articles

img

சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கள் - கு.மணி

சங்க இலக்கியங்களில் விளையாட்டுக்கள் - கு.மணி

விளையாட்டுக்கள் ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர் சிறுமியர் இளையோர் என எல்லா நிலைகளிலும் உள்ளோர் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு துணை புரிகின்றன. இதைத்தான்  ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா  மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா   என்றான் பாரதி. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடலில் உள்ள ஆற்றல்களை வெளியிடவும் எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாக பட்டறிவும் போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது. தொல்காப்பியமும் விளையாட்டும்  விளையாட்டு என்பதற்கு புலவர்கள் சரியான ஒரு வரைமுறையை தரவில்லை. இருப்பினும் தமிழில் படைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூலாக கருதப்படும் தொல்காப்பியம் விளையாட்டு பற்றிய ஒரு சில பதிவுகளை முன் வைத்துச் சென்றுள்ளது. “செல்வப் புலனே புணர்வு விளையாட்டென  அல்லல் நீத்த உவகை நான்கே”  மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் உவகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நான்கு கலன்களில் விளையாட்டு ஒன்று என குறிப்பிட்டுள்ளார். மேலும் பழங்கால மக்கள் விளையாடும் விளையாட்டு முறைகளை வைத்து அவற்றை கெடவரை என்றும் பண்ணை என்றும் குறிப்பிடுகிறார். “கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” “கெடவரல் “என்பது நிலத்தில் விளையாடும் விளையாட்டு என்றும் “பண்ணை” என்பது நீரில் விளையாடும் விளையாட்டையும் குறிக்கின்றது.  நற்றிணையில் விளையாட்டு  சங்க கால கட்டத்தில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டு வந்த நிலையில் நற்றிணையில் ஓரை விளையாட்டு: வட்டாடுதல், ஊசலாட்டம் பந்தாட்டம், சிற்றில், கழங்காடுதல், வண்டலிழைத்தல், புனல் நீராடுதல் கடற்கரையில் விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை புலவர்கள் கூறி இருக்கின்றனர். விளையாடுவதால் உடலில் தோன்றிய களைப்பு நீங்கியமைக்கு   “வடிகொள் கூழை ஆயமொடு ஆடலின்  இடிப்பு மெய்யதுஒன் றுடைத்தே”  (நற்--23:2)  என்னும் நற்றிணை பாடல் அடிகளே சான்று.  அகநானூற்றில் விளையாட்டு  குறிஞ்சித் திணையில் தினைப்புனம் காப்பது குல மரபாகும். தலைவி களவு வாழ்க்கை மேற்கொள்ளும் களமாக தினைப்புனத்தை எண்ணி மகிழ்கின்றாள். தினைப்புனக் காவல் கடமைக்கு இடையே சிறிது நேரம் விளையாட்டுக்களில் ஈடுபட்டு தோழியருடன் இணைந்து ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சி அடைகின்றனர். மலர் கொய்தும் புனலாடியும் மாலையாக தொகுத்து விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுத்தி விளையாடி இன்பம் காணுகின்றனர். புனலாடுதல் பூக்கொய்தல் போன்றவை குறிஞ்சி நில விளையாட்டுகளாக அகநானூற்றில் வெளிப்படுகின்றன. “பிரசப்பல்கினை யாராப்பக கல்லென வுரையிழி யருவி ஆரந்தீண்டித் தண்ணென மலர்ந்த மாயிதழ் குலனைக் கண்முகை நெஞ்சனை நம்மோ டாடி”  (அகம்-228)  தலைவன் பிரிதிந்திருக்கையில் தலைவி தோழியோடு விளையாடாமல் துன்புறுகின்றாள். அதை நினைத்து தலைவன் மிகவும் மனச்சலிப்பு அடைகின்றான். தோழியர் தன் ஆயத்தாரோடு சேர்ந்து விளையாடி மனமகிழ்வு அடைந்தனர். “துணையோடு குறும்பாறை பயிற்று  மென்மெவ  விளையாட் டாயத் திளைமீடர்க் காண்டொறு நம் வயினி னினையு நன்னுத லரிவை”  (அகம் 254) எனும் அடிகள் தலைவி தலைவனின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த வேளையில் முன்னர் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை நினைத்து மனம் இன்புற்றதை காட்டுகிறது. பத்துப்பாட்டில் விளையாட்டுக்கள்  இளமகளிர் பாவைசெய்து விளையாடினர். நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தை எறிந்தும் அடித்தும் விளையாடினர் ( திருமுருகு அடி 65 ). சோழ நாட்டு உழவர் மகளிர் நெய்தல் நிலத்து மணல் குன்றுகளில் வண்டல் இழைத்து விளையாடினர் என்கிறது பெரும்பாணாற்று ப்படை (அடி187).  வண்டல் மண் சிற்றில் தொண்டை நாட்டு மருத நிலப் போர்களில் சிறுவர் பிறரால் ஏற்றப்படாத சிறிய தேர்தனை உருட்டி விளையாடினார்( பொருநராற்றுப்படை அடி 248). தொண்டை நாட்டுத் துறைமுக நகரத்து செல்வச் சிறுமியர் தமது பல மனையின் வளமான மேல் மாடத்தில் நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்தையடித்து விளையாடினர் (அடி-334-5) குட்டங்களில் நீராடுவோர் தம் கையை மேலே கூப்பி முழுகி நீரின் ஆழத்தை காட்டுதல் மரபு. (பொருநராற்றுப்படை அடி 272-3) பூம்புகார் நகரத்தில் மீனவர் பிள்ளைகள் மணலிலே படர்ந்த அடம்பப் பூவை தலையிலே கட்டியும் நீரில் நின்ற ஆம்பல் பூவை பறித்துச் சூட்டியும் தங்கள் மன்றிலே ஆட்டுக்கிடாய் போரையும் கவுதாரி போரையும் கண்டு களித்தார்கள்.  (பட்டினப்பாலை அடி- 61 -67).  கடலிடைச் சென்று மீன் பிடித்து வாழ்ந்த பரதவர் உவா நாட்களில் மீன் பிடிக்கச்செல்லார். அதற்கு மாறாக ஆடியும் பாடியும் பொழுதைக் கழித்தனர். அவர்கள் கொம்பை நட்டு வென்றொளி மலர் மாலையையும் தாழை மலரையும் சூடி பனங்கள்ளையும் நெற்கள்ளையும் உண்டு விளையாடினார்கள். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் கடலாடினார்கள். உடம்பில் படிந்த உப்பு போகும்படி காவிரியில் நீராடினார்கள். நண்டுகளை பிடித்து விளையாடினார்கள்.  ..................... கடலாடியும்  மாசுபோக புனல் படிந்தும்  அலவன் ஆட்டியும்( பட்டினப்பாலை 99 -100). பாவைகளை பண்ணி விளையாடினார்கள். ஐம்பொறிகளில் நுகரும் பொருள்களை நுகர்ந்து மயங்கினார்கள். நீங்காத விருப்பத்துடன் பார்ப்பதெல்லாம் விளையாடினார்கள் புறநானூற்றில் விளையாட்டுகள்  புறநானூற்றில் விளையாட்டுக்கள் பற்றிய செய்திகள் அதிகம் இல்லை. ஆனால் சில பாடல்களில் போர் போன்ற வீர விளையாட்டுக்கள், போர்க்களத்தில் வீரர்களாக பங்கு பெறுதல், வேல் ஏந்திக் கொண்டு போருக்குச் செல்வது போன்ற வீர விளையாட்டுக்களின் செய்திகள் உள்ளன. சில பாடல்களில் வேட்டை விளையாட்டு குறித்தும் அதனைக் குறித்து பேசும் செய்திகளும் உள்ளன. அக்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த விளையாட்டுக்களில் ஒன்று வட்டாடுதல். இவ்வட்டமானது காய்களை நகர்த்தி