articles

img

இலங்கை: இடதுசாரி சக்திகளுக்கு மகத்தான வெற்றி

நடைபெற்று முடிந்த இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் இடதுசாரிகள் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை ஈட்டியிருக்கிறது. முதல்  தடவையாக, பிரதிநிதித்துவ அமைப்பு முறை தேர்தல் முலமாக ஓர் அரசியல் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை வென்றிருக் கிறது. தேசிய மக்கள் சக்தி மொத்தம் உள்ள  225 இடங்களில் 159 இடங்களில் 61.6 விழுக் காடு வாக்குகளைப் பெற்று சாதனை படைத் துள்ளது. கடந்த 2020 தேர்தலில் இதற்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன என்ப துடன் ஒப்பிடும்போது இது ஓர் அசாதாரணமான வெற்றி என்பதை உணர முடியும். முன்னதாக, செப்டம்பரில் ஜனாதிபதிக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க,  42 விழுக்காடு வாக்குகள் பெற்றதை அடுத்து, இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தார். ஜனாதிபதி யாகப் பதவியேற்ற பின்னர் திஸாநாயக்க நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நவம்பர் 14 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார். தேசிய மக்கள் சக்தி என்னும் அமைப்பு 2019இல் அமைக்கப்பட்டது. இதன் பிரதான அங்கம் ஜேவிபி என்னும் ஜனதா விமுக்தி பெரமுன என்னும் ஒரு மார்க்சிஸ்ட் கட்சியாகும். இதனுடன் இருபது அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் மற்றும் சமூகக் குழுக்களும் சேர்ந்து தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டது.  ஜேவிபி-யின் தலைவரான திஸாநாயக்கதான் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமாவார்.

தலைகீழ் மாற்றம்

திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டமையும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றிருப்பதும் இலங்கை அரசியலில் ஒரு தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது. சமூக உயரடுக்கு மற்றும் தம் சொந்தக் குடும்ப நலன்களையேப் பிரதிநிதித்துவப்படுத்திய ராஜபக்சேவின் எஸ்எல்பிபி (SLPP) என்னும் ஸ்ரீலங்கா மக்கள்  முன்னணி, அதிலிருந்து பிளவுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அனைத்தும் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன. சஜித் பிரேமதாசா தலைமை யிலான  எஸ்ஜேபி என்னும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் 40 இடங்களை மட்டுமே பெற்று தொடர்ந்து நிலைத்துநிற்க முடிந்திருக்கிறது.   22 தேர்தல் மாவட்டங்களில் 21இல் தேசிய  மக்கள் சக்தி வெற்றி பெற்றது. தமிழ் மாவட்டங் களான யாழ்ப்பாணம் மற்றும் வன்னியிலும் கூட மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது.  அங்கும், தேசிய மக்கள் சக்தி இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) மற்றும் பிற தமிழ் கட்சிகளைத் தோற்கடித்துள்ளது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் அம்பாறை மற்றும் திருகோணமலையிலும் தேசிய மக்கள் சக்தி கால் பதித்துள்ளது. தென் மாவட்டங்களில் இதர கட்சிகள் அனைத்தையும் துடைத்தெறிந்துவிட்டு முன்னேறியுள்ள தேசிய மக்கள் சக்தி, தமிழ்  தோட்டத் தொழிலாளர்கள் கணிசமாக வசிக்கும் மத்தியப் பிராந்தியத்திலும், சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு, தேசிய மக்கள் சக்தி, இன மற்றும் மத அடையாளங்களைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் ஆதரவையும் பெறுவதில் வெற்றிபெற்றிருக் கிறது.

