articles

img

எஸ்எப்ஐ - சமரசமற்ற சமரின் ஐம்பது ஆண்டுகள்....

1983ல் காலிஸ்தான் தீவிரவாதிகள் பஞ்சாப்பை  இந்தியாவில் இருந்து பிரிக்க முற்பட்டபோது பிரிவினைவாதத்திற்கு எதிராக அப்போது அசாம் மாநிலத்தின் தலைவராக இருந்த நிரஞ்சன் தாலுக்தர் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் விதமாகத்  தீவிரவாதிகள், தோழரின் உடலை  26 துண்டுகளாக  வெட்டி, சாக்குப் பையில் வைத்துக் கட்டி கிணற்றில்வீசினர்.ஒரு மாதத்திற்கும் மேலாக தோழரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் தடய அறிவியல் ஆய்வின் அடிப்படையில் அவர் உடல் இனங்காணப்பட்டது. தோழரின்உடல் துண்டுகளாக சிதைக்கப்பட்டுக்  கிடப்பதைக் கண்ட  இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் அஞ்சவில்லை. துவண்டு பின் வாங்கவில்லை.  ‘எங்கள் உடலைத் துண்டு துண்டாக வெட்டினாலும் இந்த தேசத்தைத் துண்டாட அனுமதியோம்’ என வீர முழக்கமிட்டுத் தலைநகர் தில்லியியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்று தொடங்கி இன்று வரை  பிரிவினைவாத  சக்திகளுக்கு எதிரான களத்தில்இந்திய மாணவர் சங்கம் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகிறது.

பல்கலைக்கழகத்தின் ஜனநாயக விரோத விதிகளுக்கு  எதிராகவும் குடியுரிமைத் திருத்த  சட்டத்திற்கு எதிராக  ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் 65 நாட்கள் தேர்வுகளை புறக்கணித்து இடதுசாரி மாணவர்கள் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஆர்எஸ்எஸ், ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர் பேரவை தலைவர் அய்சி கோஷ் மண்டை உடைக்கப்பட்டு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். அத்துணை மோசமான போராட்டத்திற்கு பின்பும் அடுத்தநாளே  போராட்டக் களத்திற்கு வந்து ‘எனதுமண்டையை இரண்டாகப் பிளந்தாலும் இந்தப் போராட்டத்திலிருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்’ என உரக்கக் குரல் எழுப்பினார். 

தமிழகத்தில்  சாதிஆதிக்க வெறியர்களுக்கு எதிரான போராட்டத்தில் கொலைசெய்யப்பட்ட தோழர்கள் சோமசுந்தரம், செம்புலிங்கம் ஆகியோர் வளர்த்தெடுத்த போராட்டக் கனல் இன்றும் கல்வி உரிமைக்கான இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டக் களத்தைக் குறையா  தகிப்புடன் வைத்திருக்கிறது. 2017ல் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான 17 வயதேயான  தோழன் மணிகண்டன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறார் சிறை செல்ல இருந்தபோதும் மீண்டும் போராடுவாயா எனக் கேட்ட  நீதிபதியிடம் ‘நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை  போராடுவோம்.மருத்துவக் கல்வி எங்கள் உரிமை’ என பகத்சிங்கின் வாரிசாகத் துணிவுடன் பதிலளித்தான். இத்தகு வீரஞ்செறிந்த வரலாற்றின் பொன்விழா ஆண்டில் நம் கடந்த காலத்தை  நினைவு கூர்வது  எதிர்கால இலக்குகளை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தும் ஊக்க சக்தியாகும். 

