articles

img

வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு காந்தியின் நிலைபாட்டை மறுத்த தீண்டாமை எதிர்ப்பு போராளி - யு.கே.சிவஞானம்

வைக்கம் போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்திய திரு.கேசவ மேனன் தான் விரைவில் கைதாகயிருப்பதை காந்திக்கு தெரிவிக்கும் கடிதத்தை   (6-4-1924) இப்படி முடிக்கிறார். “விரைவிலேயே என்னையும் என்னுடன் செயலாற் றும் வேறு சிலரையும் கைது செய்வார்கள். ஜார்ஜ் ஜோசப்  இப்போது இங்கு இருக்கிறார். அவருடைய தலைமையில் போராட்டம் இன்னும் அதிகமான சக்தியுடன் உற்சாகத்துட னும் நடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் இங்குள்ள நிலை குறித்து தங்களுக்கு அறிவிப்பார், தங்களது ஆசிகளை வேண்டுகிறேன்.”  ஏப்ரல் 1924இல் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் கைதானார். ஆறு மாதம் சிறை தண்டனை கிடைத்தது. சிறைக்குள் போவதற்கு  முன்பு காந்திக்கு ஜோசப் தந்தி அனுப்பினார். “நான் கைது செய்யப்பட்டு விட்டேன். சத்தியாகிரகம் தொடர வேண்டும். மக்கள் மற்றும் சத்தியாகிரகிகள் ஆதரவு நன்றாக உள்ளது. தலைமை ஏற்றிட தேவதாஸ் அல்லது மகாதேவ் தேசாயை அனுப்பி வைக்கவும்.

காந்தியின் கருத்து 

கிறிஸ்தவர் ஆன ஜோசப் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வது பற்றி காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இக்கடிதம் கிடைப்பதற்கு முன் ஜோசப் போராட்டத்தில் இறங்கிவிட்டார். வைக்கம் போராட்டம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் 1932 ஜனவரி 14இல் யங்இந்தியா பத்திரிகையில் காந்தி எழுதுகிறார்.  “கோயில் நுழைவு என்பது மத உரிமை. அம்மதம் சாராத ஒருவர் செய்யும் நுழைவு சத்தியாகிர கமாகாது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு ஜார்ஜ் ஜோசப் சிறை சென்ற போது, நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்று நான் சொன்னேன். அவர் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தார். கோயில் நுழைவு சத்தியாகிரகம் என்பது உயர் சாதி இந்துக்கள் செய்து கொள்ள வேண்டிய கழுவாய்” என எழுதினார்.

ஜோசப்பின் பதில்

தீண்டாதார் மீது அளவுக்கு மீறி அக்கறை கொண்ட ஜோசப்பின் மனம் இதை ஒப்புக்கொள்ளவில்லை. 1932 ஜனவரி 30ஆம் தேதி சோசியல் ரீஃபார்மர் இதழில் ஜோசப் இதற்கு பதில் எழுதினார்:  “வைக்கம் சத்தியாக் கிரகம் கோயில் நுழைவோடு சம்பந்தப்படாத விஷயமாகும். கோயிலுக்கு அருகே உள்ள அரசால் பராமரிக்கப்படுகின்ற தனியார் பாதையில் தீண்டாதார் தடுக்கப்படுவது பற்றியது. இந்த உண்மை பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லி தெளிவுபடுத்தப்பட்டதாகும். தீண்டாதாரின் கோயில் நுழைவுப் போராட்டம் அல்ல, இந்தப் போராட்டம். ஒரு கிறிஸ்தவன் என்பதால் இதனோடு நான் சம்பந்தப்படக் கூடாது என்று காந்தி கருத்து கொண்டது உண்மை. நான் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நான் அதை ஒப்புக்கொள்ள வில்லை.  தீண்டாதாருக்கு மறுக்கப்பட்ட குடிஉரிமை தொடர்பானதே இது என்று கருத்துக் கொண்டதால் சாதி இந்துக்களை போலவே எனக்கும் இதில் போராட கவலை உண்டு என்று சொல்லி மன்னிப்புக் கோர மறுத்து விட்டேன்.”

