articles

img

வண்டல் கவிஞன் காவியன்....

நாகைக்கு அருகில் உள்ள திருப்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் தோழர் காவியன். ஓய்வு பெற்றதற்கு பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாய் பயணித்தார். கவிதை, சிறுகதைகள், நாடகம் உள்ளிட்டவைகளில் தீவிரமான நாட்டம் கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சாதிமத பேதங்களை கடந்து சாதிமத மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் சரோஜா என்ற பெண்மணிக்கும் தந்தை பெரியார் திருமணத்தை நடத்தி வைத்தார். தோழர் சரோஜா அரசு கருவூலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரின் கவிதைகளில்...

        வண்டலுக்கும்
    வாசம் உண்டு
    விளைச்சலாய் 
    வண்டல் மக்களுக்கும்
    வரலாறு உண்டு 
    போர்க்குணமாய் 
    அழிந்த யுகத்தின் 
    அறிவுச் செல்வத்தை  
    அடுத்த யுகத்திற்கு 
    கொண்டு செல்வது 
    இலக்கியம் 

என்ற வரிகளோடு நிறைய கவிதைகளை வழங்கிய வண்டல் கவிஞனாய், மார்க்சிய சிந்தனையாளனாய் தோழர் காவியன் திகழ்ந்தார். வண்டல் மண்ணின் பல்வேறு காலக்கட்ட  நிகழ்வுகளை தீக்கதிர் நாளிதழிலும் வண்ணக்கதிர் பகுதியிலும், செம்மலர் இலக்கிய இதழிலும் அவ்வப்போது கவிதையாய் படைத்துள்ளார். இவரது மகன் மலர்மன்னன் பெங்களூரில் உள்ள ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மகள் கவின்மலர் சமூக செயற்பாட்டாளராகவும் பத்திரிகை துறையில் எழுத்தாளராகவும் பணியாற்றி வருகிறார். த.மு.எ.க.ச வின் கலை இலக்கிய இரவு மேடைகளில் தொடர்ந்து பாடல்கள் பாடியும் வந்தார். நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் கலை இரவு மேடைகளில் தனது மகள் கவின்மலரோடு வந்திருந்து மேடைகளை அலங்கரிப்பார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இவரின் கம்பீரக் குரல் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு திசையிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் அழகாய், அற்புதமாய், கம்பீரமாய், இலக்கியமாய், கவிதையாய், உரைநடையாய் புரட்சியாய் ஒலித்த இவரின் குரல் இப்போது நினைத்தால் கூட நம் உள்ளத்தை சுண்டி இழுக்கிறது.

தீக்கதிர்  நாளிதழில் நாகை மாவட்ட செய்தியாளராக திறம்பட பணியாற்றி வந்தார். பல்வேறு பரிமாணங்கள் கொண்ட சிறந்த தோழரான அவர் உயிருடன் இருக்கும் போதே, தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்கு பயன்படும் வகையில் உடல் தானம் செய்திட முடிவு செய்திருந்தார். 2021 ஜனவரி 12-ம் தேதி இறந்த போது அந்த முடிவை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கோவிட் 19  பெருந்தொற்று காலமாக இருந்ததால் மத்திய அரசு உத்தரவால் உடல் தானம் செய்யும் உடல்களை வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களும், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அரசு மற்றும் மாநில சுகாதார துறை செயலாளரிடம் தலையிட்டு பேசிய அடிப்படையில் ஜனவரி 12-ம் தேதி இரவே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் உடல் தானம் செய்யப்பட்டது.

சிபிஎம் தலைவர்கள், தீக்கதிர் பொறுப்பாளர்கள், த.மு.எ.க.ச நிர்வாகிகள், காவியன் குடும்பத்தார்கள்  உள்ளிட்டோர் தோழர் காவியன் அவர்களின்  உடலை தானம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
வீரம் விளைந்தது புதினத்தில் மாமேதை லெனின் வாசகம் வரும். மனித வாழ்வு கிடைத்ததற்கரிய பொக்கிஷம். அதன்படி, தனது இறுதிநாளில் தான் பயனுள்ள முறையில் மனித குல விடுதலை என்ற மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தேன் என நினைவு கொள்ளத்தக்க அளவில் வாழ்க்கையை ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக  வாழ்ந்தார். அந்த லட்சியத்தை அடைவதற்கான போராட்டத்தை தொடர்ந்து உறுதியுடன் நடத்துவதே அவருக்கு நாம் செலுத்தும் செவ்வணக்கம் ஆகும். தோழர் காவியன் படத்திறப்பு நிகழ்வு, இன்று (24.1.2021) தமுஎகச சார்பில் நாகையில் நடைபெறுகிறது. 

===ஐ.வி.நாகராஜன்===

முகப்பு படத்தில் உள்ள மேப் படம் தோழர் காவியனின் சொந்த ஊரான திருப்பூண்டி என்ற கிராமம் ஆகும்...  

;