மணிப்பூர் பற்றி யெரியுது தம்பீ
மனித நேயம் புதையுது வெம்பி!
கண்கள் ஆறாய்ப் பெருகுது தம்பீ!
கனலாய் நெஞ்சுக் கருகுது வெம்பி!
மனிதரை வேட்டை யாடுது தம்பீ
மனதில் மதவெறிக் கொள்கை நம்பி!
துணிவுடன் நிர்வாண மாக்குது தம்பீ
துணியிலா பெண்கள் பதறுது வெம்பி
ஆளும் அரசின் ஆட்டம் தம்பி
அநீதி கண்டும் இருப்பதா வெம்பி?
நீளும் மதவெறிக் குருதி தம்பி
நிம்மதி இழந்து வாழ்வதா வெம்பி?
பெண்கள் போகப் பொருளா தம்பி?
பேதை வாழ்வில் எரியுது கும்பி!
கண்களைப் பிடுங்கும் காட்சி தம்பி!
கயவரை ஒழித்திட புறப்படு நம்பி!
கருணை யில்லா ஆட்சி தம்பி
கண்களை மூடிக் கிடப்பதா வெம்பி?
பொறுமை என்பது இதுவா தம்பி?
போரிடு வாழ்வின் விடியலை நம்பி!
பாரத தாயோ நோயிலே தம்பி!
பாவிகள் மதவெறிச் செயலால் வெம்பி! தீராப் பகையை ஆக்கினார் தம்பி!
தீர்ந்திட இந்தியா வெற்றியே தம்பி!