articles

img

குழந்தைகள் யாரிடம் பேசுவார்கள்? - வீ.மாரியப்பன்

நவம்பர் 12- கோவை சின்மயா பள்ளியில் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தால்  மாணவி தற்கொலை;  நவம்பர் 13-  திண்டுக் கல்லில் சுரபிக் கல்லூரித்  தாளாளர் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்; நவம்பர் 14- கரூரில் பள்ளி மாணவி தற்கொலை; நவம்பர் 30- சென்னை புனித தோமையர் கல்லூரியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவ, மாணவியர் போராட்டம்.  இவையெல்லாம் ஒரு வரிச் செய்திகள் அல்ல. நூறாண்டுப் போராட்டங்களுக்குப் பின்னும்  பெண்ணின்  கல்வி உரிமையைப் பின்னுக்கு இழுக்கும் கொடூரச் சம்பவங்கள். 

இந்த ஆண்டு மட்டும் பத்ம சேஷாத்ரி பள்ளி, சிவ சங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி என கல்வி  நிறுவனங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கள் ஏராளம் வெளிவந்தவண்ணம் உள்ளன.  இன்றைய சூழலில் ஆசிரியர், மாணவர் உறவு அதி காரமிக்க ஒருவருக்கும் அதிகாரங்கள் அற்றவருக்கும் இடையிலானதாக இருக்கிறது. பெண்குழந்தைகள் விஷயத்தில் இன்னும் நிலைமை பின்தங்கி உள்ளது.  பெண் உடல் சார்ந்து சமூகத்தில் நிலவும் கற்பிதங்கள் பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்லவிடா மல் உளவியல்ரீதியாக அவர்களைக் கட்டுப்படுத்து கின்றன.  நம்  குடும்ப சூழலும் இந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்வதாக இல்லை. அந்த அலைக் கழிப்பும் குழப்பமும் ஏமாற்றமும் அவர்களைத் தற்கொ லைக்குத் தள்ளுகிறது. 

போக்ஸோ சட்டத்தின் நிலை 

 குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து தடுக்கும் சட்டம் 2012 ஆம்  ஆண்டே இயற்றப் பட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதுமான அளவு ஏற்படுத்தப்படவில்லை. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்பிற்கான குழுக்களின் செயல்பாடுகள் பரந்துபட்டதாக இல்லாத நிலையில் பெரும்பாலான சூழல்களில் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் சமரசம் செய்யப்படுகிறது. அப்படிப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெறுவோர் விகிதம் இந்தியா முழுவதும் 25.4 என்ற அள விலேயே இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்படும் வழக்குகளில் 4ல் 1 பங்கு வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. 

காவல்துறையின் செயல்பாடு

இது போன்ற சிறப்பு சட்டங்கள் குறித்த விழிப்பு ணர்வு காவல் துறையினரிடமும் இருப்பதில்லை என்பது தான் களநிலவரம். மேலும் குற்றவாளிகள் உற வினர்களாக, ஆசிரியர்களாக, கல்விநிறுவன நிர்வா கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறநிலையில், பாது காப்பு மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டிய காவல்துறையினர் பெற்றோர்களையும் மிரட்டியும் குழந்தையின் படிப்பு மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என அச்சுறுத்தி  சமாதானம் பேசியும் அனுப்பிவிடுகின்றனர். 

கரூரைச் சேர்ந்த மாணவி, “பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் கடைசி பெண் நானாக இருக்கட்டும்” என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அப்பெண்ணின் தாய் உறவினர்களுடன் புகார் அளிக்க  சென்ற போது காவல் ஆய்வளர் கண்ணதாசன், அவர் களை தகாத வார்த்தைகளால் திட்டி, உடன் சென்ற உறவினர்களை பூட்ஸ் காலால்மிதித்து இரவு முழுவதும் காவல் நிலையத்தில் காத்திருக்கச் செய்துள்ளார். இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டிற்கு பிறகே கண்ணதாசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவல் துறையினரின் இத்தகு செயல்கள்   இச்சட்டங்க ளின் நோக்கத்திற்கு விரோதமாகவும்  இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு வழிகோலும் விதத்திலும் அமைகின்றன.   

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள குழந்தை கள் கொள்கை 2021 - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதில் போக்ஸோ சட்டம் குறித்து எதுவும் குறிப்பி டப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயமாகும். 

பாலின சமத்துவம் பாடமாகட்டும்

உளவியல் ரீதியாகப் பெண் உடல் சார்ந்த கற்பி தங்கள் இருபாலர் மத்தியிலும் உடைக்கப்படுவதே சமூகத்தில் பாலியல் ரீதியிலான குற்றங்களைத் தடுப்ப தற்கான நிரந்தரத் தீர்வாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் பெண் உடல் பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கு ஆட்படுவது அன்றாட நிகழ்வாக இருக் கிறது. இந்நிலையில் நம் சமூக அமைப்பு குறித்தும் பாலின சமத்துவம் குறித்தும் பள்ளிகளிலேயே கற்பிப்பது அவசியம். மேலும் பாலியல் குறித்த அறிவி யல்பூர்வ பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு  குழந்தைக ளுக்கு வளரிளம் பருவ உளவியல் மாற்றங்கள், உடலின் வளர்ச்சி குறித்து மருத்துவ அறிவியல் அடிப்படையில் பாடங்கள் அமைக்கப்பட வேண்டும்.  ஆரம்பக் கல்வி முதல் பாலின சமத்துவம் குறித்த பாடத் திட்டங்கள் குழந்தை செயல்பாட்டாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணத்துவம் பெற்ற வர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அதனைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு முறை யான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  மேலும் ஆசிரியர் பயிற்சியில் பாலின சமத்துவம் மற்றும் குழந்தைகளை அணுக வேண்டிய அறிவியல் பூர்வ முறைகள் குறித்த பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.  

