இந்தியச் சுதந்திரம் கடைச் சரக்கு போல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து பெறப்படவில்லை. சாதி, மதம், இனம், மொழி கடந்து வயது வித்தியாசம் பாராமல் ஆண்கள், பெண்கள் என சகலரும் தீவிரவாதம், மிதவாதம் என பல முனைகளில் கொடுத்த நிர்ப்பந்தத்தால் வேறு வழியின்றி ஆங்கிலேய அரசு அரசியல் சுதந்திரத்தை வழங்கியது. அத்தகைய பன்முகத் தன்மையைக் கொண்ட சுதந்திரப் போரில் இன்னுயிர் இழந்தோர், செங்குருதி சிந்தியோர் எண்ணிலடங்கார். ஆனால் இத்தகைய பன்முகத் தன்மையைக் கொண்ட சுதந்திரப் போரில் எள்ளளவும் தொடர்பே இல்லாதவர்களிடம் இந்திய அரசு சிக்கியுள்ளது. இந்நிலையில் ரத்தம் தோய்ந்த விடுதலைப் போரின் நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதும் பொருளாதார சுதந்திரத்தை உள்ளடக்கிய பரிபூரண விடுதலையை நோக்கிப் பயணிக்க உறுதி ஏற்க வேண்டியதும் அவசியமாகிறது.
இந்தியச் சுதந்திரப் போரின் முக்கியமான திருப்புமுனையாகத் திகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 1919, ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக்கில் அமைதியான கூட்டத்தில் நூற்றுக்கணக்கான ஒன்றுமறியாத அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டது, அனைத்து பிரிவினைவாதத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் விளையாட்டினையும் முறியடித்தது.1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போராட்டத்திற்குப் பின் சுதந்திரப் போராட்டம் பல வடிவில் பரிணமித்தது.
தில்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தொடர் அடுத்த கூட்டத் தொடரை பஞ்சாபில் நடத்தத் தீர்மானித்தது. தேசியஇயக்கத்தின் பரவல் ஆயுதப் படையைப் பாதிக்கும் என்றுபிரிட்டிஷார் அஞ்சினர். பஞ்சாபியர்களால் கதார் கட்சி உருவாக்கப்பட்டு, 1913-14லிருந்தே பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டு விடுதலைக்கான முழக்கங்கள் அங்கு எதிரொலிக்கஆரம்பித்து விட்டன. கதார்கட்சியினர் நாட்டு விடுதலைக்காகதங்கள் இன்னுயிரையும் பணயம் வைத்து பிரிட்டிஷ் அரசுக்குஎதிராக புரட்சி செய்யுமாறு ஆயுதப் படை வீரர்களையும் கேட்டுக் கொண்டனர் . எண்ணற்ற கதார் கலகக்காரர்கள் தூக்கிலிடப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் ஆயுள் தண்டனைவழங்கப்பட்டு, அச்சமூட்டக் கூடிய அந்தமான் சிறைச்சாலைஉள்ளிட்ட பல்வேறு சிறைச் சாலைகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
எங்கெல்லாம் புரட்சிகர செயல்கள் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் அராஜகமான சட்டவிரோதச் செயல்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை இல்லாத முறையில், மிக விரைவான விசாரணைக்கு அதிகாரமளிக்கும் வகையில் சட்டம் இருந்தது. இச் சட்டம், மேலும் ஒரு நபர் அரசுக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ள இயக்கத்தில் தொடர்பு வைத்துள்ளார் என்று சந்தேகிக்கப்பட்டாலே, அவரைப் பாதுகாப்பில் வைப்பது குறிப்பிட்ட இடத்தில் வசிக்கச் செய்வதுஅல்லது பிணை கோருவது அல்லது குறிப்பிட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குவது ஆகிய அதிகாரத்தைக் கொடுத்தது. பொது மக்களின் பாதுகாப்பை அச்சமூட்டக் கூடிய குறிப்பிட்டநடவடிக்கைகளோடு தொடர்புடையவர் என்று நியாயமாக நம்பப்பட்டால் அந்த நபரை அந்த இடத்தில் அந்தந்த நிலையிலேயே ஏற்கனவே கூறியுள்ளபடி கைது செய்யலாம் என்று உள்ளூர் அரசுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
மகாத்மா காந்தி அரசைப் பின்வாங்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக எதிர்ப்பை வலியுறுத்தும் வேலைநிறுத்தம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தார். 1919 மார்ச் 30ல் ஒரு உண்ணாவிரதம், கடையடைப்பு, பிரார்த்தனை, பிராயச்சித்த கூட்டங்கள் நிறைந்த ஒரு நாளாகவே இருந்தது. இந்த நாட்களில் தில்லியில் பேரணிகள் நடத்தப்பட்டன. கடையடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியானார்கள். எண்ணற்றோர் காயமடைந்தனர். ஏப்ரல் 6 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே முன் எப்போதும் நிகழ்ந்திராத சகோதரத்துவம் அங்கு நிலவியது.
