வெள்ளி, பிப்ரவரி 26, 2021

articles

img

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தேவையா?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி, இந்தியாவில் 16 கோடி பெண்கள் வீடுசார் பணியையே பிரதான பணி எனப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆண்களைப் பொறுத்த வரை, 58 லட்சம் பேர் தான் இவ்வாறு கூறியுள்ளனர். 2019 தேசிய புள்ளிவிவர அறிக்கையில், ஒரு நாளைக்கு இலவச வீடுசார் உழைப்புக்காக, ஒரு பெண் 299 நிமிடங்கள், அதாவது 5 மணி நேரம் ஒதுக்குகிறார். ஆண்களோ 97 நிமிடங்கள், அதாவது ஒன்றரை மணி நேரமே ஒதுக்குகிறார்கள்.  இது தவிர, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் பேண, பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 134 நிமிடங்கள், அதாவது இரண்டே கால் மணி நேரம் ஒதுக்குகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது தான் நிலைமை என பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறுகிறது. 2009 மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் பெண்கள் செய்யும் இலவச வீடுசார் உழைப்பின் மதிப்பு  வருடத்துக்கு 612 பில்லியன் டாலர் (சுமார் 42 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய்) என்பதாகும்

பெண் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு மாதஊதியம் தருவது என்கிற மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதி ஒரு விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இது மேலோட்டமாக பெண்களை ஈர்ப்பதாக இருப்பினும் இதன் பின்புலத்தைப் புரிந்துகொள்வது இன்றைய தேவையாக உள்ளது.

சசி தரூர் இதை வரவேற்க, ‘நாங்கள் இல்லத்தின் அரசிகள், எனவே ஊதியம் தேவையில்லை’ என கங்கணா ரணாவத் போன்றவர்கள் கூறுவதாக ஊடக செய்திகள் வெளி வந்துள்ளன.இந்திய சமூக அமைப்பும் குடும்பமும் ஆண் மேலாதிக்கக் கட்டமைப்பு உடையதாக இருப்பதால் பெண்ணுக்குத்தாழ்ந்த சமூக அந்தஸ்தே நிலவுகிறது. இது இன்று நேற்றுஏற்பட்டதல்ல….பெண்ணடிமைத்தனம் என்பது வர்க்கசமூகம் உருவானதோடு ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் ஏங்கல்ஸ். நிலப்பிரபுத்துவம் பெண்ணடிமைத்தனத்தை நிறுவனமயமாக்கியது, அதற்கு ஒரு தத்துவ தளத்தைக் கட்டமைத்தது. முதலாளித்துவம் தனது லாபநோக்கில் உழைப்புச் சுரண்டலுக்கு ஏதுவாக இந்த பாகுபாட்டைப் பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பெண்ணின் உழைப்புக்கு  முக்கியத்துவமோ,  சம மதிப்போ இல்லை. கடந்த காலத்தில் பீடித் தொழிலில் குறைவான கூலியாக இது பிரதிபலித்தது.  விவசாயத்திலும் ஆண் கூலிக்கும்பெண் கூலிக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. பின்னர் சட்டக் கூலி நிர்ணயிக்கப் பட்ட போது, பெண் செய்யும் நடவு, களை எடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு, ஆண் வேலைக்கான ஊதியத்தை விட குறைவாகவே தீர்மானிக்கப்பட்டது. ஊரக வேலை உறுதி சட்டத்தில் தான் சம கூலி உண்டு, அதுவும்  இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தாலேயே கொண்டு வரப்பட்டது. ஆணாதிக்க சமூக அமைப்பின் ஓர் அலகு தான் குடும்பம். எனவே சமத்துவமின்மை குடும்பத்துக்குள் பட்டவர்த்தனமாக பிரதிபலிக்கிறது. சலிப்பூட்டும் வீட்டு வேலைகள் என தோழர் லெனினால்வர்ணிக்கப்பட்ட அத்தனையும் பெண்ணின் மீதே சுமத்தப்பட்டுள்ளது. குடும்பம் புனிதமானது, கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்கிற நிலப்பிரபுத்துவ கருத்தியலை முதலாளித்துவமும், தம் சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக வழிமொழிகிறது. 

