அமெரிக்க வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் செவ்வாயன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தலைவர்கள் ஆற்றிய உரையின் பகுதிகள் :
மோடி அரசுக்கு துணிச்சல் இல்லை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் தனித்த குழுவாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இப்போதும் அமெரிக்காவின் வரி உயர்வுக்கு எதிராக தமிழ்நாடுதான் முதலில் குரல் எழுப்புகிறது. அமெரிக்க அமைச்சர் பீட்டர் நவரோஸ் அந்நாட்டின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடப்பது ‘மோடி யுத்தம்’ என்றும், இந்தியாவில் பிராமண சுரண்டல் நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி புஷ் மொத்தமாக வரி விதித்தபோது, அதை ஏற்காத மன்மோகன் சிங் ‘தனித்தனி பொருட்களுக்கு வரி விதியுங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோன்ற நெருக்கடியைச் சந்தித்தபோது மன்மோகன் சிங் அரசு சிறப்பு பேக்கேஜ் அறிவித்து தொழில் வர்த்தகத்தைக் காப்பாற்றியது. இப்போது மோடி அறிவிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யும் துணிச்சல் அவருக்கு இல்லை. எனவே மோடி அரசை வரலாறு காறி உமிழும். “ஜனநாயகத்துக்கு பேராபத்து” மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமெரிக்க ஏகாதிபத்திய அரசை எதிர்த்தும், ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்க முற்பட்டுள்ள பாஜக அரசுக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதற்கு எதிராக நாம் ஓரணியில் திரண்டுள்ளோம். “இருவருக்காக ஏழு லட்சம் கோடி கடன் தள்ளுபடி” காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு தனி மனிதர்களுக்காக ஆட்சி நடத்துகிறது. இரு வருக்காக ஏழு லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தனர். இந்தியா இவர்களது சமூக பொருளா தாரக் கொள்கைகளால் வீழ்ந்துவிட்டது. “அதானி, அம்பானி மோடியின் பினாமிகள்” விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., மோடி அரசு அதானி, அம்பானிக்காகப் பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது. அதானியும், அம்பானியும் மோடியின் நண்பர்கள் அல்ல - பினாமிகள். இந்த 50 சதவிகித வரி உயர்வால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்திவரும் அம்பானி, அதானி போன்ற பணக்காரர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். திருப்பூர் ஜவுளி உற்பத்தி யில் ஈடுபடும் சிறு, குறு தொழில் முதலாளிகள், வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். சனாதன பாசிசம் மற்றும் கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகக் கடும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவை இந்த சனாதன சக்திகளிடமிருந்து மீட்க வேண்டும். “மோடி பித்தலாட்டத்தின் அடையாளம்” கே.சுப்பராயன் எம்.பி. அமெரிக்க சந்தைக்கு 40 சதவிகிதம் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் இந்த வரி விதிப்பினால் அடித்தளத்தை இழந்துவிடும். அனைத்து ஜவுளி மையங்களும் பாதிக்கப்படும். மோடி பித்தலாட்டத்தின் அடையாளமாக இருக்கிறார். காலத்தால் அவர் தூக்கி எறியப்படுவார். “15 கோடி மக்கள் வேலைஇழப்பார்கள்” கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் இந்த வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 15 கோடி மக்கள் வேலை இழக்க நேரிடும். பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதல் திருப்பூரில் கடும் பிரச்சனை தொடங்கியது. ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத்தொகையை 12 சதவிகிதத்திலிருந்து வெறும் 2 சதவிகிதமாகக் குறைத்தனர். திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வங்கதேசத்திற்கும் வியட்நாமிற்கும் முழுமையாகச் சென்றுவிடும். இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்ததை அடுத்து நிர்மலா சீதாராமன் ஏற்றுமதியாளர்களை சந்திக்க ஆர்ப்பாட்ட நாளில் அழைப்பு விடுத்துள்ளார். “திருப்பூர் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தற்போது இந்தியாவிற்கு அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பின்னலாடையின் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூர் இந்த வரி விதிப்பால் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. நகை, பொறியியல் தொழில்கள், தோல் உற்பத்தி, கடல்சார் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. “ரூ. 1500 கோடி உற்பத்தி தேங்கிக் கிடக்கிறது” மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி வெறுப்பு அரசியலை விதைக்கும் யாரும் திருப்பூருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. 12 ஆயிரம் கோடி முதல் 14 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி நடைபெற்று வந்த திருப்பூரில் தற்போது 1500 கோடி உற்பத்தி தேங்கிக் கிடக்கிறது. உடனடியாக ஓர் ஆண்டுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஒன்றிய மோடி அரசு நிதி ஒதுக்க வேண்டும். “மதச்சார்பற்ற கூட்டணி எதிர்ப்பு” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் முகமது அபுபக்கர் தமிழக மக்களுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள்தான் அதற்கு எதிராகப் போராடி வரு கின்றன. இந்திய பிரதமர் மோடியும், டிரம்ப்பும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். தமிழகத்திற்கு வந்திருந்த நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட வர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. “இந்தியாவின் பொருளாதாரம் செத்த பொருளாதாரமா?” ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது சுற்றுப்பயணம் செல்லும் இந்திய பிரதமர் இந்திய வரலாற்றிலேயே மோடி மட்டும்தான். இந்தியாவின் பொருளாதாரம் செத்த பொருளாதாரம் என டிரம்ப் கூறியதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் ஒன்றிய பாஜக அரசு மவுனம் காக்கிறது. அது கடும் கண்டனத்திற்குரியது. “ஒட்டுமொத்த இந்தியாவையும் காவு வாங்கியுள்ளது” த.பெ.தி.க கு.ராமகிருஷ்ணன் இந்து இந்து எனப் பேசி மோடி அரசு தனது தவறான கொள்கைகளால் ஒட்டுமொத்த இந்தியாவையும் காவு வாங்கியிருக்கிறது. இதில் முதலில் பாதிக்கப்பட்டதாக திருப்பூர் இருக்கிறது. இந்த வரி விதிப்பினால் ஏற்றுமதியாளர் தொடங்கி தள்ளுவண்டி வியாபாரிகள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர். - தொகுப்பு: வே.தூயவன்