articles

img

ஒரே நாடு, ஒரே துறைமுகம்... ஒன்றிய அரசின் திட்டம் சாத்தியமா?

அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ‘இந்திய துறைமுக சட்ட (வரைவு) மசோதா - 2021’ குறித்தும், இதன் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை நிர்வகிப்பது, ஒழுங்குபடுத்துவது, போன்றவற்றில் உள்ள தன்னாட்சி பங்கை இந்த வரைவு மசோதா பறித்துவிடும் ஆபத்து குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற 22.06.2021 அன்று ஒன்பது கடலோர மாநில முதலமைச்சர்களுக்கு  ஓர் கடிதம் எழுதினார்.

மேலும் இக்கடிதத்தில் அவர், தற்போது அமலில் உள்ள 1908 ஆம் ஆண்டு ‘இந்திய துறைமுகங்கள் சட்டப்படி’ மாநிலங்களின் நேரடி அதிகார வரம்பிற்குள் உள்ள துறைமுகங்கள் குறித்தும், அவற்றை விரிவுபடுத்த திட்டமிடுவது, அவற்றின் மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி குறித்து முடிவெடுப்பது போன்றவற்றில் மாநில அரசுகளின்அதிகாரங்களை இப்புதிய வரைவு மசோதா பறிக்கக்கூடியதாக உள்ளது என்றும், தற்போது உள்ள சட்டத்தின்படி மாநில அரசுகள் இவைகளை முறையாக மாநில தேவைகளுக்கேற்ப பயன்படுத்தி வருகிறது, என்பதையும் சுட்டிக்காட்டி இது குறித்து விவாதிக்க 24.06.2021 அன்று, ஒன்றிய அரசு அழைத்திருக்கிற கூட்டத்தில் கடல்சார் மாநிலமுதலமைச்சர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் நமதுகருத்தை தெரிவிப்போம் என்றும் அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இக்கடிதம் குறித்து 27.06.2021 அன்றைய ‘தினமலர்’ நாளிதழில் ‘எண்ணித் துணிக கருமம், ஸ்டாலின் அவர்களே’ என்ற தலைப்பில் பா.பிரபாகரன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே அவர் ‘கடலோர மாநில முதல்வர்களுக்கு அனாவசியமான கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்’ என்றும் ‘மாநில அதிகாரம் பறிக்கப்படுகிறது’ என்று புலம்பியுள்ளார்,  “முதல்வருக்கு ஆலோசனைகூறியது யாரோ ஒரு கற்றுக்குட்டி” என்றும் ‘முதல்வர் கரித்துக் கொட்டுகிறார்’ என்றும் ‘மற்ற முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவது என்ன மடமை’ என்றெல்லாம் கட்டுரைமுழுவதும் பல அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு இறுதியில் ‘இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து, வராத துயரம் வந்ததாக காட்டும் உங்கள் கருப்புக்கண்ணாடியை கழற்றுங்கள் முதல்வரே’ என்று அக்கட்டுரையை முடித்துள்ளார். இறுதியில் அவர் தன்னை ஒரு எழுத்தாளர் என்றும் பறைசாற்றிக்கொண்டுள்ளார்.

எதிர்ப்பு வலுப்பது ஏன்?

ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள ‘சிறு துறைமுகங்கள்’ தொடர்பான இப்புதிய சட்ட (வரைவு) நகல் மசோதா குறித்து ஏன் இவ்வளவு எதிர்ப்பு வலுக்கிறது என்பதை சற்று சுருக்கமாக காண்போம்:

இந்தியாவின் 9 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களை உள்ளடக்கிய இந்திய கடலோர எல்லை சுமார் 7517 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதில் கடலோர எல்லைகளில் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்12 ‘பெருந்துறைமுகங்கள்’ இந்திய பெருந்துறைமுகங்களுக்கான 1963-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அதேபோல சுமார் 187 சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் இந்திய துறைமுகங்களுக்கான 1908 - ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் 9 கடலோர மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.இந்த 1908 -ஆம் ஆண்டுக்கான சட்ட விதிகளின்  கீழ்ஒன்றிய அரசு நினைத்தால் மேற்கண்ட இந்த 187 சிறியமற்றும் நடுத்தர துறைமுகங்களில் சிலவற்றை ‘பெருந்துறைமுகங்களாக’ அறிவிக்கலாம். அவ்வாறு அறிவிப்பதற்கான அளவுகோல்கள் எதுவும் இவ்விதிகளில் சொல்லப்படவில்லை.