வழி காட்டிய கம்யூனிஸ்டுகள்
ஐநா சபை பல பத்தாண்டுகளாக, வீடு சார் உழைப்பைக் கணக்கில் வராத உழைப்பு என்றும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்தது என்றும், இது ஜிடிபி கணக்கில் எடுத்துகொள்ளப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டது. இங்கிலாந்துநாட்டின் மான்செஸ்டர் நகரத்தில் 1972ல் நடந்த மூன்றாவது தேசிய பெண் விடுதலை மாநாட்டில்,   வீடுசார் உழைப்புக்கு ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கை செல்மா ஜேம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட ‘வீடுசார் உழைப்புக்கு ஊதியம் கோரும் பிரச்சார மேடை’ சார்பில் முன்வைக்கப் பட்டது.இந்த முன்முயற்சியில் மார்க்சிய பின்புலமுள்ள பெண்ணியவாதிகளும் இருந்தனர். பெண்களின்  இலவச உழைப்பு முதலாளித்துவத்துக்குப் பயன்படுகிறது என சுட்டிக்காட்டி, வீட்டில் பெண்கள் செய்யும் வேலை சமுதாயத்தின் அடிப்படையான பணி என்ற அங்கீகாரம் வேண்டும் என்பதுடன் இணைத்து,  இந்த இலவச உழைப்புக்கு அரசு ஊதியம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.  அதன் பின் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் சில அமைப்புகள் இக்கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்தன. இந்தியாவில் 2010ல் தேசிய ஹவுஸ் ஓய்வ்ஸ் சங்கம்,தங்களைத் தொழிற்சங்கமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்த போது, அவரவர் வீட்டு வேலையை செய்வது தொழில் செய்வதற்கு சமமல்ல எனவே, தொழிற்சங்கமாகப் பதிவு செய்ய முடியாது என நிராகரிக்கப்பட்டது. பெண்கள் வீட்டில் செய்யும் வேலைக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தாக்கம் ஜெர்மானிய சோஷலிஸ்டும் , ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான  ஆகஸ்ட் பெபெல் அவர்களால் 1879ல் அவர் எழுதிய ‘பெண்களும் சோஷலிசமும்’ என்ற நூலில் எழுப்பப்பட்டது. நூலின் 14வது அத்தியாயத்தின் முதல் பகுதியில் விரிவாக அவர் எழுதுகிறார். மேல் தட்டு பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விடுதலையானது துவங்கி, வீட்டு வேலைகளைப் பெண்கள் தான் செய்ய முடியும் என்றால் உணவு விடுதிகளில் மற்றும் வசதியான வீடுகளில் ஆண்கள் வணிகரீதியாக செய்வது எப்படி என்பது வரை பல்வேறு விவரங்களை சுவை பட விளக்குகிறார். அரசாங்கமே ஆங்காங்கே மையப்படுத்தப் பட்டமலிவு விலை உணவகங்கள், சலவையகங்களை நடத்தினால், பெண்கள் பெருமளவு இதிலிருந்து விடுதலையாக முடியும் என்பதை விளக்குகிறார். இது பெண்களின் தனிப்பட்ட வேலை என்பது மாற வேண்டும் என வாதிடுகிறார். அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் பெண்களை மீண்டும்அடுப்படிக்குத் தள்ளி விடுவதாக இருக்கக் கூடாது, பெண்கள் அந்தக் குறுகிய வெளியிலிருந்து வெளியேறி முழுமையான பொது வெளிக்கு வருவதற்கு உதவ வேண்டும் என்பதே அவரது வாதத்தின் சாராம்சம்.1898ல் சார்லட் பெர்க்கின்ஸ் என்ற சோஷலிச பெண்ணியவாதி, பெண்களின் குடும்ப வேலை,  உற்பத்திசார் உழைப்பிலிருந்து அவர்களைப் பிரித்து, வீடு என்ற  எல்லைக்குள்ளேயே நிறுத்தி விடுவதால், அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமாக அமைகிறது, எனவே அந்த உழைப்பு மதிப்பு மிக்கதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.

