articles

img

பைடன் நடத்திய உச்சி மாநாடு: ஜனநாயகமா? சோசலிச எதிர்ப்பா? - அ.அன்வர் உசேன்

ஜனநாயகத்துக்கான உச்சி மாநாடு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூட்டி யுள்ளார். ஜனநாயகத்தை முன்னேற்றவும் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை கூட்டியுள்ளதாக பைடன் கூறுகிறார். எனினும் இந்த  செயல் பல நியாயமான விமர்சனங்களை  விளைவித் துள்ளது. ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து தேசங்களும் அழைக்கப்படவில்லை. எனவே எதன் அடிப்படையில் அழைப்பு அல்லது அழைப்பு மறுப்பு எனும் கேள்வி முன்னுக்கு வருகிறது. ஜனநாயகம் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த அளவு தகுதி உள்ளது என்பது அடுத்த கேள்வி. அமெரிக்க ஜனநாயகம் கடும் நெருக்க டியில் திணறுகிறது. அதனை சீர்செய்வதற்கு பதிலாக சோசலிச/இடதுசாரி மற்றும் சில தேசங்களில் உள்ள ஜனநாயக நடைமுறைகளை விமர்சிக்க அமெரிக்கா வுக்கு என்ன தகுதி உள்ளது? உள் நாட்டிலும் சர்வதேச அளவிலும் மனித உரிமைகளை மீறுவதில் ஈடுபடும் அமெரிக்கா மனித உரிமைகள் குறித்து எப்படி பேச முடியும்? இப்படி, புறந்தள்ள முடியாத பல கேள்வி கள் எழுகின்றன. 

அழைக்கப்பட்டவர்களும் அழைக்கப்படாதவர்களும்

இந்த உச்சிமாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்கள் மற்றும் அழைக்கப்படாதவர்கள் பட்டியல் அமெரிக்கா வின் நோக்கம் என்ன எனும் ஐயத்தை உருவாக்குகிறது. சீனா/வியட்நாம்/கியூபா/வட கொரியா போன்ற எந்த சோசலிச தேசமும் அழைக்கப்படவில்லை. இந்த தேசங்களில் முறையாக தேர்தல்கள் நடக்கின்றன. முதலாளித்துவ தேசங்களில் உள்ள ஜனநாயக உரி மைகளைவிட கூடுதலாக உழைக்கும் மக்கள் உரிமை கள் பெற்றுள்ளனர். எனினும் இந்த தேசங்கள் அழைக் கப்படவில்லை.  தேர்தல்கள் மூலம் ஆட்சியை கைப்பற்றிய இடது சாரிகள் ஆளும் வெனிசுல/ பொலிவியா/ ஹோண்டு ரஸ்/நிகாரகுவா/சிலி போன்ற பல தேசங்களுக்கு அழைப்பு இல்லை. இப்பொழுது ரஷ்யா சோசலிச தேசம் அல்ல. அங்கு முதலாளித்துவ பாணியில் நடக்கும் தேர்தல்களில் பல கட்சிகள் போட்டியிடுகின் றன.  எனினும் ரஷ்யாவுக்கும் அழைப்பு இல்லை. பொரு ளாதார ரீதியாக வளர்ந்த தேசமாக உள்ள சிங்கப்பூர் உட்பட தனது சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்தல் களை நடத்தும் ஈரான்/பூட்டான் போன்ற தேசங்களும் அழைக்கப்படவில்லை. வங்கதேசம் இலங்கை மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான ஹங்கேரி/ துருக்கி போன்ற பல தேசங்கள் தேர்தல்கள் மூலம் ஆட்சி அமைக்கின்றன. எனினும் இந்த தேசங்களுக்கு அழைப்பு இல்லை. 

