articles

img

இந்துத்துவா பொறியில் சிக்கும் முதலாளித்துவக் கட்சிகள்! - எம்.பாலசுப்பிரமணியன்

“நான் ஒரு இந்து, திருமலை எனது கோவில்; நீயோ ஒரு கிறிஸ்தவன்; இந்து கோவிலி ன் புனிதம் காப்பதில் உனக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது? ஒருவேளை இந்தத் தேர்தலில் நீ வெற்றி பெற்றால் திருமலைக்குச் செல்ல  முடியாது. ஜெருசலேமுக்குத்தான் செல்ல முடியும்! ஆனால்,நான் வெற்றி பெற்றால், திருமலைக்குச் செல்வேன்; ஏனென்றால், வெங்கடேஸ்வரா எனது கடவுள்”. மேலே உள்ளவை, சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேசியதல்ல? மதச்சார்பற்றத் தலைவர் என்று இந்தியா முழுவதும் நன்கறியப்பட்ட சாட்சாத் சந்திர பாபுநாயுடுவே தான்!  கடந்த 18வது நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து ஆந்திராவின் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடை பெற்றது. அப்போதைய தேர்தல் பரப்புரையின் போது திருப்பதி லட்டு விவகாரப் புயலை கிளப்புவதற்கு முன்பாக ஜெகன்மோகன்ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு வீசிய அமில வார்த்தைகள் தான் அவை!. பின்னர், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தை சந்திரபாபுநாயுடு கிளப்பினார். ஆனால் இது முதல் முறையல்ல. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபையில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது, ஜெகன்மோகன்ரெட்டி அரசும் திருப்பதி தேவசம்போர்டும் கடுமையாக எதிர்த்ததோடு, மறுக்கவும் செய்தன. சங்பரிவாரக் கும்பல்களும் பெரி தாகக் கண்டு கொள்ளவில்லை. காரணம், அப்போது  சந்திரபாபுநாயுடு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு அணிசேர்க்கையிலிருந்து வெளியேறி யிருந்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியோ, பாஜக கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட அதனுடன் கள்ள உறவு கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த எல்லா மசோதாக்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தது. ஆகவே அன்றைக்கு ஜெகன்மோகன்ரெட்டியின் மீதான சந்திர பாபுநாயுடுவின் குற்றச்சாட்டு எடுபடவில்லை.  பின்னாளில் நிலைமை மாறிவிட்டது. அரசியலாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உறவு பலனளிக்காது  என்று தெரிந்தவுடன், ஜெகன்மோகன்ரெட்டியை கைவிட்டு பாஜக சந்திரபாபு நாயுடுவின் கரம் பிடித்தது. 

சங்கிகளை மிஞ்சிய  பவன் கல்யாண்    

திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபுநாயுடுவோடு முடியவில்லை. போதாக்குறைக்கு ஆந்திராவின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவ ருமான பவன்கல்யாண் திருப்பதி லட்டுவின் ‘புனிதம்’ காக்க 11 நாள் விரதம், அங்கப்பிரதட்சணம் செய்தார்; காவி உடையணிந்து ஆர்.எஸ்.எஸ் சங்கிகளையே மிஞ்சும் வகையில் கிளம்பிய இந்தப் பேர்வழி இறுதியில் ‘சனாதனம்’ காக்கப் போவதாக கூப்பாடு போட்டார். இது அரசியல் சந்தர்ப்பவாத கேலிக்கூத்தின் உச்சகட்ட நடவடிக்கையாகும்!. இதுபோன்ற அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்புக ளில் உள்ளவர்களின் மதச்சார்பு நடவடிக்கைகள் சமூகத்தில் எந்தளவுக்கு எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் என்பதைப் புரியாதவர்கள் அல்ல அந்த இரண்டு பேரும்; இருந்தும் இவ்வாறு நடந்து  கொள்ளக் காரணம், கடந்த பத்தாண்டுகளாக இந்துத்துவாவின் தொடர் செயல்பாடுகள் குடிமைச் சமூகத்தில் பெரும்பான்மை இந்துக்களின் கணிச மான பகுதியினர் மத்தியில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தி யுள்ளதோ, அதேபோல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் உதிரி கட்சிகளிடத்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனொரு பகுதி தான் நாம் தற்போது ஆந்திராவில் பார்த்துக் கொண்டிருப்பது.