உதாரணமாக குஜராத் மாநிலத்தில் உள்ள ‘காண்டலா துறைமுகம்’ ஒரு பெருந்துறைமுகம் ஆகும். சென்ற ஆண்டு மார்ச் 31 முடிய இத்துறைமுகம் கையாண்ட சரக்குகளின் அளவு 123 மில்லியன் டன். ஆனால் அதே மாநிலத்தில் காண்டலா துறைமுகத்திலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அதானி குழுமத்திற்கு சொந்தமான ‘முந்த்ரா’ என்ற தனியார் துறைமுகம் இதேகாலத்தில் கையாண்ட சரக்குகளின் அளவோ 137 மில்லியன் டன்.ஆனால் இத்துறைமுகத்தை ‘பெருந்துறைமுகம்’ என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியாது. மேலும் இத்துறைமுகம் குஜராத் மாநில அரசிடம் செய்துகொண்ட லாபபங்கீட்டு ஒப்பந்த முறைப்படி (Revenue Share agreement under Public Private Partnership) அதன் வருமானத்தின் ஒரு கணிசமான பங்கு மாநில அரசுக்கு சொந்தமாகும். இந்த நிலைதான் சென்னைக்கு பக்கத்தில் எண்ணூருக்கு அருகில் உள்ள எல் & டி நிறுவனமும் தமிழக அரசும்இணைந்து நடத்திவரும் ‘காட்டுப்பள்ளி’ சிறு துறைமுகத்துக்கு பொருந்தும்.

ஆகவேதான் மேற்கூறிய ‘இந்திய துறைமுக (வரைவு) மசோதா 2021’ என்ற இந்த புதிய மசோதாவை பல மாநிலஅரசுகளும் அவரவர்களின் கருத்துக்களை, ஆலோசனைகளை பதிவு செய்கின்றனர். இதில் என்ன தவறு? இது எப்படி‘அனாவசிய புலம்பலாகும்’?

ஒரு துறைமுகம் ‘சிறு-துறைமுகமா’ அல்லது ‘பெருந்துறைமுகமா’ என்பதெல்லாம் அது கையாள்கிற சரக்குகளின் அளவைப்பொறுத்தோ, அதன் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலோ, அதன் லாப நஷ்ட கணக்கிலோ இல்லை. மாறாக அவைகளை பராமரிக்கின்ற அரசுகள் எதுஎன்பதுதான் அளவுகோல்?

இவ்வாறான சூழ்நிலையில், தற்போது அமலில் உள்ள 1908-ஆம் ஆண்டு சட்டத்தை அறவே ஒழித்துக்கட்டிவிட்டு (Repealing) மாநிலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறு துறைமுகங்களை, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இவ்வளவு விரைவாக ஒன்றிய அரசு செயல்படுவதின் உள்நோக்கம்தான் என்ன ?

உள்நோக்கம் என்ன?
இந்த வரைவு மசோதாவை, ஒன்றிய அரசின் கப்பல்மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் அதன் இணையதளத்தில் சென்ற 11.06.2021 அன்று வெளியிட்டது. அதோடு இவ்வரைவு மசோதா மீது இத்துறைசார்ந்த வல்லுநர்கள் அனைவரும் அவரவர்களின் கருத்துக்களைஒரு வார இடைவெளிக்குள், அதாவது 18.06.2021 க்குள்தெரிவித்து விடவேண்டும் என்று அறிவித்துவிட்டு உடனே அடுத்த ஒரு வாரத்திற்குள் அதாவது 24.06.2021 அன்றே‘கடல்சார் மாநில அரசுகளின்’ இணையவழி கூட்டத்தையும் கூட்டியது. இதற்காகத்தான் தமிழக முதல்வர் 22.06.2021 அன்று ‘கடல்சார் மாநில முதல்வர்களுக்கு’ கடிதம் எழுதினார்.