அழைக்கப்பட்ட சில தேசங்கள் அல்லது தனிநபர் கள் பட்டியல் இந்த உச்சி மாநாட்டின் நோக்கத்தை மேலும் ஐயம் கொள்ள வைக்கிறது. தைவான் தனது தேசத்தின் ஒரு பகுதி என பன்னெடுங்காலமாக சீனா கூறிவருகிறது. ஐ.நா.சபையோ அல்லது அமெரிக்கா வோ கூட தைவானை அங்கீகரிக்கவில்லை. எனினும் சீனாவை ஆத்திரமூட்டும் ஒரே நோக்கத்துடன் தைவான் அழைக்கப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியான பொல்சானரோ பிரேசிலில் உள்ள கருப்பின மக்கள்/ தன்பாலினத்தவர்/மண்ணின் மைந்தர்களாக உள்ள பழங்குடியினர் ஆகியோரை அடையாளம் தெரியாமல் அகற்ற வேண்டும் என பகிரங்கமாக கூறுபவர். ஆனால் இவருக்கு அழைப்பு உண்டு. ஜனநாயக தன்மை குறை வாக உள்ள காங்கோ/ கென்யா/ செர்பியா/ இராக் போன்ற தேசங்கள் அழைக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு அநீதி இழைக்கும் இஸ்ரேலுக்கு அழைப்பு உண்டு. வெனிசூலா/நிகாரகுவா/ஹாங்காங்கில், ஆட்சிகளுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் அழைக் கப்பட்டுள்ளனர். ஜனநாயக உச்சி மாநாட்டுக்கான அழைப்பு பட்டியல் அமெரிக்காவுக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை ஐயமின்றி நிலைநாட்டுகிறது.

ஜனநாயகத்தின் பல வடிவங்கள்

நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகத்துக்கு மாறிய பொழுதுதான் நாடாளுமன்ற தேர்தல் முறைகள் அமலுக்கு வந்தன. நிச்சயமாக இந்த தேர்தல்முறை சமூகத்தின் அரசியல்  பயணத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை. ஆனால் 1917ல் சோசலிச சமூகம் உருவான பின்னர் முற்றிலும் வேறுபட்ட ஜனநாயக நடைமுறைகள் முன்னுக்கு வந்தன. சோவியத் யூனியன்தான் முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அரசு இயந்திரம் உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. முதலாளித்துவ சமூகம் கண்டிராத பல உரி மைகள் உழைக்கும் மக்களுக்கு சோசலிச சமூகத்தில் கிடைத்தன. சோசலிச சமூகம் மூலதனத்தின் பிடியில் இல்லை. மாறாக மூலதனம் சமூகத்தின் பிடியில் இருந்தது.

நாளடைவில் முதலாளித்துவ ஜனநாயகம் பெரு வாரியான மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைய வில்லை. செல்வந்தர்களின் கருவியாக அரசும் ஜன நாயகமும் சிதைந்தது. ஜனநாயகம் முற்றிலும் தேர்தல் அரசியலாக மாறியது. மக்களின் குரல் தேர்தல் நேரத்தில் மட்டுமே ஒலித்தது. அதற்கு பின்னர் மக்க ளின் பங்கேற்பு அறவே புறக்கணிக்கப்பட்டது. சமீப காலங்களில் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்கிய ஜனநாயகம் தனது உள்ளடக்கத்தை இழந்துள் ளது. இந்த சிதைந்த ஜனநாயகம்தான் அநேகமாக அனைத்து முதலாளித்துவ தேசங்களிலும் நிலவுகிறது.  இது மட்டுமே உண்மையான ஒரே வடிவத்திலான ஜன நாயகம் என அமெரிக்காவும் பல முதலாளித்துவ நாடு களும் கூறுகின்றன. 

