articles

img

இணையதள சொடுக்கல்களில் இதயம் பதறும் செய்திகள்....

தேர்தல் நாள் நெருங்க நெருங்க நம் கவனங்கள் பெருமளவுக்கு அதில் குவிக்கப்படுகின்றன. தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குமான சட்டமன்றத்தேர்தல்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் வேறு சில மாநிலங்களின் 14 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல்கள் நாட்டு மக்களின் நாடித்துடிப்பையும் காட்டக்கூடியதாக இருக்குமெனக் கணிக்கப்படுவதால், அந்தக் கவனக்குவிப்பு கூடுதலாகவே இருக்கிறது.

 வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ல் தொடங்கிவிட்டது, ஏப்ரல் 29 வரையில் பல கட்டங்களாக  வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோரும், பொதுவான ஜனநாயக அக்கறையாளர்களும், விமர்சகர்களும் தேர்தல் தொடர்பாக வரும் செய்திகளைக் கூர்ந்து நோக்குவது இயல்பானது. அதே வேளையில், நாடு முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடந்தாலும் கூட, நம் கவனத்திலிருந்து நழுவிவிடக்கூடாத நிகழ்வுகள் தடையின்றித் தொடரவே செய்கின்றன. குறிப்பாக, சமுதாய மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டிய குற்றச்செயல்கள் குறைவின்றி நிகழ்த்தப்படுகின்றன. அவ்வாறு கண்ணில் படுகிற சில செய்திகள் ஏற்படுத்தும் சிந்தனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்திட வேண்டியுள்ளது.

 பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கும் தண்டனை
 மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் அப்படியொரு நிகழ்வு. ஒரு 21 வயது இளைஞரும், ஒரு 16 வயதுச் சிறுமியும் சேர்த்துவைத்துக் கயிறால் கட்டப்பட்டுத் தெருக்களில் இழுத்துவரப்படுகிறார்கள். அவர்கள் இருவருக்குமே அடி விழுகிறது. வசவுகள் பொழியப்படுகின்றன. ஒரு சமூகக் கடமையை நிறைவேற்றுவதான திருப்தியோடு இதன் காணொளிப் பதிவு சமூக ஊடகத்தில் பதிவேற்றப்படுகிறது. 

நடந்த குற்றம் என்ன? திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகவும் உள்ள அந்த இளைஞர், அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்பது புகார். ஆனால், சமூகம் வழங்கிய தண்டனை குற்றம் சாட்டப்பட்டவர், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் இருவருக்கும்! இதில் குற்றவாளி யார்? வல்லுறவைச் செய்த இளைஞரா? வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியா? சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு இருவருக்குமே தண்டனை அளித்தவர்களா? கொடுமைக்கு உள்ளான சிறுமியையும் குற்றவாளியாக்கி, ஆயுட்காலத்திற்கும் தொடரக்கூடிய அவமானஉணர்வை ஏற்றியவர்களா? இதுதான் சமூக ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற போதனையை அந்த மக்களின் மீது திணித்து வந்திருக்கிறவர்களா? 
சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவிய காணொளிப்பதிவைத் தொடர்ந்து, மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்குரல் உரக்க ஒலித்தன. அதன் விளைவாக, வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மற்ற 5 பேரில், அந்தச்சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

 இப்போது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்), இந்த நிகழ்வு தொடர்பானவிசாரணை அறிக்கையை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு மாநிலக் காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது. இது ம.பி. மாநிலத்தில் நடந்ததா என்று கேட்டுவிட்டு, தமிழ் மக்களோ, மற்ற மாநிலத்தவர்களோ கடந்துவிடலாமா? இந்தியா என்ற தேகத்தின் ஒரு அங்கம்தானே ம.பி.? இருவரையும் கட்டிப்போட்டு நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஒலித்தகூச்சல்களுக்கிடையே “பாரத் மாதா கி ஜே” என்ற முழக்கமும் எழுப்பப்பட்டதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது. பாரத அன்னைக்கு இது மனத்துயரம் மட்டுமல்ல, அவமதிப்பும் அல்லவா? 

