articles

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்

பிரிக்ஸ் நாடுகளின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் தாத்தர்ஸ்தான் குடியரசின் தலைநகரான கசானில் நடந்து முடிந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என ஐந்து நாடுகள் கொண்ட அமைப்பாக தொடங்கிய பிரிக்ஸ் இன்று மேலும் பல தேசங்கள் இணைந்ததன் மூலம் விரிவாக்கம் அடைந்துள்ளது.  பிரிக்ஸ் அமைப்பு என்ன சாதித்தது? அது அமெரிக்கா உட்பட மேற்குலகுக்கு எதிரானதா? உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பிரிக்ஸ் அமைப்பிடம் தீர்வு உள்ளதா? இவையெல்லாம் முன்வரும் முக்கிய கேள்விகள். மேற்கத்திய ஊட கங்கள் பிரிக்ஸ் அமைப்பின் செயல்களை “கனவுலக சாத்தியங்கள்” என வர்ணிக்கின் றன. எனினும் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது எனில் மிகை அல்ல. 

ரஷ்யா வெளிப்படுத்திய முக்கியத்துவம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு ரஷ்யா மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. மாநாட்டின் ஏற்பாடுகளை கவனிக்க ஒரு அமைச்சருக்கு தனியாக பொ றுப்பு தரப்பட்டது. வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும் ஜனாதிபதி புடினும் நேரடியாக இந்த மாநாட்டின் ஏற்பாடுகளை கவனித்தனர். ரஷ்யா முழுவதும் மாநாடு பற்றிய  விவரங்கள் மிகப்பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டன. ரஷ்ய மக்கள் இந்த மாநாட்டை தமது மாநாடு என எண்ணும் அளவுக்கு இந்த பிரச்சாரம் இருந்தது. உச்சி மாநாட்டுக்கு முன்பு பல்வேறு முன் தயாரிப்பு பணிகள் பரவலாக நடைபெற்றன. மேற்குலக ஊடகங்கள் இந்த நிகழ்வை இருட்டடிப்புச் செய்யும் என்பதை கணித்த ரஷ்யா இந்த செய்தியை உலகமெங்கும் கொண்டு செல்வதற்கு பல ஏற்பாடுகளை செய்தது.

ஏன் ரஷ்யா பிரிக்ஸ் உச்சி மாநாடுக்கு  இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

ஏனெனில் உக்ரைன் போரை காரணம் காட்டி ரஷ்யாவை தனிமைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எடுத்தன. ரஷ்யா தனிமைப்பட்டுவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி பைடன் கொக்கரித்தார். புடினை தனிப்பட்டமுறையிலும் கூட பைடன் விமர்சித்தார். சுமார் 5000க்கும் அதிக மான பொருளாதாரத் தடைகளும் வர்த்தகத் தடைகளும் ரஷ்யா மீது திணிக்கப் பட்டன. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கிக் கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் திடீரென வாங்குவதை நிறுத்தின. இது ரஷ்யாவின் பொருளா தாரத்தை சீர்குலைத்துவிடும் என கணக்குப் போட்டனர். ரஷ்யாவின் நாணயமான Rouble என்பது Rubble ஆக  அதாவது குப்பைக்கு சமமாக மாறிவிடும் என பைடன் ஆரூடம் கூறினார். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. ரஷ்யாவின் பொருளாதா ரம் சீர்குலையவில்லை; மாறாக அது உறுதிப்பட்டது மட்டுமல்ல; வளர்ச்சியும் கண்டது.  மேற்குலகத்தின் பொருளாதார தாக்குதலை பின்னுக்குத் தள்ளிய ரஷ்யாவு க்கு, தான் உலக தேசங்களிடம் தனிமைப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்கு பிரிக்ஸ் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பாக ரஷ்யா வுக்கு அமைந்தது. அதனை முழுமையாக ரஷ்யா பயன்படுத்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும். 30க்கும் அதிகமான நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது மட்டுமல்ல; ஐ.நா.வின் பொதுச் செயலாளரும் பங்கேற்றார். ரஷ்யா தனிமைப்படவில்லை எனும் வலுவான செய்தியை இது வெளிப்படுத்தியது. எனவேதான் இந்த உச்சி மாநாட்டுக்கு ரஷ்யா மிகுந்த முக்கியத்துவத்தை தந்தது. தனது நோக்கத்தில் ரஷ்யா வென்றது என்றுதான் கூற வேண்டும். அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கும் என்பதை கூறத்தேவை இல்லை.

