articles

img

தேனீக்களின் ஜியோமெட்ரி - இரமணன்

தேனீக்கள் மற்றும் குளவிகள் கூட்டம் ராணி தேனீக்கள், அவை பிரசவிக்கும் வாரிசுகள் மற்றும் அவற்றை  வளர்க்கும் வேலைக்கார ஈக்களைக் கொண்டது. தேனீக்களின் கூடுகள் மெழுகினாலும் குளவிகள் கூடுகள்  காகிதத்தாலும் அறுகோண வடிவில் அமைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வேலைக்கார தேனீக்களை வளர்ப்பதிலிருந்து மாறி இனப்பெருக்கம் செய்யும் ஆண் தேனீக்களையும் புதிய ராணி தேனீக்களையும் வளர்ப்பதற்கு மாறுகின்றன. இனப்பெருக்கம் செய்யும் தேனீக்கள் வேலைக்கார தேனீக்களை விட பெரியது என்பதால் அறுகோண செல்கள் பெரிதாக வேண்டும்.   சிறிய அளவிலான செல்களையும் பெரிய அளவிலான செல்களையும் இணைப்பது சிக்கலானது. இதை எவ்வாறு அவை எதிர்கொள்கின்றன என்பது ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவை ஐந்து முக செல்களையும் ஏழு முக செல்களையும் பக்கம் பக்கமாக உண்டாக்குகின்றன. இவை இரண்டும் இணையும்போது மற்ற செல்களுடன் இணைவதற்கு ஐந்து ஐந்து பக்கங்கள் கிடைக்கின்றன. அறுகோண செல்களிலும் இவ்வாறே ஐந்து பக்கங்களே இணைவதற்கு கிடைக்கும். எனவே எந்த வித சிரமும் இல்லாமல் அவை புதிய பெரிய அறுகோண செல்களை பெரிய ஏழுமுக செல்களுடன் இணைக்கின்றன. அலபாமாவிலுள்ள ஆபர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியியலாளர் மைக்கேல் ஸ்மித் மற்றும் அவரது குழுவினர் ஐந்து வகை தேனீக்கள்  மற்றும் நான்கு வகை குளவிகள் கூட்டின் 115 பிம்பங்களை ஆய்வு செய்தனர். 

தானியங்கி பிம்ப ஆய்வுக் கருவி ஒன்றின் துணையோடு 22745 செல்களின் தரவுகளை சேகரித்தனர். இந்த தரவுகளில் செல் சுவர்களின் உயரம் மற்றும் ஒவ்வொரு செல்லுக்கும் பக்கத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கை ஆகியவை கிடைத்தன. இவற்றில் அறுகோணம் இல்லாத செல்களின் தரவுகளும் அடங்கியிருந்தன. இதற்கு முன் ஆய்வு செய்தவர்கள், இந்த ஒழுங்கற்ற செல்களின் தரவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவற்றை கையாலேயே அளக்க வேண்டும். அவை முக்கியமற்றவை என்று கருதினார்கள். ஸ்மித் குழுவினர் அதை மிகுந்த சிரமப்பட்டு கணக்கிட்டனர். இந்தக் குழுவிலுள்ள கணினி அறிவியலாளர் நில்ஸ் நேப் இந்த உத்தியின் கணித மாதிரியை வடிவமைத்தார். அதிலிருந்து தேனீக்களும் குளவிகளும் செய்வது சரியான  ஜியோமெட்ரி தீர்வுக்கு ஏறாற்போல் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட தேனீக்களும் குளவிகளும் பரிணாமத்தில் 179 மில்லியன் வருடங்கள் இடைவெளி கொண்டவை. ஆனால் இரண்டுமே அறுகோண செல்களின் அளவு மாறுபாட்டை சமாளிக்க பரிணாம வளர்ச்சியில் ஐந்து-ஏழு விதியையே பயன்படுத்தியுள்ளன. படிநிலை வளர்ச்சியானது  சவால்களை சரியான வழியில் தீர்த்துக் கொள்ளும் அணுகுமுறை கொண்டது.