வெனிசுலா/பொலிவியா போன்ற இடதுசாரிகள் ஆளும் தேசங்களில் வேறு வடிவத்தில் ஜனநாயகம் உள்ளது. இந்த நடைமுறைகள் அமெரிக்க ஜனநாய கத்திலிருந்து மாறுபட்டவை. ஈரான்/ரஷ்யா/சிங்கப் பூர்/பூட்டான் ஆகிய தேசங்களும் வேறு மாதிரியான ஜன நாயக வடிவங்களை கொண்டுள்ளன. இந்த தேசங்கள் அனைத்தும் முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களை கைக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா எண்ணு கிறது. இந்த அணுகுமுறை முற்றிலும் நடைமுறை சாத்தியமற்றது. “சிங்கப்பூர் ஜனநாயகம் சிங்கப்பூர் மக்களை திருப்திபடுத்தத்தானே தவிர அமெரிக்க ஆட்சியாளர்களை திருப்திப்படுத்த அல்ல” என குறிப்பிட்டார் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்  இயோ. ஆம்! சிங்கப்பூர் அமைச்சர் கூறியது பொருத்த மான வார்த்தைகள்! 

சீன ஜனநாயகமும்  அமெரிக்க ஜனநாயகமும்

சோசலிச நாடான சீனாவில் கடந்த 50 ஆண்டுக ளில் 12 தேர்தல்கள் நடந்துள்ளன. 9 அரசியல் கட்சிகள் தேர்தல்களில் பங்கேற்கின்றனர். கிராமப்புற அமைப்பி லிருந்து மத்திய நாடாளுமன்றம் வரை ஒவ்வொரு முறையும் சுமார் 20 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். இந்த தேர்தல்களில் 90% மக்கள் வாக்களிக் கின்றனர். ஆனால் அமெரிக்காவில் அதிகபட்சமாக 62% பேர்தான் வாக்களித்துள்ளனர். சீனாவில் விவ சாயிகளும் தொழிலாளர்களும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் அமெரிக்கா வில் அது கனவில் கூட சாத்தியம் இல்லை. சீனாவில் சிறுபான்மை இனத்தவருக்கு 155  சுயாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அமெ ரிக்காவில் இத்தகைய ஒரு சுயாட்சி அமைப்பு கூட கிடையாது. சீனாவில் தேர்தல் செலவுகள் அனைத்தும் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள்தான் தேர்தல் செலவுகளுக்கு நன்கொடை தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக செயல் படவில்லை எனில் சீனாவில் அவர்கள் பதவி பறிப்ப தற்கு சட்டவழிமுறைகள் உண்டு. ஆனால் அமெரிக்கா வில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் நாடாளு மன்ற உறுப்பினரின் பதவியை பறிப்பது சாத்தியமற்ற ஒன்று.

சீனாவில் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் மக்களின் கருத்துகள் கேட் கப்படுகின்றன. உதாரணத்துக்கு சீனாவில் 5,03,000 கிராமங்களிலும் 1,12,000 நகர பகுதிகளிலும் மக்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புக ளின் மேற்பார்வையில்தான்  வளர்ச்சி பணிகள் நடக் கின்றன. மேலும் மத்திய அரசாங்கம் கொண்டு  வரும் ஒவ்வொரு சட்டமும் அது நிறைவேற்றப்படுவ தற்கு முன்பு மக்களின் விவாதத்திற்கு முன்வைக்கப் படுகிறது. அதற்காக சுமார் 5,000 விவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது அனைத்து நேரத்திலும் மக்கள் பங்கேற்பு உத்தரவாதப்படுத்தப்படுகிறது. இத்தகைய எந்த நடைமுறையும் அமெரிக்கா அல்லது முதலாளித்துவ தேசங்களில் இல்லை. இதே போன்ற சோசலிச ஜனநாயக நடைமுறை கள் வியட்நாம்/ கியூபாவிலும் உள்ளன. எந்த ஜனநாயக முறையும் 100% சரியானது என எவரும் கூற இயலாது. காலத்துக்கு ஏற்ற மாறுதல்களும் செழுமைப்படுத்துத லும் நடக்கின்றனவா என்பதுதான் முக்கியம்! இதில் சோசலிச ஜனநாயகம் சிறந்து விளங்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் ஹார்வர்டு பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் 93% சீன மக்கள் தமது ஒன்றிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவில் 65% பேர்தான் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவுகளும் மனித உரிமை மீறல்களும்

