பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி மற்றும் நியமனம் தொடர்பாக வெளியிட்டுள்ள வரைவு ஒழுங்கு முறைகள் நாடு தழுவிய விவாதங்களை உருவாக்கி யுள்ளது. இந்திய மாணவர் சங்கம் தேசிய அள விலான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. ஆசிரியர் இயக்கங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதற்கெதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தமிழக சட்டப்பேரவை இதை கைவிட வேண்டுமென ஏகமனதாக தீர்மானம் இயற்றியுள்ளது. பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளும் இத்தீர்மா னத்திற்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக அரசு இம்மாற்றங்களை அரசியல் ரீதியாக, சட்டரீதியாக எதிர்க்கும், முற்றிலும் நிராகரிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இது ஒன்றிய அரசின் கல்வி வணிகமய மாக்கல், வகுப்புவாதமயமாக்கல், மையப்படுத்தும் கொள்கையின் - வெளிப்பாடு, மாநிலங்களின் உரி மைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறினார்.
2010இல் வந்த விதிகள்
இந்த வரைவு, ஆசிரியர் நியமனம் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் தொடர்பான தாயிருந்தாலும், இக்கட்டுரை துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி மட்டுமே விவாதிக்கிறது. பல்கலைக்கழக மானி யக்குழு 1956ல் உருவாக்கப்பட்டாலும், 2010 வரை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக விதிகள் எதுவும் விதித்ததில்லை. 2010ம் ஆண்டு வெளியிட்ட ஒழுங்குமுறைகளில் துணைவேந்தராக நியமிக்க, 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்கள் அல்லது அதற்கு இணையான பணிகளில் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றியிருக்கவேண்டும் எனக் கூறியது. துணை வேந்தர் நியமனத்திற்கான தேர்வுக் குழுவையும் (Search Committee) அமைக்கக் கோரியது. இத்தேர்வுக்குழுவில் வேந்தரின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர், பல் கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி ஒருவர் என 3 பேர் இருக்கவேண்டும் எனக் கூறியது. பல்கலைக்கழக நியமனங்கள் பல்கலைக்கழகச் சட்டங்கள் வரையறுத்துள்ளபடி நடைபெறுவதாலும், யுஜிசி ஒழுங்குமுறைகள் துணைச்சட்டம்தான் (Subordinate legislation) என்பதாலும், ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசோ அல்லது அதன் பிரதிநிதி களாயிருந்த ஆளுநர்களோ பல்கலைக்கழக விவகா ரங்களில் மோதல் போக்கைக் கையாளாததாலும் மாநில அரசுகள் இந்த விதிமுறைகளைக் கண்டு கொள்ளவில்லை. பல்கலைக்கழக மானியக்குழுவும் இதை அமல்படுத்த பெரிதாக முயற்சிக்கவில்லை.
2018 விதிகள்
2018ம் ஆண்டு யுஜிசி வெளியிட்ட ஒழுங்கு முறைகள், தேர்வுக்குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இருக்கவேண்டுமென மட்டும் ஆணையிட்டது. சில மாநிலங்கள் தங்கள் மாநில பல்கலைக்கழகச் சட்டங்களில் ஏற்கனவே இருந்த உறுப்பினர்களோடு கூடுதலாக யுஜிசி தலைவரின் பிரதிநிதியையும் இணைத்து சட்டத்தைத் திருத்தினர். ஆனால் 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் அதன் ஆளுநர்களும் மாநில அரசுகளின் கல்வி உரிமை யில் தலையிட்டதால் பாஜக அல்லாத மாநில அரசுகள் இவ்வாணையை அமல்படுத்த மறுத்தன. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மோதல் போக்கைக் கையாண்ட மாநில ஆளுநர்கள் யுஜிசி பிரதிநிதிகள் இல்லாத தேர்வுக்குழுக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
பல மாதங்களாக துணைவேந்தர் இல்லை
இதன் விளைவாக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பல் கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வி யியல் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் எனும் 5 பல்கலைக்கழகங்களில் பல மாதங்க ளாக துணைவேந்தர்கள் இல்லாமல் ஸ்தம்பித் துள்ளன. இதன் விளைவாக தமிழக, கேரள மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இம்மாநில முதல்வர்களே செயல்படுவர் என்று பல்கலைக்கழக சட்ட விதிகளில் மாற்றம் செய்து சட்டங்களை இயற்றியுள்ளனர். இச்சட்டங்களுக்கும் இம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
மேற்குவங்கத்தில் நடந்தது என்ன?