இந்தியாவில் மாணவர் இயக்கம்
இந்திய விடுதலைப் போரில் மாணவர்கள் பெரும் பங்காற்றினார்கள். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த வங்கப்பிரிவினை, சுதேசி இயக்கங்கள், பம்பாய், பஞ்சாப்,மதராஸ் மாகாணங்களில் விடுதலைக்கான போராட்டத்தில் மாணவர்கள் பலர் பங்கெடுத்தனர். 1919- 22 இல் ஒத்துழையாமை இயக்கம், 1927- 28 இல்சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டம் மாணவரிடையே எழுச்சியை உருவாக்கியது. 1927-28 காங்கிரஸ் மாநாட்டின்  போதே மாணவர்கள் கூடி விவாதித்தனர். 1930களின் இறுதியில் இம் முயற்சி பலன் அளித்தது. சர்வதேசஅளவில் உலக முதலாளித்துவச் சிக்கல்கள் மற்றும்வீழ்ச்சி, சோவியத் யூனியனின் வளர்ச்சி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பகத்சிங்கிற்கு வழங்கப்பட்ட  தூக்கு தண்டனை, மீரட் சதி வழக்கு ஆகியவை மாணவரிடையே பெரும் கிளர்ச்சியை  ஏற்படுத்தியது.  1935 காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உருவானபோது இந்த மாணவர் இயக்கம் மேலும் வலுவடைந்து  1936 ல் ஏஎஸ்எப் (AISF) உருவாக்கமாக மலர்ந்தது. 1936ஆகஸ்ட் 12-ஆம் தேதி முகமது அலி ஜின்னா தலைமையில் அதன் முதல் மாநாடு நடைபெற்றது. நேரு துவக்கி வைத்த  இந்த அமைப்பு ரீதியிலான மாணவர் இயக்கம் விடுதலைக்கான போராட்டத்தில் தன் பங்களிப்பை செலுத்தியது.

சுதந்திரம் பெறுவது முதன்மையான நோக்கமாகஇருந்தாலும், முதலாளித்துவ உலகில் வேலையின்மையால், எழுத்தறிவின்மையால் பீடிக்கப்பட்டிருந்த இந்த சமூகத்தில் புரட்சிகர மாற்றம் கொண்டுவர முயற்சி செய்தது. இத்தகைய மாறுதல்களை எப்படி கொண்டு வருவதுஎன்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஏஐஎஸ்எப் (AISF) துவங்கிய இரண்டு ஆண்டுகளில் பிளவு ஏற்படும் நிலை வந்தது.உலகிலேயே வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக அறிவித்த சோவியத்தின் வழி செல்ல ஒருபிரிவினரும், கம்யூனிச எதிர்ப்பாளர் மீனுமாசனி தலைமையில் ஒரு பிரிவினரும் அதை ஏற்க மறுத்ததோடு 1938 ஆம்வருட மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருவதையே தடுத்தார்கள். 1940 வாக்கில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினருக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே பிளவுஏற்பட்டது. 1940இல் ஜின்னா முஸ்லீம் மாணவர்களுக்கான தனிமாணவர் அமைப்பை தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போரும், சோவியத் மீதான தாக்குதலும் மாணவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மக்கள் யுத்தம் என்ற முழக்கத்தோடு பாசிசத்தை வீழ்த்த மாணவர்கள் அணிதிரண்டனர். பாசிசத்தின் வீழ்ச்சிகாலனிய நாடுகளின் எழுச்சியை உருவாக்கும், எனவே சுதந்திரப் போரின் முடிவோடு தொடர்புடையது என உணர்ந்திருந்தனர். வரலாறும் அதை மெய்ப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வால் ஈர்க்கப்பட்ட பொதுவான மாணவ சமுதாயமும் பிரிட்டிஷாரை விரட்டுவது தான் முதன்மையானது எனக் கருதியது. அதன் காரணமாக ஒன்றுபட்ட மாணவர் இயக்கம் பலவீனமடைந்தது.

இக்காலகட்டங்களில் மாணவர் இயக்கத்தின் குறிக்கோள் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. சுதந்திரம் மட்டுமேநோக்கம் என்ற குழுவினர் சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுக்க வேண்டும் என்றார்கள்.  போராட்டங்களை கைவிட காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது மேலும் என்எஸ்யுஐ (National students union of india) தோன்றியது.சுதந்திரம் பெற்றதும் மக்கள் கண்ட கனவுகளை சுரண்டிதனது ஆட்சியை தாங்கிப் பிடிக்க பல்வேறு பிரிவினருக்கும் வெகுஜன அமைப்புகளை தொடங்கும் காங்கிரஸின் ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. இச்சூழலில் வேலையின்மை, எழுத்தறிவின்மை போன்றவை இல்லாத, சமூகத்தை அமைக்க மாணவர் இயக்கம் தேவை எனக் கருதிய பிரிவினர்  காங்கிரஸோடு ஒத்துழைக்க வேண்டும் என்றனர். மற்றொரு பிரிவினர், காங்கிரசை எதிர்ப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்றனர்.

