articles

பெட்ரோல் விலை உயர்வை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்? - எஸ்.ஏ.மாணிக்கம்

சென்னை நகரில் நவம்பர் 1  அன்று  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.106.35 பைசா வாகவும். டீசல் ரூ.102.59 பைசாவிற்கும் விற்கப்பட்டது. நவம்பர் முதல் வாரத்தில் வெளியான 23 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவில் பாஜக படுதோல்வியடைந்ததையடுத்து பெட்ரோலுக்கு ரூ.5ம். டீசலுக்கு ரூ.10ம் லிட்டருக்கு குறைத்து மோடி  அரசு அறிவித்தது. நவம்பர் 8ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 பைசா வரையி லும் விற்கப்பட்டது. இதற்கு முன்பாக ஆகஸ்ட் மாதத் தில் மாநில அரசு பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தது. தற்போதைய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் நிச்சயமற்ற நிலையை சமாளிக்க இத்தகைய தற்காலிக நிவாரணம் போதுமானதல்ல.

பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைப் பொறுத்தளவிலும்  சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் அமெரிக்க டால ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை கணக்கில் கொண்டு மாறுத லுக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவ னங்களுக்கு ஒன்றிய அரசு சுதந்திரத்தை வழங்கி யுள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்திச் செலவு, லாபம் இந்த இரண்டைத் தவிர வேறு எந்த அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவை  தவிர உலக அரசியல் போக்கு களும் கச்சா எண்ணெய் சந்தையை வைத்து அணுகு வதால் அவை  விலையிலும்  தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. 

உலக எண்ணெய் அரசியல்

உலக கச்சா எண்ணெய் சந்தையின் விலைகளை தீர்மானிப்பதில், கச்சா எண்ணெய் உற்பத்தியில் 50 சதவிகிதத்தையும். எண்ணெய் வளத்தில் 90 சத வீதத்தையும்  கொண்டுள்ள ஒபெக் எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பும் அதன் கூட்டணி நாடுகளும் பிரதான பங்கு வகிக்கின்றன. குறிப்பாக அவ்வமைப்பின் பிரதான நாடான சவூதி அரேபியா வின் கொள்கைகள் விலையின் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. ஒபெக் அமைப்பிற்கு அடுத்து 19 சதவிகித உற்பத்தியை கொண்ட ரஷ்யாவும், அதைத்தொடர்ந்து 16 சதவிகிதத்தைக் கொண்ட அமெரிக்காவும் கச்சா எண்ணெய் விலையினை தீர்மானிப்பதில் முதன்மை யாக உள்ளன. ஒபெக் நாடுகளைப் பொறுத்தளவில் அந்நாடுக ளின்  பிரதான பொருளாதாரமே எண்ணெய் வர்த்த கத்தை நம்பியே உள்ளது. ஆகவே தான் விலைகளை தீர்மானிப்பதில் மிக எச்சரிக்கையாகவும் தங்களின் வருவாய்க்கு  பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலையை எடுக்கின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டின் துவக்க ஆறுமாதங்களில் கொரோ னா பெருந்தொற்று பரவலையடுத்து சர்வதேச வர்த்த கமும். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் நுகர்வு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. எண்ணெய் விலை மார்ச் மாதத்தில் பீப்பாய் விலை 24.26 டாலருக்கும் குறைவாகவும் சென்றது. டிசம்பர் மாதம் வரையிலும் பேரலுக்கு 50 டாலர் வரை யிலும் தான் நீடித்தது. இத்தகைய விலை குறைப் பால் ஒபெக் நாடுகள் வருவாய் இழப்பை சந்தித்தன. இத னையடுத்து அந்நாடுகளின் சமூக நல திட்டங்களின் நிதி ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் வெட்டப்பட்டன. 

