articles

img

‘அவளுக்கு பிடித்தமானது நமது கட்சி’ - உ.வாசுகி

“நமது கட்சியின் அகில இந்திய மாநாடு, ஒரு கொள்கைத் திருவிழாவாக மாறி, நமது தோழர்களின் உள்ளங்களில் புதிய உணர்வுகளை ஊட்டுகிறது. இந்த மாநாடு, நமது கட்சியின் வரலாறு, தியாகம் மற்றும் கொள்கைகளை மீண்டும் நினைவூட்டும் ஒரு விழாவாக அமைகிறது. ‘கொள்கைத் திருவிழா தோழர்’ தோழர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, “வணக்கம் தோழர் கொள்கைத் திருவிழா” என்று விளித்து, நமது கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இந்த வாழ்த்து, நமது கட்சியின் ஒற்றுமை மற்றும் புரிதலை வெளிப்படுத்துகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற வரவேற்புக்குழு கூட்டத்தில், “வணக்கம் தோழர் குடும்பத்தோடு”, “வணக்கம் தோழர் கிளையின் இலக்கு” என்று விளிப்பது என முடிவெடுத்துள்ளார்கள். இது நமது கட்சியின் குடும்பத்தை முழுமையாக ஈடுபடுத்தும் ஒரு புதிய முயற்சியாகும். கொள்கைத் திருவிழா என்பது, மார்க்சியக் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஒரு விழாவாகும். நமது தோழர்கள், பேருந்துகளில் செல்லும் போது, அமைப்பு விவகாரங்களை பேசுவதை தவிர்த்து, “வணக்கம் கொள்கைத் திருவிழா தோழர்” என்று விளித்து பேச வேண்டும். இது நமது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் பரப்பும் ஒரு  முக்கியமான வழியாகும். அருகில் இருப்பவர் விளக்கம் கேட்கும்போது, நமது கட்சியின் வரலாறு, தியாகம் மற்றும் மாநாடு பற்றி விளக்கி பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக அமையும்.

கட்சி நிதி உண்டியல்

குடும்பநிதி என்பது, நமது கட்சியின் ஒரு முக்கியமான பகுதியாகும். மதுரையில் அனைத்து கட்சி குடும்பங்களுக்கும் உண்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து உண்டியலை நிரப்ப வேண்டும். மார்ச் 15 வரை உண்டியலில் சேருவதை கொண்டு வந்து கட்சி நிதியாக வழங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். கட்சி உறுப்பினர்களை மட்டுமல்ல, கட்சிக்குடும்பத்தை அகில இந்திய மாநாட்டு பணிகளில் ஈடுபடுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது.

தங்கையின் உண்டியல்

உதகையில் கட்சிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமி இறந்து விடுகிறார். அதன்பின் சில நாட்கள் கழித்து உண்டியலோடு சிறுமியின் மூத்த சகோதரி கட்சி அலுவலகத்திற்கு வந்து,  உண்டியல் காசுகளை கட்சி நிதியாக தந்துள் ளார். அப்போது அவர் சொன்ன வார்த்தை உலுக்கிவிட்டது; “என்னுடைய தங்கை எப்போதும் உண்டியலை நிரப்புவார். அதன்பின் அவளுக்கு பிடித்தமான விஷயங் களை செய்வோம். இந்தமுறை உண்டியல் நிரம்பி யிருக்கிறது. ஆனால் அவள் இல்லை. எனவே, அவளுக்கு பிடித்தமானது என்னவென்று யோசித்தோம். அவளுக்கு பிடித்தமானது நமது கட்சி. ஆகவே, உண்டியலை கட்சி நிதியாக தருகிறோம்”  இந்த உணர்வுமயமான நிகழ்வை தீக்கதிர் நாளிதழில் தோழர் ஆர்.பத்ரி பதிவு செய்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளை தோழர்கள் பதிவு செய்ய வேண்டும். வெறுங்கையோடு அனுப்பக்கூடாது திருப்பூர் மாவட்டத்தில் ஒரு தோழர் கடுமை யாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அப்போதும், தனது மகனிடம் மடங்கிய இரண்டு 100 ரூபாய் நோட்டுகளை  கொடுத்து, “கட்சி மாநாட்டு நிதி  கேட்டுள்ளது; தோழர்கள் வந்தால் வெறுங்கையோடு அனுப்பக்கூடாது. இந்த பணத்தை கொடுத்துவிடு”  என்று கூறியுள்ளார். அடுத்த சில  நாட்களில் அவர் இறந்து விடுகிறார். உடல் உபாதை, வலியை பொருட்படுத்தாமல், மரணத்தின் விளிம்பில் கூட என்னுடைய கட்சி, என்னுடைய நிதி என்ற முறையில், உணர்வோடு அந்த பணத்தை கொடுத்துள்ளார்.  இது எத்தகைய தோழமை! கட்சியின் மீது எப்பேர்பட்ட அபிமானம்! விசுவாசம்! நமது கட்சி எத்தகைய மகத்தானது!

