articles

img

சுக்குநூறாக நொறுங்கிய கருத்துக் கணிப்புகள் - அ.விஜயகுமார்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் (எக்ஸிட் போல்) தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறை பாஜக கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் சவாலை ஏற்படுத்திய நிலை யில் தோல்வியின் விளிம்பில் இருந்த பாஜக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் இந்தியா கூட்டணி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்ட மிட்டு, வாக்குப்பதிவுக்கு  பிந்தைய கருத்துக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இதில் சில கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய முடிவை வெளியிட்டபோதே இது மக்கள் கணிப்பு அல்ல; பாஜக ஆதரவு  நிறுவனங் களின் கருத்து திணிப்பு என வெட்டவெளிச்ச மானது.

இந்த நிலையில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. அதில் பாஜக தனித்து பெரும்பான்மை பெரும் என்றும் மீண்டும் பாஜக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறி யிருந்தன. ஆனால் கூட்டணி மூலமே பாஜக தப்பிப் பிழைக்கும் என்று ஒரு நிறுவனம் கூட கணிக்கவில்லை. மக்களின் மனஓட்டத்தை அறியத் திறமையற்ற இந்த நிறுவனங்கள் வாங்கிய காசுக்கு தங்களால் இயன்றள வுக்கு பாஜகவுக்காக கூவின.

ஆனால், ஜூன் 4 அன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்தவுடன் இவர்கள் சொன்ன கணிப்பு எல்லாம் சுக்குநூறாக சிதறிப் போனது. புதுதில்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா சாலையில் உள்ள பாஜக தலை மை அலுவலகத்தில் இருந்து எழுதிக் கொடுத் ததை அப்படியே நகலெடுத்து கருத்துக்கணி ப்பில் சொல்லியிருப்பது உறுதியானது. 

முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக  கூட்டணி 281-350 இடங்களை பிடிக்கும் என்றும், இந்தியா கூட்டணி 145-201 வரை  இடங்களை பிடிக்கும் என்றும் சொல்லப் பட்டிருந்தது.  இதர கட்சிகள் 33-49 தொகுதி களில் வெற்றி பெறும் என்று கணிக்கப் பட்டிருந்தது.  ரிபப்ளிக் டிவி-பிமார்க் இணை ந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக  கூட்டணிக்கு 359, இந்தியா கூட்டணி 154,  இதர கட்சிகளுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று, ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ், ஜன் கி பாத், நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ்  மற்றும் டி-டைனமிக்ஸ், இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய  கருத்துக் கணிப்பிலும் பாஜக கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், பீகார், தில்லி, சத்தீஸ்கர், அசாம், ஆந்திரா, ஒடிசா, உத்தர கண்ட், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும் பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என் றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநி லங்களில் பாஜக முதல் முறையாக கால் பதிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தெரி விக்கப்பட்டது. இந்த கணிப்புகள் அனைத்தும் தற்போது பொய்யாகிவிட்டது. பாஜக தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. அதன் கூட்டணியால் 300ஐக் கூட தொடமுடியவில்லை.

பெரும் ஏமாற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் பாஜகவின் கோட்டை என்றும் அங்கு பாஜக மட்டும்  62  முதல் 68 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய  கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் ‘டபுள் என்ஜின் சர்க்கார்’ என்று பீற்றிக் கொண்ட  அம்மாநிலத்தில் பாதி  தொகுதியைக் கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. பாதிக்கும் மேற்பட்ட தொகுதியை  இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதேபோல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட  மாநிலங்களில் கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் முடிவுகள் பொய்த்துப் போய்விட்டன. இந்த தேர்தலில் தங்களது நிறு வனத்தின் நம்பிக்கை பொய்த்துப் போய் விடுமோ என்று கூட இந்த நிறுவனங்களுக்கு கவலை இல்லை. எப்படியாவது பாஜக பெரும் வெற்றிபெறும் என்ற பிம்பத்தைக் கட்டு வதில்தான் அனைத்து கவனமும் இருந்தது. 

இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தோல்வி யடைந்துள்ள மற்றொரு சுவாரஸ்யமான மாநி லம் மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் பாஜக, சரத்பவார் கட்சியை உடைத்த  அஜித்பவார், உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே  கட்சிகள் தான் உண்மையான கட்சிகள் என்றும் அந்த கட்சிகள்  உள்ள கூட்டணியே பெரும்பான்மையான இடங்களில் கைப்பற்றும் என்றும் ஊட கங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அந்த மாநிலத்திலும் கணிப்புகள் பொய்யாகி விட்டன. காங்கிரஸ் தலைமையில் சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகிய கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றிபெற்றுள் ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகு திகளில் 20 தொகுதிகளில் பாஜக வெற்றி உறுதி என கணிப்பு நிறுவனங்கள் பட்டியல்போட்டன ஆனால் மக்கள் தீர்ப்பு அதில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது. 10 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. 

இதே போல் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் பாஜக வெற்றிக்கணக் கை தொடங்கும் என்றும் கோவை, நெல்லை, இராமநாதபுரம், தென்சென்னை உள்பட அதி கபட்சமாக 7 தொகுதிகள் வரை அந்த கூட்டணி வெல்லக் கூடும் என்றும் தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனால் 39 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. புதுச் சேரியில் கூட பாஜக வெற்றிபெறும் என்று கணித் திருந்தனர். ஆனால் காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்றுவிட்டது. எனவே  கருத்து கணிப்பு என்ற பெயரில் மக்களிடம் பாஜக கணிப்புகளை திணித்த நிறுவனங்கள்  அதற்காக சிறிது கூட வெட்கப்படவில்லை. வருத்தப்படவும் இல்லை. 

-   அ.விஜயகுமார்

மிஸ்டர் அவசர குடுக்கை!

மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய  கருத்துக் கணிப்புகள் வெளியான பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவசர அவசரமாக கடந்த 1 ஆம் தேதி மாலை சமூக வலைதளத்தில், தேர்தல் முடிவுகளே வந்துவிட்டது போல் டுவீட் போட்டார். பெரும்பான்மை மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்; கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக அயராது பாடுபட்டோம்; எங்களது சாதனைகளை பார்த்து மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என்று கூறியிருந்தார். மேலும், “சந்தர்ப்பவாத இந்தியா கூட்டணி மக்களின் மனங்களை வெல்ல தவறிவிட்டது; மதம், சாதிய பிரிவினையை தூண்டிய அந்த  கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது”என்று கூறி இரண்டு நாட்கள் மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் இந்தியா  கூட்டணிக்கு மக்கள் மகத்தான வெற்றியை அளித்து பிரதமர் கனவிலும் மண்ணை போட்டுவிட்டனர்.

;