articles

அடையாளம் ஞா.கலையரசி

    ஒரு காட்டில் ஒரு காக்கா; ஒரு பச்சைக்கிளி. இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. அந்தக் காக்காவின் பெயர் கரசு. பச்சைக் கிளியின் பெயர் பரசு. கரசுவுக்குக் ‘கா கா’ எனக் கத்துவது பிடிக்கவில்லை. பரசு போலக் கத்த வேண்டும் என்று ஆசை.  ஒரு நாள் கரசு, தன் ஆசையைப் பரசுவிடம் சொன்னது.  

   “உன்னைப் போல் கீ கீன்னு கத்தணும்னு, ரொம்ப நாளா ஆசை. ஆனா என் வாயைத் தொறந்தாலே, கரகரன்னு சத்தம் வருது. உன்னை மாதிரி என்னால இனிமையாக் கத்த முடியலேன்னு நினைச்சி, ரொம்ப வருத்தமா இருக்கு” என்றது கரசு. “இந்த உலகத்துல முடியாதுன்னு, எதுவும் இல்லை. முயற்சி செஞ்சா, எதுவும் முடியும்;

    கடுமையா உழைச்சுத் தொடர்ச்சியாப் பயிற்சி செஞ்சா உன்னாலேயும் நிச்சயம் முடியும்” என்றது பரசு. “அப்படியா? நான் முயற்சி பண்றேன்; நீ எனக்குச் சொல்லிக் குடுக்கிறியா?” என்று கேட்டது கரசு.  

   “உம். சொல்லிக் கொடுக்கிறேன். ஈஸியா நீ கத்துக்கலாம்” என்றது பரசு. அதற்குப் பிறகு ஒரு மாதம், பரசு தொடர்ச்சியாகக் கரசுவுக்குப் பயிற்சி கொடுத்தது.

   கரசுவும் மிகவும் கடுமையாக உழைத்தது. என்ன ஆச்சரியம்! ஒரு மாதத்தில் கரசுவின் குரலில் இருந்த கரகரப்பு மறைந்து,

   கீச்சுக் குரலாகி விட்டது. ஒரு நாள் அந்தக் காட்டில் இருந்த எல்லாக் காகங்களும் சேர்ந்து, ஒரு கூட்டம் போட்டன.

   அவை மாதம் ஒரு முறை, கூட்டம் போடுவது வழக்கம்.  அப்போது கீக்கீ என்று கிளி போலக் கரசு பேசுவதைக் கேட்டு, மற்ற காகங்கள், அதனைக் கிண்டல் செய்தன.

   கூட்டத்தின் தலைவன் காக்காவுக்குப் பயங்கரமான கோபம். அதன் பெயர் சோடா. அது கரசுவைக் கூப்பிட்டு, அதற்கான காரணத்தைக் கேட்டது. “எனக்குக் கா கான்னு, கத்துறது பிடிக்கலை; அது கரகரப்பா இருக்கு; கீ கீன்னு கத்துறது தான் புடிச்சிருக்கு; இதுக்காக நான் எவ்ளோ கடுமையா உழைச்சிருக்கேன் தெரியுமா? என் நண்பன் பரசு தான், சொல்லிக் கொடுத்தான்” என்று பெருமையாகச் சொன்னது கரசு. “கா கான்னு கத்துறதால தான், நமக்குக் காக்கான்னு பேரு. நம்ம மொழி தான் நம்ம அடையாளம்.

     நீ கிளி மாதிரி கத்துறே; அதனால இனிமே எங்களோட இருக்க முடியாது. நீ கிளி கூட்டத்துக்குப் போயிடு” என்றது சோடா.  “இந்தக் கூட்டத்துல, எனக்குப் புடிச்ச மாதிரி, கத்தக் கூட முடியல; நான் அங்கேயே போறேன்” என்று கரசு கோபமாகச் சொன்னது. பிறகு அது பரசுவைப் பார்க்கச் சென்றது.  

    அங்கே கிளிகள் கூட்டமாக உட்கார்ந்து இருந்தன. பரசு கரசுவைக் கூட்டிச் சென்று, தன் கூட்டத்துக்கு அறிமுகம் செய்தது. “இவன் என் நெருங்கிய நண்பன்.

    இவன் ‘கா கா’ன்னு கத்த மாட்டான். நம்மள மாதிரியே, கீ கீன்னு பேசுவான். இவனையும் நம்ம கூட்டத்துல சேர்க்க, அனுமதி கொடுக்கணும்” என்று பரசு, கிளிகளின் தலைவனிடம் கேட்டது. அதன் பெயர் பாயா. “என்ன தான் நம்மள மாதிரி பேசினாலும், உன் நண்பன் என்னிக்கும் கிளி ஆக முடியாது. இவன் உருவம் காக்காவாச்சே! அதனால நம்ம கூட்டத்தோட சேர்க்க முடியாது” என்று பாயா மறுத்து விட்டது.

    நண்பன் கரசுவின் நிலைமையை நினைத்துப் பரசுவுக்கு, மிகவும் சங்கடமாகி விட்டது.  “என்னால் உனக்கு உதவ முடியவில்லை நண்பா! என்னை மன்னிச்சிடு”என்று பரசு, கரசுவிடம் சொன்னது.  

     கரசுவுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. தன் இரண்டுங் கெட்டான் நிலைமையை நினைத்து, அது வருந்தியது. “இனிமே ‘கா கா’ன்னு கத்துறேன்; அது தான் என்னோட அடையாளம்னு,

   தெரிஞ்சிக்கிட்டேன். எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க; என்னையும் உங்களோட சேர்த்துக்கோங்க” என்று காக்கா கூட்டத்திடமே போய்க் கரசு மன்னிப்புக் கேட்டது.  கரசு மீண்டும் கடுமையாக உழைத்துக் குரலைக் ‘கா கா’ என மாற்றிக் கொண்டது. அதற்குப் பிறகு சோடா, கரசுவைத் தன் கூட்டத்துடன் சேர்த்துக் கொண்டது.