எண்ணெய் வளத்தில் மேலாதிக்கம்

தற்போதைய இரண்டாவது பெருந்தொற்று காலத்தில் எண்ணெய் நுகர்வு குறைந்ததையடுத்து சந்தை விலையை நிலைப்படுத்த வேண்டும் என்ப தற்காக உற்பத்தியை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு எடுத்து அமலாக்கி வருகின்றன.விலையை சரி செய்ய வழக்கமான நாளொன்றுக்கு 300 லட்சம் பேரல் உற்பத்தியிலிருந்து நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளன. 2021 இறுதி யில் படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க முடிவு  செய்தன. ஆனால் அவ்வாறு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. அது இப்போது வரை தொடர்கிறது. ஒபெக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக உள்ள ரஷ்யாவை பொறுத்தவரை தனது நாட்டின் பொரு ளாதாரத்திற்கு எண்ணெய் வர்த்தகத்தையே பெரிதும் நம்பியுள்ளது. எனவே எண்ணெய் உற்பத்தியை சந்தை யில் அதிகப்படுத்தவே முயலுகிறது.சமீபத்தில் செய்தி யாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தற்போதைய எரிசக்தி பொருட்களுக்கான தேவை அதி கரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஆயில், பேரலுக்கு 100 டாலரை எட்டினாலும் ஆச்சரி யப்படுவதிற்கில்லை என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவும் ஒபெக் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளும் அதிகபட்ச விலை வரை காத்திருப்பதாகவே தெரிய வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தளவிலும் அந்நாட்டின் பன்னாட்டு  எண்ணெய் நிறுவனங்களே உற்பத்தி, விலை நிர்ணயிப்பதில் ஆதிக்கம் வகிக்கின்றன. அமெ ரிக்க அரசியலிலும் செல்வாக்கை செலுத்துகின்றன. தற்போதைய உலகச் சந்தையில் அமெரிக்காவும் தங்கள் நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதில்லை. சந்தை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கவே விரும்புகின்றது. 75 பெரும் எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் 35 சதவிகிதத்தை கொண்டுள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை அது உள்நாட்டு தேவைக்காக மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது இல்லை. மாறாக கச்சா எண்ணெய் சுத்தி கரிப்பு செய்து சுத்திகரிப்பு வசதியில்லாத வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு பெட்ரோலியப் பொருட்களாக ஏற்றுமதி செய்து வருகிறது. இத்தகைய எண்ணெய் வர்த்தகத்தில் 132 பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக எக்ஸான் மொபில் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு 234 பில்லியன் டாலருக்கு எண்ணெய் வர்த்தகத்தையும் சேவ்ரான் நிறுவனம் 195.37 பில்லியன் டாலர் வர்த்தகத்தையும் மேற்கொண்டுள்ளன. வளைகுடா பகுதியில் தனது அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதன் மூலம் எண்ணெய் வர்த்தகத்திலும் மேலாதிக்கத்தை வலுப்படுத்த முயன்று வருகிறது.

2017க்கு பிறகு இந்தியாவோடு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை துவங்கிய அமெரிக்கா 2020இல் நான்காவது இறக்குமதி நாடாக வர்த்தகத்தை அதிகரித்துள்ளது.

எதிர்கால வர்த்தகம் 

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொ ருட்கள் பெரும்பாலும் எதிர்கால வர்த்தகத்தின் மூலமா கவே நடைபெற்று வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற எண்ணெய் விலையில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும் சந்தை அபாயத்தை கருதி எதிர்கால வர்த்தகத்திற்கு நுகர்வு நாடுகள் தள்ளப் படுகின்றன. எண்ணெய் வர்த்தகத்தில் உள்ள எதிர் கால வர்த்தகத்தினரும், அதில் முதலீடு செய்து வரும் நிதியமைப்புக்களும் சந்தை விலையில் செல்வாக்கை செலுத்துகின்றன. 2021 முதல் காலாண்டில் 120 லட்சம் ஒப்பந்தங்கள் எதிர்கால வர்த்தகத்தில் நடந்துள்ளன. இது 2021 இரண்டாம் காலாண்டு காலத்தில் 136 லட்ச மாக உயர்ந்தது. மூன்றாவது காலாண்டில் 115 லட்சமாக இருந்துள்ளது. விலைகள் குறையும்போது சந்தை யைக் கைப்பற்றுவதும் தேவை அதிகரிக்கும்போது விலையை அதிகப்படுத்தி லாபத்தை பெறுவதும் எதிர்கால வர்த்தகத்தின் நோக்கம். இந்த வர்த்தகச் சூதாட்டத்தில் கச்சா எண்ணெய் பகடைக்காயாய் பயன்படுத்தப்படுகிறது.  இவைகள் தவிர தற்போது உலக அளவில் முன்னுக்கு வந்துள்ள உலக வெப்பமயமாதலுக்கு எதி ரான நடவடிக்கையாக கச்சா எண்ணெய் பயன் பாட்டினை படிப்படியாகக் குறைத்து முடிவிற்கு கொண்டு வர உலக நாடுகள் தீர்மானித்துள்ளன. 