இந்த மசோதா மீது இவ்வளவு வேகமாகச் செயல்பட்டு,தற்போது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின்அனைத்து துறைமுகங்களையும்  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ‘ஒரே நாடு ஒரே துறைமுகம்’ திட்டத்தை உடனடியாக அமல்படுத்திவிடவேண்டும் என ஏன் துடிக்கிறார்கள்?

இதையும் ‘தினமலர்’ கட்டுரையாளர் சரியாகவே  குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘அமெரிக்காவோடு ஒன்றிய அரசு கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களை விரைந்து முடிக்கவேண்டுமென்றால்’ இந்த புதிய சட்டத்தை வைத்துதான் செய்யமுடியும் என்கிறார். ‘இந்த சட்டத்தால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகிறது என்று சொன்னால் அதில் உண்மை இல்லவே இல்லை’ என்று வாதிடுகிறார்.அவர் கவனத்திற்கு புதிய சட்ட வரைவு மசோதாவின் விதி எண் 4-ஐ இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இவ்விதியின் கீழ் அமைக்கப்படவுள்ள (Maritime States Development Council) ‘கடல்சார் மாநில மேம்பாட்டுக் கவுன்சிலில்’ மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 21. அதில் கடல்சார் மாநிலப் பிரதிநிதிகள் 9 பேர், மீதம் உள்ள 12 பேர்களும் ஒன்றிய அரசின் பிரதிநிதிகள். இக்கவுன்சிலின் தலைவர் ஒன்றிய அரசின் கப்பல் துறை அமைச்சர் ஆவார். வாக்கெடுப்பில் நடுநிலை என்றுவந்தால் தலைவரின் வாக்கு கணக்கில் சேரும்.

விதி எண் 6-ன் படி இந்த கவுன்சிலை செயல்படுத்தும் முழு அதிகாரமும் தலைவரிடம் ஒப்படைக்கப்படும். அதாவது ஒன்றிய அரசின் அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். இதற்கு ‘தினமலர்’ கட்டுரையாளரின்  பதில் என்னவோ ? விதி எண் 10(1)(a)(iii) ன் படி இந்த 9 கடலோர மாநிலங்களின் அதிகார வரம்பின்கீழ் வரும் துறைமுகங்களுக்கு இடையேயான சாலை ரயில் போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர தொழில்நுட்ப தளவாடங்களை தருவித்தல் போன்றவைகூட மேலே சொல்லப்பட்டுள்ள கடல் சார் மாநிலமேம்பாட்டு கவுன்சிலிடம் கேட்டுத்தான் செய்யவேண்டும்.விதி எண் 10(1)(b )(i) ன் படி ஏற்கனவே உள்ள துறைமுகமானாலும் சரி புதிய துறைமுகத்தை அமைக்கவேண்டுமானாலும் சரி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் தனியாருடன் இணைந்து ஒப்பந்தம் போடவேண்டுமென்றாலும் சரி இந்த கவுன்சில் தான் முடிவு செய்யும்.எனவே இந்த கவுன்சில், ஒன்றிய அரசின் அதிகாரிகள்,அதிக அளவிலான அவர்களின் எண்ணிக்கை, போன்றவற்றின் பின்னணியில் இந்த வரைவு மசோதாவின்படி மிகமுக்கிய முடிவுகள் எடுப்பதில், விதிகளை வடிவமைப்பதில் முழு அதிகாரம், ஒன்றிய அரசிடமே குவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படுகின்றது.

ஆந்திரா எதிர்த்தது ஏன்?
இப்புதிய வரைவு மசோதாவால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 1908 - ஆம் ஆண்டு சட்டங்கள் ஒட்டுமொத்தமாக காலாவதியாகிவிடும். இந்த புதிய வரைவு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஒன்றிய அரசு நடத்திய இப்படியான ஒரு கருத்து கேட்புக் கூட்டத்தில் ஆந்திர மாநிலகடல்சார் வாரியத்தின் தலைமை நிர்வாகி என்.பி.ராமகிருஷ்ணா ரெட்டி இந்த மசோதா ஒருதலைப் பட்சமானது என்றும் அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மேலும் மாநில பட்டியல்களில் வரும்அதிகார வரம்புகளை ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குமடைமாற்றம் செய்யும் முயற்சி  இது என்றும் தெரிவித்தார்.

