ஆர்எஸ்எஸ் சுயரூபம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ என்னும் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அண்மையில் உதிர்த்துள்ள வார்த்தைகள் மேலோட்டமான ஒன்று அல்ல. அவை இந்தியக் குடியரசின் அடித்தளக் கண்ணோட்டத்தையே நேரடியாகத் தாக்குவதாகும். நம் அரசமைப்புச்சட்டமானது இந்தியாவில் நடைபெற்ற காலனித்துவ எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களையும் விருப்பங்களையும் உள்ளடக்கியவைகளாகும். நாம் சுதந்திரத்தைப் பெறுவதற்காக நடத்திய ஒன்றுபட்ட பல்வேறு இயக்கங்களின் விழுமியங்களையும் இது பிரதிபலிக்கிறது. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்பவை அரசமைப்புச்சட்டம் முழுவதும் பின்னிப்பிணைந்து இருக்கிறது. இது அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் மட்டுமல்ல, அதன் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) மற்றும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் (Directive Principles of the State Policy) ஆகிய அனைத்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் ஊடுருவியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட அவசரநிலையை விமர்சிக்க வந்த ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் அப்போதுதான் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் இந்தச் சொற்றொடர்கள் சேர்க்கப்பட்டன என்று கூறியிருக்கிறார். இந்த அடிப்படைக் கொள்கைகள் அவசர நிலைக்காலத்தில்தான் சேர்க்கப்பட்டன என்று கூறி இவற்றைச் சட்டவிரோதமாக்குவதற்கு அவசரநிலையை ஒரு சாக்காகப் பயன்படுத்துகிறார். இது ஒரு ஏமாற்று முயற்சியேயாகும். உண்மையில் ஆர்எஸ்எஸ் இயக்கம் தன்மீது போடப்பட்ட தடையை நீக்குவதற்காக அவசரநிலையை ஆதரித்தது. இப்போது இவ்வாறு கூறுவது வரலாற்று மறதி மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகிய இரண்டையுமே பிரதிபலிக்கிறது. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை வெறும் சொற்றொடர்கள் அல்ல; அவை இந்தியாவை ஒரு நவீன ஜனநாயக நாடாக வரையறுக்கும் அடிப்படைச் சிந்தனைகளாகும்.
சமூக நீதி, பொருளாதார நீதி கொண்டுவருவதற்கான உறுதி
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சோசலிசம் என்பது சமூக நீதி, பொருளாதார நீதி, சமத்துவமின்மையை ஒழித்தல் மற்றும் மக்கள் நல அரசை உருவாக்குதல் முதலானவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது, இந்திய சுதந்திர இயக்கத்திற்குள் ஒரு வலுவான நீரோட்டத்தை பிரதிபலிக்கிறது. இது, பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராக மட்டுமல்லாமல் அனைத்து வகையான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானது. கம்யூனிஸ்டுகளுக்கும் அப்பாற்பட்டு பகத் சிங் மற்றும் அவரைப் போன்ற தோழர்கள் சுதந்திரப் போராட்டத்திற்குள் இந்த சோசலிசப் போக்கை எடுத்துக் காட்டினார்கள். இந்திய அரசமைப்புச் சட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புவதுபோல், உற்பத்திச் சாதனங்களின் சமூக உரிமை மற்றும் பொருளாதார மற்றும் சமூக ஒடுக்குமுறையை முற்றிலுமாக நீக்குதல் என்ற அர்த்தத்தில் ஒரு சோசலிச சமூகத்தை கற்பனை செய்ய வில்லை. சுதந்திரமான மற்றும் அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்கின்ற ஒரு சமூகத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த இலக்கு இன்னும் முழுமையாக அடையப்படவில்லை. எனினும், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மக்கள் மீதான சுரண்டல் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு சமூகத்தில், சுதந்திரங்களை அதிகரிப்பதற்கும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் அரசமைப்புச் சட்டம் அடித்தளமிட்டது. அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் 42ஆவது திருத்தத்தின் மூலம், “சோசலிஸ்ட்” என்ற வார்த்தையை வெளிப்படையாகச் சேர்ப்பதற்கு முன்பாகவே, அரசமைப்புச்சட்டத்தில் மக்களுக்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீதி வழங்கிட உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருந்தது. மேலும் அனைத்துக் குடிமக்களுக்கும் “சம அந்தஸ்து மற்றும் சம வாய்ப்பு” அளிக்கப்பட வேண்டும் என்று அது கோரியது. இவ்வாறு சோசலிசத்தின் உணர்வு ஏற்கனவே அரசமைப்புச்சட்டத்தின் விதிகளில் பொதிந்துள்ளது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், அந்தத் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய முக்கிய அடிகளாகும். அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், சட்டத்தின் முன் அனைவருக்கும் சம அளவில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதையும் உத்தரவாதம் செய்கிறது. 