articles

img

திருவனந்தபுரம் மெயில்...

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில முதல் தலைவர் தோழர் வி.பரமேசுவரன். இந்திய மாணவர் சங்கம் துவக்கப்படுவதற்கு முன்னதாக 1968ல் மதுரையில் தமிழக மாணவர் சங்கம் உதயமானது. அதில் இரா.நாராயணன், ஜார்ஜ், அய்யாதுரை போன்ற தோழர்களோடு இணைந்து பணியாற்றியவர். திருச்சி தேசிய கல்லூரி மாணவரான தோழர் வி.பரமேசுவரன், 1972க்குப் பிறகு திருச்சி பொன்மலையில் ரயில்வே சங்கத்தில் பணியாற்றியவர்.  பின்னாட்களில் அவர், தீக்கதிர் நாளிதழில் தோழர் கே.முத்தையா அவர்களுடன் இணைந்து பணியாற்றத் துவங்கினார். பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்தார். தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியராக, ஆசிரியராக, ஆசிரியர் குழு ஆலோசகராக - என 40ஆண்டுகளுக்கும் மேலாக தீக்கதிரோடு தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டவர். இந்திய மாணவர் சங்கத்தின் பொன்விழா துவங்குவதையொட்டி, அவர் பகிர்ந்துகொண்ட அம்சங்கள் இங்கு தரப்படுகிறது.

இந்திய ஜனநாயக இயக்கத்தின் ஒரு புதிய சக்தியின் எழுச்சியாக இந்திய மாணவர் சங்கம் உதயமாகி இன்றுடன் (டிசம்பர் 30, 2020) 50ஆண்டுகள் ஆகின்றன. திருவனந்தபுரத்தில் 1970 டிசம்பர்27 முதல் 30 வரை பேரெழுச்சியுடன் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டை, 50 ஆண்டுகள் கழித்து இப்போது எண்ணிப் பார்த்தாலும் பிரமிப்பாகவும் இன்னும்உத்வேகத்தை அளிப்பதாகவும் இருக்கிறது.தமிழக மாணவர் சங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாகாண அளவில் செயல்பட்டு வந்த மாணவர் சங்கங்களை ஒருங்கிணைத்து இந்திய மாணவர் சங்கம் இந்த மாநாட்டில் உதயமானது. இந்த அமைப்பு மாநாட்டிற்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 623 மாணவப் பிரதிநிதிகளும் மாநாட்டு விவாதத்தில் பங்குகொள்ளும் உரிமை பெற்ற 146 பார்வையாளர்களும், 300க்கும் மேற்பட்ட பொது மாணவ பார்வையாளர்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தார்கள். மாநாட்டில் நான்கு நாட்கள் விவாதங்களும், அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளும், நிறைவுநாளில் நடைபெற்ற 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின்  அணிவகுப்பும், இந்திய நாட்டில் புரட்சிகரமான மாறுதலுக்காக நடக்கும் மக்கள் போராட்டங்களில் மாணவர்களும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறார்கள் என்பதை பறைசாற்றியது.

இந்த மாநாட்டில் இன்றைக்கு ‘இந்து’ நாளிதழ் குழுமத்தின் தலைவராக இருக்கும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், இன்றைக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியாக திகழ்கிற கே.சந்துரு போன்ற தோழர்களோடு நானும் இதர பல தோழர்களும் பிரதிநிதிகளாக பங்கேற்றோம். திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் சங்க அமைப்பு மாநாடு நடைபெற்ற அதே நாட்களில் வேறு ஒரு இடத்தில் மதவெறி அமைப்பான ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பு என்ற பெயரில் ஏபிவிபி (அகில பாரத வித்யார்த்தி பரிஷத்) மாநாடும் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காக வங்காளத்திலிருந்து எண்ணற்ற மாணவ தோழர்கள் ரயில் மூலம் சென்னை வந்தடைந்து அங்கிருந்து திருவனந்தபுரம் மெயிலில் செல்வதற்காக எழும்பூர் ரயில்நிலையத்தில் காத்திருந்தனர். அதேவேளை  ஏபிவிபி அமைப்பினரும் அங்கு திரளாக குழுமியிருந்தனர். இருதரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  எஸ்எப்ஐ மாநாட்டுப் பிரதிநிதிகள் பலர் தாக்கப்பட்டனர்.

அதே ரயிலில், திருவனந்தபுரம் இந்திய மாணவர் சங்க மாநாட்டில் வாழ்த்துரை நிகழ்த்துவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சுந்தரய்யாவும் வந்துகொண்டிருந்தார்.திருச்சியில் நாங்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தோம். திருச்சி ரயில்நிலையத்தை திருவனந்தபுரம் மெயில் அடைந்தவுடன் ரயிலுக்குள் இருந்து ஜனசங்க குண்டர்கள் கூட்டமாக இறங்கி கைகளில் ஆயுதங்களை ஏந்தியவாறு “ஓம் காளி, ஜெய் காளி” என்றுகூச்சலிட்டுக்கொண்டே ரயில்வே நடைமேடை யில் அணிவகுப்பு நடத்தி அங்கிருந்தவர்களுக்கு அச்சமூட்டினார்கள். எங்களைப் போன்ற மாணவர்கள் கொதிப்படைந்தோம். 

