வேளாண் பயிர்களான சம்பா நெற்பயிர் மற்றும் சிறு தானிய பயிர்கள்,பயறு வகைகள்,எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு தமிழக அரசு இம்மாதம் கெடு விதித்திருந்தது.எதிர்பாராத விதமாக நவம்பர் 24,25,26 ஆகிய தேதிகளில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால் விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் மத்திய மோடி அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதன் விளைவாக இந்திய விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலனளிக்க வில்லை. தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு வர்த்தக நோக்கோடு செயல்படுகின்றன.
2018 நவம்பர் 15-ல் கஜா புயலின் போது டெல்டாமாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை.காரணம் இந்த திட்டத்தில் மகசூல் கணக்கீட்டில் குளறுபடி நடந்தது.இதில் காப்பீட்டு நிறுவனங் களோடு வேளாண்மை துறையும் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டது.இதன் விளைவாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.இடதுசாரி இயக்கங்கள், விவசாய சங்க அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.ஆனாலும் இரண்டு அரசுகளும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நிகழாண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன்பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரீமியம் பெறுவதற்கு மறுத்து வருகின்றனர். இன்னொரு புறம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தனியார் இணையதள சேவை மையங்களில் விவசாய காப்பீட்டு பிரீமியத்தை செலுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 25ஆம் தேதியோடு பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடைந்து விட்டது என்று கூறுகின்றனர். இம்மாதம் 30ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது 25ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது. என்று சொல்வதன் காரணம் என்ன என்று கேட்டால் அவர்களும் புயல் மழையை காரணம் காட்டி முன்கூட்டியே அரசு முடிக்க சொல்லியுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கனமழை மற்றும் புயல் எச்சரிக்கையால் சிறு குறு விவசாயிகள் பயிர் காப்பீடுசெய்ய முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே மாநில அரசு ஏற்கனவே அறி வித்துள்ள 30ஆம் தேதியை நீட்டித்து டிசம்பர் 15ஆம் தேதி வரை காப்பீடு செய்வதற்கு அவகாசம்வழங்கிட வேண்டும். அப்போது தான் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய முடியும்.விவசாயிகளின் இந்த கவலையை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.
===ஆரூரான்===