articles

img

அமெரிக்காவின் மனித உரிமைக் கூக்குரலும்; கும்பல் படுகொலை மனப்பான்மையும்! - அப்துல் ரகுமான்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை விலக்கிக் கொண்டு, நீடித்த யுத்தத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினார். ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்படும் தாக்குதல் என்பது எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என சித்தரிக்கப்படுகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெ ரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், “பயங்கரவா தத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்தை” தொடங்கினார். ஆனால் அப்படிச் சொல்லப்பட்ட யுத்தம் ஒருபோதும் பயங்கரவாதத்தை அழிக்க வில்லை, மாறாக உலகம் முழுவதும் எண்ணற்ற அப்பாவி மக்களை பலி கொண்டிருக்கிறது. மேலும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அமெரிக்கப் பேரரசு மனித உரிமைகளை துச்சமென மதித்து குவாண்ட னாமோ சித்ரவதைக் கூடம் போன்ற பல மையங்க ளை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு 2002 ஜனவரி மாதம் குவாண்டனாமோ சித்ரவ தைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது அங்கு 779 பேர் பிடித்து வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பா லானவர்கள் வெவ்வேறு அரபு மற்றும் முஸ்லிம் நாடு களைச் சேர்ந்தவர்கள். சில அமெரிக்க குடிமகன்க ளும் அதில் இருந்தனர். அவர்களில் பெரும்பாலான வர்கள் “பயங்கரவாத நடவடிக்கைகள்” என்று மேம்போக்காக சித்தரிக்கப்பட்டு, அதில் தொடர்புடை யவர்கள் என்றும், ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் சட்ட விரோதமாக பிடிக்கப்பட்டவர்கள் ஆவர். தொடக் கத்தில் வெவ்வேறு பகுதிகளில் “கருப்புக் கூடங்கள்” என்று அழைக்கப்படும், இதேபோன்ற சித்ரவதைக் கூடங்களில் இருந்து ரகசியமான முறையில் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு கொண்டு வரப்பட்ட பிறகும், செய்யாத குற்றங்களை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், சட்டவிரோதத் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று மீண்டும் கொடூரமான சித்ரவதைகளுக்கும், பாலியல் கொடுமை களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

அங்கு நடைபெறும் கொடுமைகளை விக்கிலீக்ஸ் வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பா கவே, அங்கு நடைபெற்ற கொடுமைகளையும், அது தொடர்புள்ள புகைப்படங்களையும், அமெரிக்க சிறைத்துறை அதிகாரிகள் செய்திருக்கக் கூடிய அட்டூழியங்களையும் சில ஊடகங்கள் அம்பலப் படுத்தி உள்ளன. எனினும் ஐநா உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் நீட்டி முழங்கக்கூடிய சர்வ தேச அடிப்படை மனித உரிமைகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டுமென்று கேட்பதற்குத் தவறி விட்டன. பரிசீலனைக்கு உட்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு சிக்கலான கட்ட மைப்பு அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குவாண்ட னாமோ என்பது கியூபாவின் ஒரு பகுதியில் அமெ ரிக்கா சட்டவிரோதமாக ஏற்படுத்திய சித்ரவதைக் கூடம் ஆகும்.

கியூபாவின் நிலப்பரப்பில் இத்தகைய ஒரு அமைப்பை வைத்திருப்பதற்கு கியூபா அரசு அனு மதிக்காவிட்டாலும்கூட, அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தி கடந்த 1900ஆம் ஆண்டுகளில் இருந்து இந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. கியூபாவின் இறையாண்மையை  மீறி அமைக்கப் பட்டிருக்கும் இந்த சித்ரவதைக் கூடத்தில் அமெ ரிக்காவின் அரசியல் அமைப்பு சட்டமும், சட்ட விதிமுறைகளும் செல்லாது. எனவே அமெரிக்க நீதிமன்றங்களில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பிடித்து வைத்தி ருக்கக்கூடிய மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலுக்கான  குற்ற தண்டனைகளில் இருந்து தப்பி வருகின்றனர்.

