் ஒரு கணிசமான சக்தி யாக முன்னுக்கு வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. இக்கட்சிகளில் பல மூலதன ஆதரவு, குடியேற்ற எதிர்ப்பு  ஆகியவற்றை முன்வைப்பவை. காலநிலை மாற்றம் சம்பந்தமாக சரியான கொள்கை இல்லாதவை.  நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் கோலோச்சும் இன்றைய உலகத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பெரும் இடர்கள் வரப்போவதன் அறிகுறி களாகும்.

நடுநிலைவாதிகளின் சரிவு

ஐரோப்பிய மக்கள் கட்சி என்னும் - நடுநிலையாக இருப்பது போன்று காட்டிக் கொள்கிற மத்திய-வலது சாரி பழமைவாதக் குழுவானது இந்தத் தேர்தலில் தன் வாக்குப் பங்கையும் இடங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. சோசலிஸ்ட்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் (மத்திய-இடது) முற்போக்குக் கூட்டணி, தங்களுடைய வாக்குப் பங்கில் (1 விழுக்காடு) குறைந்து, தாங்கள் பெற்றிருந்த இடங்க ளில் நான்கை இழந்திருக்கிறது. ‘புது ஐரோப்பா (Renew Europe)’ என்னும் கார்ப்பரேட் ஆதரவு குழுவும் 4 விழுக்காடு அளவிற்குத் தன் வாக்குப் பங்கினை இழந்து, அதன் காரணமாக 23 இடங்களையும் இழந் துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவான ஜியுஇ/என்ஜிஎல் (GUE/NGL) குழுவும் 0.2 விழுக்காடு வாக்குப் பங்கினை இழந்து, ஓர் இடத்தையும் இழந்துள்ளது. பல்வேறு பசுமைக் கட்சிகளும் சுமார் 20 இடங்களை இழந்துள்ளன.

அதி தீவிர வலதுசாரிகள்

இதற்கு மாறாக இந்தத் தேர்தலில் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களை கூடுதலாகக் கைப்பற்றி தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தி இருக்கின்றன. புதிய 720 உறுப்பி னர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றத்தில், அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து 145 இடங்களை - அதாவது மொத்த இடங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கைப் பெற்றிருக்கின்றன. அதிதீவிர வலதுசாரிகளும் மற்றும் வலதுசாரிகளும் இணைந்து 331 இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்ற னர். வலதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்று  கருதப்படும் மேலும் 55 நபர்களைக் கணக்கில் கொண்டோமானால் (இவர்களில் பலர் வலதுசாரி அரசியலுக்கு அனுதாபிகளாக இருப்பவர்கள்), ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் ஒரு வலுவான சக்தியாக வெளிப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் பொருளாதார நிலையிலும் அளவிலும் பெரிய நாடுகளாக விளங்கும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் தேர்தல்களில் ஆதாயம் அடைந்திருப்பது வரப்போகும் ஆபத்துகளை முன்ன றிவிக்கிறது. ஜெர்மனியில், ஜெர்மனிக்கான மாற்று என்று பொருள்படும் ‘ஆல்டர்நேடிவ் ஃபார் டச்லேண்ட்’ (AfD-Alternative for Deutschland) என்னும் அதிதீவிர வலதுசாரிக் கட்சி, தற்போது ஆட்சியில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பிரான்சில், மரீ லீ பென் என்பவர் தலைமையில் உள்ள வலதுசாரிக் கட்சியான ‘தேசிய முன்னணி’ 32 விழுக்காடு வாக்கு களைப் பெற்றிருக்கிறது. இது, ஜனாதிபதி மாக்ரோன் பெற்ற வாக்குகளைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும். இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் கட்சியான ஃபிராடெல்லி டி’இத்தா லியா (Fratelli d‘Italia) என்னும் வலதுசாரிக் கட்சி 29 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மக்கள் விரோதக் கொள்கைகளின் அமலாக்கமே காரணம்!

வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பதற்கு, ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகவாதிகளும் பழமைவாதிகளும் ‘சிக்கன நடவடிக்கைகளை’ பின்பற்றியதே காரணமாகும். அவர்கள் சமூக நலத் திட்டங்களுக்கான செல வினங்களை, பட்ஜெட்டில் கூர்மையாக வெட்டிக் குறைத்தார்கள், ஓய்வு பெறும் வயதை உயர்த்தி னார்கள், ஓய்வூதியங்களைக் குறைத்தார்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமை யாகப் பாதிக்கும் விதத்தில் அவர்கள்  மீது பல்வேறு  விதங்களில் வரிகளைத் திணித்தார்கள்.  ஐரோப்பிய ஆணையம் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளில் மக்களின் கோபம் வெளிப் படுத்தப்பட்டது. 2024 வசந்த காலத்தில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வின்போது 45 விழுக்காட்டினர் தங்கள் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாக உணர்ந்த னர். 6 விழுக்காட்டினர் மட்டும் தாங்கள் மேம்பட்டிருப்ப தாகக் கருதினர். 31 விழுக்காட்டு ஐரோப்பியர்கள், வாழ்க்கைச் செலவினமே மிகப்பெரிய பிரச்சனை என்று அடையாளம் காட்டினர். 26 விழுக்காட்டினர் வேலையின்மை மற்றும் சுகாதாரம் பெரிய பிரச்சனை என்றனர். 55 விழுக்காட்டினர் ஆட்சியிலிருந்த தேசிய அரசாங்கங்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால் அவற்றின்மீது நம்பிக்கை யிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். பொருளாதார நிலைமைகள் மிகவும் சீர்கே டடைந்திருப்பதன்மேல் ஏற்பட்ட கோபமும், பெரிய அரசியல் கட்சிகள் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் தான்,  ‘ஆல்டர்நேடிவ் ஃபார் டச்லேண்ட்’(AfD), ‘தேசிய  முன்னணி’ (Rassemblement National) மற்றும் ஃபிராடெல்லி டி’இத்தாலியா (Fratelli d‘Italia) போன்ற  அதிதீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு வாக்குகள் குவியக் காரணமாகும். ஜெர்மனியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்று, பிரதானமான கட்சிகள் மீது ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாகவே 44 விழுக்காட்டினர் ‘ஆல்டர்நேடிவ் ஃபார் டச்லேண்ட்’(AfD) கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது. ஆட்சி யிலிருந்தவர்கள் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகளினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தியைத் தங்களுக்கு ஆதரவாகத் திருப்பி விடுவதில் அதிதீவிர வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இஸ்லாமிய வெறுப்பு

பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமல்ல; அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக (Islamo phobia) வெறுப்பை உமிழும் விதத்தில் வெறிப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகவும், சமூகத்தில் பல்வேறு பிரிவினருக்கிடையே ஆழமாகப் பிளவை ஏற் படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். ஆட்சி  அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காக சில தீவிர வலதுசாரிக் கட்சிகள் புலம்பெயர்ந்து வருப வர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியமர்த்தக் கூடாது என்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்திடும் விதத்தில் தங்கள் கோரிக்கைகளில் சமரசமும் செய்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள், மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, அனைத்து வலது சாரி சக்திகளையும் ஒன்றிணைக்க உதவிபுரிந்து வருகின்றன. பழைமைவாதத்தில் ஊறித்திளைத்த ஐரோப்பிய மக்கள் கட்சி (conservative European People’sParty), இத்தாலியின் ஜார்ஜியா மெலோனி யின் நவீன பாசிச கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதற்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்திருக்கிறது. இதன்காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, வர்த்தகர் ஆதரவு சட்டங்கள்  சில நிறைவேற உதவியிருக்கிறது. இதே நிலைப்பாடு தேசிய அரசியலிலும் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. பிரான்சின் மக்ரோன் நிர்வாகம் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழிலா ளர்கள் நடத்திவந்த கிளர்ச்சிப் போராட்டங்க ளுக்கு எதிராகவும், ‘மஞ்சள் சீருடையினர்’ நடத்தி வந்த போராட்டங்களுக்கு எதிராகவும் கடும் தாக்கு தல்களைத் தொடுத்தது. அவ்வாறு போராடு கிறவர்களை இஸ்லாமிய இடதுசாரிகள் என்றும், ‘வெளியில் இருந்து குடியேறியுள்ள துரோகிகள்’ என்றும் முத்திரை குத்தியது.   இந்த வார்த்தைகள் அனைத்தும் மரீ லீ பென் பயன்படுத்திய அதே வார்த்தைகளாகும். இவை அனைத்தும் தீவிர வலதுசாரிகள் தங்கள் தளத்தை விரிவுபடுத்த உதவியுள்ளன. சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, குடியரசுக் கட்சியின் 50 விழுக்காட்டு வாக்காளர்கள் மரீ லீ பென்னுடனான கூட்டணியை ஆதரித்திருப்பது தெரிகிறது.

