articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் : தொழிலாளர்களின் துணையாக ஒரு நடுத்தர வர்க்கத் தோழர்....

‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ தொடரில், நடுத்தர வர்க்க இயக்கங்களில் செயல்பட்ட பல தோழர்களை ஏற்கெனவே சந்தித்திருக்கிறோம். நாடு தழுவிய அளவிலும், தமிழகத்திலும் தொழிற்சங்க இயக்கத்தின் நடுத்தர வர்க்கத்தினர் சார்ந்த அமைப்புகளுக்குத் தலைமைதாங்கிய தோழர்கள் மகத்தான பங்களித்திருக்கிறார்கள். அப்படி அயராது பணியாற்றிவருபவர்தான் டிஎஸ்ஆர் என்று அழைக்கப்படும் தோழர்  டி.எஸ்.ரங்கராஜன்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளரான டி.எஸ்.ரங்கராஜன், 1939ல் இராமநாதபுரம் நகரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை சீனுவாசன் அரசு ஊழியராக இருந்தவர், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்.இராமநாதபுரத்தில் எஸ்.எஸ்.எல்.சி.  தேர்ச்சி பெற்ற டி.எஸ்.ரங்கராஜன் உயர்கல்விக்காக மதுரையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தார்.

ஆனால் படிப்பைத் தொடரவில்லை. இராமநாதபுரத்தில் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப் பயிற்சியில் சேர்ந்து, இரண்டிலும் ஹையர் கிரேட் தேர்ச்சி பெற்றார்.பள்ளிப்பருவத்திலேயே பொதுநல அக்கறையும் அரசியல் ஆர்வமும் கொண்டிருந்த டி.எஸ்.ஆர். தனது வீட்டுக்கு அருகில் உள்ளமைதானத்தில் அவ்வப்போது நடைபெறும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்குச் சென்று தலைவர்களின் உரைகளைக் கேட்டிருக்கிறார். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் மாநிலத் தலைவர்களான பி. ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, அன்றைய ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.ஹெச்.நாதன் உள்ளிட்டோரின் பேச்சுகளைக் கவனித்திருக்கிறார். அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த மங்கலசாமியைத் தொடர்புகொண்டு ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1957ல் உறுப்பினராக இணைந்தார்.

அதே காலகட்டத்தில் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக நியமனம் பெற்றுப் பணியில் சேர்ந்தார். அரசு ஊழியராகப் பணியாற்றுகிற போதே, மங்கலசாமியோடு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். 57ஆம் ஆண்டு பாலக்காட்டில் நடைபெற்ற கட்சி மாநாட்டுக்கு மங்கலசாமியோடு சென்றிருக்கிறார். மாநாட்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோரின் பேச்சைக் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்ததாகத் தெரிவிக்கிறார் டி.எஸ்.ஆர் .ஊருக்குத் திரும்பியபின் தொடர்ந்து இயக்க நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பதையும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் இவருடைய தந்தை
யார் விரும்பவில்லை. மகனை சென்னைக்கு அனுப்பிட வேண்டும் என்று எண்ணிய அவர்மகனுக்குத் தெரியாமலேயே மத்திய அரசின்தலைமைக் கணக்காளர் (ஏ.ஜி.எஸ்.) அலுவலகப் பணிக்கு விண்ணப்ப மனு அனுப்பினார். ஒரு நாள் திடீரென்று வேலை நியமன உத்தரவுவந்தது. அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியடைந்தார் டி.எஸ்.ஆர்.  அப்பாவின் பார்வையிலிருந்து விலகி சென்னைக்குச் சென்றுவிட்டால் சுதந்திரமாகக் கட்சி வேலைகளில் ஈடுபடலாமே என்ற மகிழ்ச்சி! 1959 ஆம் ஆண்டு சென்னை ஏ.ஜி.எஸ் அலுவலக பணியில் சேர்ந்தார்.