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் யுஜிசி பிரதி நிதியை இணைக்காத தேர்வுக்குழு, தெரிவு செய்து பட்டியலிட்டு நியமிக்கப்பட்ட துணைவேந்தர் நியமனம் செல்லாது என நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் விளைவாக 32 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் பணிக்காலம் முடிவுற்றபோது, தேர்வுக் குழுக்கள் அமைக்கமுடியாததால் அத்துணை வேந்தர்களின் பணிக்காலத்தை நீட்டிக்கக்கோரி, ஆளுநர்/வேந்தருக்கு பரிந்துரைத்தது. ஆனால் அதை நிராகரித்த ஆளுநர் தன்னிச்சை யாக இப்பல்கலைக்கழகங்களில் இடைக்காலத் துணைவேந்தர்களை நியமித்தார். அவர்களில் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உண்டு. இப்படி நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் போன்றவற்றை வழங்க மாநில அரசு மறுத்தது. மாநில அரசின் அறிவுறுத்தல்களை செயல்படுத்தக்கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்/வேந்தர் ஆணையிட்டார். இவ்விவகாரம் மிகப்பெரும் மோதலாக அரசுக்கும், ஆளுநருக்குமிடையே நடைபெற்று உச்சநீதி மன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றம் 32 பல்கலைக்கழகங்களுக்கும் முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழுவை அமைத்தது. அக் குழுவிற்கான இதர உறுப்பினர்களை லலித் அவர்களே தேர்வு செய்யுமாறு பணித்தது. எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் வெவ்வேறு தேர்வுக்குழு. ஆனால் அவரே அனைத்துக்கும் தலைவர். இத் தேர்வுக்குழு விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தேர்வு செய் யப்படுபவர் பட்டியலை மாநில முதல்வரிடம் வழங்க வேண்டுமென்றும், முதல்வர் தன் தேர்வை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தி, அப் பட்டியலை ஆளுநர்/வேந்தருக்கு அனுப்பவேண்டு மென்றும், வேந்தர் அம்முன்னுரிமை அடிப்படையில் துணைவேந்தரை நியமிக்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதனடிப்படையில் 17 மாதங்களுக்குப்பின் 32 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஒன்றிய - மாநில அரசுகளின் பட்டியல் - அதிகாரம்
இந்தியாவைப்போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டில் ஒன்றிய அரசும் மாநிலங்களும் இணைந்து செயல்படவேண்டியுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கும் (Union List), மாநில அரசுக ளுக்கும் (State List) பிரத்தியேகமான அதிகாரங்க ளையும், உரிமைகளையும், கடமைகளையும் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கும், மாநில அரசுக்கு உட்பட்ட துறைகளில் சட்டமியற்ற மாநில சட்டப்பேரவைக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கியுள்ளது அதேபோல் ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்றவேண்டிய பொ துப்பட்டியலை (Concurrent List) தொகுத்துள்ளது. இவை மீது சட்டமியற்ற நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டபோது கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் அவசர நிலைக் காலத்தில் அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஆயினும் உயர் கல்வியின் தரம் நிர்ணயிக்கவும், ஒருங்கிணைக்கவும் அதிகாரத்தை ஒன்றிய அரசிற்கும் (Union List- Section 66) பல் கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கும் (State List - Section- 32) அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்குமிடையே பிரச்சனைகள் ஏற்படும்போது பல்கலைக்கழகங்களின் தரத்தை நிர்ணயிக்கவும், ஒருங்கிணைக்கவும் அதிகாரம் படைத்த ஒன்றிய அரசு மாநிலங்களோடு கலந்து பேசி ஒரு சுமூக நிலை யை உருவாக்கியிருக்கவேண்டும். மாறாக ஒன்றிய அரசின் ஆளுகைக்குட்பட்ட யுஜிசி வெளியிட்ட இந்த வரைவு ஒழுங்குமுறைகள் இப்பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
புதிய வரைவு சொல்வது என்ன?
