articles

img

அமெரிக்காவின் ‘நூற்றாண்டுக் கனவு’ ஆப்கானிஸ்தானில் படுதோல்வி...

தலிபான்கள் 20 ஆண்டுகள் கழித்து  மின்னல் வேகத்தில் காபூலை எளிதாக கைப்பற்றி இருப்பதுஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு தவிர ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.முன்பு போலவே இப்போதும்இஸ்லாமிய ஆப்கன் அமீரகம் என்று ஆப்கானிஸ் தானுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

1996 இல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போதுஅடிப்படைவாதிகளுக்கு எதிராக கடுமையாக போராடிய ஜனாதிபதி நஜிபுல்லாவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனர். இப்போது தமக்கும் அதே கதி ஏற்படும் என்று அஞ்சி நாட்டை விட்டு ஓடி விட்டார் ஜனாதிபதி அப்துல்லா கனி. இத்தனைக்கும் கனி நாட்டை விட்டு ஓடுவதற்கு முந்தைய நாளில்தான் தலிபான்களை காபூல் வாசலிலேயே தடுத்து நிறுத்துவோம் என்று சவால் விட்டார்.2020 இறுதியிலேயே 60 சதவீத ஊரகப் பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. தலிபான்கள் காபூல் நகர கதவுகளை பலமாக தட்டிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் பணம், ஆயுதத்தால்தாங்கிப் பிடிக்கப்பட்ட ஆப்கன் ராணுவம் தலிபான்களை எதிர்க்கவே இல்லை. ஆயுத பாணியான மூன்று லட்சம் ஆப்கன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். அல்லது நிபந்தனையின்றி சரண டைந்தனர்.டிரம்ப் 2019-லேயே தலிபான்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டார். தலிபான்களும் மற்றவர்களும் தங்களுக்குள் அதிகாரப் பிரிவினை செய்வது மட்டும்தான் பாக்கி இருந்தது. தலைநகருக்குள் நுழைந்ததும் தலிபான்கள் சிறைகளை திறந்துவிட்டனர். அமெரிக்கா மற்றும் முந்தைய அரசால் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்தனர்.

அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி
ஒருவகையில் அமெரிக்கா 1975இல் அடைந்த வியட்நாம் தோல்வியை விட  ஆப்கானிஸ்தான் தோல்வி அவமானகரமான தோல்வி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.அமெரிக்கா - நாட்டோ படைகள் ஆப்கனில் இருந்துவிலக்கப்பட்டதும், குறைந்தது ஒன்றரை ஆண்டுகளாவது    தலிபான்களை தாக்குப்பிடிக்கும் திறன் ஆப்கன் ராணுவத்திற்கு உண்டு என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள்நம்பின. சிஐஏ, ராணுவம், அரசு நிறுவனங்கள் அனைத்தும்தலிபான்களை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது உலகநாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி நாட்டோ நாடுகள் முதல் எந்த நாடும் அமெரிக்காவை நம்பமாட்டார்கள்.ஆப்கானிஸ்தான் தேசத்தை நிர்மாணிப்பதோ, அங்கு ஜனநாயகத்தை உருவாக்குவதோ அமெரிக்காவின் லட்சியம் அல்ல என்று இப்போது ஜோ பைடன் கூறுகிறார். ஆனால் ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கு காரணமாகச் சொன்னது அங்கு ஜனநாயகத்தையும் முன்னேற்றத்தையும், அமைதியும் கொண்டுவருவதுதான். தீவிரவாதத்தை ஒழிப்பேன்என்று சபதம் செய்தார் புஷ்.சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றா மல், தலிபான்கள் மற்றும் மற்ற குழுக்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு முடிவாகாத நிலையில் உள்நாட்டுப்போர் வந்தாலும் கூட ஆப்கானிஸ்தானிலிருந்து 2021 ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்கா - நாட்டோ படைகளை விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தார் ஜோ பைடன்.

அமெரிக்காவின் அவமானகரமான ஆப்கானிஸ்தான் தோல்விக்கு  கெடுபிடி போருக்குப் பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட வெளியுறவுக்கொள்கையும், தோல்விக்கு மேல் தோல்வியே அடைந்த போர் வெறிக் கொள்கையுமே காரணங்களாகும்.உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்கு பின்னர் ஜார்ஜ் புஷ் அறிவித்த தீவிரவாதத்தின் மீதான உலகளாவிய போர் என்ற ஊதிப் பெருக்கப்பட்ட கொள்கைக்கு கிட்டத்தட்ட முடிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை வகுப்பாளர்கள் கெடுபிடி போருக்குப் பின்னர் இனி அமெரிக்காவின் நூற்றாண்டு தான் என்று தவறான முடிவுக்கு வந்தனர்.

இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளதாக கூறி மனிதத்தன்மையற்ற பொருளாதார தடைகளை விதித்தனர். அதனால் பத்தாயிரக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தனர். பின்னர் இராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது. ஒரு பில்லியன் (நூறு கோடி) டாலர் செலவில் 1625 வல்லுனர்களை கொண்ட குழு 1700 இடங்களில் இராக்கை சல்லடையாக சலித்து பார்த்து பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை, கிடையாது என்று உறுதி செய்தன. உலகில் எங்கு பிரச்சனை நடந்தாலும் அங்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப முடிவானது. இதுவரைஅமெரிக்கா தோற்ற போர்கள் அல்லது டிராவில் முடிந்த போர்கள் கணக்கற்றவை.

சில முக்கியமான போர்கள்:

கொரியப் போர்
கொரியப் போரில் (1950-53) நேருவின் அறிவுரையை அமெரிக்கா கேட்டிருந்தால் 1950 அக்டோபரிலேயே போர் முடிந்திருக்கும் 38 ஆவது அட்சக்கோடு எல்லையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் சீனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை உடனடியாக முடிவு கொண்டு வரலாம் என்று நேரு அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனுக்கு ஆலோசனை வழங்கினார். ட்ரூமன் கேட்கவில்லை. ஆனால் மூன்று ஆண்டுகள் தேவையின்றி போர் நீடித்து பல லட்சம் கொரியர்கள், 54 ஆயிரம் அமெரிக்க போர் வீரர்கள்   இறப்புக்குப் பின்னர், ஏறக்குறைய நேரு சொன்ன தீர்வு அடிப்படையிலேயே  அமைதி காணப்பட்டது.

வியட்நாம் போர்
கடுமையான சேதம்,  உள்நாட்டு மக்களின் எதிர்ப்புக்குபின்னர் 1975இல் அமெரிக்கா, வியட்நாம் போரை முடித்துக்கொண்டு அவமானகரமாக வெளியேறியது. அமெரிக்கதூதுவர் ஹெலிகாப்டரில் பறந்து சமாதான கொடியைபறக்க விட்டு போரை முடித்த கேவலம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரின் முடிவுஅமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்று உலகளாவிய தீவிரவாத பிரச்சனையாக மாற்றியுள்ளது. 2003இல் இராக் வெற்றியைக் கொண்டாடுவதாக ஜார்ஜ் புஷ் திமிர்த்தனமாக அறிவித்தார். அதன் பின்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. ஒரு லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் பல லட்சம் மக்களை கொண்ட பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.2019 ஐ.எஸ் . தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர்அல் பாக்தாதி கொலை செய்யப்பட்டுவிட்டார்; இனி உலகம் பாதுகாப்பாக இருக்கும் என்று டிரம்ப் அறிவித்தார். ஆனால்  ஐ.எஸ் . அல்லது அதிலிருந்து உருமாறியபல்வேறு தீவிரவாத அமைப்புகள் இன்று மாலி, நைஜர்,நைஜீரியா, சோமாலியா, காங்கோ என பல்வேறு நாடுகளிலும் தீவிரமாக செயல்படுகின்றன. அமெரிக்காவின் குவாண்டநாமோவில் அமெரிக்கா 750 பேர்களை கொடூரமான முறையில் சித்ரவதை செய்து வருகிறது. அவர்கள் மீது எவ்விதமான வழக்கோ  விசாரணையோ இதுவரை நடைபெறவில்லை.

மனநோயாளி அமெரிக்கா
உலகின் மீதான ஆதிக்கம் என்ற மோசமான நோயிலிருந்து இதுவரை அமெரிக்கா குணமடையவில்லை. இருப்பினும் சீனாவுடனான கடுமையான போட்டி மற்றும்தற்போது ஆப்கனில் ஏற்பட்டுள்ள தோல்வி ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ளுமா? நோயிலிருந்து முழுமையாக குணம் அடையுமா?இதுவரை அமெரிக்கா, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் 6.4 டிரில்லியன் டாலர் செலவு செய்துள்ளது. உலகில்  எந்த நாடும் பொறாமைப்பட முடியாத அளவுக்கு உலகின் முதல் கடன்கார நாடாக அமெரிக்காநிற்கிறது.

தெற்கு மத்திய ஆசிய மண்டல நாடுகளின் நிலைப்பாடுகள்
ஆப்கானிஸ்தானை சுற்றி அமைந்துள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே தலிபான்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வருகிறது. சீனா, ரஷ்யா, ஈரான்,பாகிஸ்தான், துருக்கி, மத்திய ஆசிய நாடுகள் தங்கள்நலனை முன்னிட்டு புதிய தலிபான் அரசுடன் தொடர்பு கொள்ள ஆர்வமாக உள்ளன. மேற்குலக நாடுகள் எதார்த்த நிலைமை புரியாமல் தடுமாறுகின்றன. அமெரிக்கா ஆப்கன் அரசின் 9.4 பில்லியன் டாலர் பணத்தை முடக்கி வைத்துள்ளது. இங்கிலாந்து தலிபான்கள் மீது அழுத்தம் கொடுக்க பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. சர்வதேச நிதியம்ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் 460 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணிகளுக்கு தடைவிதித்துள்ளது.