விரிவடையும்  இந்துத்துவா செயல்பாடு!

திருப்பதி லட்டுவின் புனிதத்தன்மை என்கிற பிரச்சனையை சாக்காக வைத்து, சங்பரிவாரக் கும்பல்கள் இந்தியா முழுவதும் உள்ள இந்து கோவில்களின் புனிதத்தைக் காப்பதாகக் கூறிக் கொண்டு மீண்டும் தனது சித்து விளையாட்டுக்களை ஆட ஆரம்பித்துவிட்டன. ஏற்கனவே, திருப்பதி கோவி லைவிட்டு ஆந்திர அரசு வெறியேற வேண்டும் என வி.எச்.பி ஆந்திராவின் பல மாவட்டங்களில் போராட்டத்தை நடத்தியுள்ளது. இந்து கோவில்களின் புனிதம் காப்பது என்கிற பெயரில் “இந்துக்களிடமிருந்து இந்துக்களுக்கு” என்கிற கோஷத்தை முன்வைத்து பல வழிபாட்டுத் தலங்களில் சங்கி அமைப்புகள் செயல்பட ஆரம்பித்து விட்டன. இந்து கோவில்களுக்கான வழிபாட்டு பொருட்களை இந்துக்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை முன் வைக்கின்றன. இந்தப் ‘புனிதத்தை காக்கும்’ காரியத்திற்குப் பின்னால் இஸ்லாமிய வியாபாரிகளுக்கு எதிரான பொருளியல் தாக்குதல் உள்ளடங்கியுள்ளது என்பது நிதர்சனமாகும்.  

இந்துத்துவாவின் சக்கர வியூகம்!

கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி, பெரும் பான்மை இந்துக்களை கவர்ந்திட மேற்கொண்ட மிதமான இந்துமத அணுகுமுறை இந்தியா முழு வதும் அதன் வாக்கு அடித்தளத்தில் மிகப்பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் இது பிரதிபலித்தது.  இதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப்பிரதேசத்தில், பாஜக ஆதித்யநாத் அரசு கன்வர் யாத்திரைக்கு செல்லும் வழியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைக்கு முன்பாக உரிமையா ளரின் பெயரோடு, அவர் சார்ந்த மதத்தையும், அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் இதற்கு தடை விதித்த போதும், மீண்டும் கடந்த செப்டம்பரில் அதை அம லுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், அதிர்ச்சி  என்னவென்றால் இதைப் போன்றதோர் உத்தரவை காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் விக்கிரமாதித்யாசிங் கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் கொண்டு வந்ததுதான்! உபியில்கூட குறிப்பிட்ட வழிபாட்டு தலத்தின் பாதைக்கு மட்டும் இருந்த உத்தரவை காங்கிரஸ் முதல்வரோ, அதை இமாச்சலப் பிரதேச மாநிலம் முழுமைக்கும் விரிவு படுத்திவிட்டார். காங்கிரஸ் தலைமை இதுகுறித்து தில்லிக்கு வரவழைத்து அவரிடம் விளக்கம் கேட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதேபோல், மாநில அளவில் பாஜகவுடன் நெருக்க மான உறவு பாராட்டும் பிராந்திய முதலாளித்துவ கட்சி கள் குறிப்பாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாஜகவுடனான நீண்ட நெடிய கூடா நட்பின் காரணமாக தன்னுடைய வாக்கு அடித் தளத்தின் பெரும்பகுதியை பாஜகவிடம் பறிகொடுத் துள்ளது. மகாராஷ்டிராவில் இனவாத அரசியல் பேசி கோலோச்சிக் கொண்டிருந்த சிவசேனா கட்சி பாஜகவிடம் தஞ்சமடைந்தது. பாஜகவுடனான கூட்டணி அரசை பங்கிட்டுக் கொள்வதில் எழுந்த பிரச்ச னையில் உறவு இரண்டுபட்டு, சிவசேனாவை உடைத்தது பாஜக. மகாராஷ்டிராவின் தெற்கு பகுதியில் உள்ள பல தொகுதிகளில் சிவசேனாவின் வாக்கு அடித்தளத்தை ஷிண்டே பிரிவு கட்சியைக் கொண்டு பாஜக கபளீகரம் செய்தது. கடந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவின் நீண்ட கால முதல்வரும், மதச்சார்பின்மையில் உறுதியான வர் என்றறியப்பட்டவருமான நவீன்பட்நாயக் நாடாளு மன்றத் தொகுதிகளை இழந்தது மட்டுமின்றி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்தில் தோல்வி கண்டு அதிகாரத்தை பாஜகவிடம் இழந்தார். நவீன் பட்நாயக் பாஜகவுடன் விலகி நின்றாலும், நாடாளு மன்றத்தில் பல்வேறு விசயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த நிலைபாடு, தனது மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்காதது ஆகியவை இதற்கு சில குறிப்பிட்ட முக்கியமான காரணங்களாகும். தமிழகத்தி லும்கூட, பாஜகவுடன் அதிமுக கொண்டிருந்த உறவின்  முறிவுக்கு அதன் செல்வாக்கு தளங்களில் ஏற்பட்ட பாதிப்பு தான் முக்கிய காரணமாகும். இவ்வாறு, பெரும்பான்மை இந்து மக்களை கவர்வ தற்காக முதலாளித்துவ கட்சிகள் மேற்கொள்ளும் மிதமான இந்துமத அணுகுமுறையோ அல்லது இந்து மதச்சார்பு நடவடிக்கைகளோ பெரும்பாலும் சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு பலனளிப்பதைவிட பாஜகவுக்கே பலனளிக்கின்றது. காரணம் பிற முதலாளித்துவ கட்சிகள் இந்துமதச் சார்பு நடவடிக்கைகளை ஒரு உத்தியாகக் கையாளும் போது - பாஜகவோ தன்னை இந்துக்களுக்கான கட்சியாக பகிரங்கமாக வெளிப் படுத்திக் கொண்டு  செயல்படுகின்றது. இதன் நிமித்தம்,  பெரும்பான்மை இந்துக்களில் கணிசமான பகுதியி னர் பாஜகவை ஏற்றுக் கொள்வதைப் போல் பிற முதலாளித்துவ கட்சிகளை ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, பிற முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே கதிதான் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேசக் கட்சிக்கும், பவன் கல்யாணின் ஜன சேனாவிற்கும் நிச்சயம் ஏற்படும்.