ஊழலுக் கெதிரான போராட்டம்

2022இல் இலங்கையில் ஓர் ஆழமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் தேசிய மக்கள் சக்தியும், ஜேவிபி-யும் மக்கள் மத்தியில் நடத்திய ‘அரகலய’ என்னும் வெகு ஜன எழுச்சி, மக்கள் மத்தியில் இவர்களுக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது.  இந்த மக்கள் கிளர்ச்சியானது நாட்டைக் கொள்ளையடித்து வந்த ராஜபக்சே குடும்பத்தின் தலைமையிலான ஊழல் அரசியலுக்கு எதிரானதாகும். தேசிய மக்கள் சக்தி, அரசியல் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததன் விளைவாகவும், மக்களின் பொருளாதார உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்காக போராடுகிறவர்கள் என்றும் மக்கள் பார்த்து, அதன்பின் அணிதிரண்டார்கள். அனுர திஸா நாயக்க, ஊழல் கறைபடிந்த அரசியல்வாதி களின் மத்தியில் மக்களின் அபிலாசைகள் மீது கவனம் செலுத்தும் தலைவராக மாறினார். தேசிய மக்கள் சக்தி, தங்களுடைய மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்திட வேண்டு மானால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திலும் மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம். அதற்கு அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டியது அவசியம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையேல், அனுர குமார  திஸாநாயக்கவால் மாற்றத்தை முன்னெடுப் பது மிகவும் சிரமம். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்திருப்பதால், அது தன் உண்மையான அலுவல்களைத் தொடங்கிட முடியும். இதனைச்  செய்வதற்காக, பிரதமர்  முனைவர் ஹரிணி அமரசூரியா தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

பொருளாதார நிவாரணம் வழங்கல் முக்கியம்

ஜனாதிபதி திஸாநாயக்க நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தாம் பின்பற்றும் எந்த வொரு விரிவான கொள்கைத் தொகுப்பையும் குறிப்பிடவில்லை. இவை இப்போது உரு வாக்கப்படலாம். விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகளால் விழிபிதுங்கி அவதிப்படும் மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதே இப்போது முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும். ஊழலை ஒழித்துக் கட்டுதல், திருடப்பட்ட பொது நிதியை மீட்டெடுத்தல், குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்தல் முத லான நடவடிக்கைகளிலும் தேசிய மக்கள் சக்தி இறங்க வேண்டியிருக்கும். மேலும் தேசிய மக்கள் சக்தி, புதிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதாகவும், இப்போதுள்ள நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் உறுதியளித்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய சவால்கள் சில உள்ளன. இலங்கை சர்வதேச நிதியத்திட மிருந்து 2.9 பில்லியன் டாலர் கடனைப் பெற்றுள்ளது, அதில் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், இந்த நிபந்தனைகளில் சிலவற்றை தளர்த்த அரசு உறுதியளித்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கையைப் பின்பற்றி வந்ததன் விளைவாக இலங்கைப் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி யை ஏற்படுத்தி, மக்கள் சார்பான அபிவிருத்திப் பாதையை அமைக்க வேண்டியிருக்கிறது. இதனை மேற்கொள்ளும்போது அரசாங்கம் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் மேற்கத்திய அரசாங்கங்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அண்டை நாட்டுறவு தேசிய மக்கள் சக்தி தலைமையானது, அதன் பெரிய அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணும் அதே சமயத்தில், சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலையை வழிநடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை யும் நன்கு அறிந்திருக்கிறது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடமிருந்து தேசிய  மக்கள் சக்தி பெற்றுள்ள கணிசமான ஆதரவு, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கும் அதிகாரக் கட்டமைப்பில் அவர்களுக்கு உரிய பங்கை வழங்குவதற்கும் அரசமைப்புச் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு முறையில் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டுவரு வது என்பது குறித்து ஆராய வேண்டியிருக்கும்.

தெற்காசிய வரலாற்றில் முத்திரை

இலங்கையில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி, இந்தியாவில் நாம் உருவாக்க விரும்பும் இடது ஜனநாயக முன்னணிக்கு இணையானதாகும். அப்படிப்பட்ட ஓர்  அமைப்புக்கு இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்து, அரசாங்கத் திற்குத் தலைமை தாங்குவது என்பது தெற்காசியாவின் அரசியல் வரலாற்றில் முத்திரை பதித்துள்ள ஒரு முக்கிய நிகழ்வாகும். மத மோதல்களுக்கும். இன மோதல்களுக்கும், நிதி மூலதனத்தின் சுரண்டலுக்கும், கார்ப்ப ரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கும் ஆளாகி யுள்ள தெற்காசிய நாடுகளின் மத்தியில், இலங்கையில் இடதுசாரிகள் பெற்றுள்ள மகத்தான வெற்றி, உண்மையில் மனதிற்கு  மகிழ்ச்சியை அளித்திடும் வளர்ச்சிப் போக்காகும்.

  நவம்பர் 20, 2024 தமிழில்: ச.வீரமணி