பிரிக்ஸ் விரிவாக்கம்

பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஐந்து நாடுகளு டன் உருவான பிரிக்சில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான், ஐக்கிய அரபு  அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக இணைந் தன. பிரிக்ஸ் என்பது “பிரிக்ஸ் பிளஸ்” என பரிணமித்தது. இப்பொழுது மேலும் 13 நாடுகள் இணை உறுப்பினர்களாக (Partners) இணைந்துள்ளன. அவை : அல்ஜீரியா, பெலரஸ், பொலிவியா, கியூபா, இந்தோனேசியா, கஜகஸ்தான், மலேசி யா, நைஜீரியா, தாய்லாந்து, துர்கியே, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம். இரு சோசலிச நாடுகளான வியட்னாமும் கியூபாவும் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக இணைந்த தேசங்களில் துருக்கியே தவிர மற்றவை ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகள். பெரும்பாலும் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இணைந்துள்ளன. துருக்கியே இணைந்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். துருக்கியே நேட்டோ அமைப்பின் உறுப்பினர். ஒரு நாடு நேட்டோவிலும் அதனை எதிர்க்கும் அமைப்பிலும் எப்படி ஒரே நேரத்தில் இருக்க இயலும்? இத்தகைய முரண்பாடை துருக்கியே தோற்றுவித்துள்ளது. துருக்கியே இணைவதற்கு சில காரணங்கள் உள்ளன என ஆய்வாளர்கள் கருதுக்கின்றனர். நேட்டோவில் உள்ள அனைத்து நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் துருக்கியே மட்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்படவில்லை. துருக்கியே ஜனாதிபதி எர்டோகன் எவ்வளவு முயற்சிகள் செய்தும் அது பலனளிக்கவில்லை. இதனால் துருக்கியேவுக்கு பொருளாதார ரீதியாகவும் வர்த்தக அடிப்படையிலும் பல இழப்புகள். ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை புறக்கணித்ததால் அதன் எதிர்வினையாகவே துருக்கியே பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளது. இது எத்தகைய விளைவுகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என்பதை இப்பொழுது கணிக்க இயலாது. இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் பாலஸ்தீன அமைப்பின் தலைவர் அப்பாஸின் பங்கேற்பு. இதன் மூலம் பாலஸ்தீன ஆதரவு நிலையை பிரிக்ஸ் தெளி வாக வெளிப்படுத்தியது என்பது இந்த உச்சி மாநாட்டின் முக்கியமான அம்சம்.

ஏன் பிரிக்சில் இணைய ஆர்வம்?

“அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடன் ஏற்பட்ட அதிருப்தி பிரிக்ஸை வலுவடைய செய்கிறது” என ராய்ட்டர் செய்தி நிறுவனம் தலைப்புச் செய்தி யாக வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மையே! இரண்டாம் உலகப்போ ருக்கு பின்பு உருவாக்கப்பட்ட IMF உட்பட ஒவ்வொரு அமைப்பிலும் அமெ ரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும்தான் மூர்க்கத்தனமாக தமது ஆளுமை யை நிலைநாட்டியுள்ளன. உலகப் பொருளாதாரத்தை தமக்கு சாதகமாக வளைக்கவே அவை முயல்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது ஆசியா, ஆப்பி ரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகள்தான்! இதன் விளைவாக உருவாகும் அதிருப்திதான் பல நாடுகளை பிரிக்ஸ் பக்கம் ஈர்க்கிறது. பிரிக்ஸ் அமைப் பில் எல்லா நாடுகளும் சமமாகவும் மரியாதையாகவும் நடத்தப்படுகின்றன. இது பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு முக்கியக் காரணியாக உள்ளது. மேலும் இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிரச்சனையில் அமெரிக்கா,பிரிட்டனின் அப் பட்டமான இனப்படுகொலைக்கு ஆதரவான நிலைபாடு பல வளரும் நாடுகளில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. கொத்துக் கொத்தாக இஸ்ரேல் குழந்தைகளையும் பெண்களையும் படுகொலை செய்வது நன்றாக வெளிப்பட்ட பிறகும் அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளின் நிர்வாகங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதை வளரும் நாடுகள் ஏற்க மறுக்கின்றன. இதுவும் பிரிக்ஸ் பக்கம் வளரும் நாடுகள் வருவதற்கு காரணம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக பிரிக்ஸ் அமைப்பு திறந்துவிடும் பொருளா தார நன்மைகளும் மிக முக்கியக் காரணம் ஆகும்.

u உலக எரிபொருள் உற்பத்தியில்  56%
u உள்கட்டமைப்பு முதலீடுகள்- 71 பில்லியன் டாலர்கள்
u ஜி-7 எனப்படும் வளர்ந்த நாடுகளின் ஒட்டு மொத்த ஜி.டி.பி.யைவிட பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் ஜி.டி.பி. அதிகம்.
u உலக மக்கள் தொகையில் 47% 

இத்தகைய சாதகமான அம்சங்கள் வர்த்தகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புக ளை உருவாக்குகின்றன. பிரிக்ஸ் அமைப்பில் சேர நாடுகள் விருப்பம் தெரி விப்பதற்கு இத்தகைய பொருளாதார காரணங்களும் மிக முக்கியம். 