எழுதியது மட்டுமல்ல, நடத்திக் காட்டியதும் கம்யூனிஸ்டுகளே
 புரட்சிக்குப் பின், சோவியத் யூனியனில் இந்தப் பிரச்சனை முன்னுக்கு வந்தது. பெண்களின் தோள்களிலிருந்து வீட்டு வேலைகள் அகற்றப் பட வேண்டும் என்பதைமிக அழுத்தமாகப் பேசியவர்களில் இனேசா அர்மண்ட்மற்றும் அலெக்சாண்ட்ரா கொலந்தோய் முக்கியமானவர்கள்.  இவர்களின் முயற்சியால் 1917-18ல் கட்சிக்குள் பெண்களுக்கான தனி துறை உருவாக்கப்பட்டது. உற்பத்தியில் ஈடுபடுவோரின் உழைப்புக்கு, அதாவது வருமானம் ஈட்டுவோரின் உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அதே முக்கியத்துவம் ஊதியமில்லா வீடு சார் உழைப்புக்கும் கிடைத்திட வேண்டும் என கொலந்தோய்வாதிட்டார். எனவே இவற்றை சமூகமயமாக்கி, வீட்டுக்கு வெளியே கூட்டு உழைப்பின் மூலம் இதனை செய்ய வைத்து, அத்தகைய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது எனக் கொண்டு வந்தனர். அதாவது, இப்பணிகள் அவரவர் வீட்டில் பெண் செய்ய வேண்டிய தனிப்பட்ட கடமைகள் என்பதிலிருந்து மாறி பொது வெளிக்குக் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் சலிப்பூட்டும் இலவச கட்டாய உழைப்பிலிருந்து விடுபட்டு, ஆணுக்கு இணையாகப் பெண்களும் சமூக உற்பத்தியிலும், பொது பணிகளிலும் ஈடுபட முடியும் என்பது நிறுவப்பட்டது.