இரவு 8 மணியளவில் ரயில் மதுரை வந்தது. அங்கே, ரயிலில் அட்டூழியம் செய்து கொண்டிருந்த ஜனசங்க குண்டர்களுக்கு பெரும் எச்சரிக்கை காத்திருந்தது. பல நூற்றுக்கணக்கான தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செங்கொடியுடனும் தமிழக மாணவர் சங்கத்தின் வெண் கொடியுடனும் விண்ணதிர முழக்கமிட்டவாறு, வங்கத்திலிருந்தும் சென்னையிலிருந்தும் வந்துகொண்டிருந்த மாணவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பினை அளித்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் தலைவர்களும், தோழர்களும் ரயில் நிலையத்தில் குவிந்து மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளித்தார்கள். இந்த உற்சாக வரவேற்பை கண்ட, ரயிலில் வந்த மாணவப் பிரதிநிதிகளும் ரயில்நிலையத்திற்கு வந்திருந்தவர்களும் சேர்ந்து நடைமேடையில் அணிவகுத்துச் சென்று தொழிலாளி, விவசாயி, மாணவர் ஒற்றுமை ஓங்குக, வகுப்புவாதம் ஒழிக, ஏகாதிபத்தியம் ஒழிக, இந்திய மாணவர் சங்கம் வாழ்க என்று விண்ணதிர கோஷமிட்டார்கள். மதுரை ரயில் நிலையமே அதிர்ந்தது. இந்த எழுச்சியை கண்ட ஜனசங்க குண்டர்கள் ரயில் பெட்டிகளுக்குள் பதுங்கி பம்மினார்கள். அதற்குப் பிறகு திருவனந்தபுரம் வரை அவர்கள் வாயே திறக்கவில்லை. ஏனென்றால் வழிநெடுகிலும் நடு இரவில் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி என ஒவ்வொரு நிலையத்திலும் செங்கொடியுடன் ஏராளமான தோழர்கள் எழுச்சிமிகு முழக்கங்களுடன் இந்திய மாணவர் சங்கத் தோழர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு முழுவதும் இந்த வரவேற்புகளை ஏற்றவாறு திருவனந்தபுரம் மெயில் கேரளத்தை அடைந்தது.

இந்த உற்சாகம் பீறிட மாநாட்டில் பங்கேற்றோம். அந்த மாநாட்டில் தமிழக மாணவர் சங்கம் சார்பில் பிரதிநிதிகளின் கருத்துக்களைத் தொகுத்து கே.சந்துரு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் அங்கு பேசிய பேச்சுக்களும், வங்கத்தில் அவர்கள் மதவெறியர்களுக்கு எதிராகவும், இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் எப்படிப்பட்ட மகத்தான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்பதை உணர்த்தின. மாநாட்டு விவாதங்களுக்கிடையே மேற்குவங்க பிரதிநிதிகள் ‘ரெட் சல்யூட்! ரெட் சல்யூட்!’ என்று விண்ணதிரமுழக்கமிட்டது இன்றும் நினைவைவிட்டு நீங்கவில்லை.

முதன்முதலாக நாடு முழுவதும் உள்ள புரட்சிகர மாணவர்கள் ஒன்றிணைந்த அந்த மகத்தான மாநாடும் அதில் பிரதிநிதிகளும் தலைவர்களும் ஆற்றிய உரையும் தோழர் சுந்தரய்யா அவர்களின் எழுச்சிமிகு வாழ்த்துரையும் இன்று நினைத்தாலும் சிலிர்ப்பூட்டுகிறது.கல்வி முறையை விஞ்ஞான அடிப்படையில் மாற்றி அமைக்க போராடுவோம் என திருவனந்தபுரம் மாநாடு அறைகூவல் விடுத்தது. நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ கும்பலின் சுரண்டல் தன்மையை அம்பலப்படுத்தி தீவிரமான இயக்கம் நடத்தினால் அன்றி இந்திய அரசாங்கம் பின்பற்றும் குழப்பமான, உறுதியற்ற, இணைக்கப்படாத, விஞ்ஞான முறையில் அமையாத கல்விமுறையை மாற்ற முடியாது என்று அந்த மாநாடு தீர்மானத்தில் கூறியது. அன்றுமுதல் 50ஆண்டு காலமாக  எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை என்ற முழக்கத்துடன், சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற பதாகையை உயர்த்திப் பிடித்து பீடுநடை போட்டு வருகிறது. 

மாநாடு முடிந்து வந்தவுடன் 1971ஆம் ஆண்டில் எஸ்எப்ஐ நடத்திய முதல் போராட்டமேஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பு ‘அமெரிக்காவே வியட்நாமை விட்டு வெளியேறு’என்று முழக்கமிட்டு நடத்திய போராட்டம்தான். அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த தோழர் என்.ராம், கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று கொண்டிருந்த தோழர் கே.சந்துரு, பின்னாட்களில் பொருளாதார அறிஞராக உருவான தோழர் வி.கே.ராமச்சந்திர மேனன் போன்றவர்களுடன் நானும் பங்கேற்றேன்.  காவல்துறையின் தடையையும் மீறி உணர்ச்சிமிகு முழக்கமிட்டோம். ஏகாதிபத்திய எதிர்ப்பும், மதவெறி எதிர்ப்பும், நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ ஆளும்வர்க்கத்திற்கு எதிர்ப்பும் என அன்றைக்கு எஸ்எப்ஐ தோழர்கள் முழங்கிய அதே முழக்கத்தை இன்று லட்சோப லட்சம் இளம் மாணவர்கள் முழங்குகிறார்கள். பட்டொளி வீசிப் பறக்கிறது இந்திய மாணவர் சங்கத்தின் வெண்கொடி. அது என்றென்றும் இளம்தோழர்களுக்கு பெருமிதம் தருவதாகும்.

===வி.பரமேசுவரன்===

;