ஆரம்பத்தில் மிகப்பெரிய நம்பிக்கைகளும், கனவுகளும் ஏற்படுத்தப்பட்டதால் ஊசலாட்டமுள்ள நடுத்தர வர்க்கத்தினர் காங்கிரசை ஆதரித்தனர்.பின்னர்  காங்கிரஸின் உண்மை முகம் தெளிவாக தெரிந்ததுவேலையின்மை அதிகரித்து வசதி படைத்தவர்களுக்கு கல்வி கிடைத்தது. மக்களின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமானது. ஏஐஎஸ்எப் (AISF) இன் தலைமை காங்கிரசை ஆதரித்தது. மாணவர் சமூகமோ தனது நேரடி அனுபவத்தால் காங்கிரசை எதிர்ப்பு தான் சரி என ஒரு பகுதி நினைத்தது. இதனால் அவர்கள் பல மாநிலங்களில் புதிய அமைப்புகள் துவங்கினர். வங்காளம், பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட7 மாநிலங்களில் 1960களில் மாணவர் சங்கம் உருவாக்கினர். அனைவருக்கும் கல்வி, வேலை போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களை திரட்டியது. 1960களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வியடைந்தது.

இச்சூழலில் மாணவர் இயக்கத்தின் திசை வழியை மறுநிர்ணயம் செய்து, புதிய சரியான திசை காட்ட வேண்டிய தேவை உருவானது. இந்த அவசியம் கருதி பல மாநிலகூட்டமைப்பின் தலைவர்கள் கூடி 1970 களில் 600 பிரதிநிதிகள் 500 பார்வையாளர்கள் பங்கேற்ற மாநாட்டை கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் நடத்தி இந்திய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் மாணவர் இயக்கம் 
1936ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்) தொடங்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்திலும் அமைப்புரீதியான செயல்பாடுகளை மாணவர்கள் துவங்கினர். சென்னை மாணவர் அமைப்பு (MSO) 1958 இல்  துவங்கப்பட்டது .1940 அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முயற்சியில் மதுரை மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது. தோழர் என்.சங்கரய்யா சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.1942 மதுரை அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் இருந்து மாணவர்களை திரட்டி சேலத்தில் மாநாடு நடத்தப்பட்டு ஏஐஎஸ்எப் தமிழக கிளையாக தமிழக மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. 1944 ல் இரண்டாவது மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புணர்வும் காங்கிரசின் எதேச்சதிகாரப்போக்கும் 1960 களில் மாணவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின் அணிதிரளக் காரணிகளாயின. இது  1967 ல் திமுக ஆட்சியை கைப்பற்ற மாணவர் போராட்டங்களும் காரணமாயின. திமுகவும் காங்கிரஸ் கொள்கையை கடைப்பிடித்ததால் மாணவர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியது. ஏஐஎஸ்எப்- இல் இருந்து வெளியேறிய, தமிழ்நாடு மாணவர் சங்கம் உருவாக்கிய இடதுசாரிமாணவர்கள் இணைந்து 1970 இல் இந்திய மாணவர் சங்கத்தை உருவாக்கினர். 

வீரம் செறிந்த போராட்டங்கள் 
அமைப்பு உருவாக்கப்பட்ட காலம் முதலே கல்வி உரிமைக்கான போராட்டங்களை   இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தலைமையேற்று நடத்தி வருகிறது. 1971 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் மட்டும் போதாது வேலை வேண்டும் என எஸ்எப்ஐ போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.  காங்கிரஸ் மாணவர்கள் கருணாநிதியைக் கேலி செய்து  கேலிச்சித்திரம் வரைந்து சுவரொட்டி ஒட்டினர். பட்டமளிப்பு விழாநிகழும் போதே மாணவர்களை ஓட ஓட விரட்டி காவல்துறைஅடித்து விரட்டியது. இந்தத்  தாக்குதலுக்கு எதிராக இந்தியமாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தியதோடு  விசாரணைக் கமிஷன் முன் மாணவர்களை  ஆஜர்படுத்தி இறுதிவரை வழக்கறிஞர்களை அமைத்து  வழக்கை எதிர் கொண்டது.

