articles

img

‘ராணுவக் கூட்டாளி’க்கு விருது... பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்....

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு  “லெஜியன் ஆஃப் மெரிட்” (“Legion of Merit”) என்னும் ராணுவ விருது வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக ஒருவிதமான ‘ஆர்வம்’ ஏற்பட்டிருக்கிறது. இந்த விருதானது அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதியால் அளிக்கப்படும் ஒரு ராணுவ விருதாகும். கடந்த காலங்களில் இதர நாடுகளிலிருந்து தங்களுக்கு உதவிய  ராணுவத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெனரல்கள், கமாண்டர் தலைவர்கள் முதலானவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்குத்தான், அல்லது, அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக ராணுவக் கூட்டணி வைத்துக் கொண்டவர்களுக்கு மட்டும்தான், இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 29 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு வெளியே எவரொருவருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை. உண்மையில், அமெரிக்கா, தங்களுக்கு உதவிய மற்றும் தாங்கள் கவுரவிக்க விரும்புகிற வெளிநாட்டுத் தலைவர்களுக்கு, 1963இல் தொடங்கப்பட்ட சுதந்திர ஜனாதிபதி பதக்கம் (Presidential Medal of Freedom) என்கிற விருதை வழங்குவதைத்தான் விருப்பமாகக் கொண்டிருந்தார்கள். இந்த விருது இதற்கு முன் 1985இல் இந்தியப் பிரஜையான அன்னை தெரசா அவர்களுக்கு மட்டும், வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், டிரம்ப், மோடிக்கு ஒரு ராணுவ மரியாதையைச் செய்திருக்கிறார். அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியில் புதிதாக சேர்ந்துகொண்டிருப்பதனை ஒப்புக்கொள்ளும் விதத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ராணவ சூழ்ச்சிக் கூட்டணி (strategic partnership) வலுவடைந்திருப்பதைக் காட்டும் விதத்தில் இந்த ‘லீஜியன் ஆப் மெரிட்’ விருது வழங்கப்பட்டிருப்பதாக இதற்கான மேற்கோள் (citation) கூறுகிறது. இந்த மேற்கோளின்படி, மோடி, இந்தியப் பிரதமர் என்ற விதத்தில் சிறப்பான சேவையைச் செய்திருக்கிறாராம். இது அமெரிக்காவின் கண்களுக்கு இந்தியாவை, அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாக மாற்றியிருப்பதில், அதன் “கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை” (LEMOA-“Logistics Exchange Memorandum of Agreement”) மற்றும் அதனைத் தொடர்ந்து அடித்தளம் அமைக்கக்கூடிய மேலும் இரு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளமையும் தீர்மானகரமான நடவடிக்கைகளாகும் என்று அறிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவும், ஜப்பானும்
டிரம்ப் இதேபோன்றே ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), சமீப காலம் வரை ஜப்பான் பிரதமராக இருந்த சின்சோ அபே (Shinzo Abe) ஆகியோருக்கும் கவுரவத்தை வழங்கி இருக்கிறார். நான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணிக்கு இம்மூன்று நாடுகளும் முக்கியமான அளவில் கருவிகளாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இந்த லீஜியன் பதக்கம் இம்மூன்று நாட்டுத் தலைவர்களுக்கும் அவர்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதத்தில் அளிக்கப்பட்டிருக்கின்றன. டிரம்ப்புடன் நெருக்கமான முறையில் அரசியல் அபிமானத்தை வெளிப்படுத்தக்கூடியவிதத்தில் மூன்று பேருமே வலதுசாரி தலைவர்களாவார்கள்.  

2019 செப்டம்பரில் ஹூஸ்டன் நகரில் நடந்த பேரணியில் டிரம்ப்பை மோடி வெகுவாகப் பாராட்டினாரென்றால், அதே மாதத்தில் நடைபெற்ற டிரம்ப்பின் பேரணியில் கலந்து கொள்வதற்காக, ஸ்காட் மோரிசன் ஓஹியாவில் வாபாகோனேடாவிற்கு போயிருந்தார். ஹூஸ்டன் பேரணியில் மோடி பேசும்போது  “இந்த முறையும் டிரம்ப் சர்க்கார்”தான் என்று பேசினார் என்றால், மோரிசன், “நாம் அனைவருமே ஒரே மாதிரியான கருத்துக்களையே பகிர்ந்துகொள்கிறோம்,” என்றார்.   சின்சோ அபேயைப் பொறுத்தவரை, அவர், டிரம்புடன் மிகவும் நெருக்கமாகவும் தனிப்பட்டமுறையிலும் உறவுகளைக் கொண்டிருந்தார். அவர், டிரம்பின் கோல்ஃப் நண்பருமாவார்.

