இரண்டாவது அம்மா அல்ல! மாற்றாந்தாய்!
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழ்நாட்டின் இரண்டாவது அம்மா” என்று தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவரான இராம. ஸ்ரீனிவாசன் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் தமிழ் நாட்டின் இரண்டாவது அம்மா என்றால் முதல் அம்மா யார்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது கட்சிக்காரர்களாலும் தமிழக மக்களாலும் அம்மா என்று அழைக்கப்பட்டார் என்பது அண்மைக்கால வரலாறு தான். ஆனால் தமிழக வரலாற்றின் நீண்ட நெடும் பாரம்பரியத்தில் நிறைய தலைவர்கள் ‘அம்மா’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரிய வர்களாக புகழோடு திகழ்ந்திருக் கிறார்கள். நாட்டின் விடுதலைக்காக, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரச் சமர்புரிந்தவர்கள் அவர்கள் விடுதலைக்கு முன்பும் விடுதலைக் குப் பின்பும் பல ஆண்டு காலம் சிறைக் கொட்டடிகளிலும் இருந்து சித்ரவதைகளை அனுபவித்த வர்கள். தியாக வாழ்க்கையும் எளிய வாழ்க்கையும் வாழ்ந்து மக் களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். சொத்து சுகங்களை இழந்து துன்பப்பட்டா லும் தூய்மையான, நேர்மையான அரசியல் வாழ்க்கை நடத்தியவர்கள். கேப்டன் லட்சுமி அம்மாள், கே.பி.ஜானகியம்மாள், என்.எஸ். ருக்மணியம்மாள் போன்ற கம்யூ னிஸ்டுகளும் அஞ்சலையம்மாள் போன்றவர்களும் தமிழ் மக்களால் அம்மா என்றழைக்கப்பட்ட சிறப்புக்கு உரியவர்கள். ஆனால் விடுதலைப் போராட்டத்துக்கும் அதன் விழுமி யங்களுக்கும் துரோகம் செய்தும் காட்டிக் கொடுத்தும் பிரிட்டிஷா ருக்கு சேவகம் செய்தும் உதவித் தொகை பெற்ற - இன்றைய பாஜகவின் முன்னோடி தலைவர் களுக்கும் அவர்களின் வழி வந்தவர்களுக்கும் அத்தகைய ரத்தம் சிந்திய போராட்ட வரலாறும் தியாக வாழ்வும் இல்லாததால் அந்த அம்மாக்கள் பற்றி தெரியாது தானே! தெரிந்தாலும் சொல்ல முடியாது தானே! தேசத் தந்தை காந்தியை பின்தள்ளி அவரைக் கொன்ற கோட்சேயை - சாவர்க்கரை தற் போது புதிய தேச பக்தர்களாக - தலைவர்களாக தூக்கிப் பிடிப்ப வர்கள் தானே. இவர்களின் முன் னோடிகளில் தமிழ்நாட்டில் மட்டு மல்ல, இந்தியா முழுவதிலும் கூட ஒருவரையும் ‘அம்மா’ என்று காட்டவும் கூறவும் முடியாது. அதனாலும் தமிழ்நாட்டில் அதி முகவின் தயவால் எப்படியாவது ஆட்சிக்கட்டிலில் பங்குபெற வேண்டுமென்ற வெட்கமறியாத ஆசையாலும் தான் இராம. ஸ்ரீனி வாசன், இப்போது இரண்டாவது அம்மா என்று பேசுகிறார். இவரது எண்ணப்படியே முதலாவது அம்மா ஜெயலலிதா, பாஜகவுக்கு எதிரான அரசியல் செய்தவர். மோடியா? இந்த லேடியா? என்று சவால்விட்டவர். பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற வைத்த தவறைச் செய்தவர். அதன் பலனை உணர்ந்து, அந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன்; இனி ஒரு போதும் பாஜகவுடன் கூட்டுச் சேர மாட்டேன் என்று சொன்னவர் ஜெயலலிதா. ஆனால் தன்னை நான் காண்டு காலம் ஆட்சியில் தொடரச் செய்தது பாஜகதான் என்பதால், அவர்கள் இழுத்த இழுப்புக் கெல்லாம் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அவர்களை தூக்கிச் சுமக்க தயாராகிவிட்டார். அந்த தைரியத்தில் தான் இராம.ஸ்ரீனி வாசன், ‘இரண்டாவது அம்மா’ என்று கூறி ஏதாவது பலன் கிடைக்குமா என்று நூல்விட்டுப் பார்க்கிறார். ஒருவகையில் நிர்மலா சீதாராமன், இரண்டாவது அம்மா என்பது பொருத்தமுடையது தான். ‘அம்மா என்றால் அன்பு’ என்பது ஜெயலலிதா பாடிய ஒரு திரையிசைப் பாடல் ஆனால் ‘இரண்டாவது அம்மா’, என்பது சிற்றன்னை, அதாவது சித்தி. இன்னும் சரியாகச் சொல்வ தென்றால் மாற்றாந்தாய். தாய்க்கும் மாற்றாந்தாய்க்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? தாயினும் சாலப் பரிந்து - குழந்தை களை கவனிப்பது யார்? மாற்றாந் தாய்க்கு அந்த மனதே வராதே! இதில் விதிவிலக்கும் உண்டு. மாற்றாந்தாய் என்றாலே கொடுமைகளும் மூத்தாளின் குழந்தைகளை பட்டினி போடுவதும் பாரபட்சமாக நடத்துவதும் என்று தானே கதைகளிலும் திரைகளிலும் காட்டப்படுவதை பார்த்து இருக்கி றோம். அதுபோல ஒன்றிய நிதி யமைச்சராக இருக்கும் இந்த இரண்டாவது அம்மா - தமிழ்நாட்டு மக்களை மாற்றாந்தாய் போலத் தானே நடத்துகிறார். தமிழகத்துக்கு நியாயமாகத் தர வேண்டிய நிதி யைக் கூட தராமல் வஞ்சிக்கிறார். இது தமிழக மக்கள் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அறிந்தது தானே! மாற்றாந்தாய் மனப்பான்மை யுள்ள நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது அம்மா ஆக வேண்டாம்!