அரசு அலுவலகத்தில் வேலை செய்வதைவிட, ஏதாவது தொழிற்சாலையில் வேலைக்குச் சேர வேண்டுமென்ற எண்ணத்தோடு இருந்த அவர் 1962ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி)  நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். சுருக்கெழுத்தாளராக வேலைக்குச் சேர்ந்தபோது மாதச் சம்பளம் 140 ரூபாய். அப்போது அகில இந்திய அளவில் ஐ.ஒ.சி நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1183.1960களின் துவக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் கொள்கை, கோட்பாடு பற்றி உட்கட்சிவிவாதம் நடைபெற்று, 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதாஎன முடிவெடுக்க முடியாமல் இருந்திருக்கிறார் டி.எஸ்.ஆர். சென்னையில், கம்யூனிஸ்ட்கட்சியின் சார்பாகவோ, கம்யூனிஸ்ட் கட்சிதலைமை தாங்கும் தொழிற்சங்கம் சார்பாகவோ இயக்கங்கள் நடைபெற்றால் தவறாமல் பங்கேற்பார். ஒருமுறை சென்னை சட்டக்கல்லூரிக்கு எதிரில் உள்ள அம்பிஸ்கேஃப் ஹோட்டல் முன்பாக அதன் தொழிலாளர்கள் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதைக் காணச் சென்ற டி.எஸ்.ஆர், ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கியஹோட்டல் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் கே.எம்.ஹரிபட் பேச்சைக் கேட்டார்.பின்னர் அவரைச் சந்தித்தார். ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகு, ஹரிபட்டுடன், ஸ்ட்ரிங்கர் தெருவில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி/ தொழிற்சங்க இயக்க அலுவலகத்துக்குச் சென்றார். அங்கே தோழர்கள் ஆர்.உமாநாத், வி.பி.சிந்தன் இருவரையும் சந்தித்தார். அடுத்த சில நாட்களில் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட டி.எஸ்.ஆர்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.

அதே காலத்தில், தான் பணியாற்றிய ஐ.ஒ.சி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் டிவிசன்தொழிலாளர்கள், ஊழியர்களை ஒன்றிணைத்து ஒரு தொழிற்சங்கத்தைத் துவக்கினார். அந்தச் சங்கத்திற்கு அவர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.  “கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினராக இல்லாமல் போயிருந்திருந்தால் தொழிலாளர்களுக்காக சங்கம்துவங்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டிருக்காது,” என்கிறார் டி.எஸ்.ஆர். பொதுத்துறை நிறுவனமான ஐஓசி-யின் அனைத்துப் பிரிவுகளிலுமாகத் தற்போது மொத்தம் 32,998 தொழிலாளர்கள், ஊழியர்கள் உள்ளனர். மார்க்கெட்டிங் டிவிசனில் சுமார் 2,000 தொழிலாளர்களும் ஊழியர்களும் உள்ளனர்.ஐஓசி தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது. நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாததால் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளராகப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய இவரை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. ஆர்.உமாநாத்தைச் சந்தித்த டி.எஸ்.ஆர்.தன்னுடைய பிரச்சனையைக் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் தோழர் ஆர்.உமாநாத் இந்தப் பிரச்சனையை எழுப்பியதன் பின்னணியில், டி.எஸ்.ஆர். மீதான பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட்டது. ஆனால் நிர்வாகம், 1969 ஆம் ஆண்டில் இவரை கர்நாடக மாநிலத்தின் பெல்காம் நகருக்கு இடமாற்றம் செய்தது. இந்தப் போராட்ட நாட்களில் ஐ.ஒ.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக காப்பீட்டு ஊழியர்சங்கத்தினர் இயக்கம் நடத்தியதை நினைவுகூர்கிறார் டி.எஸ்.ஆர்.
1979ஆம் ஆண்டு  பஞ்சப்படி (அகவிலைப்படி) கோரிக்கைக்காக ஐ.ஒ.சி நிறுவனத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடந்தது.

போராட்ட வலிமையைக் கண்ட நிர்வாகம் தொழிற்சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.கேரள முதலமைச்சர்களாக தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், தோழர்  இ.கே. நாயனார் பொறுப்பேற்றிருந்தபோது வெவ்வேறு ஆண்டுகளில் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காக அவர்களை சந்தித்துப் பேசியதையும், அவர்கள் அக்கறையோடு கேட்டு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததையும் இப்போதும் பெருமையாக கருதுகிறார்.கடந்த காலங்களில் அனைத்து அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களிலும் தோழர் டி.எஸ்.ஆர். தலைமையிலான சங்கம்கலந்து கொண்டது. சமீப காலத்தில் இச்சங்க செயல்பாட்டில் சற்று தொய்வு உள்ளது. நெய்வேலி என்.எல்.சி, திருச்சி பெல் போன்றுஐ.ஓ.சி. நிறுவன தொழிலாளர்கள், ஊழியர்கள் மத்தியில் கட்சி கட்டும் பணியில் தன்னால்வெற்றி பெற இயலவில்லை என்ற வருத்தம் தோழர் டி.எஸ்.ஆருக்கு உள்ளது.

