ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக கூட்டணி அரசு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் பெரும் முதலாளிகளும், கார்ப்பரேட் நிறு வனங்களும் கொள்ளை லாபம் பெறுவதற்கான திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. இயற்கை வளங்கள் அனைத்தையும் தனியார்மயமாக்கிடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாபட்டி பிளாக்கில் 48க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் பூமிக்கடியில் உள்ள டங்ஸ்டன் என்ற கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான சுரங்க அனுமதியை 2024 நவம்பர் 11ஆம் தேதி வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமாக செயல் படும் “ஹிந்துஸ்தான் ஜிங்க்” நிறுவனத்திற்கு ஏலம் விட்டுள்ளது. இந்த செய்தி வெளியில் வந்தவுடன் உடனடியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதலில் தனது எதிர்ப்பை தெரிவித்து கிராம மக்களை சந்தித்து உரையாடியதோடு, நாடாளுமன்றத்தில் வலு வான குரலை எழுப்பி ஏல அறிவிப்பை ரத்து செய்ய வலி யுறுத்தி பேசியுள்ளார். ஒன்றிய சுரங்கத்துறை அமைச்ச ரிடம் விரிவான விபரங்களுடன் மனு கொடுத்து சுரங்க திட்டத்தை உடன் ரத்து செய்திட வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து மேலூர் பகுதி மட்டுமல்லாமல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த இரண்டு மாத காலமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசி யல் கட்சிகள், விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்புகள் மூலம் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. குறிப்பாக 7.1.2025 அன்று மேலூர் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கடையடைப்பு நடத்தி பல்லா யிரக்கணக்கான மக்கள் நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை 22 கி.மீ பேரணி யாக வந்து சுரங்கத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
டங்ஸ்டன் என்றால் என்ன?
பூமிக்கடியில் படிந்துள்ள பல்வேறு தாதுப் படிவங்களிலிருந்து பல கனிமப் பொருட்கள் வெட்டி யெடுக்கப்படுகின்றன. அவ்வாறு தாதுப்படிவங்களிலி ருந்து பிரித்து எடுக்கப்படும் வேதியல் கனிமங்களில் ஒன்றுதான் “டங்ஸ்டன்” என்ற கனிமமாகும். இது தனி யான கனிமமாகக் கிடைக்காது. இது இரும்பை விட மூன்று மடங்கு அடர்த்தியான கனிமமாகும். இந்த கனி மத்தை 1783இல் ஜப்பானைச் சேர்ந்த யுவான் ஜோஸ், பாஸ்டோ எல்புவியா என்ற சகோதரர்கள் முதலில் கண்டறிந்தனர். உலகில் சீனா, ரஷ்யா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து போன்ற நாடுகளில் அதிகளவில் கிடைக்கிறது. இந்தி யாவில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் உள்ளது. உலகில் உற்பத்தி செய்யப் படும் “டங்ஸ்டன்” கனிமத்தில் 84.5 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்து வருகிறது.
பயன்பாடுகள்
தங்கத்திற்கு அடுத்து அடர்த்தியானதாகவும், இரும்பை விட மூன்று மடங்கு அடர்த்தி கூடுதலா கவும் உள்ள ‘டங்ஸ்டன்’ கனிமம் 3400 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தான் உருகும் நிலைக்கு வரும். எண்ணெய் சுத்திகரிப்பு துறையிலும், சுரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கும் டங்ஸ்டன் கனிமம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒளிவிளக்கு கள், (குண்டு பல்புகளில் உள்ள நுண்ணிய நூல்இழை) மின்சார வாகன பேட்டரி தயாரிப்பிற்கு, ராணுவ தள வாடங்கள் தயாரிப்பிற்கு, ராக்கெட் பயன்பாட்டிற்கு, வெட்டுதல், துளையிடுதல் பணிகளுக்கு பயன்படு கிறது. மேலும் மருத்துவத்துறைகளில் அறுவைச் சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கருவிகள் பயன் பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இயந்திர உற்பத்தி க்கு பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் கார்பைட் தயாரிக்க மிக முக்கியப் மூலப்பொருளாக “டங்ஸ்டன்” கனிமம் பயன்படுத்தப்படுகிறது. ஒளி விளக்குகளில் ‘டங்ஸ்டன்’ இழைகளை முதன்முதலில் 1903இல் வில்லியம் கூலிச் என்பவர் பயன்படுத்தி வெற்றிகண்டார்.
சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்
உலகில் பல நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா வில் டங்ஸ்டன் சுரங்கம் துவங்கிய இடங்கள் தடுக்கப் பட்டுள்ளது. டங்ஸ்டன் தாதுப்படிவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேற் றப்படும் கழிவுகள், சுரங்கத்திலிருந்து வெளியேற்றப் படும் கழிவுநீர் உட்பட சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு களை உருவாக்குகிறது. காற்று மாசு ஏற்படுவது, பல்லு யிர் வாழ்வதற்கான சூழலை முற்றிலும் கெடுத்து விடும். திறந்தவெளிச் சுரங்கங்களிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சுக்கள் பல்வேறு புதிய நோய்களை உரு வாக்குவதோடு சுரங்கம் அமைக்கப்படும் பகுதிகள் முழுவதும் வேளாண்மை கேள்விக்குறியாக்கப்பட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் ஏற்படும்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அரிட்டா பட்டி பிளாக்கில், மேலூர், அரிட்டாபட்டி, தெற்கு தெரு, முத்துவேல்பட்டி, கூலாணிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்களம், அ.வல்லாளபட்டி, செட்டியார்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 5500 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்ப தற்கான ஏல ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு கடந்தாண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திய வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி சுற்றுச்சூழலைக் கெடுத்து, பல்வேறு விதமான நோய்களை மக்களுக்கு உண் டாக்கிய நிறுவனம். இதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் வரை சென்றபின்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது வரலாறு. அப்படிப்பட்ட வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனம் தான் தற்போது அரிட்டாபட்டி “டங்ஸ்டன் சுரங்கம்” அமைக்க ஏலம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் முதல் கட்ட ஏல அறிவிப்பில் 5500 ஏக்கர் உள்ளது. உண்மையிலேயே அவர்கள் தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 38,500 ஏக்கர் நிலப்பரப்பில் “டங்ஸ்டன் கனிமம்” இருப்பதாக கண்டறிந்துள்ளனர். முதல் முன்னோட்டமாக மேலூர் பகுதியை தேர்வு செய்துள்ளனர்.
வனப்பகுதி மட்டுமின்றி விளை நிலங்கள் அழியும்
அரிட்டாபட்டி பிளாக் தமிழ்நாடு அரசு ஏற்கனவே, பல்லுயிர்ச் சூழல் மண்டலமாக அறிவித்துள்ள பகுதி யாகும். மேலும் இப்பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியுமாகும். 3500 ஆண்டுகளுக்கு உட்பட்ட தொல்லியல் பொருட்கள் நிறைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் சமணர் படுக்கைகள் உள்ளன. 8க்கும் மேற்பட்ட வரலாற்றுத் தளங்கள் உள்ள பகுதி மட்டு மல்ல, இந்த பகுதியில் உள்ள அழகர் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு பெரும் ஆபத்து ஏற்படும். நூற்றுக்கணக்கான குன்றுகள் அழிக்கப் படும். இப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள 72 ஏரிகள், 3 தடுப்பணைகள், இயற்கை நீர் உற்றுகள் முற்றிலும் அழிக்கப்படும். அதோடு, வைகை ஒரு போக பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் முழுமையாக அழியும் நிலை ஏற்படும். ஒட்டு மொத்தத்தில் சொந்த கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படும். எனவே, ஒன்றிய அரசு வளர்ச்சி என்ற போர்வை யில் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வளம் கொழிக்க கொண்டு வரப்படும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஏகமன தாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் தங்களது ஆட்சியே போனாலும் டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபடக் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பின்பும் ஒன்றிய அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடாமல், மறு ஆய்வு செய்வதாக ஒன்றிய சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத இதுபோன்ற திட்டங்களுக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம்! போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்துவோம்!!
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்