15ஆவது பிரிவு, எவரொருவரையும் மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ, சாதியின் அடிப்படை யிலோ, பாலினத்தின் அடிப்படையிலோ அல்லது பிறந்த இடத்தின் அடிப்படையிலோ பாகுபாடு காட்டு வதற்குத் தடை விதிக்கிறது. 16ஆவது பிரிவு, பொது வேலைவாய்ப்புகளில் சமமான அளவில் வாய்ப்புகள் அளிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இவற்றை முகப்புரை மற்றும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் படிப்போமானால், இந்த உரிமைகள் சுரண்டலிலிருந்து விடுபட்ட, ஒவ்வொரு தனிநபரின் கண்ணியமும் மதிக்கப்படும் மற்றும் நிலைநிறுத்தப்படும் ஒரு நீதியான சமூகத்தின் தொலை நோக்கைக் காட்டிடும். அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தின் பாகம் 4இல் உள்ள 36 முதல் 51 வரையிலான பிரிவுகள் சோசலிசத்தின் தெளிவான சிந்தனைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 38ஆவது பிரிவு கூறுவதாவது: “அரசு மக்களின் நலன்களை மேம்படுத்து வதற்காக, அவர்களின் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை வலுவான முறையில் பாதுகாப்பதன் மூலம் ஒரு சமூக ஒழுங்கைக் கொண்டு வருவதற்காகப் பாடுபட வேண்டும்.” 39(அ) பிரிவு கூறுவதாவது: “குடிமக்களாகிய ஆண்களும் பெண்களும் சமமான அளவில் தங்கள் வாழ்வாதாரத்திற்கான உரிமையைப் பெறக்கூடிய விதத்தில் அரசு தன் கொள்கையை வகுத்திட வேண்டும்.” 39(ஆ) பிரிவு கூறுவதாவது: “சமூகத்தின் பொருள்கள் மற்றும் வளங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு சிறப்பான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.” 39(இ) பிரிவு கூறுவதாவது: “பொருளாதார அமைப்புமுறை செல்வமும் உற்பத்திச் சாதனங்களும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விதத்தில் ஒரே இடத்தில் குவியக்கூடாது.” 39(ஈ) பிரிவு கூறுவதாவது: “ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் அளித்திட வேண்டும்.” மேலும் 41ஆவது பிரிவு வேலை செய்வதற்கான உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை மற்றும் பொது உதவி பெறுவதற்கான உரிமை குறித்துப் பேசுகிறது. 42ஆவது பிரிவு நியாயமான அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் வேலை நிலைமைகள் இருக்க வேண்டும் என்று கோருகிறது. 43ஆவது பிரிவு வாழ்க்கை ஊதியம் மற்றும் நாகரிகமான (decent) வாழ்க்கைத்தரத்தை முன் வைக்கிறது. இவ்வாறு அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள அனைத்தும் வெறும் லட்சிய முழக்கங்கள் அல்ல. அவற்றின் அடிப்படையில் நாட்டில் பல மாநிலங்களில் நிலச் சீர்திருத்தங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்படுதல் மற்றும் சமூக நலத் திட்டங்கள் கொண்டுவரப்படுதல் போன்று எண்ணற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பான நீதித்துறை விளக்கங்களுக்கு அவை உத்வேகம் அளித்துள்ளன. அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட முடியாதவை என்றாலும்கூட, அவை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களின் விளைவுகளேயாகும். சோசலிசக் கண்ணோட்டத்திற்கு விரிவான அளவில் மக்களின் மத்தியில் ஆதரவு இருந்து வருவதால் ஆளும் வர்க்கங்கள் அதனை முற்றிலுமாக நிராகரிக்க முடியவில்லை. எனினும், இவற்றை அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திற்குப் போக முடியாததாக இவற்றை வைத்திருப்பதன் மூலம், இவற்றை அமல்படுத்தாமல் அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே ஆளும் வர்க்கங்கள் வைத்துக்கொண்டுள்ளன.
