இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தத்துவார்த்த ஏடான THE MARXIST (தி மார்க்சிஸ்ட்)-ல் வெளியாகியுள்ள தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் சாராம்சம் இங்கு வெளியிடப்படுகிறது.
இந்தக் கட்டுரை, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொன்விழா ஆண்டான 1984-இல் எழுதப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த பின்னணியில் அதன் மகத்தான தலைவர்கள் பலர், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டார்கள். அந்த அனுபவங்களுடன் இக்கட்டுரையை (The Marxist Volume: 03, No. 4 October-December, 1985 The Congress Socialist Party & The Communists E M S Namboordiripad) எழுதியுள்ளார் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.
1 இந்திய சோசலிச இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள (1984)இத்தருணத்தில், அக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்துடனான உறவுகள் குறித்த ஒரு விரிவான பார்வை அவசியமாகிறது. 1934 மே மாதம் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் ஆலோச னைக் கூட்டத்திலும், அதைத் தொடர்ந்து அக்டோபரில் பம்பாயில் நடந்த முதல் அகில இந்திய மாநாட்டிலும் நானும் பங்கேற்றிருந்தேன். அந்த அமைப்பின் மூலம் காங்கிரஸ் உறுப்பினர்களை தீவிர மயமாக்குவதிலும், 1930களில் ஒரு வலு வான ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்ன ணியை உருவாக்குவதிலும் ஆற்றிய பங் களிப்பை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் இந்திய சோசலிச இயக்கத்தின் தோற்றம் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் தொடங்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1912ல் லாலா ஹர்தயாள் எழுதிய இந்தி மொழி நூலும், ராமகிருஷ்ண பிள்ளை எழுதிய மலையாள மொழி நூலும் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறாக வெளி வந்தன. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, 1908ல் லோகமான்ய திலகரின் கைது மற்றும் தண்டனைக்கு எதிராக பம்பாய் தொழிலாளர்களின் முதல் அரசியல் வேலைநிறுத்தம் நடந்தது. அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற தொழிலாளி வர்க்கமும், மார்க்சியத்தின் பர வலும் - ஆகிய இரண்டு முக்கிய அம்சங் கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP) உருவாவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவில் இருந்தன. முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட புரட்சிகர எழுச்சி, தேசிய இயக்கத்தை பல படிகள் முன்னேற்றியது. இந்தியாவின் விடுதலை இயக்க வரலாற்றில் முதல்முறையாக, தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் மகாத்மா காந்தியின் தலைமையிலான ஒத்துழையாமை-கிலா பத் இயக்கத்தின் பின்னால் அணிதிரண்ட னர். தொழிற்சாலை வேலைநிறுத்தங்கள், நகர அளவிலான ஹர்த்தால்கள்(முழு அடைப்பு), பெரும் எண்ணிக்கையிலான பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஆகி யவை நமது அரசியல் வாழ்வின் பொது வான அம்சங்களாயின.
2கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவின் சோசலிச இயக்கத்தின் பிறப்பை 1920களின் ஆரம்பத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்தன - அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் பிறப்பும், ஆரம்பகால கம்யூனிஸ்ட் குழுக்களின் தோற்றமும். எந்த நாட்டிலும் முன்னோடிகள் எதிர் கொள்வதைப் போல, இவர்களும் பல தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது. பின்னாளில் வந்த சோசலிஸ்டுகளால் கற்பனை கூட செய்ய முடியாத கடுமை யான சூழ்நிலையில் முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகள் போராட வேண்டியிருந்தது. இந்திய மண்ணில் கம்யூனிசம் வளர்வதைத் தடுக்க பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் திட்டமிட்ட முறையில் மூன்று சதி வழக்குகளை - பெஷாவர், கான்பூர் மற்றும் மீரட் - ஒரு தசாப்தத்திற்குள் தொடுத்த னர். நூற்றுக்கணக்கான போராளி தொழிற்சங்கவாதிகளும், தீவிர காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்டுகள் என்ற முத்திரையில் வேட்டையாடப்ப ட்டனர். நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