இளம் தோழரின் உணர்வலை

விழுப்புரத்தில் நமது கட்சியின் 24வது மாநில மாநாடு ஜனவரி மாதம் நடந்தது. மாநாட்டிற்கு சென்னை தாம்பரம் பகுதிக்குழுவைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு பயிலும் இளந்தோழர் ஆதித்யா, தனது சைக்கிளில் கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் 135 கிலோ மீட்டர் சைக்கிளை மிதித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் மாநாட்டு மேடையில் அழைத்து அவரை பாராட்டினார். எந்தஒரு மாநிலத்திலும் இதுபோன்று நான் கேட்டது இல்லை என்று பிருந்தாகாரத் வியந்து கூறினார்.  தோழர் ஆதித்யாவின் தந்தை கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு உறுப்பினர். நெடுஞ்சாலையில் பயணிக்க, பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, நள்ளிரவில் மாவட்டச் செயலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு, குடும்பத்துடன் பேச வைத்து  சைக்கிளில் வந்து சேர்ந்தார்.  இளந்தோழரிடத்தில் நமது கட்சியின் அரசியல், தியாகம், கொள்கை எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர வேண்டும்.

உண்டியலை நிரப்பிய தொழிலாளிகள்

ஒரு மாவட்டத்தில் ஏழைக் குடும்பங்கள் நிறைந்த ஒரு பகுதி உள்ளது. அதற்கு முன்பாக நடுத்தர வர்க்கத்தினர் வாழும் பகுதியில் உண்டி வசூல் செய்கின்றனர். நிர்ணயித்த இலக்குப்படி அங்கு உண்டியல் வசூல் நடைபெறவில்லை. அதன்பிறகு, தொழிலாளர்கள் குடியிருப்பில் வசூலிக்க சென்றனர். இலக்கை விட தொழி லாளிகள் உண்டியலை நிரப்பினார்கள். இந்த வசூ லில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. 80ரூபாயில் 50 ரூபாய் இஸ்திரி போடும் தொழிலாளிகள் பணத்தை  வாங்கி, விரிப்புக்கு கீழே போட்டு வைத்திருப் பார்கள். நமது தோழர்கள் உண்டியலை நீட்டி யதும், விரிப்புக்கு கீழே இருந்த 80 ரூபாயில் 50 ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டுள்ளார். ஒருவரிடம் இருந்து எவ்வளவு கிடைத்தது என்பதல்ல, தனது ஒருநாள் வருவாயில் எவ்வளவு கொடுத்தார் என்பதுதான் முக்கியம்.

‘முதலாளி’யை விஞ்சிய தொழிலாளி

ஒருவீட்டில், கட்சி பற்றி, கட்சி நடத்திய  போராட்டங்கள், மாநாடு போன்றவற்றை யெல்லாம் கூறி தோழர்கள் உண்டியலில் பணம் கேட்க, வீட்டின் உரிமையாளர் 50 ரூபாய் போடுகிறார். தோழர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த, அந்த வீட்டில் வேலை செய்யும் வீட்டுவேலைத் தொழிலாளி எழுந்து வந்து உண்டியலில் 100 ரூபாய் போட்டார். 1953ஆம் ஆண்டு மூன்றாவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் அரசியல் தீர்மானத்தின் கடைசி பகுதியில், “நாம் வளர வேண்டும். நமது வளர்ச்சியின் அளவுகோல் என்ன? நாம் நடத்துகிற போராட்டத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்பது அல்ல. மாறாக, கட்சியின் சொந்த வளர்ச்சி, வர்க்க வெகுஜன அமைப்புகளுடைய வளர்ச்சி, பொதுமக்கள் மத்தியில் நிதிக்காக செல்லும் போது கிடைக்கிற நிதி உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது” என்று குறிப்பிட்டுள்ளது. எனவேதான், நாம் வெகுஜன நிதி வசூல் இயக்கத்தை நடத்துகிறோம். மக்களைச் சந்தித்துக் கொண்டே இருப்போம். மார்க்சியக் கொள்கைகள் பரப்புவோம். சிபிஎம் தென்சென்னை வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்தில் பேசியதில் இருந்து... தொகுப்பு : செ.கவாஸ்கர்