வெறியோடு  ஒழித்துக் கட்டும் பாசிசம்

பாசிச சக்திகள் அதிகாரத்தில் உள்ள நாடுகளி லெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக் கட்டு வதற்கு முன்பாக முதலாளித்துவக் கட்சிகளை ஒழித்துக் கட்டுகின்றன என்பதை பாசிச முசோலி னியின் ஆட்சிக் காலத்தில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த தோழர்.பால்மிரோ டோக்லியாட்டி தனது இத்தாலிய அனுபவத்திலிருந்து கூறுகிறார். “இத்தாலியில் முசோலினியின் பாசிசக் கட்சி இதர அரசியல் கட்சிகளை ஒழித்துக்கட்டும் வேலையை முன்னெடுத்த போது சீர்திருத்தக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் பாப்புலர் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி மீதும் அடக்குமுறைக் கணைகளை ஏவியது. ஏன் இவ்வாறு நடந்து கொண்டது? அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பிற முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் வெகுஜன அடித்தளமானது பரந்து விரிந்ததாக இருந்தது. இது பாசிசக் கட்சி வளர்வதற்கு இடையூறாக இருந்தது. ஒரு வெகுஜன கட்சியாவதற்கு பாசிசம் தனது அணிகளுக்குள் சேர்த்துக் கொள்ள விரும்பிய அதே வெகு ஜன பகுதியினரிடையே இக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. எனவே இந்த வெகு ஜனப் பகுதியினரை தம் பக்கம் ஈர்ப்பதற்கு கடும் போட்டி நிலவியது. இது மிக உக்கிரமான அரசியல் மோதலாக உருவெடுத்தது. இதர அரசியல் கட்சி களை குழி தோண்டிப் புதைக்கும் திட்டம் உறுதி யாக விரிவுபடுத்தப்பட்டது. முடிவில் பழைய கட்சி களை எல்லாம் தடை செய்யும்சட்டங்கள் 1925-26ல் இயற்றப்பட்டன” என்கிறார்.

மேற்கண்ட அம்சங்களோடு இந்தியாவின் இன்றைய நிலைமையை எந்திர கதியாக பொருத்திப் பார்க்க முடியாது என்ற போதும், இக்குறிப்பிட்ட பிரச்ச னையில் இத்தாலி பாசிசத்திற்கும், பாசிச இந்துத்து வா சக்திகளுக்கும் இடையேயான பொதுவான அம்சங்களும் தனித்தன்மை கொண்ட அம்சங்களும் இருப்பதை காணத் தவறி விடவும் கூடாது. பாசிசம் பிறக்கும் போதே அதன் சொல்லுக்குரிய முழு பரிணாமத்துடன் பிறப்பதில்லை. இத்தாலி யிலும்கூட 1919-20களில் பிறந்து, மிகக் குறுகிய காலத்தி லேயே தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் வரையறுத்தது போல “நிதிமூலதனத்தின் ஆகப் பிற்போக்கான சக்தி களின் படுபயங்கர  சர்வாதிகாரமாக” முழு வளர்ச்சி யடைந்த நிலையில் வெளிப்பட்டது. ஆனால், இந்தியாவில் பாசிசம் வளர்ச்சியுறும் நிலையிலேயே உள்ளது. இதன் பொருள் அதன் வளர்ச்சி பொருளாதார அடித்தளத்தில் உள்ளது என்பதாகும்.  இத்தாலி பாசி சக் கட்சி இதர அரசியல் கட்சிகளை அடக்குமுறை மூலம் - தலைவர்களை படுகொலை செய்வது உட்பட  -  அரங்கேற்றியது. ஆனால்  பாசிச இந்துத்துவா சக்தி யான பாஜகவும் கூட எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசு களை அடிபணியச் செய்ய ஒன்றிய அரசின் முகமைகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தற்போது தேர்தல் ஆணையம் உட்பட ஏவி மிரட்டுகின்றது. பாஜக கடந்த பத்து ஆண்டுகளாக தன்னோடு  அணிசேரும் கட்சியின் தலைமையை வீழ்த்துவதை விடவும் - அதன் வெகுஜன அடித்தளத்தை கைப்பற்றுவ தையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை பாஜகவின் ‘சரசமாடும் கொள்கை’ என்று  கூறலாம். எனவே, பாசிச பாஜகவை எதிர்கொள்ள இதர முதலா ளித்துவ கட்சிகள் மேற்கொள்ளும் இந்துமதச் சார்பு  நடவடிக்கை என்பது பெரும்பான்மை இந்துக்களாக உள்ள வெகுஜன அடித்தளத்தை தக்க வைப்ப தற்கும், கைப்பற்றுவதற்கும் இடையிலான முரண் பாட்டின் வெளிப்பாடே ஆகும். அந்த முரண்பாட்டில் பாஜக வீழ வேண்டுமானால், முதலாளித்துவக் கட்சி கள், முழுமையான மதச்சார்பற்ற நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும்.