3 காங்., சோசலிஸ்ட் கட்சியின் தோற்றமும் அதன் பணிகளும்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரசுக்குள் நடந்த மேற்கண்ட வளர்ச்சிகளின் நேரடி விளைவாக உருவானது. கட்சியை உருவாக்க முதல் முயற்சி 1934 மே மாதம் பாட்னாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் நடந்தது. அதே ஆண்டு அக்டோபரில் பம்பாயில் நடந்த முதல் அகில இந்திய மாநாடும் காங்கிரஸ் அமர்வுக்கு முன்ன தாகவே நடந்தது. இந்த இரு கூட்டங்களும் காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் மாநாட்டில் எதிர்கொள்ள இருந்த போராட்டங்களுக்கான தயார்படுத்தல் களாக இருந்தன. காங்கிரஸ் மாநாட்டில் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளில் இடது சாரிகளின் நிலைப்பாட்டை தெளிவாக வரையறுக்கும் முயற்சியாக இது அமைந்தது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதிய “ஏன் சோசலிசம்?” என்ற நூல், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பிறப்பு மற்றும் வளர்ச்சி குறித்த ஏராளமான ஆவணங்களில் முக்கியமான இடம் பெறு கிறது. வலதுசாரி காங்கிரஸ் தலைவர் களின் திட்டங்கள் மற்றும் நடைமுறை களால் ஏமாற்றமடைந்த இளம் காங்கிரஸ்காரர்களின் கண்களைத் திறந்தது அந்த நூல். காந்தியம், நாடாளு மன்ற பாதை மற்றும் தனிநபர் பயங்கர வாதம் ஆகிய மூன்று கருத்தியல் அணுகு முறைகளை விட மேலானது சோசலி சத்தின் பாதை என்பதை இளம் காங்கிரஸ் காரர்களுக்கு காட்டியது “ஏன் சோசலிசம்?” என்ற நூல்.
4 கம்யூனிஸ்ட் கட்சி- சோசலிஸ்ட் கட்சி உறவுகள் - ஒற்றுமையும் வேறுபாடுகளும்
காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஏற்பட்ட உறவுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த ஆய்வு முக்கியமானது. 1936 ஜனவரியில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீரட் தீர்மானம் இந்த உறவின் முக்கிய மைல்கல். இரு கட்சிகளுக்கும் இடையிலான தீவிர விவாதங்களின் விளைவாக இந்த ஆவணம் உருவானது. கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு இரண்டாம் உலகப்போர் தொடங்கும் வரை தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஒருமைப்பாடு, விவசாயிகள் மற்றும் மாணவர் இயக்கங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில், காங்கிரசில் தீவிர பிரிவினரின் வளர்ச்சிக்கும், வலதுசாரி தலைமையின் பிடி தளர்வதற்கும் இது உதவியது. 5சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் - கம்யூனிஸ்ட் எழுச்சி 1947க்குப் பின் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி “காங்கிரஸ்” என்ற முன்னொட்டை நீக்கி சோசலிஸ்ட் கட்சியாக மாறியது. அதன் தலைவர்கள் நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சியாகவும், சில மாநி லங்களில் ஆளும் கட்சியாகவும் மாறும் கனவு கண்டனர். 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இந்த கனவுகளுடன் களமிறங்கினர். ஆனால் தேர்தல் முடிவுகள் அவர் களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அமைந்தன. சோசலிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்ததோடு மட்டு மல்லாமல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய இடதுசாரி எதிர்க்கட்சியாக உரு வெடுத்தது. திருவாங்கூர்-கொச்சி மற்றும் மதராஸ் ஆகிய இரு தென் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை அமைக்கும் நிலையை எட்டியது. மேற்கு வங்கம் மற்றும் ஹைதரா பாத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
6கருத்தியல் வேறுபாடுகளும் தொடர் போராட்டங்களும்
இந்த தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து சோசலிஸ்ட் கட்சியின் அணி களில் தீவிர கருத்தியல் மற்றும் அரசியல் குழப்பங்கள் தோன்றின. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பல முக்கிய கம்யூனிச எதிர்ப்பு தலைவர்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றனர் - ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதயா இயக்கத்திற்கும்; மசானி, காங்கிரஸ் மற்றும் பின்னர் சுதந்திரா கட்சிக்கும்; பட்வர்தன், சந்நியாச வாழ்க்கைக்கும் சென்றனர். மீதமுள்ளவர்கள் சிக்கலான பாதை யை பின்பற்றினர் - முதலில் சோசலிஸ்ட் கட்சி பிரஜா கட்சியுடன் இணைந்து பிரஜா சோசலிஸ்ட் கட்சி (PSP) ஆனது, பின்னர் பிஎஸ்பி (PSP) மற்றும் சோசலிஸ்ட் (SP) என உடைந்தது, பின் இரண்டும் SSP ஆக இணைந்தன, அதுவும் உடைந்தது, இறுதியாக 1977ல் அனைத்து சோசலிஸ்ட் குழுக்களும் ஜனதாவில் இணைந்தன, பின்னர் பழைய ஜனதாவிலிருந்து பல குழுக்கள் உருவாயின. கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) என பிளவுபட்டது என்பது உண்மையே. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிலிருந்து நக்சலைட் குழுக்களும், சிபிஐ-யிலிருந்து டாங்கே குழுவும் பிரிந்தன. மேலோட்டமாக பார்க்கும்போது இதை சோசலிஸ்ட் கட்சியின் சிதைவுடன் ஒப்பிடலாம் போல் தோன்றினாலும், உண்மையில் அப்படி இல்லை. சோசலிஸ்ட்களைப் போல் அல்லாமல் கம்யூனிஸ்டுகள் கருத்தியல் மற்றும் அரசியல் கேள்விகளில் போரா டினர். அதனால்தான் சிறிது காலத்திற்குப் பின் இரு முக்கிய கம்யூனிஸ்ட் அமைப்பு களான சிபிஎம் மற்றும் சிபிஐஅனுபவங் களிலிருந்து கற்றுக்கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடிந்தது.