அதேபோல குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற கடல்சார் மாநில அரசுகள் இம்மசோதாவை எதிர்க்கின்றன.‘தினமலர்’ கட்டுரையாளர் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ போல், ஒன்றிய அரசு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1963-ஆம் ஆண்டின் பெருந்துறைமுக சட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ‘2021, -ஆம் ஆண்டின் பெருந்துறைமுக வாரிய சட்டத்தை’  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை பெரிதும் பாராட்டியிருக்கிறார். மேலும் இந்த சட்டம் துறைமுக நிர்வாகத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது என்கிறார். இந்த புதிய சட்டத்தை கொண்டுவந்து பெருந்துறைமுகங்களை சிறுகச் சிறுக தனியாருக்கு தாரைவார்க்க முயலும் ஒன்றிய அரசின் சதித் திட்டத்தை   அவர்  அறிய வாய்ப்பில்லை.
புதிய சட்டத்தின் விதி எண் 53 (1) (2) என்ன சொல்கிறது?

இப்புதிய சட்டத்தின் விதி எண் 53 (1) (2) என்ன சொல்கிறது என்பது குறித்து 18.07.2021 தேதியிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை எண் 250, பாரா 177 - ல் “பெருவாரியான கருத்துகேட்பிற்குப்பின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இவ்வரைவு மசோதாவின்  பிரிவு 53(1)(2) - ஐ தக்கவைத்துக்கொள்வது, என்பது அரசாங்கத்தால் தகுந்த நேரத்தில் அதைப் பயன்படுத்த வேண்டுமென்றே இருக்கக்கூடும், மேலும் இப்பிரிவானது முக்கிய துறைமுகங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஊழியர் சங்கங்களின் அச்சத்திற்கும் இந்த குழு உடன்படுகிறது. குறிப்பாக தனியார்மயமாக்கல் கொள்கையை ஒன்றிய அரசு அதிவேகமாக  பின்பற்றும் இன்றைய காலகட்டத்தில் பிரிவு 53 (1) (2) இன் கீழ் ஒன்றியஅரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் துறைமுக அதிகாரிகளைநிர்வாக உத்தரவின் மூலம் தனியாருக்கு மடைமாற்றம் செய்ய வழிவகுக்கும். எனவே இப்பிரிவை மீண்டும் பரிசீலிக்க குழு பரிந்துரைக்கிறது. இந்த பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதியை அரசாங்கம் தவறாக பயன்படுத்தாது எனவும் உறுதியளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இன்றைய சூழ்நிலையில் கட்டுரையாளர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், ‘சிறு துறைமுகங்களின் நிர்வாகம் இந்த வரைவு மசோதா சட்டமானபின்பும் முழுக்க முழுக்க மாநில அரசுகளிடமே இருக்கும்’ என புருடாவிடுகிறார். மேலும் கட்டுரையின் முடிவில் ‘இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்து, வராத துயரம் வந்ததாக காட்டும் உங்கள் கருப்புக்கண்ணாடியை கழற்றுங்கள் முதல்வரே’ என முடிக்கிறார்.“எழுத்தாளர்” என தன்னை பறைசாற்றிக்கொள்ளும் பா. பிரபாகரனுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், அவர் முதல்வரின் கருப்புக்கண்ணாடியை கழற்றச்சொல்வது இருக்கட்டும். முதலில் அவர் வைத்திருக்கும் பலவகை கலர் கண்ணாடிகளில், காவிக்கலர் கண்ணாடி போட்டுக்கொண்டு படிப்பதை கைவிட்டுவிட்டு,  நாட்டு நலன், மக்கள் நலன் கருதி எழுத்துக்களை சரியாகவாசிக்க வெள்ளை நிற பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு அதன் வெளிச்சத்தில் உண்மையை படியுங்கள் தெளிவு பிறக்கும் என்பது மட்டும்தான்.

கட்டுரையாளர் : தி.நரேந்திரன், பொதுச் செயலாளர், அகில இந்திய துறைமுகத் தொழிலாளர் சம்மேளனம்.