மத்திய அரசின் புதிய  கல்விக்கொள்கைக்கு எதிராக 1987 ஆம் ஆண்டு ராஜீவ் அரசே ராஜினாமா செய் என மிகப்பெரிய  போராட்டத்தை எஸ்எப்ஐ நடத்தியது. 2 லட்சம்மாணவர்கள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர். தமிழகத்தில் மருத்துவக் கல்வியை தனியாருக்குக்  கொடுத்ததை எதிர்த்து 45 நாட்கள் போராட்டம் நடத்தி இறுதியில் தனியார்மருத்துவக் கல்லூரி துவங்க மாட்டோம் என அரசிடம் உறுதிமொழியை பெருமளவிற்கு வலுவான போராட்டம்  இந்தக் காலகட்டத்தில் நடத்தப்பட்டது. 1990- களில் ராக்கிங்குக்கு  எதிராகவும் ஈவ்டீசிங்கிற்கு எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டம் தமிழக அரசு பகடிவதை தடுப்பு சட்டம் இயற்றுவதற்கு காரணமாய் இருந்தது. 2000 முதல் 2010 வரையிலான காலத்தில்,  2002ல் அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக மாற்றுவதை எதிர்த்து  64 நாட்கள் நடந்த போராட்டம், ராணிமேரிக் கல்லூரியைப் பாதுகாப்பதற்கான போராட்டம்,விடுதி மாணவர் உணவுப்படியை உயர்த்துவதற்கான போராட்டம், தமிழக கல்வியை சமத்துவத்தின் பாதையில் இட்டுச் செல்லும் சமச்சீர் கல்வி கோரிக்கைக்கான போராட்டம் என தீரமிகு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 

 2010-க்கு பிறகான காலத்தில் தாராளமயக் கொள்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் பாஜக அரசின்பாசிச தாக்குதலுக்கும் கல்வி ஆட்பட்டுள்ளது. கல்வி உரிமைக்காக அன்றாடம் போராடுவதற்கான  காரணிகளை உருவாக்கும் விதமாக  பாஜக அரசின் மாணவர் விரோத நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. தமிழகத்தில் ஆளும் அரசு சுயச்சார்பற்ற அடிமை அரசாக இருப்பதால் மிகநேரடியாக கல்வியைக் காவிமயப்படுத்தும்   நடவடிக்கைகள்தீவிரப்படுத்தப்படுகின்றன. கல்வி வளாகங்களை ஆர் .எஸ். எஸ் வசப்படுத்தும் முயற்சிகள் அரசுகளால் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தஜனநாயக விரோத நடவடிக்கைகளை நேரடியாக கல்வி வளாகங்களில்  எதிர்த்து களமாடுகிற  அமைப்பாக தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கம் மட்டுமே இருந்து வருகிறது.   இந்தக் காலகட்டத்தில் அந்நியப் பல்கலைக் கழகங்களுக்கு எதிரான போராட்டம், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டம், ஒடுக்கப்பட்டோர் உதவித்தொகைக்கான போராட்டம், கல்வி வளாகப் படுகொலைகளுக்கு எதிரான போராட்டம், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம், அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்  என போராட்டங்களின் காலமாக இந்தக் காலகட்டம் மாறி இருக்கிறது.    
செப்டம்பர் 3-ஆம் தேதி அரியலூர் மாவட்டம் குன்னூரில் 1876 மதிப்பெண் பெற்ற மாணவி அனிதா உச்சநீதிமன்றம்  வரை போராடி மரணத்திற்கு உள்ளானார். அந்தமாணவிக்கு நீதி கேட்டு 15 நாட்கள் தொடர் போராட்டங்கள்  மறியல், பேரணி, உண்ணாவிரதம், ரயில் மறியல் எனஅனைத்து வடிவங்களிலும் எஸ்எப்ஐ நடத்தியது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.  மாணவர்களுக்கு நீதி கேட்டுநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்எப்ஐ நடத்திய  தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது. மேலும்  ஆளுநர் கையெழுத்திடவும் இந்திய மாணவர் சங்கம் போராட வேண்டியிருந்தது. 