“மக்களால் மக்களுக்காக மக்களின் அரசாங்கம் இருப்பதே உண்மையான ஜனநாயகம்” என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால் இன்றைய அமெரிக்க ஜன நாயகம் அப்படி உள்ளதா? அமெரிக்காவின் வினோதமான தேர்தல் முறை காரணமாக அதிக வாக்குகள் வாங்குபவர் தோற்பதும் குறைவான வாக்குகள் வாங்குபவர் வெல்வதும் நடக்கி றது. 2000ம் ஆண்டு அல் கோரே ஜார்ஜ் புஷ்ஷைவிட கூடுதல் வாக்குகள் வாங்கினார். ஆனால் குறைவான வாக்குகள் பெற்ற புஷ் ஜனாதிபதியானார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பைவிட ஹிலாரி கிளிண்டன் சுமார் 28 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால் டிரம்ப் ஜனாதிபதியானார். இதனை 100% உண்மையான ஜனநாயகம் என ஏற்றுக்கொள்ள இயலுமா?

அமெரிக்காவின் ஜனநாயக நடைமுறை மக்களை யும் சமூகத்தையும் ஒன்றுபடுத்துவதற்கு மாறாக பிளவை விதைக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. 2020 தேர்தல்களுக்கு பிறகு ஜனநாயக மற்றும் குடி யரசு கட்சிகளின் வாக்காளர்களிடையே மிகப்பெரிய சமூக பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்சியின் ஆதரவாளர் கள் மற்ற கட்சியை மிகப்பெரிய எதிரியாக பார்க்கின்ற னர். 52% டிரம்ப் வாக்காளர்களும் 41% பைடன் ஆதரவா ளர்களும் அமெரிக்கா இரண்டாக (குடியரசு/ஜனநாயக  கட்சிகளின் ஆதரவு அடிப்படையில்) பிரிந்துவிடுவது நல்லது என விரும்புகின்றனர். ஒரு கட்சியின் கருத்தாக்கம் வென்றால் இன்னொரு கட்சியினர் அமெ ரிக்கா தங்களுடையது அல்ல என இரண்டு கட்சிக ளிலும் உள்ள 90% வாக்காளர்கள் எண்ணும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது. 

அமெரிக்க ஜனநாயகம் மேலும் மேலும் சில பெரும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் சிக்கியுள்ளதை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் குரூக்மேன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “நாம் நினைப்பதைவிட அமெரிக்க ஜனநாயகம் மோசமானதாகவும் ஒரு சிலர் அடங்கிய கும்பலின் பிடியிலும் சிக்கியுள்ளது. தொழிலாளர்களின் நலனை  அமெரிக்க ஜனநாயகம் சமீப காலமாக பிரதிபலிப்பது இல்லை.”

அமெரிக்க தேர்தல்களில் பணம் ஒரு முக்கிய பங் காற்றுகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இரு கட்சிகளும் ரூ.1,05,000 கோடி செலவு செய்தன. இந்த நிதியில் பெரும் பகுதி கார்ப்பரேட்டுகள் தருகின்றன. எவர் வென்றா லும் அவர் தமக்கு நிதி அளித்த கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஆதரிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனைத்து செனட் உறுப்பினர்களும் பெரும்பாலான கீழ்சபை உறுப்பி னர்களும்  மேல்தட்டு 1% பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர். அந்த 1% மேல்தட்டினருக்கு உதவி செய்யவே தமது பதவிகளை பயன்படுத்துகின்றனர்” என முன்னாள் உலக வங்கி உதவி தலைவரும் பொருளா தார வல்லுநருமான ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறுகிறார். அமெரிக்காவின் ஜனநாயகம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேல் தட்டு 1% பேரிடம் 43.27 டிரில்லியன் டாலர்கள் சொத்து உள்ளது. இது கீழ்மட்ட 90% மக்களின் செல்வத்தை விட அதிகம். 11.68 லட்சம் பேர் வீடற்றவர்களாகவும் சுமார் 5 கோடி பேர் உணவு பாதுகாப்பின்றியும் உள்ளனர்.

அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் உள்நாட்டில் கவலைப்படும் அளவுக்கு உள்ளன. 32 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 40 கோடி துப்பாக்கிகள் புழங்குகின்றன. ஆண்டுக்கு 45,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகையே உலுக் கிய ஜார்ஜ் ஃபிளாயிட் படுகொலைக்கு பின்னரும் 225 கருப்பின மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட் டுள்ளனர். ஆசிய/லத்தீன் அமெரிக்க சிறுபான்மையின ருக்கு எதிரான குற்றங்கள் 150% அதிகரித்துள்ளது. கருப்பின மக்களை அடிமைப்படுத்தும் முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன் வெள்ளை நிறவெறிய னால் 1865ல் படுகொலை செய்யப்பட்டார். 155 ஆண்டுக ளுக்கு பிறகு அந்த பழைய நிறவெறி மீண்டும் அபாய கரமான அளவுக்கு தலை தூக்கியுள்ளது.  

உலக அரங்கில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு வானமே எல்லை! 80 நாடுகளில் 750 ராணுவ தளங்களை உருவாக்கியுள்ள அமெரிக்கா கடந்த 25 ஆண்டுகளில் 188 முறை ஏனைய தேசங்கள் மீது படையெடுத்துள்ளது. ஜனநாயகம் இல்லை எனக் கூறி இராக்/ லிபியா/ சிரியா/ ஆப்கானிஸ்தான் தேசங்க ளின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க படையெடுப்புகளில் மட்டும் 11 லட்சம் பேர் உயிரிழந்தனர். 5 கோடிக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக மாறினர். இறுதியில் இந்த தேசங்களின் மக்கள் ஏற்கெனவே இருந்த ஜன நாயகத்தையும் வாழ்வாதாரத்தையும்  இழந்தது மட்டு மல்ல; இன்று பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி யுள்ளனர். 

இத்தகைய பொருளாதார அசமத்துவம்/ ஜனநாயக சிதைவுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரண மாக அமெரிக்க மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை  இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

  •     PBS எனும் அமைப்பு நடத்திய ஆய்வில் 55%  இளம் தலைமுறையினர் உட்பட 81% மக்கள் அமெரிக்க ஜனநாயகம் கடும் நெருக்கடியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  •     PEW ஆய்வகம் 17 வளர்ந்த தேசங்களில் நடத்திய ஆய்வில் 57% பேர் அமெரிக்க ஜனநாயகம் முன்பு சிறந்த முன்மாதிரியாக இருந்தது; ஆனால் இன்று  அப்படி இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 
  •     கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனநாய கம் பின்னோக்கி சரிந்து வருவதாக ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிறுவனம் (International Institute for Democracy and Electoral Assistance) மதிப்பிட்டுள்ளது. 

இப்படி பல சிதைவுகளை கொண்ட தனது தேசத்தின் ஜனநாயக முறைகளை சீர்திருத்துவதற்கு பதிலாக ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் ஜனநாயக உச்சிமாநாடு நடத்தி சோசலிச நாடுக ளையும் ஏனைய தேசங்களையும் விமர்சிப்பது கண்ணாடி கூண்டிலிருந்து கல்லெறிவது போல உள்ளது. இதற்கு பல முதலாளித்துவ தேசங்கள் பக்க தாளம் போடுகின்றன. எனினும் இந்த  முயற்சி வெற்றி அடையாது என்பதே உண்மை!
 

;