இந்த வரைவு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக 4 விஷயங்கள் பற்றி குறிப்பிடுகின்றது: 1) குறைந்தபட்ச தகுதி பற்றியது: 10 ஆண்டு பல்கலைக்கழக பேராசிரியர் பணி அல்லது ஆராய்ச்சி மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் அதற்கு இணையாக பணியாற்றியவர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் தகுதியானவர்கள். 2) துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவிலான விளம்பரங்கள் மூலமாக கோரப்படவேண்டும். 3) 3 பேர்கொண்ட தேர்வுக்குழு: பல்கலைக் கழக மானியக்குழுவால் நியமிக்கப்படும் ஒருவர், பல் கலைக்கழக சிண்டிகேட்/செனட் போன்ற அமைப்பு களால் நியமனம் செய்யப்படும் ஒருவர் மற்றும் பல்க லைக்கழக வேந்தரால் நியமனம் செய்யப்படும் ஒருவர். இக்குழுவின் தலைவராக வேந்தரின் பிரதிநிதி செயல்படுவார். 4) இக்குழு 3 முதல் 5 பேர் அடங்கிய பட்டியலை வேந்தரிடம் சமர்ப்பிக்கும். அப்பட்டியலிலிருந்து ஒருவரை வேந்தர் துணைவேந்தராக நியமிப்பார். அவரது பணிக்காலம் 5 ஆண்டுகள். இந்த ஷரத்துக்களைத்தான் மாணவர் சங்கங்க ளும், ஆசிரியர் சங்கங்களும், கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், எதிர்க்கட்சிகளும், மாநில அர சுகளும் எதிர்க்கின்றனர். இவை எந்த வகையிலும் கல்வித்தரத்தை மேம்படுத்த உதவாது. மாறாக இந்தி யாவிலுள்ள ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
பாஜக ஆட்சியின் அலங்கோலங்கள்
பாஜக ஆட்சிக்கு வந்ததுடன் செய்த வேலையே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பொறுப்பிலிருந்த கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை, உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களை நீக்கிவிட்டு தகுதி யில்லாத, திறமையில்லாத, ஆய்வுப் பின்புலமில்லாத, அறிவுக்கொள்கைத் தொடர்பில்லாத தங்கள் ஆதரவாளர்களை நியமித்ததுதான். உதாரணத்திற்கு, புனேயிலுள்ள FTII என்று அழைக்கப்படும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் பதவி. ஆர்.கே.லக்ஷ்மண், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபால கிருஷ்ணன், மகேஷ் பட், கிரிஷ் கர்னாட் போன்ற தலைசிறந்த திரை வல்லுநர்கள் வகித்த அந்தப் பதவியில் கஜேந்திர சௌகான் என்ற எந்தவித பின்புலமும் இல்லாத நபரை நியமித்தது. அந்த நிறுவனத்தின் மாணவர்கள் அவரை நீக்கக்கோரி பல மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதேபோல் ICSSR என்ற இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக எஸ்.பிர காஷ் குமார் என்பவரை நியமித்தது. இவர் இளங் கலைப் பட்டப்படிப்புக்கு வேதியியல் கற்பித்த ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர். வேதியியலுக்கும் சமூக அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்? இதேபோல் ICCR என்ற இந்திய கலாச்சார ஆய்வுக் கழகத்தின் தலைவராக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் வினய் சகஸ்ரபுத்தே என்பவரை நிய மித்தனர். இதன் உச்சகட்டமாக ICHR என்ற இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக ஒய்.சுதர்சன் ராவ் என்பவரை நியமித்தனர். இப்போது நம் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் குறைந்தபட்சம் 2 ஆய்வுக்கட்டுரைகளை, சம ஆய்வா ளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு இதழ்களில் (Peer reviewed Journals) வெளியிட்டிருக்கவேண்டும் என்பது விதி. சாதாரணமாக நம் கல்லூரி ஆசிரியர்கள் இதுபோன்ற பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டி ருப்பர். ஆனால் அப்படிப்பட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்று கூட சுதர்சன்ராவ் எழுதியதில்லை. அவர் பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுப் பேராசிரி யர்களான ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், சரத் சந்திரா போன்ற 22 பேர் கொண்ட இந்திய வரலாற்று ஆய்விதழின் ஆலோசனைக்குழுவைக் கலைத்ததுதான். இதுதான் இவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுக்கும் லட்சணம்.