1960களின் இறுதியிலும், 1970களிலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல தொழிற்சாலைகளில் போராட்டம் வெடித்தது. பி அண்ட் சி மில் தொழிலாளர்கள், சிம்சன்,போக்குவரத்து, மின்வாரியம், டி.வி.எஸ், டி.ஐ.சைக்கிள்ஸ், எம்.ஆர்.எஃப், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னைமாநகரமே போராட்டக் களமாக திகழ்ந்தது. இந்தப் பின்னணியில் வி.பி.சிந்தன் ஆலோசனையின்படி, டி.எஸ்.ஆர் முயற்சி எடுத்து, மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில் என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கூட்டமைப்பின் அமைப்பாளராக டி.எஸ்.ஆர்.,பொருளாளராக கே.என்.கோபாலகிருஷ்ணன் செயல்பட்டார்கள். தோழர்கே.என்.கோபாலகிருஷ்ணன் ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தில் சென்னை மண்டல நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார்.கூட்டமைப்பில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி,ஐ.என்.டி.யு.சி, உழைக்கும் மக்கள் மாமன்றம்,ஹெச்.எம்.எஸ் போன்ற தொழிற்சங்கங்களோடு, எல்.ஐ.சி, வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட நடுத்தர வர்க்க அமைப்புகளும் இடம்பெற்றன. இந்தக் கூட்டமைப்பு சென்னை மாநகர் மற்றும் புறநகரில் நடைபெறும் போராட்டங்களுக்கு  ஆதரவு இயக்கங்கள்நடத்தியது. ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடினால், அந்தப் போராட்டத்தைஒடுக்குவதற்கு ஆலை நிர்வாகம் முயற்சிக்கிறது.

ஆளும் அரசும், ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக இருக்கிறது. இத்தகைய சூழலில் மற்ற தொழிற்சங்கங்களும் நடுத்தர வர்க்கஅமைப்புகளும் ஆதரவு இயக்கம் நடத்தியதுபோராடும் தொழிலாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில் அந்த முறையில் மகத்தான ஆதரவு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தியது. 1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. ஒரு கட்டத்தில் தமிழகக் காவல்துறையினர் சங்கம் அமைத்து, தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடினார்கள். காவல்துறையினரின் போராட்டத்தை ஆதரித்து, மெட்ராஸ் டிரேட் யூனியன் கவுன்சில் குரல் கொடுத்தது.வி.பி.சிந்தன் மறைவுக்குப் பிறகு(1988),சிஐடியு தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க, தோழர் டி.எஸ்.ஆர் ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிலாளர் சங்கம் உள்ளிட்டு, சிஐடியு வோடு இணைக்கப்பட்ட பல தொழிற்சங்கங்களுக்கு தலைவர் பொறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார். டாட்டா ஆயில் கம்பெனி நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத்துக்கு தோழர் அ.சவுந்தரராசன் தலைவராக இருந்தபோது, அந்த நிறுவன ஊழியர்சங்கத்தின் தலைவராகவும் டி.எஸ்.ஆர் செயல்பட்டிருக்கிறார். தற்போதுவரை தொழிலாளர்கள், ஊழியர்கள் இணைந்த சங்கத்துக்கு தோழர் டி.எஸ்.ஆர் தொடர்ச்சியாகப் பொதுச்செயலாளராக இருந்து செயல்பட்டு வருகிறார்.நடுத்தர வர்க்க தோழர்கள் மத்தியில் இடதுசாரிக் கருத்தியலை எடுத்துச் செல்லும் வகையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகம்உருவாக்கப்பட்டது. கே.என். கோபாலகிருஷ்ணன், டி.எஸ்.ஆர். இருவரும் அதில் செயல்பட்டிருக்கிறார்கள்.

டிஎஸ்ஆரின் இரண்டு தம்பியரில் ஒருவர் சிம்சன் நிறுவனத்தின் தொழிற்சங்கத்திலும், இன்னொருவர் பிஎச்இஎல் நிறுவன சிஐடியு சங்கத்திலும் செயல்பட்டவர்கள். டி.எஸ்.ஆர். - வத்சலா திருமணம் 1973ஆம் ஆண்டு நடைபெற்றது. அது காதல் திருமணம். வத்சலா ஐ.ஓ.பி. வங்கியில் பணியாற்றினார். அந்த வங்கி ஊழியர் சங்கத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டிருக்கிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள். டி.எஸ்.ஆர். குடும்பமே கட்சிக் குடும்பம்தான். தற்போது 82 வயதாகும் தோழர் டி.எஸ்.ஆர்., 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கஅர்ப்பணிப்பிற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் தொழிற்சங்க தலைவராக செயல்பட்டுநிறைவேற்றி வரும் கட்சிப் பணி பாராட்டுக்குரியது - பின்பற்றத்தக்கது.

==ஜி.ராமகிருஷ்ணன்==

;