பரிகாசச் சிரிப்பு
 தேசபக்தியைப் பரிகாசம் செய்வது போன்ற இந்தக் காட்சியைக் கடந்தால், பாலியல் வன்கொடுமை குறித்துப்புகார் செய்த ஒரு பெண் பரிகாசம் செய்யப்பட்ட மற்றொருகாட்சி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரத்தில் நிகழ்ந்திருக்கிறது. பாரத மாதாவுக்கு அந்தப் பரிகாசம் நிச்சயம் வேதனையைத் தரும், ஏனென்றால் புகார் செய்த பெண்ணைப் பார்த்துப் பரிகாசமாய் சிரித்ததாகப் புகார் செய்யப்பட்டிருப்பவர் ஒரு நீதிபதி! ஒரு தொழிலதிபரின் மகனும், ஒரு தொலைக்காட்சி நிறுவனத் தொகுப்பாளருமான வருண் ஹைர்மாத் என்பவர் மீது, ஒரு பெண் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் புகார்செய்திருக்கிறார். வழக்கு பதிவானதைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்ட ஹைர்மாத் சார்பில் பாட்டியாலாநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மீதான விசாரணை கடந்த மார்ச் 10 அன்று நடந்திருக்கிறது. அந்த விசாரணையின்போது என்ன நடந்தது என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கவனத்திற்குக் கொண்டுசென்றிருக்கிறார் அந்தப் பெண்.

 “குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரான விஜய் அகர்வால் என்பவர், தனது தரப்பு வாதத்தை வைத்தபோது, என்னை அவமதிக்கும் விதத்தில் பொய்யான, தரக்குறைவான கருத்துகளைக் கூறினார். என்னை வைத்து ஜோக்குகள் சொன்னார். நீதிபதி சஞ்ஜய் கனக்வால் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. எனக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், வழக்குரைஞரைக் கண்டித்துக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, நீதிபதியும் சேர்ந்து சிரித்தார்,” என்று அந்தப் பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 பாலியல் வன்கொடுமை பற்றிப் புகார் செய்யும் பெண்ணைப் பின்வாங்கச் செய்வதற்காக அவளது நடத்தையைக் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குவது ஊறிப்போனதொரு சமூக வன்மம். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அந்த வன்மம் வெளிப்படுவதைக் காட்டுகிற எழுத்துகளும் திரைப்படங்களும் வந்திருக்கின்றன. அவற்றை இந்த வழக்கு நினைவூட்டுகிறது அல்லவா?.

 விசாரணை முறையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், ஆகவே வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அந்தப்பெண், எதிர்காலத்தில் இவ்வாறு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடிய பெண்களுக்கேனும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கடிதத்தை அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

 அந்தப் பெண் நாடகமாடுவதாகச் சித்தரிக்கப்படலாம். விசாரணை நகைச்சுவையாகிவிடாமல் தொடருமானால் உண்மை வெளிப்படலாம். உச்சநீதிமன்றத்திலிருந்து அவருக்கு, இது தொடர்பாக உள் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மார்ச் 12 அன்று பாட்டியாலா நீதிமன்றம் ஹைர்மாத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது (தகவல்: லேட்டஸ்ட் லாஸ்..காம் என்ற சட்டச் செய்திகள் தளம்). வழியடைக்கப்பட்ட வழிகாட்டல்கள் பாலியல் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டியஏழு வழிகாட்டல்களை உச்சநீதிமன்றம் வகுத்திருக்கிறது: G முன்ஜாமீனுக்கான நிபந்தனைகளாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் குற்றம் சாட்டியவருக்கும் இடையேயான தொடர்பைக் கட்டாயமாக்கவோ அனுமதிக்கவோ கூடாது, குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து மேற்கொண்டு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாத வகையில் புகார் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிற நிபந்தனைகளே விதிக்கப்பட வேண்டும்.

# போதுமான முகாந்திரம் இருக்கிற நிலையில் எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குவது என்று ஆணையிட வேண்டும். 

# ஜாமீன் வழங்கப்படுமானால் புகார் அளித்தவருக்கு உடனடியாக அதைத் தெரிவிக்க வேண்டும்.

# ஆணைகளில் பெண்கள் பற்றியும் அவர்களது சமுதாய நிலை பற்றியும் அவர்களின் ஆடை, நடத்தை, கடந்த காலச் செயல்பாடு, அறநெறி போன்றவை தொடர்பான ஆணாதிக்கக் கண்ணோட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும், கறாராகக் குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.

# பாலினப் பிரச்சனைகள் சார்ந்த வழக்குகளைக் கையாளுகையில் திருமணம் செய்துகொள்வது உள்ளிட்ட சமரச ஏற்பாடுகளைப் பரிந்துரைக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது. 

# நீதிபதிகள் எப்போதும் கூருணர்வுத்திறனோடு செயல்பட வேண்டும், விசாரணையின்போது புகார் அளிப்பவர் எவ்வகையிலும் மன உளைச்சலுக்கு உள்ளாகாமல் இருப்பதை நீதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

# நீதிபதிகள் முக்கியமாக நீதிமன்றத்தின் நியாயத்தன்மையிலும் பாகுபாடின்மையிலும் நம்பிக்கை இழக்கச் செய்யக்கூடிய, பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட எந்தச் சொற்களையும் பயன்படுத்தக்கூடாது.

