articles

img

மோடி அரசின் வாஞ்சையும் தாராளமும்...

பாஜகவின் ஊதுகுழலாகவே மாறியிருக்கும் தினமலர்  நவம்பர்21 ஆம் தேதி இதழில் ‘பணம் காய்ச்சி மரம் வேண்டாம். மக்கள் மனம் அறிந்த அரசு போதும்’ என்ற தலைப்பில்,கத்தி கந்தன் என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் “அரை நூற்றாண்டுக்கு முன்பு, திமுகதலைவர் கருணாநிதி முதல்வராக பதவிஏற்றதும் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க தில்லிக்கு சென்றபோது அன்றைய துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய் பாரா முகத்துடன் நடந்துகொண்டார். பேச்சிலும் கோபம் கொந்தளித்தது. அந்த நிலைமை தற்போது இல்லவே இல்லை. முதலமைச்சர் இபிஎஸ்,துணை முதலமைச்சர் ஓபிஎஸ், எம்பிக்கள்,எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சிகள் என யார் வேண்டுமானாலும் பிரதமர் மோடியை எளிதில் அணுகலாம் என்று கூறி இருக்கிறார்.

கேரளாவிற்கு அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதால், முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி தராமல் ‘மாற்றாந்தாய்’ மனப்பான்மையுடன் நடந்துகொண்ட அரசுதான் கத்தி கந்தன் தினமலர்கூறும் “எளிதில் அணுகக்கூடிய மோடி அரசு”!2016 ஆம் ஆண்டு முதல் நான்கு முறைபிரதமரை நேரில் சந்திக்க அனுமதி கேட்டும்முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒருமுறை கூட அனுமதிக்காத பிரதமர்தான் மோடி!

ஆனால் ஒரு பெண் திரைக் கலைஞரின்பிறந்த நாளில் அவரது வீடு சென்று கைகுலுக்கிய பெருமைக்குரிய நமது பிரதமர்  நரேந்திர மோடிக்கு, நாடு முழுவதும் ஏகோபித்த ஆதரவுடன் கிளர்ந்து எழுந்து செங்கோட்டையை நெருங்கும் 3 கோடிக்கும் அதிகமான விவசாயிகளை சந்திக்க மனமும்இல்லை. நேரமும் கிடைக்கவில்லை என்பதும் தினமலர் பாணியில் தனிக்கதை!மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு வழங்கிய மானிய விலை அரிசி 81000 டன்னிலிருந்து 65,000
டன்னாக குறைத்த பெருமையும், ரேசன் கடைகளுக்கு மாதமொன்றுக்கு தேவைப்பட்ட  59,000 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யை 25,000 ஆயிரம் லிட்டராக குறைத்து தாராளம் காட்டியதும் சாட்சாத் மோடியே. 

இது மட்டுமா?

தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்தும் நிறுத்தி வைத்த தொகைக்காக 2018 ஆம் ஆண்டு தில்லி சென்று,  தொலைநோக்கு திட்டங்களை வலுவாக கொண்டு வந்தவர்என ‘பாராட்டு தங்க பத்திரம்’ பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து ‘கெஞ்சி கூத்தாடியதுதான் மிச்சம்’!2017-18 ஆம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.67,583 கோடி வருமான வரிகட்டப்பட்டுள்ளது. இந்த தொகை ஒவ்வொருஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்ற உண்மையை மத்திய அரசின் மத்திய நேரடி வரி வாரியமே ஒப்புக்கொண்டது . ஆனால் ஜிஎஸ்டி பங்குத்தொகை, வரி வருவாய், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய செயல்பாட்டு மானியம் என 19,278.96 கோடி ரூபாய் வழங்காமல் இருக்கிறது மத்திய அரசு. இது வருமா? வராதா? என்பது அட்டைக் கத்திக்கே வெளிச்சம்!

15வது நிதிக்குழு ஒதுக்கிய ரூ.11,067 கோடியை கொரோனா வைரஸ் தொற்றை ஒரு சாக்காக வைத்து, பாதிப்பு மிகவும் குறைந்த பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்து கூடுதலாக நிதி வழங்கியதும், வைரஸ் பாதிப்புகளை அதிகம் எதிர்கொண்ட தமிழ்நாடு உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் ‘ஓர வஞ்சனை காட்டுவதும் தான் ‘ மோடி அரசின் பாலிசி.“மாநில தேவைகளை விலாவாரியாக பட்டியல் போட்டு மத்திய அமைச்சர்களிடம் கொடுக்கலாம். அதை வாஞ்சையோடு வரவேற்கிறார்கள். நிதியுதவியை பொறுத்தவரை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்; மம்தா, பினராயி ஆளும் அரசுகள் என, எந்த பாரபட்சமும் பார்க்காமல் தாராளமாக, தேவைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படுகிறது” என்றும் எழுதிய கத்தி கந்தனிடம் உள்ளது ஒரு ‘அட்டைக்கத்தி தானே’!வெள்ளம்,புயல், கனமழை எனத் தமிழகம் தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.காவிரிப் படுகையைத் துவம்சம் செய்தகஜா புயல், தமிழகத்திற்கே உணவளித்தவர்களை ஒருவேளை உணவுக்கே பரிதவிக்கவிட்டது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரலாறுகாணாத மழை வெள்ளம் சென்னை உள்ளிட்டவட தமிழ்நாட்டை உருக்குலைத்தது. மெல்லமெல்ல மீண்டெழுந்த சென்னையை, மீண்டும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயல் புரட்டிப்போட்டது. 2017 ஆம் ஆண்டு ஒக்கி புயல் குமரி மாவட்டத்தை சேதப்படுத்தியது.இந்த பாதிப்புகளின் போது தில்லி சென்றுபிரதமரை சந்தித்த ஓபிஎஸ், இபிஎஸ் கேட்டது ரூ.60,000 கோடி. இது சேத மதிப்பில்50 விழுக்காடுதான். ஆனால், மத்திய பாஜக அரசோ, கிள்ளி கிள்ளி கொடுத்தது மொத்தமே வெறும் ரூ.4000 கோடி மட்டுமே! இது என்னவகை வாஞ்சையோ?

===சி.ஸ்ரீராமுலு===

;