articles

img

பெயிண்டர் பெருமாளுக்கு தெரிந்தது கூட ‘விவசாயி’ பழனிச்சாமிக்கு தெரியவில்லை...

அந்த கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது: “நான் இந்த முடிவை எடுத்தது என் சொந்த காரணங்களுக்காக அல்ல! என்னுடைய வேதனை எல்லாம் விவசாயிகளின் நிலைமையை நினைத்துப் பார்க்கும் போது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது. இப்பொழுது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது”.

முறைசாரா தொழிலாளியான பெருமாள், தில்லியில் விவசாயிகளின் போராட்டம், அவர்கள்எதிர்நோக்கும் பிரச்சனைகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சம், அந்த அச்சத்தில் உள்ள நியாயம் என்று மிகவும் நிதானமாகவும், அடித்தல், திருத்தல் இன்றியும் அந்தக்கடிதம் எழுதப் பட்டுள்ளது. இரண்டு திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இறுதியாக அந்தக் கடிதம் இப்படி முடிகிறது: “ அந்த சட்டங்களை திரும்பப் பெறுவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை. கார்ப்பரேட்களுக்கும் புதிதாக எந்த நஷ்டமும் இல்லை. விவசாயிகளுக்கும் கஷ்டமில்லை. எனது மனதில் பட்டதை இக்கடிதத்தில் எழுதியிருக்கிறேன். இதனால் யார் மனதாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்”.

இவர் சுவற்றிற்கு வர்ணம் பூசும் வேலை செய்யும் ஒரு முறைசாரா தொழிலாளி. அவருடைய மனைவி, வீட்டு வேலை செய்யும் தொழிலாளி. மகன் லோகேஷ்குமார் வேலையின்றி இருக்கும் பட்டதாரி. அரசின் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வீடு. இத்தகைய பரம ஏழ்மையான நிலையில் உள்ள ஒரு தொழிலாளி, விவசாயிகள் படும் கஷ்டம் குறித்து மனமுருகி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஜனவரி 9ந் தேதி பிற்பகல் தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.பெருமாள் சென்னை பெரு நகரத்தில் வாழ்ந்தாலும் விவசாயிகளின் போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.ஜனவரி 8ந் தேதி மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் 9ந் தேதி துயரமான இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். இதுபோல் நாடு முழுவதும் ஏராளமானோர் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பது, தீர்வு ஏற்படாமல் மத்திய அரசு இழுத்தடிப்பது குறித்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலுக்கு பலரும் ஆட்பட்டுள்ளனர். மத்திய அரசின் அலட்சியம் மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு மதகுரு, மற்றொரு வழக்கறிஞர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்காக முதல் பலி பெருமாள் என்ற தொழிலாளி. அவருடைய தியாகம் போற்றுதலுக்குரியது. ஏழ்மை நிலையிலுள்ள இந்த தொழிலாளிக்கு உள்ள அக்கறை கூட ஆட்சியாளர் களுக்கு இல்லை. அவர் எழுதியிருப்பது போல்சட்டத்தை திரும்பப் பெறுவதால் யாருக்கும் கஷ்டமும் இல்லை. நஷ்டமும் இல்லை. மத்தியஅரசின் பிடிவாதப் போக்கும், கார்ப்பரேட்களின் நலனில் கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையும் தான் விவசாயிகளின் போராட்டம் நீட்டித்துக்கொண்டே இருப்பதற்கான அடிப்படையான காரணம். இதற்கு மாறாக, நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு இந்தப் பிரச்சனையை அணுகினால் தீர்வு எட்டப்படுவதற்கான திறவு கோல் உண்டு. இதுவரை 75க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் போராட்டத்திலும், அவர்களுக்கு ஆதரவாகவும் மாண்டு போயுள்ளனர். இந்த உயரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல் மனதைக் கரைக்கவில்லை.கொலைகாரர்களை விட மோசமாக சட்டத்தின் மூலம் அரசு கொலைகளை செய்து கொண்டிருக்கிறது. கொடுமைக்கார ஆட்சியாளர்களாக மத்திய பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது. வள்ளலார் குறிப்பிட்டதைப் போல “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக” என்ற குரல் எங்கெங்கும் எதிரொலிக்கட்டும்.பலபேர் சுதந்திரத்திற்காக, மொழிக்காக, இனத்துக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

“நான் விவசாய விரோத சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்கிறேன்” என்று கடிதத்தில் குறிப்பிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் பெருமாள். அவர் அவசரப்பட்டு இந்த துயர முடிவைஎடுத்ததாக தெரியவில்லை-ஆட்சியாளர் களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்ற தீர்மானகரமான முடிவுடன் தான் தற்கொலை என்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிகிறது.தற்கொலை என்ற துயர முடிவை எவரும் மேற்கொள்ளக்கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை நமது விவசாயிகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் இத்தகைய பேரெழுச்சியை இந்தியாவில் இதுவரை கண்டதில்லை.

அந்தப் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்படுவோம், வாருங்கள்! அவர் கடைசியாக வாட்ஸ் - அப் மூலம் சி.பி.எம். கிளை செயலாளர் தோழர். தென்னரசு அவர்களுக்கு அனுப்பிய செய்தி! 8ந் தேதி மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்க தலைவர்கள் “போராட்டத்தின் மூலம் வெற்றியை எட்டுவோம். இல்லையேல் உயிரை விடுவோம்” என்று எழுதப்பட்டிருந்த அட்டை. அத்துடன் சேர்த்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடத்திய பிரம்மாண்டமான விவசாயிகளின் நடைபயண படம்.மத்திய அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் குறித்து பெயிண்டர் பெருமாளுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் ‘விவசாயி’ எடப்பாடிக்கு தெரியாமல் போனதுதான் தமிழகத்தின் சோகம். இதன் பிறகாவது அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டியதுஅரசின் பொறுப்பு மட்டுமல்ல! நமது கடமையும் கூட. உதவிட முன்வாருங்கள்.

====பெ.சண்முகம்===
பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

;