விளையாடும் ஆட்டமாகும். இதனை வயதானவர்கள்விளையாடினார்கள் என்பதற்குச் சான்றாக புறநானூறு பாடல் ஒன்று விளக்குகிறது. கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் புலிகண் மாறிய பாழ்படு போதியில் நுரைமூ தாளர் நாயடைக்குழிந்த வல்லின நல்லகம்( பறம் -52) என்பதன் மூலம் முதியோர்கள் இதனை சூதாட்டம் போல் ஆடி உள்ளனர். வண்டலிழைத்தில் என்பது ஒரு வகை விளையாட்டு. மணலில் உருவங்களை செய்து அதற்கு பூக்களைச் சூட்டி விளையாடுவதாகும். “வாழ் இழை மட மங்கையர் வரிமணற் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக்கொய்து  ................. திணிமணல்”( புறம் -11) செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத் ( புறம் -243) ஆகிய வரிகள் மணலில் உருவங்கள் செய்து அவற்றிற்கு பூக்களைச்சூடியதை அறியலாம். சிறுபாணாற்றுப்படையில் விளையாட்டு  இன்று சிறுவர்கள் கிலுகிலுப்பை என்னும் கருவியைக்கொண்டு ஓசை எழுப்பி விளையாடி மகிழ்தலை நாம் அறிந்திருக்கின்றோம். இவ்விளையாட்டானது சங்க காலத்தில் இருந்தது என்பதை சிறுபாணாற்றுப்படையின் மூலம் அறியலாம். “நோன்பகட்டுமணர் ஒழுகையொடு - வந்த .............. உமட்டியா ஈன்ற கிளர் பூண் புதல்வரோடு கிலி கிலியாகும்”. இதன் மூலம் உமணர்களின் குழந்தைகள் இந்த கிலி கிலிஆட்டத்தை ஆடியது அறியலாம். கலித்தொகையில் ஏறுதழுவுதல்  ஏறுதலுவலானது தற்போதைய “ஜல்லிக்கட்டு” விளையாட்டின் முன் வடிவம் ஆகும். ஏறுதழுவுதல் விளையாட்டானது முல்லை நிலத்திற்குரியதாகும்.  “சீறு அருமுன் பின்னோன் கணிச்சிபோல் கொடுசீஇ ஏறு தொழு உப் புகுந்தனர்”( கலி -101)” முன்பின் ஏறு பல செய்து “ என்ற வரிகள் மூலம் ஏறுதழுவுதல் சிறப்பாக நடந்தது என்பதை தெளிவு அறியலாம். சிலம்பம் விளையாட்டு சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு: கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்பட்டதாகவும் அவற்றை வெளிநாட்டவர் மிக ஆர்வமுடன் வாங்கிச் சென்றதாகவும் குறிப்புகள் உள்ளன.  திருக்குறளில் “கோல்”எனவும் கலிங்கத்துப்பரணியில் “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே” என்ற வரிகள் மூலம் தண்டு என்ற பெயரிலும் “கம்பு “குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடல் புராணத்திலும் சிலம்பம் விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறாக சங்க இலக்கியங்களில் விளையாட்டு மக்கள் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து இருப்பதை உணர முடிகிறது. விளையாட்டுக்களில் போட்டி மனப்பான்மை இருந்தாலும் மனிதநேய பண்பு காணப்பட்டது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற விளையாட்டுக்கள் காப்பியங்கள், இலக்கியங்களிலும் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளன. ஊர் திருவிழாக்களில் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுக்கள் இன்றும் சிற்றூர்களில் காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்றவை வீர விளையாட்டு தற்காப்புக் கலையாக இன்றும் நம் தமிழ் மக்களின் வாழ்வியலில் முக்கிய பங்காற்றி வருகின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.