ஏப்ரல் 13 அன்று ஜாலியன் வாலாபாக்கில் ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நகரத்தின் நடுவே உள்ள ஒரு திறந்த மைதானம். எல்லாப் பக்கங்களிலும் வீடுகளால் சூழப்பட்டிருந்தது. இந்த இடத்திற்கு ஒரு சிறிய சந்துதான் நுழைவு வாயில். இது மிகவும் குறுகலான ஒன்று. ஒரு வண்டிகூட இதன் வழியாகச் செல்ல முடியாது. இந்த மைதானத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 20000 பேர் குழுமியிருந்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 100 இந்திய மற்றும் 50 பிரிட்டிஷ் இராணுவப் படைகளுடன் ஜெனரல் டயர் அவ்விடத்தினுள் நுழைந்து, சந்தைமூடிக்கொண்டு தனது வீரர்களுக்குத் தடங்கலின்றி சுடுவதற்கு ஆணையிட்டான்.20000 பேர் ஆணை பிறப்பித்த இரண்டு மூன்று நிமிடங்களில் கலைந்து செல்ல முடியாது என்பது தெளிவான ஒன்று. அந்த நிலையில் அவனது படைவீரர்கள் 1600 முறை சுட்டனர். தோட்டாக்கள் தீர்ந்த பிறகே சுடுவதை நிறுத்தினர்.
அரசின் கூற்றின்படி பலியானோர் சுமார் 400 பேர். அதே நேரத்தில் காயமடைந்தவர்கள் ஓராயிரத்திற்கும் ஈராயிரத்திற்கும் இடைப்பட்டவர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டது. காயம்பட்டு இறந்து கொண்டிருந்தவர்கள் இரவு முழுவதும் குடிக்கதண்ணீர் இன்றியும் மருத்துவ வசதியோ அல்லது வேறெந்த உதவியுமோ இல்லாது துயரப்பட்டனர். டயரின் வாதம் பின்வருமாறு விளக்கப்படுகிறது:-
நகரம் முழுவதும் இராணுவத்தின் கீழ் வந்துள்ளது. காலையில்தான் அவர் முடிவெடுத்தார். ‘எந்த கூட்டமும் அனுமதிக்கப்படக்கூடாது.’ ஆனால் மக்கள் வெளிப்படையாக அம்முடிவை ஏற்க மறுத்தனர். தன்னைப் பார்த்துப்பரிகசிக்காவண்ணம், மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட அவன் விரும்பினான். அவன் தனக்குத் தேவையான அளவு இராணுவத் தளவாடங்களைப் பெற்றிருந்தால், மேலும் மேலும் சுட்டுக் கொண்டே இருந்திருப்பான்.அவன் மேலும் சொன்னது:- அவன் ஒரு கவச வண்டியைக் கொண்டு சென்றிருந்தான். ஆனால் மைதானத்தின் வழி மிகக் குறுகலாக இருந்ததால் வண்டி உள்ளே நுழையமுடியவில்லை. எனவே அதனை வெளியே நிறுத்தி விட்டான்.டயர் தனது விசாரணை வாக்குமுலத்தில்..”அது நான்நடத்த வேண்டிய பயங்கரமான கடமை. அது ஒரு இரக்கமுள்ள செயல் என்று கருதுகிறேன். நான் நன்றாக பலமாக சுடவேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால், நானோ மற்றவர்களோ மறுபடியும் சுடக்கூடாது. சுடாமலேயே அக்கூட்டத்தைக் கலைத்திருக்க முடியும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் மறுபடியும் திரும்ப வந்து, என்னைக்கேலி செய்திருப்பர். மேலும் நான் செய்தது என்னை நானேமுட்டாளாகக் காட்டியிருக்கும்.” பஞ்சாபின் லெப்டினன்ட் கவர்னர்மைக்கேல் டி.