இந்தியாவின் நிலைமை

சீனாவிற்கு அடுத்தபடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாவாகும். இந்தி யாவின் பெட்ரோலியப் பொருட்களின் தேவையில் 84 சதவிகிதம் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. உலக சந்தையின் போக்கு இந்திய பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும். தற்சமயம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 82.11 அமெரிக்க டாலர்கள். உலகச் சந்தையின் போக்கு நிச்சயமாக உடனடியாக குறையும் நிலையில் இல்லை. ஒபெக் நாடுகள் தங்க ளின் உற்பத்தியை நாளொன்றுக்கு 4 லட்சம் பேரல் கள் அதிகப்படுத்துவது என்ற உடன்பாட்டையும் அம லாக்க மறுக்கின்றன. அமெரிக்க எரிசக்தி அமைப்பு, நிர்ணயித்துள்ளபடி 2022ஆம் ஆண்டு இறுதி வரையிலும் இந்த போக்கு தொடரலாம் என் கிறது. அதன்படி பார்த்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டியும் செல்ல வாய்ப்புள்ள தாகவே தெரிகிறது. 

பெட்ரோல் விலையின் நிர்ணயித்தலில் உள்ள  மற்றொரு முக்கிய பகுதி இந்திய ரூபாய் மதிப்பு. சர்வதேச வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் மேற் கொள்வதால் கச்சா எண்ணெய் இறக்குமதியும் டால ருக்கு நிகரான இந்திய மதிப்பின் ஏற்றத் தாழ்வுகளைப் பொறுத்தும் விலைகள் மாறுதலடையும். நவம்பர் 10ஆம் தேதிய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.37பைசா. 2021 ஜனவரி துவக் கத்தில் ரூ.73.09 பைசாவாகவும். 1.7.2021 அன்று ரூ.74.97 பைசாவாகவும் இருந்துள்ளது. இந்திய வர்த்தகத்தில் உள்ள வல்லுநர்கள் கருத்துப்படி தற்போது இந்திய இறக்குமதி அதிகரித்து வருவதை குறிப்பாக கச்சா எண்ணெய், பாமாயில்,நிலக்கரி ஆகியவை கூடுத லாக இறக்குமதியாகிவரும் நிலையில் ரூபாய் மதிப்பு  ரூ.77 வரையிலும் இந்திய மதிப்பு சரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். 

ஒருபுறம் சர்வதேசச் சந்தையில் விலை உயர்வும், மறுபுறம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் இரட்டை விளைவுகளை ஏற்படுத்தும். மோடி  அரசு பதவியேற்ற 2014 மே மாதத்தில் டாலருக்கு நிக ரான இந்திய ரூபாய் 60.63 பைசாவாக இருந்தது. இது 2016 நவம்பரில் ரூ.68.18 பைசாவாகவும். 2020 மே மாதத்தில் ரூ.75.50 பைசாவாக உச்சநிலைக்கு சென்றது. தற்போதைய ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை பணவீக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நிச்சயமாக ரூபாய் மதிப்பு நிலைத்தன்மைக்கு வாய்ப்பும் குறைவு. இந்த கூடுதல் சுமையும் பெட்ரோல் டீசல் மீது விளைவுகளை ஏற்படுத்தும்.

மாற்று வழி என்ன?