மதச்சார்பின்மை: ஓர் அடிப்படைக் கோட்பாடு
இந்திய அரசமைப்புச்சட்டத்தில், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் இடையே நடுவுநிலைமை என்ற பொருளில் பயன்படுத்தப்பட வில்லை. மாறாக அரசு அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் என்றும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும், எந்தக்குடிமகனுக்கும் மத நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாட்டைக் காட்டாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் நேர்மறையான உத்தரவாதம் அளிக்கப்படக்கூடிய விதத்தில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1976ஆம் ஆண்டில் முகப்புரையில் “மதச்சார்பற்ற” என்ற சொற்றொடர் சேர்க்கப்படுவதற்கு முன்பே, ஏற்கனவே இருந்த அரசமைப்புச்சட்டத்தில், “மதச்சார்பின்மை”யின் உணர்வைப் பிரதிபலித்திடும் விதத்தில், ஒவ்வொருவரும் சிந்திப்பதற்கு, சிந்தனையை வெளிப்படுத்துவதற்கு, தாங்கள் விரும்பும் மதத்தை நம்புவதற்கு மற்றும் வழிபடுவதற்கு சுதந்திரம் உறுதிசெய்யப்படும் என்றும், அதேபோன்று தனிநபரின் கண்ணியத்தை உறுதிசெய்யும் விதத்தில் சகோதரத்துவம் பின்பற்றப்படும் என்றும் உறுதி கூறியிருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பாகத்தில் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்னும் தலைப்பின்கீழ் உள்ள 25 முதல் 28 வரையிலான பிரிவுகள், மத சுதந்திரத்திற்கான உரிமையைத் தெளிவு பட தெரிவித்து, இந்திய குடியரசின் மதச்சார்பற்ற தன்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 25ஆவது பிரிவு, நாட்டின் குடிமக்கள் அனைவருமே தாங்கள் விரும்பும் மதத்தை வெளிப்படுத்தவும், பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உள்ள உரிமையையும், மனசாட்சி சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்கிறது. 26ஆவது பிரிவு ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் தங்கள் சொந்த மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. 27ஆவது பிரிவு, ஒரு குறிப்பிட்ட மதத்தை மேம்படுத்து வதற்காக எந்தவொரு நபரையும் வரி செலுத்த கட்டாயப்படுத்துவதை தடை செய்கிறது. 28ஆவது பிரிவு அரசால் முழுமையாக நிதியளிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் மத போதனையை தடை செய்கிறது.
சிறுபான்மையினரின் கலாச்சார, கல்வி உரிமை பாதுகாப்பு
மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 29 மற்றும் 30ஆவது பிரிவுகள் சிறுபான்மையினரின் கலாச்சார மற்றும் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கின்றன. அவை சிறுபான்மையினர் தங்கள் மொழி, எழுத்து மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றன. மதம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அரசால் பராமரிக்கப்படும் அல்லது உதவி செய்யப்படும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மறுக்கப்படுவதை அவை தடை செய்கின்றன. அவை சிறுபான்மையினர் தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கின்றன. இந்தப் பிரிவுகள் அனைத்தும், அரசு எந்த மதத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதை உறுதி செய்வதுடன், எந்த மதத்திற்காகவும் சலுகைகள் அளிக்காது என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும், அவன் எந்த மதநம்பிக்கையைப் பின்பற்றியபோதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவனுக்கு சம உரிமைகளையும் பாதுகாப்புகளையும் அளித்திடும் என்றும் உறுதி செய்கின்றன. மேலும் கூடுதலாக, அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள், சமூகத்தில் நலிந்த பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்து வதையும், அரசமைப்புச் சட்டத்தின் 46ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சமூக அநீதி மற்றும் அனைத்து வகையான சுரண்டல்களிலிருந்தும் அவர்களைப் பாது காப்பதையும் உறுதி செய்கின்றன. சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் உட்பட பல அதிகாரப்பூர்வ ஆய்வுகள், இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மை யினரின் பல்வேறு பிரிவுகள் சமூகத்தின் மற்ற சமூகப் பிரிவினர்களுடன் ஒப்பிடும்போது உண்மையில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம்
மதச்சார்பின்மை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் அரசு சமமாக நடத்துவதையும், அரசு தனிப்பட்ட முறையில் எந்த மதத்தையும் சார்ந்திராது என்பதையும் தொடர்ந்து கூறி வருகிறது. 1973ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாடு (Basic Structure Doctrine) அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாடாளுமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு பரந்த அதிகாரங்கள் இருந்தபோதிலும், அதன் அடிப்படையான (fundamental) அல்லது அடிப்படைக் கட்டமைப்பை (basic structure) மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியாது என்றும், அதாவது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மீறமுடியாதது (inviolable) என்றும் இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது. இந்தத் தீர்ப்பு வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1976ஆம் ஆண்டு, அரசமைப்புச்சட்டத்தின் 42ஆவது திருத்தம் “சோசலிஸ்ட்” மற்றும் “மதச்சார்பின்மை” என்ற வார்த்தைகளை முகப்புரையில் அறிமுகப்படுத்தியபோது, அது அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டை முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில் இந்தக் கொள்கைகள் ஏற்கனவே அரசமைப்புச்சட்டத்தில் இயல்பாகவே இருந்தன. மேலும் அவை எந்த வகையிலும் அதன் அடிப்படைக் கட்டமைப்பை மீறவில்லை.