7 வரலாற்றுப் பாடங்கள்
இரு கட்சிகள் பின்பற்றிய பாதைகளில் உள்ள இந்த வேறுபாடு, கம்யூனிஸ்டுகள் சர்வதேச மற்றும் தேசிய பிரச்சனைகளில் தொழிலாளி வர்க்கப் பார்வையின் உறுதி யான அடித்தளத்தில் நின்றதால் ஏற்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தொடக்கம் முதலே முதலாளித்துவ கொள்கைகளில் ஊன்றி நின்றது. கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணை ந்து காங்கிரசுக்குள் பணியாற்றி அதை உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பாக மாற்ற முயன்ற போதும் இந்த அடிப்படை வேறுபாடு தொடர்ந்தது. ஆக, 1952 முதல் கடந்த 32 ஆண்டு களின் அனுபவங்கள் சிபிஎம், சிபிஐ மற்றும் பல்வேறு சோசலிஸ்ட் குழுக் களுக்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளன. ஆளும் கட்சியின் அதிகாரத்துவ போக்குக்கு எதிராகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் போராடும் அனை த்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அந்த பாடம். முதலாளித்துவத்திலிருந்து, சுயேச்சை யாக உழைக்கும் மக்களை அணிதிரட்டு வதே இதன் அடிப்படை. ஆயினும் கம்யூனிச இயக்கத்திற்கும் சோசலிச இயக்கத்திற்கும் இடையேயான கருத்தியல் வேறுபாடுகளை மறந்துவிட முடியாது. இந்திய கம்யூனிச இயக்கம் ஆறு தசாப்தங்களுக்கு முன்பு (தற்போது 10 தசாப்தங்கள்) சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு பகுதியாக தோன்றி, ஏற்ற இறக்கங்களுக்கிடையேயும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. தவறு களும் விலகல்களும் ஏற்பட்டாலும், அதன் அடிப்படை குணாம்சமான தொழிலாளி வர்க்க பார்வையால் அவற்றை சரிசெய்ய முடிந்தது. ஆனால் மாறாக, சர்வதேச தொழி லாளி வர்க்க இயக்கத்தால் பெரிதும் தாக்கம் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தோற்றத்திலிருந்து வந்த பல்வேறு சோசலிச கட்சிகள் பெரும்பாலும் தொழிலாளி வர்க்கம் அல்லாத ஜனநாயக கட்சிகளாகவே இருந்தன, இருக்கின்றன. இரண்டாம் உல கப்போருக்கு முந்தைய ஆண்டுகளில் இரு போக்குகளும் இணைந்து பெரும் பங்களிப்பை ஆற்றின. ஆனால் போரின் போதும் அதற்குப் பின்னும் பிரிந்து சென்றன. தற்போது மீண்டும் வளர்ந்து வரும் செயல்பாட்டு ஒற்றுமை நேர்மறை யான வளர்ச்சியே. ஆனால் இரு போக்கு களுக்கும் (தொழிலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் அல்லாதவை) இடை யேயான இடைவெளியை மறந்துவிட முடியாது. இறுதியாக, தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பேரியக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து கருத்தியல் போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்கிறது. அதனால்தான் “வலது” மற்றும் “இடது” விலகல்களுக்கு எதிரான தொடர் கருத்தியல் போராட்டத்திற்கும், விமர்சனம் - சுய விமர்சன முறைக்கும் கட்சி ஆவணங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.