இளம் தோழர் ஸ்ட்ருமிலின் நடத்திய ஆய்வு
 ஆனால் இந்நிலை சுலபமாக வந்து விடவில்லை. புரட்சிக்குப் பிறகு, அறிவியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே பிரச்சனைகள் அணுகப்படும் எனத் தோழர் லெனின் அறிவித்தார். எனவே ஆய்வு முறையும், புள்ளிவிவரங்களும் முடிவெடுப்பதற்கான அடிப்படை கருவிகளாக உருவெடுத்தன. போல்ஷ்விக் கட்சியின் இளம்உறுப்பினர் ஸ்ட்ருமிலின் தலைமையில் ஆய்வுக்குழுக்கள், குடும்ப உறுப்பினர்கள் வருமானம் சார் வேலைக்கு செலவழிக்கும் நேரம் மற்றும் வருமானம் இல்லாஇதர பணிகளுக்கு செலவழிக்கும் நேரம் குறித்து ஆய்வு நடத்தினர். 1922 -24 கால கட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம், மத்திய தர மற்றும் தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். வீடு சார் வேலைகளுக்கு ஊதியம் இல்லாததால் முதலாளித்துவ புள்ளிவிவரம், இதனைக் கணக்கில் எடுப்பதில்லை. புரட்சிக்குப் பின்னும் கூட, தொழிலாளர் நலத்துறை கோரிய பிறகும், இது பற்றியவிவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்று ஸ்ட்ருமிலின்சுட்டிக்காட்டி, விரிவாகவே இதற்கான கேள்விகளை ஆய்வுத் தாளில் சேர்த்தார். ஒவ்வொரு வீடு சார் வேலையையும் பல சிறு சிறு பணிகளாக வகைப்படுத்தினார். உதாரணமாக, உணவு சமைத்தல் என்பதை, 8 வேலைகளாக – விறகு வெட்டி சுமந்து வருதல், தண்ணீர் கொண்டு வருதல், சந்தைக்குப் போவது, வரிசையில் நிற்பது, மதிய உணவு சமைப்பது,   இரவு உணவு சமைப்பது, சமைத்தவற்றை எடுத்து வைப்பது, பாத்திரம் விளக்குவது – எனப் பிரித்தார்.  ஆய்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய போது, இத்தகைய வேலைகளை செய்வதிலேயே பெண்களுக்கு மிகஅதிக நேரம் செலவாகிறது, எனவே, இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும், அல்லது சில பணிகளாவது வீட்டுக்குவெளியே எடுத்து வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மலிவு விலை உணவகம், குழந்தை காப்பகம் என்பன போன்ற ஆலோசனைகளை முன் வைத்தார். இந்த ஏற்பாடுகளை அரசு செய்தால், பெண்களுக்கு 60 சதவீத நேரம் மிச்சமாகும் என்று சுட்டிக் காட்டினார்.  செய்தி தாள் வாசிப்பது, அரசியல் பணிகளில் ஈடுபடுவது, கிளப்புக்குப் போவது, கலாச்சாரநடவடிக்கைகளுக்கு செல்வது, ஓய்வான நேரம் கிடைப்பது போன்றவற்றில் ஆண்கள் தான் முன்னணியில் உள்ளனர். எனவே பெண்களுக்கு இந்த அளவு நேரம் கிடைத்தால்தான் சமூகப் பணியிலும், தம்மை மேம்படுத்திக் கொள்ளும்பணியிலும் ஈடுபட முடியும் என விளக்கினார். இதன் தொடர்ச்சியாகவே தோழர் லெனின் வழிகாட்டுதலில், மலிவு விலை உணவகம், மலிவு விலை சலவையகம், குழந்தை காப்பகம் போன்றவை சட்டப்பூர்வமாக்கப்பட்டன. இதற்குப்பின், பெண்கள் இதுவரை எண்ணிப்பார்க்காத அனைத்துப்பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தனர். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட, சோவியத் பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தனர்.

2007ல் சாவேஸ் ஜனாதிபதியாக இருந்த போது, வெனிசுலாவில், வீடு சார் உழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்பட்டது. அன்றைய குறைந்த பட்ச சட்டக்  கூலியில் 80 சதவீதமாக அது இருந்தது. சமூக முன்னேற்றத்திற்கான ஒட்டு மொத்த கண்ணோட்டம் மற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டது. 1970களில் மார்கரெட் பென்ஸ்டன், பெக்கி மார்ட்டன் போன்ற மார்க்சிய பெண்ணியவாதிகள், பெண்ணின் குடும்ப உழைப்பு மதிப்பு மிக்கது என்பதை மார்க்சியஆய்வுக் கண்ணோட்டத்தில் முன்வைத்தனர்.  