போர்கள் குறித்து பிரிக்ஸ் அறிக்கை

பாலஸ்தீனப் பிரச்சனையில் இஸ்ரேலை கண்டித்து மிக வலுவான நிலை பாடை பிரிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ளது என்பதை கூறும் அறிக்கை காசா மற்றும் மேற்குக் கரையில் கொத்துத் கொத்தாக நடக்கும் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறது. சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் இந்த அறிக்கை தெளி வாக கூறுகிறது. மேலும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் இந்த அறிக்கை கண்டிக்கிறது. லெபனானில் பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கி எனப்படும் தகவல் தொடர்பு சாதனங்களை வெடிக்கச் செய்த கேடு கெட்ட செயல்களையும் அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரான் மற்றும் சிரியா எல்லைக்குள் அத்து மீறி இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் ஐ.நா. ஊழியர்கள் மீது ஏவப்படும் தாக்குதல்களையும் இந்த அறிக்கை கண்டிக்கிறது. மேலும் சிரியாவை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை திருடும் அமெ ரிக்காவின் செயலையும் அறிக்கை கண்டிக்கிறது. உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என கூறும் தீர்மானம் ரஷ்யாவை விமர்சிக்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் நிலைபாடை பிரிக்ஸ் அமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு. மேலும் சூடான், ஆப்கானிஸ்தான் உள்பட பல தேசங்களில் நிலவும் முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் எனவும் இந்த அறிக்கை கோருகிறது.பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈரான் ஆகிய பிரச்சனைகளில் அமெரிக்கா வின் நிலைபாடுக்கு நேர் எதிரான சரியான நிலைபாடை பிரிக்ஸ் நாடுகள் எடுத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

பிரிக்ஸ்- அமெரிக்காவின் பார்வை

டாலருக்கு மாற்றாக வேறு நாணயம் பயன்படுத்தப்பட வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்க நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்: “டாலரின் முக்கியத்துவத்தை குறைப்பதும் அமெரிக்காவின் SWIFT எனப்படும் நாணய வர்த்தக முறைக்கு மாற்றை உருவாக்குவதும் உலக ஜனநாயகத்துக்கு நேரடி ஆபத்து.” டாலருக்கு மாற்று உருவாவது என்பது அமெரிக்காவுக்கு இழப்பை ஏற்படுத்த லாம். ஆனால் அது எப்படி உலக ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்க இயலும்? தனது மூர்க்கத்தனமான ஆளுமைக்கு எதிராக எது முன்வந்தாலும் அது ஜனநாய கத்துக்கு ஆபத்து என அமெரிக்கா கட்டமைப்பது தனது சுயநலனை பாதுகாக்கும் சூழ்ச்சியாகும். பொருளாதாரம், தொழில் நுட்பம், ராணுவம் ஆகிய எதிலும் தனக்கு எவரும் சவாலாக முன்வரக்கூடாது என்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைபாடு. எனினும் டாலருக்கு மாற்று நாணயத்தை உருவாக்குவது அவ்வளவு சுலப மல்ல என்பதை பிரிக்ஸ் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இன்றும் உலக வர்த்தகத்தில் டாலரின் பங்கு 80% பிரிக்ஸ் நாடுகளின் அனைத்து நாணயங்க ளின் பங்கு 8 % மட்டுமே. உலக நிதி அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு ஆதர வாக மாற்றம் வேண்டும் என்பதுதான் பிரிக்ஸ் நாடுகளின் கோரிக்கை. பிரிக்ஸ் நாடுகளிடையே ஒரே விதமான நிதி வர்த்தக முறைகள் கொண்டு வருவதற்கு மட்டும்தான் இப்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் நீண்ட இலக்காக டாலருக்கு மாற்று உருவாக்கப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமானதே! பிரிக்ஸ் அமைப்பும் அதன் விரிவாக்கமும் அமெரிக்கா உருவாக்கியுள்ள ஒரு துருவ உலக அமைப்புக்கு மிகப்பெரிய எதிர்சவாலாகும். பிரிக்சின் விரிவாக்கம் சில முரண்பாடுகளையும் உருவாக்கலாம். எனினும் பல்துருவ உலக அமைப்பை நோக்கிய பயணத்தில் பிரிக்ஸ் பிளஸ் ஒரு முக்கிய நகர்வு. இது மேலும் வலுப்பெறுவது காலத்தின் தேவை.