மதுரைக்கு வந்த பாரிஸ்டர் 

1903இல் தன் சொந்த ஊரான செங்ஙன்னூர் (கேரளா) பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு எஃப்.ஏ. படிக்க வருகிறார். 1904ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றார். எடின்பரோவில் எம்.ஏ யையும் லண்டனில் பாரிஸ்டர் படிப்பையும் முடித்தார். பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பிய ஜோசப்பிற்கு சப்ஜட்ஜ் பதவியை ஆங்கிலே யர் அரசு தர முன் வந்தும் அதை அவர் ஏற்கவில்லை.  மதுரையை தேர்வு செய்து அங்கு வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் 1911 இல் கொண்டுவரப்பட்ட திருத்தப்படி அச்சட்டத்தின் ஒரு பிரிவு, எந்த குழுவையும் மக்கள் வகுப்பையும் குற்றப்பிரிவாக அறிவிக்கும் அதிகாரத்தை அரசுக்கு கொடுத்தது. கள்ளர், மறவர் உள்ளிட்ட குற்றப்பரம்பரையாக வரையறுக்கப்பட்ட சமூகத்தவரை அச்சட்டத்தின் கொடுமை யிலிருந்து காப்பாற்ற ஜார்ஜ் ஜோசப் கடுமையாக உழைத்தார். 1915இல் இருந்து காவல்துறையால் பாதிக்கப்பட்ட பிரமலைக் கள்ளர்கள், மறவர்கள் முன்வைத்த புகார்களை வழக்கு மன்றத்துக்கு கொண்டு சென்றார். அவற்றில் வழக்காடி வெற்றி பெற்றதை பத்திரிகைகளிலும், கள்ளர் சமூகத்தி னரிடையும் எடுத்துரைத்தார். இதனால் காவல்துறையின் தவறான செயல்பாடுகள் குறைந்தன. பாதிக்கப்பட்ட சமூகத்தினரும் ஓரளவு சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற்றனர். இதனை இன்றளவும் தென் மாவட்ட மக்கள் மறக்கவில்லை. ‘ரோசாப்பூத்துரை’ என அன்போடு அழைக் கப்பட்ட அவரது பெயரை வாழையடி வாழையாக தங்களது வாரிசுகளுக்கு  சூட்டி மகிழ்ந்தனர்.

தொழிலாளர்களின் தலைவராக...

மதுரை மாவட்டத்தின் குற்றப் பரம்பரையினராக இனம் காணப்பட்டிருந்த கள்ளரும் மறவரும் பெரும்பான்மையாக சேர்ந்திருந்த மதுரை தொழிலாளர் சங்கம், ஆலைத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தை  1918 ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது. சம்பள உயர்வு, வேலை நேரக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பானது, அந்த வேலை நிறுத்தம். ஆலை நிர்வாகம் சங்கத்தின் தலைவரான ஜே.என்.ராமநாதன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்தில் பேசுவதற்கு 144ஆம் சட்ட பிரிவின்படி தடை விதிக்கச் செய்தது. ராமநாதனுக்கு விதிக்கப்பட்ட தடையால் நகரத்தில் பதற்றம் கூடியது. சங்கத்தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஜார்ஜ் ஜோசப்பை சங்கம் கேட்டுக் கொண்டது. அவர், காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான டாக்டர். பி.வரதராஜு நாயுடுவை பரிந்துரைத்தார். மக்களை கனலாக மாற்றும் வண்ணம் பேசக் கூடியவ ராக பிரபலமாய் விளங்கியவர்  வரதராஜூலு நாயுடு.  ஆலையின் அருகில் நடந்த அந்த மாபெரும் கூட்டத்தில் நாயுடு பேசும் போது பிரிட்டிஷ் ஆட்சியின் கெடுதலை ஆலைத்தொழிலாளர் போராட்டத்தோடு இணைந்து பேசினார். 12.5ரூபாய் சம்பள உயர்வையும் 12 மணியிலிருந்து 10மணி நேரமாக வேலை நேரம் குறைப்பு செய்ய வேண்டும் எனவும் கூறிய நாயுடு, தன் வாதத்தை மிக நேர்த்தியாக எடுத்துரைத்தார். ஆனால் ஆலை நிர்வாகம் எந்த சலுகையும் தர முடியாது என்று மறுத்தது. நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடை யிலான உரசல் மோதலாக வடிவெடுத்தது. நிர்வாகத்தின் வற்புறுத்தலால் அரசாங்கம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நாயுடுவைக் கைது செய்தது. இந்த வழக்கில் நாயுடு சார்பில் ஜார்ஜ் ஜோசப் வாதாடி னார். அரசுத்தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து, ஆலை நிர்வாகத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே சங்கத் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது என்பதை நிரூபித்தார்.  இந்த வழக்கின் வலுவான போராட்ட வெற்றிக்குப் பிறகு நிர்வாகம் சம்பளத்தில் 25ரூபாய் உயர்வை கொடுத்தது. இது தொழிலாளர்கள் கோரியதைவிட இரண்டு மடங்கு அதிகம். தொடர்ந்து, தொழிலாளர்கள் நலன் சார்பாக பல நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்தது. இதைப் போராட்டத் தின் விளைவாகவே தொழிலாளர்கள் கருதினர். இதில் ஜோசப்பின் பங்கு அதிகம் என்பதை சொல்லத் தேவையில்லை