கல்வியை கார்ப்பரேட் சரக்காக்கும் சூழ்ச்சி
இதேபோல் தொழில் நிறுவனங்களில் உள்ள வர்களை துணைவேந்தர்களாக்குவதும். கல்வி ஏற்கனவே வணிகமயமாக்கப்பட்டுள்ள சூழலில் அபாயகரமானதாகும். கல்வி வளாகக் கலாச்சாரம் வேறு, தொழில் நிறுவனங்களின் கார்ப்பரேட் கலாச்சாரம் வேறு. கார்ப்பரேட் கலாச்சாரம் லாபத்தை யும், போட்டியையும் அடிப்படையாகக்கொண்டது. கல்வி வளாகக் கலாச்சாரம் சமூக வாழ்வையும், சமூக முன்னேற்றத்தையும், சமூக நீதியையும் அடிப்ப டையாகக்கொண்டது. கல்வி நிறுவனங்களில் கார்ப்பரேட் கலாச்சா ரத்தைப் புகுத்துவது ஆபத்தானது. ஏற்கனவே நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் அரசுப் பல்கலைக்கழகங்களை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சியாகவே இது அமைகிறது.
வெளி மாநில நபர்களை நியமிப்பதால் சிக்கல்
துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய விளம்பரங்கள் மூலமாக பெறப்பட வேண்டுமென்பது, ஒரு மாநில பல்கலைக்கழகத்தில் பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களை நியமிக்கும் முயற்சி தான். ரயில் நிலையங்கள், வங்கிகள், தபால் நிலை யங்கள், இதர ஒன்றிய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் நியமிக்கப்படும் செய்திகள் இளைஞர்கள் மத்தியில் விமர்சிக்கப்படும் நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக வெளிமாநிலத்தவர் நியமிக்கப்பட்டால் அது சிக்கல்களை உருவாக்கும். 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தராக சூரப்பா அவர்கள் நியமிக்கப்பட்ட தும் அதன்பிறகான விவாதங்களும் நினைவுக்கு வரு கிறது. ஆஹா ஓஹோ என்றெல்லாம் சிலாகிக்கப் பட்டது. ஆனால் முடிவென்பதோ சொல்லிக்கொள் ளும்படியாக இல்லை. கல்வி என்பது மொழி, வாழ்வி யல், கலாச்சாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது. மொழிவழி மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத் தின் பிரத்தியேகத் தன்மைகள் உள்ளன. அவற்றை உணர்ந்து கொண்டவர்களால்தான் சிறந்த துணை வேந்தர்களாக செயல்பட முடியும். ஆகவே வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமிப்பது தேவையற்ற பிரச்சனைகளையே உரு வாக்கும். இதுமட்டுமல்ல; துணைவேந்தர் தேர்வில் மாநில அரசுகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பது வேடிக்கையானது, விஷமத்தனமானது, விபரீதமா னது. கூட்டாட்சித் தத்துவத்திற்கெதிரானது. அரசியல மைப்புச் சட்டத்திற்கெதிரானது. கல்வி பொதுப்பட்டி யலில் இருந்தாலும், பல்கலைக்கழகங்களை உருவாக் கும் உரிமையை அரசியலமைப்புச்சட்டம் மாநில அரசுக ளுக்குதான் வழங்கியுள்ளது. மாநில அரசு, மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றும் சட்டத்தின் அடிப்படை யில்தான் பல்கலைக்கழகங்களை உருவாக்கும். மாநில அரசு சட்டமியற்றி, நிலம் வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்து உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நாங்கள் சொல்வதுபோல் ஒன்றிய அரசின் பிரதிநிதிதான் நியமனம் செய்வார் என்பது ஒருவர் பெற்று வளர்த்த குழந்தைக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடுவது போன்றது. மொத்தத்தில், ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியா ளர்களின் இலக்கு கல்வி மட்டுமல்ல; நீண்ட நெடிய போராட்டங்கள் மூலமாக நாம் பெற்றிருக்கும் சமூக நீதி, மொழி உரிமைகள், பன்முகத் தன்மை உள்ளிட்ட அனைத்துமே தாக்கதலுக்கு உள்ளாகிறது. அனை வரையும் ஒன்றிணைத்து இம்முயற்சிகளை முறி யடிப்போம்!
கட்டுரையாளர் : முன்னாள் அகில இந்தியத் தலைவர், அகில இந்திய பல்கலைக்கழக ஆசிரியர் மன்றங்களின் கூட்டமைப்பு (அய்பெக்டோ)