இந்தியா என்ற சிந்தனையிலிருந்து பிரிக்க முடியாதவை
முகப்புரையில் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் 1970களில் இருந்து வெறும் “சேர்க்கைகள்” அல்லது “திணிப்புகள்” என்று கூறுவது ஒரு தவறான கருத்தாகும். குறிக்கோள் தீர்மானம், அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் மற்றும் இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்தின் வாழ்ந்த அனுபவம் அனைத்தும் இந்த இலட்சியங்கள் குடியரசின் ஸ்தாபக தொலைநோக்கு பார்வைக்கு மையமாக இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. சமூக நீதி மற்றும் பொருளாதார நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அரசமைப்புச்சட்டத்தின் அர்ப்பணிப்பு இயல்பாகவே சோசலிசமானது. அதே நேரத்தில் மத சுதந்திரம், பாகுபாடு இல்லாமை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதன் உத்தரவாதம் இயல்பாகவே மதச்சார்பற்றது. முகப்புரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற சொற்றொடர்கள் நீக்கப்பட்டாலும்கூட, அரசமைப்புச்சட்டத்தின் முக்கிய தத்துவம், அமைப்பு மற்றும் விதிகள் சாராம்சத்திலும் அவற்றின் சாரத்திலும் மாறாமல்தான் இருக்கும்.
பிரிக்க முடியாத சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
1949 நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணயசபையில் தனது இறுதி உரையை நிகழ்த்தும்போது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், “நாம் வெறும் அரசியல் ஜனநாயகத்துடன் திருப்தி அடைந்துவிடக் கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும். சமூக ஜனநாயகம் அதன் அடித்தளமாக இல்லாவிட்டால் அரசியல் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன பொருள்? இது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வாழ்க்கைக் கொள்கைகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது. சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லையேல், சுதந்திரம் பலர் மீது ஒருசிலரின் மேலாதிக்கத்தை உருவாக்கும். சகோதரத்துவம் இல்லையென்றாலும், சுதந்திரம் பலர் மீது ஒருசிலரின் மேலாதிக்கத்தை உருவாக்கும். சகோதரத்துவம் இல்லாமல், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஒரு இயல்பான போக்காக மாற முடியாது,” என்று உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவில் சமூக அமைப்பு பல படி நிலைகளாக உள்ளது. அதாவது சிலருக்கு உயர்வு, மற்றவர்களுக்கு சீரழிவு. பொருளாதாரத் தளத்தில், சிலர் அபரிமிதமான செல்வத்தை வைத்திருக்கும் அதே சமயத்தில் பலர் மோசமான வறுமையில் வாடுகிறார்கள். 1950 ஜனவரி 26 அன்று, நாம் முரண்பாடுகளின் வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும் அதே சமயத்தில் சமூக வாழ்க்கையிலும், பொருளாதார வாழ்க்கையிலும் சமத்துவமின்மை நீடிக்கும். அரசியலில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்ற கொள்கையை நாம் அங்கீகரிப்போம். ஆயினும் நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நமது சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் காரணமாக, ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்ற கொள்கையை நாம் தொடர்ந்து மறுப்போம். இந்த முரண்பாடுகளின் வாழ்க்கையை எவ்வளவு காலத்திற்கு நாம் தொடரப் போகிறோம்? நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை எவ்வளவு காலத்திற்கு மறுத்துக்கொண்டிருக்கப் போகிறோம்? நாம் அதை நீண்ட காலம் மறுத்தால், நமது அரசியல் ஜனநாயகமே ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாட்டை நாம் கூடிய விரைவில் அகற்ற வேண்டும். இல்லையெனில் சமத்துவமின்மையால் அவதிப்படு பவர்கள் மூலமாக இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் கடினமாகக் கட்டியெழுப்பிய அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுவிடும்.” அம்பேத்கரின் வார்த்தைகள், அரசமைப்புச் சட்டம், சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டது என்பதை, சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையின் சாராம்சம், சக்திவாய்ந்த முறையில் உறுதிப்படுத்துகின்றன. இந்த அடிப்படை விழுமியங்களை நீர்த்துப்போகச் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக அவை ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்கின்றன.
ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடு வெட்டவெளிச்சமாகிவிட்டது
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’யை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளரின் அழைப்பு வெறும் “வரலாற்றை சரிசெய்வதற்கான” அப்பாவித்தனமான அழைப்பு அல்ல. அது இந்தியக் குடியரசின் அடித்தளத்தையே அரித்துவீழ்த்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். இந்த வார்த்தைகள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அசல் வரைவின் ஒரு பகுதியாக இல்லை என்ற அவர்களின் கூற்று ஒரு முக்கியமான உண்மையைப் புறக்கணிக்கிறது. சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையின் கொள்கைகள் அரசமைப்புச்சட்டத்தில் ஊடுருவியுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 42ஆவது பிரிவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் எப்போதும் மறைமுகமாக இருந்ததை வெளிப்படுத்தியது. உண்மையில், 42ஆவது பிரிவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு முன்பே, 25(2)(அ) பிரிவில் மதச்சார்பற்ற என்ற சொல் உள்ளது. சோசலிசத்தை நோக்கிய சாய்வை பிரதிபலிக்கும், 38ஆவது பிரிவு பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது, இது மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாக்க அரசை வழிநடத்துகிறது. வரலாற்று ரீதியாக, ஆர்எஸ்எஸ், இந்தியாவின் தேசிய அடையாளத்தை மதவாத, பெரும்பான்மைவாத வழிகளில் மறுவடிவமைக்கும் அதே வேளையில், சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று வருகிறது. முகப்புரையிலிருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மையை நீக்குவதற்கான அதன் முயற்சி, வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கும், நமது காலனித்துவ எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்தின் மரபை சட்டவிரோதமாக்குவதற்கும், தெய்வ ஆளுகைக்கு உட்பட்ட ஓர் அரசை (‘theocratic state’) உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். இது இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்யப் பாடுபடுகிறது; சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை அந்தத் தொலைநோக்குப் பார்வையின் இன்றியமையாத தூண்கள். இந்த விழுமியங்களைத் தாக்குவதன் மூலம், அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் அளிக்கும் சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசைத் தகர்க்கும் நோக்கத்தை ஆர்எஸ்எஸ் வெளிப்படுத்துகிறது. அரசமைப்புச் சட்டக் கொள்கைகளை மனுஸ்மிருதியால் மாற்றி இந்து ராஷ்டிரத்தை நிறுவுவது என்ற அதன் சுயரூபம் வெளிப்படத்தொடங்கிவிட்டது. ‘இந்திய இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்திய ஆர்எஸ்எஸ் பங்கேற்காத ஒரு போராட்டத்தால், அதனையும் மீறி சுதந்திரம் பெற்று, அதன்பின்னர் உருவாக்கியுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தை, நாம் பாதுகாத்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்தியாவை தெய்வ ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடாக, பெரும்பான்மைவாத நாடாக, இந்து ராஷ்டிரமாக, மாற்றுவதற்கான ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிகளை அனுமதித்திடக் கூடாது. இதனை நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடித்திட வேண்டும். தமிழில்: ச.வீரமணி