இந்த முகாமில் இருக்கக்கூடிய சில நூற்றுக்க ணக்கான கைதிகள் அமெரிக்க நீதிமன்றங்களில் முறையீடு செய்தும், நேர்மையான விசாரணை நடத்த வலியுறுத்தியும், குவாண்டனாமோ முகாம் என்பது “சட்டங்கள் அற்ற பிரதேசம்” என்று வியாக்யா னப்படுத்தி அந்த நீதிமன்றங்கள் அப்பாவிகளின் முறையீடுகளை நிராகரித்துள்ளன. அமெரிக்க நீதிமன்றங்களின் இந்த தயக்கம் என்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் என்று சொல்லப்பட்ட காலத்தில், தலையிட மறுக்கும் அரசு மற்றும் நீதித்துறை கட்டமைப்பின் ஒருவித குணாம்சத்தை வெளிப்படுத்தியது. அதே சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளு மன்றமாகிய, அமெரிக்க காங்கிரசும் அமெரிக்க அரசின் இந்த குற்றத்திற்கு பாதுகாப்பாகவும் உடந்தை யாகவும் செயல்பட்டது.

குவாண்டனாமோவின் இருப்பை அனுமதிப்பதன் மூலம் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களும், குடிமக்களும் ஒரு சக்திவாய்ந்த நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். தனி மனித சுதந்திரம் மற்றும் உறுதியளிக்கப்பட்ட கண்ணியம் தொடர்பாக அவர்களால் போற்றிப் புகழப்படும் சர்வதேச மனித உரிமை சட்டங்களையும், நிறுவப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் மீறுவதற்கு அந்த அமைப்பால் முடியும். குவாண்டனாமோ முகாம் என்பது தனிப்பட்ட ஒன்று அல்ல. செப்டம்பர் 11 தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பான வெகுஜன உணர்ச்சிகளை பயன்படுத்திக் கொண்டு ஜார்ஜ் புஷ் நிர்வாகம் உலகின் பல பகுதிகளிலும் இதுபோன்ற சித்ரவதை முகாம்களையும், சிறைக் கூடங்களையும் உரு வாக்கியது. எடுத்துக்காட்டாக 2001இல் ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் அமெரிக்கா பர்வான் அல்லது பர்க்கம் என்ற ஒரு முகாமை உருவாக்கியது. இதே போல் 2003இல் இராக்கில் ஊடுருவிய பிறகு அபு காரிப் முகாமை உருவாக்கியது. இது போன்ற எல்லா முகாம்களிலும் சட்டவிரோதமான முறையில் நூற்றுக்க ணக்கானோர் பிடித்து வைக்கப்பட்டனர். அங்கு பிடித்து வைக்கப்பட்ட அவர்களிடம் சட்டவிரோதமாக சித்ரவதை செய்து, அவர்களுக்கு தெரிந்திராத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்ளவும், குற்றம் தொடர்பான தகவல்களை தெரிவிக்கவும் கட்டா யப்படுத்தப்பட்டனர்.

நிச்சயமற்ற எதிர்காலம்

குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத இந்த சிறைக் கைதிகளை அமெரிக்கா வெளிப்படையாக விடு விக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களை இங்கி லாந்து, ஜெர்மனி, ஸ்லோவாகியா, சவூதி அரேபியா போன்ற பிற நாடுகளுக்கு இடம் மாற்றும் ஒரு கொள்கை நிலைப்பாட்டைதான் எடுத்தது. இதுவரை குறைந்தபட்சம் 730 பேரை  இதுபோல் நாடு கடத்தி உள்ளது. இதில் பெரும்பாலானோர் ஜார்ஜ் புஷ் காலத்தில் இடமாற்றப்பட்டவர்கள் ஆவர். சித்ரவதைக் கூடங்களில் பிடித்து வைக்கப்பட்ட காலகட்டத்தில் 9 பேர் மரணம் அடைந்திருக்கின்றனர். சிலர் தற்கொலை செய்து இறந்திருக்கின்றனர்.

குவாண்டனாமோ சித்ரவதைக் கூடத்தில் இருக்கக்கடிய நிலைமைகள் பற்றி தெரியவந்ததும் உலகளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் பின்னணியில் குவாண்டனாமோ தளத்தை மூட விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த டுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் அந்த முடிவை செயல்படுத்தத் தவறிவிட்டன.