தலிபான்கள் மனமாற்றம்?
புதிய தலிபான்களின் அரசு முந்தைய தலிபான் அரசு போன்று இருக்காது என்று நம்பப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ் .அமைப்புடன் தலிபான்கள் கடுமையாக மோதியுள்ளனர். சில மூத்ததலிபான் தலைவர்கள் சவூதி அரேபியாவில் வஹாபிஸ அடிப்படைவாதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். சமீப காலம் வரை தலிபான்களின் தீவிர ஆதரவாளராக இருந்த பாகிஸ்தான் முன்புபோல தலிபான்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது என்று கருதப்படுகிறது.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பற்றிய பிரெஞ்சு அரசியல் ஆய்வாளர் ஜீன் பெர்ரி 2000 ஆம் ஆண்டு தலிபான்களிடமிருந்து 2021 ஆண்டு தலிபான்கள் வேறுபட்டு இருப்பார்கள் என்று கூறுகிறார். இந்த மாற்றத்திற்கு காரணம்தலிபான்களின் மத பழமைவாதம் மட்டுப்பட்டு விட்டது என்று அர்த்தமல்ல. 2001இல் கண்மூடித்தனமாக அல்கொய்தாவை ஆதரித்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது போன்ற தவறை மீண்டும் தலிபான்கள் செய்யமாட்டார்கள் என்றுஜீன் பெர்ரி கூறுகிறார். தலிபான் மூத்த செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தலிபான்களின் தத்துவம் மாறவில்லை; ஆனால் தங்களின் அனுபவம், முதிர்ச்சி, அரசியல் நுண்ணறிவு ஆகியவற்றின் பலனாக தங்களிடம்பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மற்ற நாடுகளின் நலன்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்பட மாட்டாது; பல்வேறு இனக் குழுக்களையும் உள்ளடக்கிய ஆட்சி நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார். ஷியாக்கள் முகரம் நிகழ்ச்சியை தொடங்க உள்ளதைத் தொடர்ந்து முதல்முறையாக தலிபான்கள் தங்களின் குழு ஒன்றை அனுப்பி உள்ளனர். இதுவரை சிறுபான்மை இஸ்லாமிய ஷியா  பிரிவு மக்களை கடவுள் மறுப்பாளர்களாக தலிபான்கள் கருதிவந்தனர்.

இந்திய முதலீடுகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மூன்று பில்லியன் டாலர் அளவுக்கு சாலைகள்,அணைக்கட்டுகள், மருத்துவமனைகள் ஆகிய கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்துள்ளது. முன்பு, இப்பணிகள் நடைபெற்றபோது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தெற்காசிய மண்டலத்தில் உள்ள நாடுகளும்மற்ற உலக நாடுகளும் போதை மருந்துகடத்தல், அகதிகள் வருகை ஆகியவை குறித்து கவலை அடைந்துள்ளன. எனவே புதிய தலிபான் ஆட்சியுடன் பல்வேறு நாடுகளும்தொடர்பு கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியா மட்டுமே மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்பட்டு நிற்கிறது.