மேலும் கல்வி தாண்டி சூழலியல் பிரச்சனைகளான ஸ்டெர்லைட் ஆலை  எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டஎதிர்ப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான போராட்டம், பஸ் கட்டண உயர்வு  உள்ளிட்ட மக்களைப்பாதிக்கும் என மத்திய மாநில அரசுகளின்  அடக்குமுறைகளுக்கு  எதிரான போராட்டத்தை தொடர்ந்து களத்தில் நடத்திவருகிறது எஸ்எப்ஐ.

கல்வி வளாக ஜனநாயகத்தின் பாதையில் 
இந்திய மாணவர் சங்கம் உருவான காலந்தொட்டே மாணவர்கள் மத்தியில் ஜனநாயக மாண்புகளை வளர்த்திடமாணவர் பேரவை தேர்தல்களை நடத்திட வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவந்துள்ளது. ஜேஎன்யு, பல்கலைக்கழகம் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என  தேர்தல் நடைபெற்ற இடங்களில் எல்லாம் இந்திய மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளது. மாணவர்களின் ஜனநாயக உரிமைக்காக தமிழகத்தில்  மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் சாதிவெறிக்கு எதிராக,மாணவர் பேரவைத் தேர்தலுக்காக போராடிய தோழர் சோமசுந்தரம், செம்புலிங்கம்,சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.  நெல்லை மாவட்டம் பாபநாசம் திருவள்ளூர் கலைக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் தோழர் குமார் கொல்லப்பட்டார். 

மேற்குவங்கத்தில் 2013 ஏப்ரல் மாதம் 34 ஆண்டுகாலமாக  நடைபெற்றுவந்த மாணவர் பேரவை தேர்தலுக்கு தடைவிதித்த திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம்நடத்தியதற்காக காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சுதிப்தாகுப்தா அவர்களின் மரணத்திற்கு அரசு நிதி கொடுக்க வந்தபோது சுகிப்தா குப்தா வின் தந்தை நிதி வேண்டாம் எங்களுக்கு நீதிதான் வேண்டும் என உரத்த குரல் எழுப்பினார்.    மாணவர்கள் சமூக மனிதர்களாக ஜனநாயக மாண்புகளுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக  உயிர்த்தியாகங்களுக்குப் பின்னும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  மாணவர்களின் அரசியல் ஜனநாயகஉணர்வை வளர்த்தெடுக்க அனைத்துக் கல்லூரிகளிலும் பேரவைத் தேர்தல்கள் எனும் கோரிக்கையை தமிழகத்தில் வீச்சாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அரசியல், சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தில் மாணவர்கள் கல்வி என்பதே கூட்டு அரசியற் செயற்பாடு. கற்பதும் போராடுவதும் மாணவர் சமூகத்தின் தலையாய பணி. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்விஉரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் இன்றைய  சூழலில் மாணவர்களிடம் அரசியல் உணர்வும் சமகால நிகழ்வுகள் குறித்த அறிவியல் சார் பார்வையும் வளர்த்தெடுக்க வேண்டியது நம்  முன் இருக்கிற முதன்மையான பணி. அப்படியான தொடர் அரசியற்படுத்தல் நடவடிக்கைகளே மாணவர்களின் அணிதிரள்வுக்கு வழிவகுக்கும். கடந்த காலப் போராட்டங்கள் நமக்கு உணர்த்தும்வரலாற்றுச் செய்தியும் அதுவே. அரசியல் உணர்வு மிக்கமாணவர்கள் தான் இந்த நாட்டின் பிரதமரையே களத்திற்கு அழைத்துக் கேள்வி கேட்கும் சக்தியாக இருந்திருக்கின்றனர். ஆகவே இன்றைய பாசிச அரசியலின் அறிவியல் மற்றும் ஜனநாயக  விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தும் அரசியல்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை களத்தில் முன்னெடுப்போம். 
மாணவர் அமைப்பின்  இந்தத் தொடர் ஓட்டத்தில் ஏராளமான தோழர்களும் தியாகிகளும் ஏந்தி வந்த ஜோதி இன்று நம் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை  சோசலிசத்தை நோக்கிய பாதையில்  முன்னெடுத்துச் செல்ல இந்தப் பொன் விழா ஆண்டில் உறுதி ஏற்போம்.

கட்டுரையாளர்:வீ.மாரியப்பன், மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்