ட்வியரால் இந்த வாக்குமூலம் அவருக்குஅனுப்பிய ஒரு தந்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் படுகொலைக்குப் பின்னர், விடுதலைப் போராட்டம் பஞ்சாபில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் விரைவுபடுத்தப்பட்டது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய பல்வேறு மதத்தினர் பஞ்சாபில்வசித்த போதிலும், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் முயற்சிகள் இருந்த போதிலும், அதையும் மீறி வலுவான ஒற்றுமை அவர்களிடையே தோன்றியது. பிறகு கிலாஃபத் இயக்கம்உருவெடுத்து, விரைவிலேயே காங்கிரஸ் இயக்கத்துடன் ஒன்று சேர்ந்தது. சீக்கியர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு ஆயத்தமானார்கள். போரிலிருந்து திரும்பி வந்த படைவீரர்களும் இதில் சேர்ந்தனர். இந்துக்கள், முஸ்லிம் படை வீரர்களும் இதில் சேர்ந்தனர். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக்கில் அவர்கள் தங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புதெரிவிப்பதற்காகவே கூடியிருந்தனர். முழு சுதந்திரம்பெறுவதற்குத் தேவையான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு சரியான அடையாளத்தை இது கொடுத்தது.
சங்குரிலிருந்து இலண்டனுக்கு இப்படுகொலைக்குப் பழிதீர்க்கச் சென்ற உத்தம்சிங் என்ற இளைஞனால் கொடூரன் ஓடயர் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு விபத்து அல்ல. உத்தம்சிங் தன் செயலின் விளைவு மரணமே என்பதை நன்கு அறிந்திருந்தான். இவனது நடவடிக்கை நாட்டில் உள்ள மக்கள் எவரும் ஜாலியன் வாலாபாக் நிகழ்வை மறந்து விடவில்லை என்று நினைவுபடுத்துவதாகவே இருந்தது. இந்த இடத்தில் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குருதியைச் சிந்தியதன் மூலம் தேசிய சுதந்திரத்திற்காக தேசிய ஒற்றுமை என்றகருத்தைக் கொடுத்தவர்களுக்கு நாம் வீரவணக்கம் செய்வோம். அவர்கள் வேண்டியது இந் நாட்டு மக்களுக்கான பரிபூரண முழு விடுதலை. அது அரசியல், பொருளாதாரம்,சமூகம் என அனைத்தையும் உள்ளடக்கியது. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் நீத்த தியாகிகளின் இலட்சியம் ஈடேற இந்திய நாட்டின் பரிபூரண முழு விடுதலைக்கானபயணத்தில் அர்ப்பணிப்புடன் இணைவோமாக.
(ஜாலியன் வாலாபாக் படுகொலை நாள் ஏப்ரல்-13)
கட்டுரையாளர் : பெரணமல்லூர் சேகரன், சிபிஐ(எம்), திருவண்ணாமலை, மாவட்டக்குழு உறுப்பினர்