ஒளிக்கீற்றாக இடதுசாரிகள்

இவ்வாறாக, ஐரோப்பா முழுவதும் ஒட்டு மொத்தமாக இருளடைந்துள்ள நிலையில், சில இடங்க ளில் ஒளிக்கீற்றுகள் தோன்றியிருப்பதையும் காண முடிகிறது. பின்லாந்தில், இடதுசாரிக் கூட்டணி (Vasemmistoliitto) 17.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இங்கே வலதுசாரிக்கட்சியான பின்ஸ் கட்சி (Finns Party) வாக்குகள் 6.2 விழுக்காடு குறைந்து, 7.6 விழுக்காடு வாக்குகளையே பெற்றி ருக்கிறது. டென்மார்க்கில் சோசலிஸ்ட் மக்கள் கட்சி (Socialist People’s Party) 17.4 விழுக்காடு வாக்குக ளைப் பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இது 2019இல் பெற்றிருந்ததைவிட 4.2 விழுக்காடு அதிகமாகும். இங்கே, ஆளும் சமூக ஜனநாயகவாதி கள் (Social Democrats) 5.9 விழுக்காடு இழந்து,  15.6 விழுக்காடு மட்டுமே பெற்றுள்ளனர். ஜெர்மனி யில் பிஎஸ்டபிள்யு (BSW) எனப்படும் பண்ட்னிஸ் சஹாரா வாகன்நெட் (Bundnis Sahra Wagen knecht) கட்சி, டீ லிங்க் (Die Linke)-இலிருந்து பிரிந்த பிறகு, சஹரா வாகன்நெட் (Sahra Wagenknecht) கட்சி 6 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்கட்சி வர்க்க அரசியலை வலி யுறுத்தும் ஒரு தளத்தை வைத்துள்ளது.   கிரீஸ், பெல்ஜியம், செக் குடியரசு ஆகிய நாடுகளில்  செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நன்கு செயல்பட்டு தங்கள் வாக்கு விழுக்காட்டினை உயர்த்திக்கொண்டி ருக்கின்றன. இந்நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை முன்னிறுத்தி, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் உரிய முறையில் தலையிட்டு, புலம் பெயர்ந்து வரும் மக்கள் குறித்து சரியான நிலைப் பாட்டை எடுத்ததன் காரணமாகவும், சிக்கன நட வடிக்கைகளுக்கு எதிராக சமரசமற்ற முறையில் போ ராட்டங்களை நடத்தியதன் காரணமாகவும் அவை மக்க ளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளன.   போர்ச்சுக்கல்லிலும், சைப்ரஸிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகள் குறைந்திருக்கின்றன. இது தொடர்பாக அவை தங்களை மறுஆய்வுக்கு உட் படுத்திக்கொண்டிருக்கின்றன. அவர்களின் ஆரம்ப கட்ட எதிர்வினை என்பது தாங்கள் நடத்திய போராட் டங்களை ஒருமுகப்படுத்திட அனைத்து முயற்சிகளை யும் மேற்கொண்டு, கட்சியை அமைப்புரீதியாக வலுப் படுத்துவது என்பதாகும்.

மக்கள் முன்னணி எழுகிறது

ஒட்டு மொத்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தேர்த லில் அதிதீவிர வலதுசாரிகள் வளர்ச்சியடைந்திருப்பது ஐரோப்பா முழுவதுமே மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.  அவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்ந்து இப்போது செயல் படத் துவங்கியுள்ளார்கள். பிரான்சில், மத்திய-இடது மற்றும் இடதுசாரிக் கட்சிகளான பிரான்ஸ் இன்சோ மிஸ் (the France Insoumise), சோசலிஸ்ட் கட்சி,  பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, லெஸ் எகாலஜிஸ்டுகள் (Les Écologistes) ஆகிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்கள் முன்னணி (Popular Front)யை உருவாக்கி, தீவிர வலதுசாரிகள் முன்வைத்துள்ள சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகி இருக்கின்றன. பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் அறி விக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரான்சில் ஆயி ரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பல்வேறு பேரணிகளுக்குப் பின், ஒரு வார காலத்திற்குள் இந்த மக்கள் முன்னணி உருவாகியுள்ளது. இந்தப் பேரணிகளில் மக்கள் தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சி குறித்து தங்களின் கவலையை வெளிப் படுத்தினர். இடதுசாரிகள் ஒன்றிணைந்திட வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்பினர்.   மக்கள் முன்னணி சார்பாக ஒரு வரைவு அறிக்கை (draft manifesto) வெளியிடப்பட்டிருக்கிறது. அதில்  குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல், பொதுத் துறைகளில் முதலீடுகளை அதிகரித்தல், ஓய்வு பெறுவது தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள சீர் திருத்தங்களை ஒழித்துக்கட்டுதல், பணக்காரர்க ளுக்கு விதிக்கப்பட்டிருந்த செல்வ வரிகளை மீண்டும் அமல்படுத்துதல், சூழலியல் திட்டமிடலை நோக்கி முன்னேறுதல் போன்ற உறுதிமொழிகள் அளிக்கப் பட்டிருக்கின்றன. மேலும், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.  

ஒன்றுபடுவது அவசியம்!

அதிதீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான வழி, அவர்கள் மேற்கொண்டு வரும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதுடன், அவர்கள் பின்பற்றிடும் சமூக மற்றும் கலாச்சாரக் கொள்கைகளையும் எதிர்த்து சமர் புரிந்திட வேண்டும்.  சுரண்டப்படுபவர்களின் ஒற்று மையை உருவாக்கி, பல முனைகளிலும் போராட்டங்க ளை நடத்துவதன் மூலம் மட்டுமே அதிதீவிர வலது சாரிகளை முறியடித்திட முடியும்.

ஜூன் 19, 2024, 
தமிழில்: ச.வீரமணி





 

 

;