ஜோசப்பின் பங்களாவில் தங்கிய காந்தி

ரௌலட் சட்ட எதிர்ப்பில் காந்தி மதுரையில் ஜோசப்பின் பங்களாவில் தங்கி, அவரது மனைவியிடம் போராட்டத்தில் பங்கேற்க கையெழுத்து பெற்றதுடன் ஜோசப்பிடமும் கையெழுத்து பெற்றார். காந்தியின் சந்திப்பு ஜோசப்பை இந்தியாவுக்கு அறிமுகம் செய்துவிட்டது. மேலும் கிலாபத் இயக்கத்திலும் காந்தியையும் சௌகத் அலியையும் அழைத்துக்கொண்டு கோழிக்கோட்டிற்கு சென்றார் ஜோசப். 

24 மாதம் சிறைத் தண்டனை

காந்தியின் விருப்பத்தை ஏற்று வழக்கறிஞர் தொழிலை துறந்து ஜார்ஜ் ஜோசப்பும் அவரது மனைவியும் சபர்மதி ஆசிரமம் சென்று எளிய வாழ்வு வாழ்ந்தனர். இந்நிலையில் மோதிலால் நேரு வின் வேண்டுகோளுக்கிணங்க ஜவஹர்லால் நேரு மூலம் மோதிலால் நேரு நடத்தும் இண்டிபெண்ட ன்ட் பத்திரிகையின் ஆசிரியராக ஆனார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீவிரமாக கட்டுரை எழுதியதால் ஜோசப்பிற்கு 18 மாதம் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. அவர் அந்த தொகை கட்டத் தவறியதால் 24 மாதம் சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் யங்இந்தியா பத்திரிகையில், காந்தி சிறையில் இருந்த போது ஜோசப்பே ஆசிரியராக இருந்தார். பின்பு மீண்டும் மதுரையில் குடியேறினார்.  சிறுநீரகக் கோளாறாலும் இரத்த  அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் தனது 51 ஆவது வயதில்  1938 மார்ச் மாதம் 5ஆம் தேதி காலமானார். காந்தி, ஜோசப்பின் மனைவி சூசன்னாவிற்கு இரங்கல் செய்தி அனுப்பிய தோடு, “விரும்பும்போது ஆசிரமத்தில் தங்கிச் செல்லவும்” என தந்தையின் பரிவோடு கேட்டுக் கொண்டார். பாரதி , வவேசு ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.உ.சி போன்று விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலையை கண்ணில் பார்க்காமலேயே காலமான தேசியத் தலைவர்களின் பட்டியலில் ஜார்ஜ் ஜோசப்பும் ஒருவர்.
 

 

;