கூட்டுப் பொறுப்பு

இந்தியா போன்ற வறுமை மிக்க நாட்டில் குழந்தை வளர்ப்பை தனியொரு குடும்பத்தின் பொறுப்பாக சுருக்குவது அபத்தம்.  ஒரு குழந்தை தனக்கு நடந்த பாலியல் வன்முறையை யாரிடமும் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறது என்றால் அவ்வளவு மோசமான சமூக சூழலை நாம் உருவாக்கி வைத்தி ருக்கிறோம் என்றே பொருள். பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், அரசு அமைப்புகள் என எங்கும் ஆதரவு கிடைக்காது என ஒரு குழந்தை தற்கொலை செய்து கொள்வது சமூகமாக நமது கூட்டுத் தோல்வியாகும். ஒவ்வொரு நாடும்  குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பங்கேற்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உடன்படிக்கை தெரி விக்கிறது. இதனை செயல்படுத்திக் காட்டியது சோவி யத் ஒன்றியம். சோவியத்தில் குழந்தை வளர்ப்பு அரசு, சமூகம் மற்றும் குடும்பத்தின் கூட்டுப் பொறுப்பா கவே இருந்தது. அதுவே ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறையாகும். ஆகவே குழந்தைப் பாதுகாப்பு குழு ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக்கப்பட்டு அரசின் பங்களிப்பாக உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த ஊர்களில் உள்ள பள்ளிகளில் குழு உறுப்பி னர்களாக இருப்பதுடன் பெற்றோர், சமூக செயற்பாட்டா ளர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாக அது  செயல் பட வேண்டும்.பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை விசாரிப்பது மற்றும் பாலின சமத்துவம் குறித்த புரிதலை உருவாக்குவது இந்தக் குழுவின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

அரசாணை 121

2012 இல் அதிமுக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அரசாணை வெளியிட்டது. பள்ளிகளில் பாலியல் ரீதியில் மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிரான நட வடிக்கைகள் குறித்த முக்கியமான அரசாணை இது.  இதில் தகாத முறையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன் அவர்களது கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கடுமையான தண்டனைகளுடன், ஆசிரியர்களு க்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும், மாணவ- மாணவியருக்கு உதவும் வகை யில் நடமாடும் ஆலோசனை மையங்கள் அமைக்கப் பட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை வழங்கி இருந்தது. இந்த அரசாணை தனியார் பள்ளிக ளையும் கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த ஆணை வெளியிடப்பட்டு பத்து ஆண்டு கள் நெருங்கும் நிலையில் இதுவரை ஒரு ஆசிரியரும் இதன் அடிப்படையில் தண்டிக்கப்படவில்லை. 

தனிச் சட்டத்தின் தேவை

 போக்ஸோ சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு 1742 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 2020இல் 2229 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 2021 ஜூன் வரை 1252 பாலியல் வன்கொடுமை வழக்குக ளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2021 ஜூன்  வரை மட்டும் தமிழ்நாட்டில் 672 வழக்குகள் பதிவாகி யுள்ளன. இவற்றில் கல்விநிலையங்களில் நடக்கும் குற்றங்களும் அடங்கும். போக்ஸோ சட்டத்தில் தண்டனை பகுதியில் கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அதிகார துஷ்பிரயோகத்தால் நடக்கும்  குற்றங்களுக்கான தண்டனைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. எனினும் பாதுகாப்பு, விழிப்புணர்வு மற்றும் தண்டனை சார்ந்து  கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறை (தடுப்பு  மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்படுவது அவசியம் ஆகும். பகடி வதைத் தடுப்பு (ராக்கிங் செய்தல்) உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய சட்டங்களுக்கு இசைவாக தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டங்கள் இயற்றியதை போல் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்திலும் ‘கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டம்’ இயற்ற வேண்டும். இச்சட்டம் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு அரசாணை 121 குறிப்பிடும் தண்டனை களோடு குற்றவியல் தண்டனைகளை வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ளகக் குழுக்கள் ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர், சமூக செயல்பாட்டாளர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். இக்குழு குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுப் பொறுப்புடன் செயல் பட வேண்டும். மேலும் பாலின சமத்துவம் குறித்த பாடத் திட்டம் உருவாக்க அரசுக்கு வழிகாட்டுவதுடன் கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பாலின சமத்துவம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதையும் குழந்தைகள் எளிதில் அணுகும் விதத்தில் ஆலோ சனை மையங்கள், குறைதீர்க்கும் அமைப்புகள் செயல் படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இவற்றினை கட்டாயமாக்கும் விதத்தில் வகைமுறைகள் உருவாக் கப்படுவதுடன் கண்காணிப்பு அமைப்புகள் அவற்றின் செயல்பாடுகளை அச்சட்டம் வரையறுக்க வேண்டும். 

பெண் கல்வி உரிமைக்காகவும் பாலின சமத்துவம் மிக்க சமூகத்திற்காகவும் களத்தில் தொடர்ந்து போராடி வரும் இந்திய மாணவர் சங்கம்  2021 டிசம்பர் 5 அன்று திண்டுக்கல்லில் மாநாடு நடத்தி, இதையெல்லாம் வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றியுள்ளது, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்கும்என நம்புகிறோம்.

கட்டுரையாளர் : மாநிலச்செயலாளர்,  இந்திய மாணவர் சங்கம்.

 

;