டிரம்ப், இந்த பதக்கத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பிரேசிலின் ஜனாதிபதி ஜயிர் போல்சனாரோ (Jair Bolsonaro) போன்ற தன்னுடைய சித்தாந்த ரீதியான நண்பர்களுக்கே வழங்காமல், ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தியவர்களுக்கு மட்டும் வழங்கியிருப்பதிலிருந்தே, இது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் அடிப்படையான முடிவு என்பது தெளிவானமுறையில்  தெரியவருகிறது.

‘மிதக்கிறார்’ மோடி
வெள்ளை மாளிகையில் டிரம்ப் தான் கழித்த கடைசி நாட்களில் தன்னுடனிருந்து தனக்கு உதவிய, மைக்கேல் ஃப்ளின் போன்ற கிரிமினல் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் மன்னிப்புகளை வழங்கிட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  தனக்கு அடிமைச் சேவகம் செய்திட்ட கைக்கூலிகள் பலருக்கு செல்வம் கொழிக்கும் நிலைகளில் நியமனங்கள் செய்திருக்கிறார். அதேபோன்று தனக்கு உதவிய வெளிநாட்டு அரசியல் நண்பர்களையும் டிரம்ப் மறந்துவிடவில்லை. இந்த விருதினைப் பெற்றபின்னர் மோடி, ஜனாதிபதி டிரம்ப்பால் இந்த விருது வழங்கப்பட்டதால் தான் மிகவும் “சிறப்பாக கவுரவிக்கப்பட்டிருப்பதாகவும்”, அதற்காக அமெரிக்க அரசாங்கத்துழடன் தொடர்ந்து வேலை செய்வதற்கும், அமெரிக்க-இந்திய உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியாவின் 130 கோடி மக்களின் சார்பில் உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். எனினும், அமெரிக்க விருதின் பின்னணி குறித்து முறையான தகவல் மோடிக்கு அளிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை.

இதற்கு முன் இந்த விருதுகளைப் பெற்ற இந்தியர்கள் இருவர், 1950இல் ஃபீல்டு மார்ஷல் கரியப்பாவும், 1955இல் ஜெனரல் எஸ்.எம். ஸ்ரீநாகேஷும் ஆவார்கள். இவ்விருவருமே ராணுவத் தளபதிகளாக இருந்தவர்கள். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தின் அதிகாரிகளாக இருந்தவர்கள். அந்த நாட்களில், இந்த லீஜியன் பதக்கங்கள், உலக அளவில் பல ராணுவப்படைகளின் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்பதக்கத்தைப் பெற்றவர்களில் நேபாள ராணுவத் தலைவரும் ஒருவராவார். கடந்த முப்பது ஆண்டுகளாக இந்த விருது எவருக்கும் வழங்கப்படவில்லை. இப்போது, டிரம்ப், திடீரென்று இதனைப் புதுப்பித்து, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அளித்திருக்கிறார். இந்த ஆண்டின் செப்டம்பரில் இந்த விருது மறைந்த குவைத் மன்னருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. டிரம்ப்பைப் பொறுத்தவரை, தன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், சீனாவிற்கு எதிரான தன்னுடைய வன்மமான சதிராட்டங்களில் தனக்கு உதவிய வெளிநாட்டு நண்பர்களுக்கு நன்றி சொல்லும் வழியில் இந்த விருதினை வழங்கியிருக்கிறார்.

அமெரிக்க ராணுவத் தலைமையகம் (Pentagon), தங்களுடைய ராணுவக் கூட்டணியில் வேண்டிய அளவிற்குக் கூலிப்படையினரைச் சேர்த்திடும் குறிக்கோளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த விருதினைப் பெற்றதன்மூலம் மோடி மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ளபோதிலும், துரதிர்ஷ்டவசமாக இந்த விருதானது, அமெரிக்காவின் இளைய ராணுவக் கூட்டாளியாக இந்தியா மாறியிருக்கிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்வதேயாகும்.

டிசம்பர் 23, 2020 - பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

தமிழில்: ச. வீரமணி

;