2009 முதல் 2017 வரை இரண்டு முறை ஆட்சியில் இருந்தபோதும் பராக் ஒபாமாவால் இதை செயல் படுத்த முடியவில்லை. டொனால்டு டிரம்ப் கூட தனது நான்காண்டு ஆட்சியில் சிறை நிலைமைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார். அப்படி இருந்தும் அமெரிக்க ராணுவத்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் 10 ஆண்டுகளும், அதற்கு மேற்பட்ட காலமும் அந்த முகாம்களில் இருந்தவர்கள் விடு விக்கப்படவில்லை. தொடர் சித்ரவதைகளுடன் அவர்கள் சிக்கியிருந்த போதும், அவர்களை விடு விப்பதற்கான உத்தரவுகள் கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.  குவாண்டனாமோ சிறையில் இப்போதும் 39 பேர் உள்ளனர். இவர்களில் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலித் ஷேக் முகமது உள்ளிட்ட 5 பேர் மீது மட்டும் பல ஆண்டு கால தாம தத்திற்கு பிறகு, ராணுவ விசாரணை தொடங்க உள்ளது. மற்ற பலரும் எந்த விசாரணையோ, குற்றச் சாட்டோ இல்லாமல் அங்கு கால வரம்பின்றி வைக்கப்பட்டுள்ளனர். பிற்பாடு ஏதோ ஒரு மூன்றாம் நாட்டிற்கு அவர்கள் அனுப்பப்படக் கூடும்.

தேசிய பாதுகாப்பும்,  இயற்கை நீதியும்

இத்தகைய வதை முகாம்களை உருவாக்கியதும் அதைத்தொடர்ந்து நடத்தியதும் முற்றிலும் சட்ட விரோதமானதாகும். அமெரிக்காவின் புனிதமான மதிப்புகள் என்று மெச்சிக் கொள்ளப்படும் கொள்கை களை பின்பற்றுவதாகக் கூறும் அமெரிக்காவின் உயர் அதிகாரம் படைத்த நிர்வாகத்தால் கூட அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஜார்ஜ் புஷ் காலத்தில் இருந்து அடுத்தடுத்து வந்த அனைத்து ஜனாதிபதி களும், இந்த சித்ரவதை முகாம்கள் வெளியுல கத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட பிறகும், முகாம்களில் சித்ரவதைகளுக்கு ஒப்புதல் அளித்துக் கொண்டிருந்தனர். ஒபாமா காலத்தில் துணை ஜனாதிபதியாகவும், தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கக்கூடிய ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ள உத்தர விட முடிகிறது. பர்வான் சித்ரவதை கூடத்தையும் மூட  முடிகிறது. ஆனால் குவாண்டனாமோ சித்ரவதை கூடத்தை 2024க்குள் மூடுவேன் என்ற அவரது வாக்கு றுதியை நிறைவேற்றுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

2011இல் குவாண்டனாமோவிலிருந்து மற்ற நாடுக ளுக்கு மாற்றம் செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்க காங்கிரஸ், இன்னும்கூட தனது மனநிலையை மாற்றிக் கொள்ளா மல் இருக்கிறது. குவாண்டனாமோ சிறைக் கூடத்தை உடனடியாக மூடுவதற்கான அனைத்து வாய்ப்புகளை யும் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) தடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் மிகவும் எளிமையானது, அதுதான்: “தேசப் பாதுகாப்பு!” அங்கு இருக்கும் மிகப் பெரும்பான்மையோரை ஆண்டுக்கணக்கில் சிறை வைத்து, எல்லா வகையி லும் கொடுமையாக சித்ரவதை செய்தும் கூட அவர்க ளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியாமல் அரசு தோல்வி  அடைந்து விட்டது. இனவெறி அடிப்படையிலான நீதியும், கூட்டுத் தண்டனை அளிக்கும் கும்பல் படுகொலை மனப் பான்மையும் இன்னும் அங்கு நீடித்துக் கொண்டி ருக்கிறது. அது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். எனவே தான் சித்ரவதை கூடத்தை மூடுவதை பற்றி அவர்களால் சிந்திக்க முடியவில்லை!!

தமிழில் : வே.தூயவன்