எதிர்வரும் நாட்களில் விலையேற்றத்தை சமாளிக்க மேலும் கலால் வரியினை குறைப்பதைத் தவிர ஒன்றிய அரசிற்கு வேறு வழியில்லை. மோடி அரசு பதவியேற்ற 2014 ஜூலையில் கலால்வரி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.9.48 பைசாவும். டீசலுக்கு ரூ.3.56 பைசாவாகவும் வசூ லிக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் படிப்படி யாக உயர்த்தி  ரூ.32.90 மற்றும் ரூ.31.80 என உயர்ந்துள் ளது. தற்போது பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.5ம். டீச லுக்கு ரூ.10ம் குறைத்துள்ளது. இதுதவிர மாநில அரசு களின் விற்பனை வரி தனி.  கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி பெட்ரோல் விலையை ஏற்றுவதைக் காட்டிலும் அதற்கு நிகராக கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்து சரிக் கட்ட வேண்டும்.  2020 ஜனவரி மாதத்தில் அதாவது கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்த விலையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டும்.  2020 மார்ச்சுக்கு பின்னர் சுமார் ஒரு வருட காலத்தின் சர்வதேச  கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை ஒன்றிய மோடி அரசே அனுபவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சுங்கக் கட்டணமா? வரியா ? 

ஒன்றிய  அரசு நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கென ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலில் 18 ரூபாயை வரியாக வசூலிக்கிறது. இத்துடன் தேசிய நெடுஞ்சாலை முழுமையாக கட்டணச் சாலை யாகவும் மாற்றப்பட்டு சுங்கக் கட்டணமும் வசூ லிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுங்கக் கட்டண வசூல் ஒரு பகல் கொள்ளையாகவே  நடந்து வருவது தனிக்கதை. வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் மூலம் வசூலிக்கப்படும் வரி அல்லது சுங்கக் கட்ட ணம் எதாவது ஒன்றை முற்றிலும் கைவிட வேண்டும். அதன் மூலமே நெருக்கடியான இக்காலத்தில் கூடுதல் போக்குவரத்து செலவினை குறைக்க முடியும்.

மாற்று எரிசக்தி 

உலக அளவிலான இருசச்சர வாகன பயன்பாட்டில் 70 சதவிகிதம் இந்தியாவில் தான் உள்ளது. உலக நாடு கள் பலவும் மாற்று எரிபொருள் பயன்பாட்டிற்கு திரும்பி யுள்ள நிலையில் இந்தியா கச்சா எண்ணெய் பயன் பாட்டை கட்டுப்படுத்த காலம் கடத்துகிறது. மின்சார கார்கள், இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டினை வேகப்படுத்த வேண்டும். இதற்கான மானியத்தை ஒன்றிய அரசு ஒதுக்கி ஊக்கப்படுத்த வேண்டும்.  1000 கார்களில் 33 மின் கார்களாக சீனாவிலும். அமெரிக்கா வில்  54, ஸ்வீடன் 21, நார்வேயில் 90 என அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இதில் மிகவும் பின் தங்கி உள்ளது. ஆனால் தற்போது நடந்து முடிந்த உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் பூஜ்யம் கரிமில வாயு வெளியேற்றும்  வாகனங்களை தயாரிக்க உறுதியேற்றுள்ளது. 

தற்காப்பு உத்தியின் தோல்வி

இறக்குமதியை சார்ந்த நாடு என்ற வகையில் இந்தியா கச்சா எண்ணெய் வளத்தை கண்டறிவ தையும். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பையும் மேம் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தாராளமயக் கொள்கையினை கடைப்பிடித்ததன் விளைவாக எண்ணெய் வளம் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறு வனங்கள் கொள்ளையடிக்க திறந்துவிடப்பட்டு விட்டது. லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின்  பங்குகளை விற்கும் படுபாதக நிலைக்கும் மோடி அரசு சென்று விட்டது. கச்சா எண்ணெய் இருப்பிலும் இந்தியா பின் தங்கியே  உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பலமே இந்திய பொருளாதாரத்தை  பாதுகாக்கும் என்பதை மோடி அரசு புறந்தள்ளி பயணிப்பதால் நெருக்கடி களை எதிர்கொள்ளும் தார்மீக சக்தியினை ஒன்றிய அரசும். நாடும் இழந்து வருகிறது. 

நெருக்கடியின் சுமை கோடிக்கணக்கான சாதாரண மக்கள் மீதே நேரடியாக  சுமத்தப்படுகிறது.  இதற்கெதி ரான அரசியல்  போராட்டங்கள் மற்றும் தேர்தல் தோல்வி கள் மட்டுமே ஒன்றிய மோடி அரசை விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கட்டாயப்படுத்தும்.