மனைவி ‘சும்மா’ இருக்கிறாளா?
இந்த அனுபவங்களையெல்லாம் கணக்கில் எடுத்தே,ஜனநாயக மாதர் சங்கம் தன் நிலைபாட்டை உருவாக்கியது. ஊதியம் கேட்பது என்ற கோரிக்கையை எழுப்பாமல், பெண்களின் வீடு சார் உழைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்,  அளவீடு செய்யப்பட வேண்டும், சமூகமும், திட்டம் தீட்டுபவர்களும் இதன் மதிப்பை உணர வேண்டும் என்று முன்னெடுத்தது. இதை ஒட்டியே, கருத்தியல் தளத்தில், ‘என் மனைவிசும்மா இருக்கிறாள்’ என்று பேசுவதைக் கடுமையாக சாடியது, பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இன்று பல்வேறு தனி நபர்கள், அமைப்புகள் வீடு சார் உழைப்புக்கான நேரம், தன்மை எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதைப் பிரச்சாரம் செய்கின்றனர். உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் போன்றவர்கள், தம் தீர்ப்புகளிலும் பெண்ணின் குடும்ப உழைப்பை,வருமானம் சார்ந்த பணிக்கு ஈடாக  அங்கீகரித்தனர். பெண்ணின் குடும்ப உழைப்பின் முக்கியத்துவம்; 2005ல்நிறைவேற்றப்பட்ட ‘பெண்கள் பிரச்சனைகள் குறித்தமார்க்சியப் பார்வை’ என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆவணம், “ஒரு தொழிலாளியின் ஊதியம் அவர் உழைப்பின் மதிப்புக்கு சமமானதல்ல, அடுத்த நாள் உழைப்பு சக்தியை மீண்டும் செலவிடுவதற்கான பராமரிப்புக்குத் தேவையான பொருட்களின் மதிப்பை ஒட்டியதாகத் தான் இருக்கும்” என மார்க்ஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறது. “பெண்ணின் வீடுசார் இலவச உழைப்பு,  சந்தையில் விற்கும் சரக்கை உற்பத்தி செய்யாது, உபரி மதிப்புக்குநேரடியாக பங்களிப்பு செய்யாது; ஆனால், தொழிலாளியின் பராமரிப்பு செலவைக் குறைக்கிறது, இது முதலாளித்துவ சுரண்டலுக்கு ஏதுவான சூழலைத் தீவிரப்படுத்துகிறது” என சுட்டிக்காட்டுகிறது. நவீன தாராளமய கொள்கைகள் இந்நிலையை மேலும் ஊதி விடுகின்றன.  சேவை நல  நடவடிக்கைகளிலிருந்து அரசு தம்மை விலக்கிக் கொள்ளும் நிலைமை, அவற்றைத் தனியார்மயப்படுத்தும் ஏற்பாடு போன்றவை பெண்ணின் பாரத்தை மேலும் கூடுதலாக்குகிறது.  பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்ற காரணிகள் உள்ளன என்பதை மார்க்சிஸ்ட்  கட்சியின்  திட்டம்  முன்வைக்கிறது. இதற்கான தீர்வு, தனியுடமை ஒழிப்போடு இணைந்தது என்பதையும் விளக்குகிறது. சோஷலிச சமூகமே பெண் விடுதலைக்குத் தேவையான பவுதீக சூழலை உருவாக்க முடியும்.

‘ஊதியம்’ என்பது வெறும் பேச்சு 
இத்தனை அரசியல், சித்தாந்த  புரிதலோடு மக்கள் நீதிமய்யம் வாக்குறுதி அளித்ததாகக் கூற முடியாது. மேலும்பெண்கள் சந்திக்கும் வர்க்க, பாலின, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போரில் இது ஓர் அம்சம். போருக்கே வராமல்,எதிரிகளோடு சண்டையிடாமல் வெறும் அறிவிப்பை வெளியிட்டு என்ன பயன்?  தனியார்மயம், வணிகமயத்தோடு சமூக நீதியற்ற கல்விக் கொள்கை பெண் கல்விக்கும் வேட்டு வைக்கிறது, வேலை வாய்ப்பு வெட்டப்பட்டு பெண்களின் வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது, பெண்ணுக்கு எதிரானகருத்தாக்கங்கள் பெருமைப்படுத்தப்படும் சூழல், மறுத்துப்பேசும் வாய்ப்புகள் அடைக்கப்படுதல், அரசின் சேவைசார் நல நடவடிக்கைகள் – சத்துணவு, குடிநீர் விநியோகம் போன்றவை – தனியார்மயப்படுத்தப்படும் முயற்சி, பொதுவிநியோகம் பாதிப்பு… இவை குறித்துக் கொள்கையும் இல்லாமல், களத்துக்கும் வராமல், தேர்தல் சுற்றுப்பயணத்தில் அறிவிப்பது வாக்கு வேட்டைக்கான தூண்டிலேதவிர வேறு என்ன? பெண் விடுதலை குறித்த அடிப்படையான புரிதல் இல்லாமல், ஒட்டு மொத்த சமூக முன்னேற்ற நடவடிக்கைகளுடன் இணைத்து செய்யாமல், ‘ஊதியம்’ எனப் பேசுவது பெண்ணை மேலும் மேலும் வீட்டுப்பணியோடு கட்டிப்போடும் விளைவையே ஏற்படுத்தும். ஓய்வுக்கோ, இதர அரசியல் சமூகப் பணிகளுக்கோ, சுய மேம்பாட்டுக்காகவோ பெண்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். வீட்டு வேலை, பெண்ணின் மீது அதிகாரப்பூர்வமாகவே சுமத்தப்படும். இது பாலின பாகுபாட்டை இன்னும் தீவிரப்படுத்தும். வீட்டு வேலை மற்றும் சொற்ப வருமானம் தரும் வேலை என சேர்த்து செய்பவர்களுக்கும் ஊதியம் தரும் திட்டம் மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ளதா என்பது தெரியவில்லை. 