ரஷ்யா - சீனா, பாகிஸ்தானில் தலிபான்கள் தூதுக்குழுவினர்
சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை கொண்ட, பிரதிநிதித்துவ ஆப்கன் அரசுக்கு மட்டுமே தாங்கள் ஆதரவளிப்போம் என மாஸ்கோ, பெய்ஜிங் அறிவித்துள்ளன. அனைத்துப் பகுதி  மக்களையும் உள்ளடக்கிய புதிய ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவளிப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.தலிபான் மூத்த தலைவர்கள் இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் செய்து தங்களது புதிய அரசு கடந்தகால தவறுகளை இனி செய்யாது என உறுதிமொழி அளித்துள்ளனர்.ஆட்சியைப் பிடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகதலிபான் உயர்மட்டக்குழு சீனா சென்றது. அவர்களிடம் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, தலிபான்கள் சமாதான பேச்சுவார்த்தை பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போதைய வெற்றியை ராணுவ வெற்றியாக கொண்டாடாமல் சமாதானத்துடன் பல சக்திகளையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு ஆப்கனியர் களால் மட்டுமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும்கூறியுள்ளார். சீனாவின் ஜிங் ஜியாங் மாநிலத்தில் உள்ளஉய்கார்  தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் இடமளிக்காது என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அதிகமான அளவில் முதலீடு செய்ய சீனாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் தலிபான்கள். சீனாவின் கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்திற்கு தலிபான்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈரான்
ஈரானில் அகதிகள் குவிதல், போதை மருந்து கடத்தல் குறித்து ஈரான் கவலை அடைந்துள்ளது. முந்தையதலிபான் அரசிடம் ஈரானுக்கு பதற்றமான உறவு இருந்தது.அப்போது ஈரான் தூதரக அலுவலர்கள் 9 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். தலிபான்கள் எதிரிகள் மீது குற்றம்சாட்டினர். ஈரான் போருக்கு தயாரானது. தற்போது எச்சரிக்கை உணர்வுடன் தலிபான் ஆட்சியை வரவேற்றுள்ளது ஈரான். அமெரிக்கத் தோல்வியானது, ஆப்கானிஸ்தானில் மக்களின் வாழ்க்கையை புனரமைக்கவும், பாதுகாப்பு, நிலையான அமைதியாகமாற்றம் காண வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. முந்தைய தலிபான் ஆட்சியின் போது தாஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகின. இனி மத்திய ஆசிய நாடுகள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படும் தளமாக ஆப்கானிஸ்தான் இருக்காதுஎன்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் நிலைப்பாடு
தலிபான்கள் இந்திய தூதரகத்தின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தும் அமெரிக்க உறவு காரணமாக இந்தியஊழியர்கள்  திரும்பப் பெறப்பட்டனர். இந்த இக்கட்டானநேரத்தில் இந்திய தூதரகத்தை மூடியது குறித்து பல்வேறுஅரசியல் பார்வையாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு தலிபான்கள் அரசு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என்று அறி வித்துள்ளது.ஆனால் மோடியின் அரசு தலிபான்களின் தீவிரவாத ஆபத்து தொடர்வதாகவும் அனைத்துவிதமான பயங்கரவாதங்களையும் எதிர்க்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உபதேசம் செய்து வருகிறது. என்ன நேர்ந்தாலும் சரி- இறுதி வரையில் அமெரிக்க - நாட்டோ படைகள்ஆப்கானிஸ்தானில் போரிட வேண்டும் என்றே மோடி அரசு விரும்பியது. இப்போதும்கூட அமெரிக்க- நாட்டோ படைகள் விரைவாக வெளியேறியது குறித்து புகார் தெரிவித்து வருகிறது.தேர்தல் லாபத்திற்காக ஆப்கானிஸ்தான் விவ காரத்தை தனது பிரிவினைவாத அரசியலுக்கு பயன் படுத்த  பாஜக  திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்துவரும் இந்துக்கள், சீக்கியர்களுக்கு மட்டுமே இ- விசா வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று மோடி அரசு  அறிவித்துள்ளது கையறுநிலையில் வரும் மற்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு  தவறான சமிக்ஞையைஅளிக்கும்.

தவிர்க்கப்படவேண்டிய பின்விளைவுகள்
தலிபான்களின் எழுச்சி காஷ்மீரில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். உலகின் மிகப்பெரிய ராணுவத்தை தலிபான்கள் வெற்றி கண்டுள்ளது உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு உற்சாகம் அளிக்கும். 1990களில் தலிபான் ஆட்சியில் இருந்தபோது லஷ்கர்-இ-தொய்பா மற்றும் காஷ்மீர் தீவிரவாத குழுக்களுக்கு ஆப்கனில் பயிற்சி அளிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது தலிபான்களின் நிலையில் மாற்றம் காணப்படுகிறது.அமெரிக்க- நாட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதும், தலிபான்களின் ஆட்சி தவிர்க்கமுடியாதது என்று உணர்ந்ததால் ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் தங்களது நாடுகளின் நலன்களை முன்னிறுத்தி தலிபான்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றன. ஆனால், இந்த மண்டலத்தில் இல்லாத தொலைதூர அமெரிக்காவுடன் உறவு கொண்டுள்ள மோடியின் அரசு மட்டுமே இதுவரை தலிபான்களுடன் எந்தவிதமான அர்த்தமுள்ள உரையாடல்களையும் தொடங்குவதற்கு உறுதியாக மறுத்து வருகிறது. தலிபான்களுக்குஎதிரான வடக்கு கூட்டணி அமைப்புகளுக்கு உலக நாடுகள் ஆதரவு தரவேண்டும் என்று சில  மீடியாக்கள் இங்கு பொறுப்பற்றுப் பேசுவதை மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடியின் அரசு இனியேனும் விழித்துக்கொண்டு தனதுவெளியுறவுக் கொள்கைகளை திருத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் செப்.10, 2021

தமிழில் தொகுப்பு : ம.கதிரேசன் 

பத்திகள் தொடர்ச்சி அனைத்தும் ஒரே தொகுப்பில் கொடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு...  

;