 இவ்வளவு தெளிவாக வழிகாட்டப்பட்டிருந்தும் நீதிமன்றக் கூடத்திற்குள் பெண்ணைப் பரிகசிக்கும் சொற்கள்ஒலிப்பது எப்படி? அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிற நீதிபதிகளிலேயே சிலர் தாங்களும் சேர்ந்துசிரிப்பது எப்படி? திருமணம் போன்ற சமரச ஏற்பாடுகளைப் பரிந்துரைக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது என்றே உச்சநீதிமன்ற வழிகாட்டல் இருக்கிறது என்றாலும்,தலைமை நீதிபதியே, தன்னிடம் வந்த வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதாக வந்த செய்தியையும், நாடு முழுவதும் அதற்குக் கண்டனக் குரல்கள் எழுந்ததையும் மறக்க முடியுமா? 

பின்னர் அவர் தனது கேள்வி தவறாகச் சித்தரிக்கப்பட்டுவிட்டது என்றும், பெண்கள் மீது தனக்குப் பெரும் மரியாதை இருப்பதாகவும் கூறிய செய்தியும் வந்தது. நீதிகோரியவர்கள் கைதுஇந்தச் செய்தியாவது, கண்டனக் குரல்கள் எழுந்ததையும், நீதிபதி விளக்கம் அளித்ததையும் தெரிவிக்கிறது. கண்டனத்தைத் தெரிவிக்கவிடாத நிகழ்வுகளும் செய்தியாகின்றன. இரண்டு மாநிலங்களின் தலைநகரமாகவும், யூனியன் பிரதேசமாகவும் இருக்கிற சண்டிகார் நகரில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுதியாகக் குடியிருக்கும் ஹால்லோ மஜ்ரா என்ற பகுதியில், மார்ச் 5 அன்று, டியூஷனுக்குச் சென்ற 6 வயதுச் சிறுமி வீடு திரும்பவில்லை. மறுநாள் ஒரு புதர்ப் பகுதியில், சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். 

இந்தக் கொடூரத்திற்குக் கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் குடியிருப்பு வாழ் பொதுமக்களும் மாணவர்களும் காவல்நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை அடித்து விரட்டிய போலீசார் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர்கள், ஒருவர் அந்தப்பகுதியில் மளிகைப் பொருள் கடை வைத்திருப்பவர். காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்ட அந்த மூன்று பேரும் சித்ரவதை செய்யப்பட்டார்கள் என்று சக மாணவர்கள் சொல்கிறார்கள்.

 ஏற்கெனவே அந்தப் பகுதியில் (தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக என) நடந்த பல போராட்டங்கள் காரணமாக மாணவர்கள் மீது ஆத்திரத்துடன் இருந்தவர்களின் தூண்டுதலால்தான் இந்தக் கைது நடவடிக்கையும் தாக்குதலும் என்றும் மற்ற மாணவர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில், அந்தச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்குக் காரணம் என்று காவல்துறையினர் ஒரு 12 வயதுச் சிறுவனைக் கைது செய்திருக்கிறார்கள். இது நம்பும்படியாக இல்லை என்றும்,இப்படியொரு குற்றத்தை அந்தச் சிறுவனால் மட்டும் தனியாகச் செய்திருக்க முடியாது என்றும் பகுதி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். சண்டிகாரில் இந்த வழக்கு தொடர்பாக இனி என்ன நடக்கிறது என்றும் கவனித்தாக வேண்டும் (செய்தி: தி வயர்).

 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான இணையச் செய்தி இணைப்பு ஒன்றைச் சொடுக்கினால் அடுத்தடுத்த செய்திகளுக்கான இணைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. பாலியல் வன்ம வெறி, பெண்ணை மதிக்காதமரபின் ஆணாதிக்கப் புத்தி, சட்டங்கள் விதிகள் பற்றியவிழிப்புணர்வுப் போதாமை, முக்கியமாக அதையெல்லாம் அறிந்துவைத்திருக்க வேண்டிய அதிகார அமைப்புகளில் இருப்பவர்களே கூட இன்னும் தெரிந்துகொள்ளாமலிருக்கிற நிலைமை...
 இப்படி எத்தனை சுவர்கள், பெண்ணின் பாலியல் சுயத்திற்குத் தடையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. செய்தித்தளங்களுக்கான இணைப்புகள் போல, செயற்களங்களுக்கான இணைப்புகளும் ஒருமைப்பாட்டோடு வலுப்பெறுகிறபோது, அவ்வாறு ஒருமைப்பாட்டோடு வலுப்பெறுகிறபோதுதான், உரிய காலத்திற்குள் நீதி நிலைநாட்டப்பட்ட செய்திகளும் வரத் தொடங்கும்.

கட்டுரையாளர் : அ.குமரேசன்

;