வேலைநேரம் குறைந்தால்தான்... 
எனவே வீட்டு வேலைகளைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து செய்தல், அரசு சேவை நடவடிக்கைகளை அதிகரித்து வீடுசார் பணியின் பாரத்தைக் குறைப்பதுபோன்றவையே இன்றைய தேவை.8 மணி நேர வேலை நேரத்தை வலியுறுத்தி, முதலாம் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் தோழர் மார்க்ஸ் பேசும் போது, வேலை நேரம் குறைந்தால் தான்,  ஓய்வு, பொழுதுபோக்கு, அரசியல் சமூக செயல்பாட்டுக்குத் தொழிலாளி  நேரம் ஒதுக்க முடியும்என்பதைப் பிரதானமாக முன்வைக்கிறார்.இதனைத் தற்போதைய பிரச்சனையுடன் பொருத்திப் பார்த்தால், பெண்ணின் வீடு சார் உழைப்பின் பாரத்தைக் குறைப்பது, குடும்ப உறுப்பினர்களும், அரசும் பகிர்வது போன்ற நடவடிக்கைகள், பெண்கள் உற்பத்திசார் உழைப்பில் ஈடுபடவும், ஓய்வு, பொழுதுபோக்கு, அரசியல் சமூக செயல்பாட்டுக்கு நேரம் ஒதுக்கவும் உதவும். வீட்டு வேலையும் அடிப்படை சமூகப்பணி என்ற கருத்து வலுப்படும். பல்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பெண்களின் வீடு சார் உழைப்புமதிக்கப்படும், அங்கீகரிக்கப்படும், அளவீடு செய்யப்பட்டு ஜிடிபி கணக்கில் எடுக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் இடம் பெறுவது ஆரோக்கியமான விவாதத்துக்கு முதல்படியாக அமையும்.

2011 சென்சஸ் படி, இந்தியாவில் 16 கோடி பெண்கள் வீடுசார் பணியையே பிரதான பணி எனப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆண்களைப் பொறுத்த வரை, 58 லட்சம்பேர் தான் இவ்வாறு கூறியுள்ளனர். 2019 தேசிய புள்ளிவிவர அறிக்கையில், ஒரு நாளைக்கு இலவச வீடுசார் உழைப்புக்காக, ஒரு பெண் 299 நிமிடங்கள், அதாவது 5 மணி நேரம் ஒதுக்குகிறார். ஆண்களோ 97 நிமிடங்கள், அதாவது ஒன்றரை மணி நேரமே ஒதுக்குகிறார்கள்.  இது தவிர, குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் பேண, பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 134 நிமிடங்கள், அதாவது இரண்டே கால் மணி நேரம் ஒதுக்குகிறார்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது தான் நிலைமை என பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறுகிறது. 2009 மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் பெண்கள் செய்யும் இலவச வீடுசார்உழைப்பின் மதிப்பு  வருடத்துக்கு 612 பில்லியன் டாலர் (சுமார் 42 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய்) என்பதாகும்.

கட்டுரையாளர்: உ.வாசுகி,  சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்

;